அறைக்கு வந்த வைஷ்ணவிக்கு தூக்கம் வரவில்லை. நாளை என்ன பேசுவது என்று நினைத்தபடியே கண்ணயர்ந்து போனாள். அடுத்த நாள் அலுவலகத்துக்குச் சென்றதும் ஆத்ரேயனை சந்திக்க காத்திருந்தாள். ஆனால் ஆத்ரேயன் ஒரு முக்கியமான கிளையன்ட் மீட்டிங் க்கு வெளியேச் சென்றவன் அலுவலகம் முடியும் நேரம் வரையும் வந்து சேரவில்லை.
அலுவலகம் முடிந்து வீட்டுக்குச் சென்றவள் அவன் வீட்டை தட்டியும் திறக்காமல் இருக்க அவனுக்காக தனது வீட்டில் காத்திருந்தாள். சில மணி நேரங்களுக்கு பின் ஜன்னலினூடு பார்த்தவள் அவனின் வெள்ளை நிற ஜாகுவார் அப்போது தான் பிளாட்டின் வளாகத்துக்குள் வந்துக் கொண்டிருந்தது. அவனுக்காக கொஞ்சம் நேரம் கொடுக்க நினைத்தவள் அரை மணி நேரம் கழித்து அவன் வீட்டு கதவை தட்டினாள். அப்போது தான் குளித்து இரவுடைக்கு மாறியவன் கதவை திறந்தான். சிறிய காற்சட்டையும் ஆர்ம் கட் உம் அணிந்து முறுக்கேறிய புஜங்கள் வெளியில் தெரிய கதவை திறந்தவனை பார்த்தவள், ‘இவன் எப்போதும் முழுசா உடுப்பு போட மாட்டானா? எப்போவும் அரைகுறையாக… சீ’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
அவளை கண்டு சலிப்படைந்தவன், ‘வந்துட்டா… இன்னைக்கு இந்தியா போக லீவு கேக்க வந்திருப்பா, இருடி உனக்கு இருக்குது. முத்தமும் வேணுமாம் டிவோர்ஸ் உம் வேணுமாம்.’ என்று அவனாகவே யூகித்து முணு முணுத்தபடி,
“உள்ளே வா” என்றான். கதவை சாத்திவிட்டு வந்ததில் கொஞ்சம் பதட்டமடைந்தாள். அவன் கால் மேல் கால் போட்டு இருந்ததும் அவளையும் இருக்கும் படி சைகை செய்ய அவனுக்கு முன்னால் இருந்த சோபாவில் அவனை முறைத்தவாறே உட்கார்ந்தாள்.
‘இப்போ எதுக்கு என்ன முறைக்குறா?? நான் தான் இவ பண்ணின வேலைக்கு முறைக்கணும்’ என்று நினைத்தவன் பேச சொல்லி சைகை செய்தான்.
எப்படி பேச தொடங்குவது என்று முதலில் தடுமாறியவள், கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,
“நேற்று நான் கேட்டதை தருவதாக சொன்ன ஞாபகம்” என்றாள்.
“இப்படி பழைய புராண கதைகளிலே வர்றது போல பேசுறத விட்டுட்டு நேரடியா விஷயத்துக்கு வா” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன் கையை கட்டி இருந்தவாறே.
அவன் கிண்டலில் கோபம் எகிற அதை கட்டுப்படுத்தியவள்,
“நீங்க அனாமிகாவை கல்யாணம் பண்ணிக்கணும்” என்றாள்.
“வாட்?? கம் அகைன்” என்று தனது காதில் சுண்டு விரலை விட்டு ஆட்டியபடி அதிர்ச்சியாக கேட்டான். ஏதும் தனக்கு பிழையாக விளங்கி விட்டதா என்று பரிசோதிப்பதத்திற்காக.
அவன் செயலால் பயத்தில் எச்சிலை முழுங்கியவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “நீங்க அனாமிகாவை கல்யாணம் பண்ணிக்கணும்” என்றாள்.
‘நம்ம காதுல கோளாறு இல்ல அவ மூளைல தான் கோளாறு’ என்று யோசித்தவன் சாவகாசமாக சாய்ந்திருந்தபடி அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தான்.
அவன் பார்வையில் சங்கடப்பட்டவள், “நேற்று நீங்க தந்த வாக்கு படி நீங்க இதை செய்யணும்” என்று சொல்ல வாய் விட்டு சிரித்தான்.
சிரித்தவன் முகத்தை கடினமாக்கிக் கொண்டு, “என்ன பார்த்தா தசரதன் மாதிரி இருக்கா??? இல்ல உனக்கு தான் கைகேயி என்ற நினைப்பா?? நீ சொல்றது எல்லாம் செய்ய முடியாது போடி” என்று சீறினான்.
அவன் சீறலில் பயந்தாலும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்தவளாக, “இப்படி சொன்ன சொல் காப்பாத்த தெரியாத மனுஷனா இருக்கிறது நல்லதில்லை” என்று ஏதேதோ உளறினாள். அவளை கூர்ந்து பார்த்தவன்,
“நான் மனுஷனே இல்ல” என்றான். அதை கேட்டவள்,
‘அது தெரியும் தானே’ என்று மனதுக்குள் சொன்னாலும் வெளியில் சொல்லாமல் முழுங்கினாள்.
எப்படியாவது அவனை சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில், “நீங்க சொன்னதை செய்வீங்க என்ற நம்பிக்கைல தானே நான் கஷ்டப்பட்டு வின் பண்ணினேன்” என்றவளை நினைத்து தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.
வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கியவன், “யாரு நீ??? கஷ்டப்பட்டு?? வெளிய சொல்லாத சிரிக்க போறாங்க” என்றான். அவளை மட்டம் தட்டுவது கோபம் வர, “தோல்வி அடைஞ்சிட்டு பேச்சை பாரு” என்றாள்.
அவளை நிதானமாக பார்த்தவன் கேலி குரலில், “சரி பாட்மிண்டன் சாம்பியன்… உங்க அளவுக்கு என்னால விளையாட முடியுமா??” என்றவன் வெளியில் போகும் படி வாசலை நோக்கி கை காட்டினான்.
அவமானபட்டாலும் பரவாயில்லை இவ்வளவு தூரம் வந்து எப்படியாச்சும் அவனை சம்மதிக்க வைக்க வேண்டிய முனைப்போடு, “முடிஞ்சா என்னை வின் பண்ணி இருக்க வேண்டியது தானே?” என்றாள்.
‘இவ அடங்கவே மாட்டாளா?’ என்று யோசித்தவன், “நீ நம்ம காலேஜ் தானே? நான் இருக்கும் வரைக்கும் யாரு பாட்மிண்டன் சாம்பியன் என்று கேட்டு பாரு… அதுக்கு பிறகு வந்து பேசு… பாவம் என்று விட்டு தந்தா… வந்துட்டா பெருசா பேசுறதுக்கு” என்று கடினமாக முகத்தை வைத்தபடி கூறினான்.
அவன் கூறிய தோரணையில் அவன் தான் சாம்பியன் என்று தெரிந்தாலும் அதை காட்டிக் கொள்ள விரும்பாதவள்,
“சாம்பியன் என்றால் வின் பண்ணி இருக்கணும் … எனக்கு விட்டு தர வேண்டிய அவசியம் இல்லை” என்றாள்.
“இப்போ தோணுது உனக்கெல்லாம் விட்டு தராம இருந்திருக்கணும். நீ இப்படி கேட்கப்போகிறாய் என்றால் கண்டிப்பாக விட்டு தந்திருக்க மாட்டேன்” என்றான்.
அவன் பேச்சு திசை மாறி போவதை அறிந்தவள்,
“தேவையில்லாத பேச்சு எதுக்கு? அனாமிகாவை கல்யாணம் பண்ணிக்கோங்க” என்றாள். அவள் திரும்ப திரும்ப கூறியது கோபத்தை பெருக்க,
“இங்க பாரு வைஷ்ணவி… நீ டிவோர்ஸ் கேட்டது ஓகே… அது நீயும் நானும் சம்பந்தப்பட்ட விஷயம்… நான் யாரை கல்யாணம் பண்ணிக்கணும் என்று டிசைட் பண்ண உனக்கு ரைட்ஸ் இல்ல. இப்போ நான் எதுக்கு அவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு என்னை இப்படி கஷ்டப்படுத்துறனு எனக்கு புரியல” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன். அப்போதும் அடங்காதவள், “அது உங்கள் தனிப்பட்ட விஷயமா இருக்கலாம் ஆனா நீங்க எனக்கு தந்த வாக்குப்படி அவளை கல்யாணம் பண்ணிக்கணும்” என்றாள் தீர்மானமாக…
அதற்கு மேல் கோபத்தை கட்டுப்படுத்த முடியாதவன் தனது முழங்காலில் கையை ஊன்றி எழுந்து நின்று, “லூசா நீ?? உடைந்த ரேடியோ போல எதையெடுத்தாலும் திரும்ப திரும்ப சொல்லிட்டே இருக்குற. ஒண்ணு விவாகரத்து வேணும்னு சொல்லுற. இப்போ அனாமிகாவை கல்யாணம் பண்ணிக்கோனு உளறுற… உனக்கு என்ன தான் பிரச்சனை ?? என்ன பிடிக்காவிட்டால் விவாகரத்து பண்ணிட்டு போ… அத விட்டுட்டு யாரை கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு அட்வைஸ் பண்ண தேவையில்லை” என்று சிம்ம குரலில் சீறினான்.
அவளறியாத அவன் கோபமா??? அதற்கு சளைத்தவளா அவள்? அவனின் கோபம் அவளையும் சினமூட்ட அனாமிகாவுக்கு அவன் பண்ணிய துரோகத்தை பற்றி கேட்க வாய் வரை வந்த வார்த்தைகளை முழுங்கியவள், அவனை சம்மதிக்க வைக்கும் நோக்கத்தோடு, “எனக்காக இது கூட செய்ய மாட்டீங்களா ??” என்றாள் கெஞ்சும் குரலில்…
“உனக்காக நான் எதுக்குடி அவளை கல்யாணம் பண்ணிக்கணும் ???” என்று கேட்டதற்கு அவளிடம் பதிலில்லை. ஒரு பெரு மூச்சு எடுத்தவள்,
“அவளை நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்னா நான் என்ன பண்ணனும்??” என்று கேட்டாள். அவளின் வாயை அடைக்க யோசித்தவன், “இந்த டீலிங் நல்லா இருக்கே” என்றபடி அவளருகில் வர பதறி எழுந்தாள்.
‘என்ன கேட்க போறானோ?’ என்று பயந்தபடி நின்றவளருகில் அவன் மூச்சு காற்று படுமளவுக்கு நெருங்கி நின்றவன் அவள் கன்னத்தை பெரு விரலால் வருடியபடி, “நீ என் கூட ஒரு மாதம் என் மனைவியாக வாழ்… அதுக்கு பிறகு நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறதா இல்லையா என்று தீர்மானிக்கிறேன்” என்றான் ஏக்கமாக.
அவன் தொட்ட இடம் செந்தணலை வாரி இறைத்தது போல் இருக்க அவன் கையை அகங்காரத்துடன் வேகமாக தட்டி விட்டவள், “பொம்பள பொறுக்கி, அதுக்கு வேற ஆளை பாரு” என்று அவனை நேரே பார்த்து சீறியவள் அருகில் நின்றவன் மார்பில் கைவைத்து தள்ளிவிட்டு விறு விறுவென வெளியேறினாள்.
எதிர் பாராமல் அவள் தள்ளி விட்டதில் விழாமல் இருக்க காலை நிலை குத்தி நின்றவன், ‘இவளுக்கு எப்போ பார்த்தாலும் என்னை தள்ளி விடுறதே வேலையா போச்சு… இப்போ எதுக்கு இவ்ளோ சீன் போட்டிட்டு போறா?? அப்படி நான் என்ன கேட்டிட்டேன்? இவ கிட்ட தானே கேட்க முடியும்? எல்லார் கிட்டயும் கேட்கிற போல என்ன பொம்பளை பொறுக்கினு சொல்லிட்டு போறா…இவளுக்கு என்னாச்சு?’ என்று மனதுக்குள் குழம்பியபடி நின்றான் ஆத்ரேயன்.
வீட்டுக்கு வந்தவளுக்கு ஆத்ரேயன் மேல் கோபம் கோபமாக வந்தது. வந்து சோபாவில் உட்கார்ந்து நகத்தை கடித்துக் கொண்டிருந்தவளிடம், “என்ன புருஷன் கூட ரொமான்ஸ் ஆ ??” என்று கீர்த்தனா கேட்க, “லூசா நீ?? இன்னொரு தரம் இப்படியெல்லாம் பேசின நான் மனுஷியா இருக்க மாட்டேன்” என்று கத்திய வைஷ்ணவி கீர்த்தனாவுக்கு புதியவள்.
அவள் திட்டியதால் அப்படியே அதிர்ந்து நின்றவள், ‘இவளுக்கு என்னாச்சு ??’ என்று யோசித்தபடி அவளிடம் மேலும் கேட்க மனமில்லாமல் போய் படுத்து விட்டாள்.
அடுத்து என்ன செய்வது என்று யோசித்து யோசித்து குழம்பியவளுக்கு, ‘ஒரு மாசம் தானே மனைவியாக இருப்போமா??’ என்று கூட எண்ணம் வந்தது. உடனே சுதாரித்தவள், ‘ச்ச என்ன நினைப்பு இது? அந்த பொறுக்கிக்கு மனைவியாகவா??’ என்று தன்னை கடிந்தவளுக்கு எந்த வழியும் புலப்படவில்லை.
கார்த்திக், கீர்த்தனா மீண்டும் நண்பர்களாக பழக தொடங்கி இருந்தனர். இருவருக்கும் காதல் இருந்தாலும் அடுத்த கட்டத்துக்கு போக பயமாக இருந்தது.
ஆத்ரேயன் வைஷ்ணவியை பார்ப்பதையே முற்றிலும் தவிர்த்திருந்தான்.வழமை போல் சாதாரணமாகவே நாட்கள் உருண்டோட சில வாரங்கள் கழித்து அனாமிகா வைஷ்ணவியை கூப்பிட்டனுப்பினாள்.
‘இப்போ என்ன சொல்வது இவங்க கிட்ட ??’ என்று யோசித்தவள் அனாமிகாவின் தோற்றத்தை பார்த்து அதிர்ந்தாள். இறுக்கி போடப்பட்ட கவர்ச்சி உடையில் வயிறு மட்டும் சற்று மேடிட்டிருந்தது. அது பீர் வயிறு என்று தெரியாதவள் அவள் கர்ப்பமாக இருப்பதால் வந்தது என்று நினைத்துக் கொண்டாள்.
அவள் பார்வை செல்லும் இடம் பார்த்த அனாமிகாவுக்கு ஒரு வித மகிழ்ச்சி உண்டாக… அதை மறைத்துக் கொண்டு முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள். “ஆத்ரேயன் கிட்ட கேட்டீங்களா ???” என்று கேட்க
சற்று தடுமாறிய வைஷ்ணவி,
“கேட்டேன் மேடம்…ஆனா அவர் முடியாது என்று சொல்கிறார். நீங்க கவலை படாதீங்க நான் எப்படியாச்சும் உங்க இருவரையும் சேர்த்து வைக்கிறேன்” என்றாள்.
‘நீ என்னடி சேர்த்து வைக்கிறது??’ என்று மனசுக்குள் வன்மையாக நினைத்தவள், “எனக்கு சாகிறத விட வேற வழி இல்ல… இந்த குழந்தை பிறந்து அப்பா பேர் தெரியாம வளர்ந்து என் மானம் மரியாதை என் குடும்ப மானம் எல்லாம் போறத விட நான் சாகிறது மேல்…. இந்த பிஞ்சு குழந்தையை அழிக்க எனக்கு மனசு வரவில்லை” என்று நீலி கண்ணீர் விட்டாள். ஏற்கனவே பல கருக்கலைப்புகள் மேற்கொண்டவள். அவளுக்கு இப்போது வைஷ்ணவியை ஆத்ரேயனிடமிருந்து பிரிக்கணும் அதே நேரம் அவனை கல்யாணம் பண்ணனும். அதுக்கு வைஷ்ணவியை வைத்து தான் ஆட்டத்தை ஆரம்பிக்கணும் என்று அறிந்திருந்தாள். வைஷ்ணவியின் இளகிய மனதினை அறிந்தவள் அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டாள்.
அனாமிகா குழந்தை மேல் வைத்திருக்கும் பாசத்தை கேட்டு மெய் சிலிர்த்த வைஷ்ணவிக்கு ஆத்ரேயனை நினைக்க நினைக்க ஆத்திரமாக இருந்தது. “நீங்க எதுக்கு சாகணும்? உங்கள இந்த நிலைமைக்கு ஆளாக்கியவன் தான் சாகணும்” என்று சினம் பொங்க பேசியவளை புருவம் உயர்த்தி பார்த்த அனாமிகா மனதுக்குள், ‘இவ தான் நம்ம காரியம் சாதிக்க சரியான பீஸ்’ என்று நினைத்துக் கொண்டாள்.
“சரி வைஷ்ணவி நீங்க போய் வேலைய பாருங்க. எனக்கு மனசு சரி இல்ல” என்றவளை பரிதாபமாக பார்த்தபடி வெளியேறினாள்.
‘நீ பரிதாபப்படும் நிலையிலா நான் இருக்கிறேன்’ என்று மனதுக்குள் சீறியவள் அடுத்த திட்டத்தை போட்டாள். அடுத்தநாள் அலுவலகமே பரபரப்பாக இருந்தது. அப்போது தான் வந்த வைஷ்ணவிக்கு எதுவும் புரியாமல் விசாரிக்க அவள் கேள்விப்பட்ட விடயம் தலையில் குண்டு போட்டது போல் இருந்தது.
அனாமிகா தற்கொலைக்கு முயற்சி செய்து வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டிருப்பதாக கேள்விப்பட்டவளின் ரத்தம் கொதித்தது. வெகுண்டெழுந்த சினத்துடன் ஆத்ரேயன் அறைக்குச் சென்றாள். அவளின் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் பார்த்த கீர்த்தனாவே ஒரு கணம் பதறி போனாள். அவளை தடுக்க அவளுக்கே பயமாக இருந்தது. அவள் முன் போல் இல்லை என்று அறிந்தவள் தள்ளி நின்றே நட்பு பாராட்டினாள். உள்ளே நின்ற கிளையன்ட்ஸ் யாரையும் சட்டை செய்யாதவள் விறு விறுவென அவன் முன்னே வந்து நின்று, “இப்போ சந்தோஷமா ??” என்று கேட்டாள்.
அவளின் கோபத்தில் அவனும் ஆடி தான் போனான்.எதுக்கு கோபப்படுகிறாள் என்று அவனுக்கும் விளங்கவில்லை. கிளையன்ட்ஸ் ஐ பார்க்க அவர்கள் அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்து வெளியேறினார்கள்.
அவளை புருவம் சுருக்கி பார்த்தவன்,
“என்ன சந்தோசம்??” என்று கேட்டான். “நடிக்காதடா…” என்ற அவளின் ஒருமை விளிப்பில் சற்று அதிர்ந்தவனுக்கு அவள் தனது கையை வெட்டிக் கொண்ட போது நின்ற நிலை ஞாபகம் வந்தது. மீண்டும் விபரீதமாகாமல் தடுக்க நினைத்தவன்,
“சொன்னால் தானே தெரியும்” என்றான் அலட்சியமாக அதே நேரம் தாழ்வான குரலில். அவன் அலட்சியத்தில் பொறுமை இழந்தவள், “எதை சொல்ல சொல்கிறாய்??? நீ அனாமிகாவை காதலிக்கிற போல நடித்ததையா ?? அவ கூட குடும்பம் நடத்தி அவ வயிற்றில் ஒரு குழந்தையை கொடுத்ததையா ?? இப்போ அவளை கல்யாணம் பண்ண முடியாதுனு மறுப்பதையா ?? உன்னால் அவ தற்கொலை முயற்சி பண்ணி ஹாஸ்பிடல்ல இருக்கிறதையா??? இப்படி எத்தனை பெண்களின் வாழ்க்கையை…” என்று தொடர்ந்தவளை கோபம் கொப்பளிக்க, “தட்ஸ் இனஃப் யூ ஷட் அப் டேம் இட்” என்று கர்ஜித்தவாறே மேசையை தனது இரு கைகளாலும் பலமாக தட்டியபடி எழும்பி நின்றவனை பார்த்து ஒரு கணம் அரண்டு தான் போனாள்.
அவன் கண்ணில் கோபம் கொப்பளிக்க, “நானும் பாவம் போனா போகுது என்று விட்டா ரொம்ப ஓவரா தான் பேசுற ?? யு *********” என்று கெட்டவார்த்தைகளில் ஆங்கிலத்தில் சீறியவனை தைரியமாக எதிர்த்து நின்றாள்.
கோபம் கொப்பளிக்க அவளை ஏதும் செய்து விடுவானோ என்று பயந்தவள், “டோன்ட் இரிடேட் மீ, ஜஸ்ட் கெட் அவுட்” கையால் சைகை செய்துவிட்டு கோபத்தை கட்டுப்படுத்த இரு கைகளையும் பாண்ட் பாக்கெட்டில் விட்டபடி மறுபக்கம் பார்த்து நின்றான்.
“உண்மையை சொன்னா கோவம் வருதா Mr. ஆத்ரேயன்?” என்றவளை நோக்கி வேகமாக எட்டுக்களில் வந்தவன் பொறுமையிழந்து அவள் கழுத்தை தன் கையால் பிடித்து தள்ளி சுவருடன் சாத்தினான்.
“ஐ செட் யூ டு ஷட் அப்… யூ இடியட்… நீயா கற்பனை பண்ணி பேசுற… யூ ஸ்டுபிட் உமன்” என்று சீறியவன் அவள் வலியால் முனகுவதை கண்டு கழுத்திலிருந்து கையை எடுத்தான். அவன் கையை எடுத்ததும் கழுத்தை பிடித்துக் கொண்டு இருமியவள் அவன் கோபத்துக்கு சற்றும் பயப்படாமல், “நான் ஒன்றும் கற்பனை பண்ணல. நடந்ததை தான் சொல்றேன். யூ சீடட் அனாமிகா… அவ இப்போ ப்ரேக்னன்ட் …” என்றாள்.
“வாட் தி *** யூ ஆர் டாக்கிங்??” என்று கேட்டவன் மீசை துடிக்க தொடங்கியது. தன்னை சமநிலைப்படுத்த முடியாமல் தவித்தவன் மூடிய அறை என்றும் பார்க்காமல் சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தபடி மற்ற பக்கம் திரும்பி நின்றான்.
சிகெரெட் புகையால் அவள் இரும தொடங்க அதை அணைத்து குப்பை கூடைக்குள் போட்டவன் மனம் கொதித்தாலும் அதை அடக்கியப்படி அவள் பக்கம் திரும்பினான். அவளும் அவனிடம் நீதி கேட்காமல் போவதில்லை என்ற தோரணையில் அவ்விடத்திலேயே சுவரில் சாய்ந்து நின்றாள்.
இதை நிதானமாக கையாள வேண்டும் என யோசித்தவன்,
“உட்கார்.” என்று சோபாவை காட்டியவன், “கிவ் மீ எ மினிட்” என்றபடி தனது அறையுடன் சேர்ந்து இருந்த குளியலறைக்குள் புகுந்தவன் நன்றாக முகத்தை அடித்து கழுவினான்.
தனது உருவத்தை கண்ணாடியில் சிறிது நேரம் பார்த்தான். சீராக ஜெல் வைத்து சீவியிருந்த கேசமும் அரும்பிய தாடியும், பாண்ட்டுக்குள் விடப்பட்ட இள நீல நிற ஷர்ட் உம் டையும் என டிப் டாப் ஆக இருந்தவன் மனதில், ‘காதல் இல்லாதவனுக்கு அழகொரு கேடா?’ என்று மனசாட்சி கேட்க வெறுமையை உணர்ந்தவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை தண்ணியை தொட்டு முடியை கலைத்து விட்டான். அதன் பின் ஷர்ட்டை எடுத்து வெளியில் போட்டு விட்டு முழுக்கை ஷர்ட்லிருந்த பொத்தான்களை கழட்டி அதை முழங்கை வரை மடித்துக் கொண்டான். டையை கழட்டி ஹங்கர் இல் போட்டவன் ஷர்டின் முதலிரு பட்டன் களையும் கழட்டி விட்டான். தன்னை அசிங்கமாக்க செய்த அவன் செய்கைகள் கூட அவன் கம்பீரமான அழகை கூட்டி காட்டியது.
தலையை கோதியபடி வெளியில் வந்தவனின் தோற்றத்தை பார்த்து வைஷ்ணவி அதிர்ச்சியடைந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.
அவள் முன்னால் இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு சாய்ந்து உட்கார்ந்தவன், “இப்போ சொல்” என்றான்.
“அன்று முத்தம் கொடுத்ததை நான் பார்த்தேன்” என்றாள். ‘தொடங்கி விட்டாள் புரியாமல் பேசுறதுக்கு’ என்று மனதில் நினைத்தவன், “யாரு? யாருக்கு?” என்று சாதாரணமாக கேட்டான். “நடிப்பை பாரு” என்று முணுமுணுத்தவள், “அனாமிகா உங்களுக்கு” என்றாள். “சோ வாட் ??” என்று அலட்சியமாக கேட்டவனை பார்க்க அவளுக்கு ஆத்திரம் பொங்கி வந்தது.
“அதனால தான் நான் சொல்றேன் அவ ப்ரக்னன்சி க்கு நீங்க தான் காரணம்” என்று சொன்னவளை இளக்காரமாக பார்த்தவன், “முத்தம் கொடுத்தா அதுவும் கன்னத்தில கொடுத்தா ப்ரக்னன்ட் ஆயிருவாங்க என்று நான் படிக்கவில்லை… நான் அறிந்த வரையிலும் டு பீகம் ப்ரக்னன்ட் வீ ஷுட் மேக் லவ்” என்றான்.
அவனின் இளக்காரமான பதிலில் கொதிப்படைந்தவள்,
“யாருக்கு தெரியும் அதுவும் நடந்திருக்கலாம்” என்றாள்.
“என் அனுமதி இல்லாம கிஸ் பண்ணலாம் ஆனால் நீ சொல்றது நடக்க சான்ஸ் இல்ல…” என்றான் கடின குரலில். ‘இவன் கிட்ட மறைச்சு இனி பயனில்லை நேரடியாவே கேட்டு விடுவோம்’ என்று நினைத்தவள்
“என் கிட்ட பொய் சொல்ல வேணாம். அன்னைக்கு மீட்டிங் ரூம்ல அனாமிகாவை கிஸ் பண்ணிட்டு தான் என்னை கிஸ் பண்ணுனீங்க என்று கேள்விப்பட்டேன். கொஞ்சம் கூட பெண்களை ஏமாத்துற குற்ற உணர்ச்சி இல்லையா?? எனக்கு இதெல்லாம் தெரிய வராது என்று நினைச்சீங்களா??? அவ
கன்சீவ் ஆகிறதுக்கு நீங்க தான் கரணம் என்று அவ என் கிட்ட சொல்லிட்டா. இனி நீங்க தப்ப முடியாது. கட்டின பொண்டாட்டிக்கும் உண்மை இல்ல… தொட்ட பொண்ணுக்கும் உண்மை இல்ல… அந்த பொண்ணு இப்போ சாக கிடக்குறா உங்களால… உங்க பொறுக்கி தனத்தால” என்றவளை அவள் பேசி முடிக்கும் வரை தாடையில் கை வைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு இப்போது தான் விளங்கியது அவள் இவ்வளவு நாளும் பொம்பள பொறுக்கி என்று திட்டியதன் அர்த்தம்.
‘சோ இது அனாமிகாவின் பிளான்’ என்று மனசுக்குள் சரியாக கணித்தவனுக்கு பொய் சொல்லிய அனாமிகாவை விட அவள் சொல்லியதை நம்பிய வைஷ்ணவி மேல் கோபம் எகிறியது.
கோபத்தை கட்டுப்படுத்தியபடி அவளை கூர்மையாக பார்த்தவன், “நீ அத நம்புறியா?” என்று கேட்டான்.
அவன் கேட்ட தோரணை அவளுக்கு கலக்கத்தை கொடுத்தாலும், “ஆம் நான் நம்புறேன். என்ன கூட நீங்க பலாத்காரம் பண்ணுனீங்க… சோ இப்படி பண்ணி இருக்கமாட்டீங்க என்று எந்த சான்றும் இல்ல. அதுக்கும் மேல எந்த பொண்ணும் தான் கல்யாணத்துக்கு முதல் கர்ப்பமாக இருப்பதாக பொய் சொல்ல மாட்டா” என்றாள். அவளை விரும்பியவரை பேச விட்டவன், ‘எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுறா பாரு’ என்று எரிச்சலடைந்தான்.
“சோ நான் பொம்பள பொறுக்கி… எனக்கு பார்க்கிற எல்லா பொண்ணுங்க கூடவும் லவ் மேக் பண்ணனும் என்று நீ சொல்ல வரியா?” என்று நிதானமாக அதே நேரம் அழுத்தமாக வினவினான்.
அவனை காயப்படுத்தும் நோக்குடன், “ஆமா கண்டிப்பா…” என்ற பதிலில் அவன் கடைசி நம்பிக்கையும் உடைந்து போனது. மனதில் இனம் புரியாத வலி தோன்ற அதை கஷ்டப்பட்டு மறைத்தவன், “சரி நீ போகலாம்…” என்று அவளை பார்க்க அவள் தயங்கி நின்றாள்.
“இப்போ என்ன ??” என்று சோர்வாக கேட்டவனிடம், “எனக்கு டிவோர்ஸ் வேணும் நீங்க அனாமிகாவை கல்யாணம் பண்ணிக்கணும்” என்றாள்.
‘சரியான இம்சை டி நீ’ என்று நினைத்து பெரு மூச்சு விட்டவன், “உன் விருப்பப்படி உனக்கு டிவோர்ஸ் தந்திடுறேன்… ஒரு மனைவியா என்னோட பொம்பள பொறுக்கி தனத்தை கண்டிக்க உனக்கு உரிமை இருக்கு. டிவோர்ஸ் எடுத்த உடனே அந்த உரிமையை நீ இழந்து விடுவாய்.சோ அதுக்கு பிறகு நான் யாரை கல்யாணம் பண்ணிக்கணும்னு நீ சொல்ல தேவையில்லை. இப்போ நீ போகலாம்” என்று கறாராக கூறியவன், “இப்போ நீ இங்கிருந்து கிளம்பா விட்டால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது. என் பொறுமைக்கும் எல்லை இருக்கு. ப்ளீஸ் கெட் அவுட்” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் உறுமினான்.
மேலும் பேச வந்தவளிடம் வாயில் சுட்டு விரலை வைத்து பேச வேண்டாம் என்று எச்சரித்தவனின் கண்களில் கோபமும் கவலையும் சேர்ந்து இருந்தது.
அவன் தோரணையில் கொஞ்சம் பயந்தவள், ‘பிறகு பேசலாம்… இப்போ நிலவரம் சரியில்லை’ என்று நினைத்தபடி கிளம்பினாள். அவள் போகும் வரை தன் முழங்காலில் இரு கைகளையும் வைத்து கோர்த்தபடி அவளை துளைத்தெடுக்கும் பார்வையை பார்த்துக் கொண்டிருந்தான்.