யுகம்-9

எல்லாம் முடிந்து சாப்பிட போனவர்கள் விரும்பியதை ஆர்டர் பண்ணி விட்டு சாப்பிட உட்காந்தனர். மனம் நிறைய பாரத்துடன் எதிலும் ஈடுபாடில்லாமல் இருந்த வைஷ்ணவி சாப்பாடு என்றதும் கொஞ்சம் ஆர்வமானாள். வேதனையான நினைவுகளை ஒதுக்கி விட்டு சாப்பிட தயாரானாள்.

ஆத்ரேயன் மட்டும் சாலட் & லைம் ஜூஸ் ஆர்டர் பண்ணி இருந்தான். ‘இத சாப்பிட இங்க வரணுமா இந்த மடையன்?’ என்று அவனை மனதுக்குள்  நக்கலடித்தாள் வைஷ்ணவி. மற்றைய அனைவரும் தங்களுக்கு விரும்பிய உணவை ஆர்டர் பண்ணி இருந்தனர்.

வைஷ்ணவி மட்டன் பிரியாணி ஆர்டர் பண்ணி விட்டு அதை புசிக்கும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தாள். இவ்வளவு நாள் வீட்டில் இலை தழை மட்டும் சாப்பிட்டவளுக்கு பிரியாணி என்ற பெயர் அமிர்தமாக இருந்தது.

அனைவரும் இரு மேசைகளில் ஜோடி ஜோடியாக அமர்ந்திருந்தனர் . பெரியவர்கள் ஒரு மேசையிலும் சிறியவர்கள் ஒரு மேசையிலும் இருந்தனர். வைஷ்ணவிக்கு சரி பக்கத்தில் ஆத்ரேயன் அமர்ந்திருந்தான். ஆதியும் வர்ஷினியும் இருவருக்கும்  நேரே ரகசியம் பேசி கொஞ்சி குலாவிக் கொண்டு  இருந்ததை பார்க்க சிறியவர்கள் இருவருக்கும் சங்கடமாக இருந்தது.

‘எங்க வந்து என்ன பண்றான்? சீ…’ என்று ஆத்ரேயன் முகம் சுளித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு பெண்கள் மேல் ஆர்வம் கிடையாது. பெண்கள் தான் தன் பின்னாடி வர வேண்டும் என நினைப்பவன். பெண்கள் பின்னால் தான் செல்வது அவனை பொறுத்த வரைக்கும் இழுக்கான செயல். அதனால் தான் வைஷ்ணவி பின்னால் தன் மனம் செல்வதின் காரணம் தெரியாமல் சில நேரங்களில் தன்னை தானே அவன் வெறுத்தான்.

வைஷ்ணவியும் என்ன செய்வது என்று தெரியாமல் குனிந்தபடி மெனு கார்டை பார்த்துக் கொண்டிருந்தாள். “இன்னும் ஏதும் ஆர்டர் பண்ணனுமா???” என்று கேட்டான் ஆத்ரேயன். 

“இல்லை” என்றவள் நிமிரவே இல்லை. ஆனால் மனதுக்குள், ‘இவன் எதுக்கு எப்போ பார்த்தாலும் என்னை வம்பிழுத்துக் கொண்டிருக்கிறான்?’ என்ற கேள்வி மட்டும் ஓடிக் கொண்டிருந்தது.

மட்டன் பிரியாணி வந்துக் கொண்டிருப்பதை பார்த்தவளுக்கு வாய் ஊற தொடங்கியது. ‘ஆடி அசைஞ்சு வருவதை பாரு’ என்று மனசுக்குள் பிரியாணி கொண்டு வந்தவனுக்கு திட்டும் விழுந்தது.

மேசையில் வைத்ததும் பொறுமையிழந்து கையை கூட கழுவாமல் சாப்பிட போனவள் கையை ஆத்ரேயன் பிடித்திருந்தான். “சாப்பிடும் போது கை  கழுவ மாட்டியா ???” என்ற கேள்வியில் வெட்கப்பட்டு போனாள். “இவனோட எதுக்கு வம்பு?” என்று கை கழுவ போனவள் திரும்பி வரும் போது அங்கிருந்த ஸ்பூனினால்  ஆத்ரேயன் அவளின் மட்டன் பிரியாணியை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இந்த மூளை தனக்கு வரவில்லையே என்று தன்னை தானே கடிந்துக் கொண்டாள். அவள் மேசையில்  சாலட் & லைம் ஜூஸ் இருந்தது. எதிலும் பொறுத்து  போகிறவளுக்கு சாப்பாடு  என்றதும் கோபம் கொப்பளிக்க தொடங்கியது.

பக்கத்தில் இருந்த வர்ஷினி,  ஆதி கூட தன் பிரியாணியை பாதுகாக்கவில்லை என்று கடுப்பானவள், ‘இவங்க ரெண்டு பேருக்கும் எப்போ பார்த்தாலும் ரொமான்ஸ் தான்’ என்று அலுத்துக் கொண்டாள் .  ஆத்ரேயனின் அருகில் உட்கார்ந்தவள், “நீங்க சாப்பிடுவது என்னோடது” என்றாள்.

“சோ வாட் ?” என்று தோளை உலுக்கியவன் அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் சாப்பிட்டான். இடையில், “செம டேஸ்ட்” என்றவன் தனது வேலையில் மும்முரமாக ஈடுபட்டான். சாப்பாட்டில் அவள் கண்கள் நிலைக்க கட்டுப்படுத்த முடியாத கோபத்துடன் சாப்பிட  போன அவன் கையை பிடித்தவள், “இப்போ என்னோடத தரப்போறியா இல்லையா?” என்றாள்.

அவளின் ஒருமை விளிப்பில் புருவங்களை தூக்கியவன் நிதானமாக, “உன்னை தான் டாக்டர் கண்டதெல்லாம் சாப்பிட வேணாம் என்றாரே. உனக்கு நினைவில்லயா???” என்றவன் அவள் கையை தட்டியபடி சாப்பிட தொடங்கினான். ‘சாப்பாட்டை இவனிடமிருந்து பெறமுடியாது’ என்று நினைத்தவளுக்கு ஒரே எரிச்சலாக இருந்தது. அது  அவளின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அவளின் எரிச்சலை பார்த்தவன் வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு,

“உனக்கு நான் சாப்பிட்ட  எச்சிலை சாப்பிட ஆசையாக இருந்தால் கேள் தருகிறேன்” என்றவன் அவள் பதிலுக்காக காத்திருந்தான்.

ஏதோ அவன் எச்சிலை சாப்பிட தான் ஆசைப்பட்டது போல் பேசியவனை பார்க்க கோபம் கோபமாக வந்தது. ‘இவன் என்ன பற்றி என்ன நினைச்சுட்டு இருக்கான்?’ என்று யோசித்தவள், “எனக்கு வேண்டாம்” என்றபடி தன் முன்னிருந்த சாலட் & லைம் ஜூஸ் ஐ வெறுப்புடன் சாப்பிட தொடங்கினாள்.

அவனின் செயல் அக்கறையையும் அவனின் பேச்சுக்கள் பழிவாங்குவது போலவும் இருக்க அவனை அவளால் கணிக்க முடியாமல் போனது.

நிச்சயதார்த்த நாளில் வர்ஷினி பக்கத்தில் வைஷ்ணவி அழகு தேவதையாக ஜொலித்தாள்.  எப்போதும் மிக சாதாரணமாக இருப்பவள் வர்ஷினியின் வற்புறுத்தலால் அழகாக அலங்காரம் பண்ணி இருந்தாள் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவளை கண்களால் ரசித்த ஆத்ரேயனுக்கு மனம் தறி கெட்டு ஓடியது. ‘சை… என்ன நினைப்பு இதெல்லாம்’ என்று மனதை கட்டு படுத்தியவன் ஆதியிடம், “மேக்கப் போட்டாலும் காகம் காகம் தான்” என்று கிண்டலடித்தான் அவளுக்கு கேட்கும் குரலில்.

அவன் நடவடிக்கையினால்  ஏற்கனவே கொதித்துக் கொண்டிருந்தவள் இவன் எப்போது போய் தொலைவான் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். இனி எப்போதும் அவன் தன்னை காயப்படுத்த இடமளிக்க கூடாது என்று நினைத்தவள். அவனை பதிலுக்கு காயப்படுத்த வேண்டுமென்ற வன்மம் தோன்ற, “சிலருக்கு முகம் மட்டும் தான் அழகு அகம் முழுக்க அழுக்கு… பொம்பளை பொறுக்கி” என்றாள் சத்தமாக.  எல்லோர் முன்னிலையிலும் அவன் தன்னை எதுவும் பண்ணமாட்டான் என்ற தைரியத்தில்இருந்தாள் . அவளின் வார்த்தைகள் அருகில் நின்ற ஆதி காதிலும் விழுந்தது.. ‘இந்த பொண்ணுக்கு கொஞ்சம் கூட பயமில்லையப்பா’ என்று மனதில் நினைத்துக் கொண்டான். தங்கையின் இப்படி வெளிப்படையான வார்த்தைகள் வர்ஷினிக்கும் புதிது. இவர்களே இப்படி சங்கடப்படும் போது அவ்வார்த்தைகளுக்கு உரியவன் கண் சிவந்து ருத்ர மூர்த்தியாக மாறி இருந்தான். அவள் அதை சட்டை செய்யாமல் சிரித்தபடி இருந்தது அவனின் கோபத்தை பன் மடங்காக்கியது.

அவள் தனியாக மாட்டும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்தவனுக்கு அவளாகவே சந்தர்ப்பத்தை வரவழைத்து கொடுத்தாள்.

எல்லா வேலைகளும்  முடிந்ததும் சற்று களைப்பாக இருக்க நிச்சயதார்த்தம் தொடங்க முன்னர் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று தனது அறையை நோக்கிச் சென்றவளை பின் தொடந்தான் ஆத்ரேயன். நிச்சயதார்த்த வேலைகளில் பிசியாக இருந்தவர்கள் இதனை  கவனிக்கவில்லை.

மேலேச் சென்றவள் கதவை சாத்தாமல் கட்டிலில் தொப்பென்று விழுந்து விட்டத்தை பார்த்தபடி கண்களை மூடினாள். தாழிடாத கதவினால்  உள்ளே நுழைந்தவன் நிமிர்ந்தவாறு படுத்திருந்தவளுக்கருகில் மெதுவாக வந்து அவள் முகம் நோக்கி குனிந்து ஆக்ரோஷமாக அவள் இதழை கவ்வி திணற திணற முத்தமிட்டான்.

இந்த எதிர் பார்க்காத தாக்குதலில் அதிர்ச்சியடைந்தவள் தன் பலம் கொண்ட மட்டும் அவனை தள்ள முயற்சி செய்தாள். அவனாக விரும்பி அவளை விடுவித்ததும் அவள் கண்களில் நீர் பெருக்கெடுத்தது. ஆக்ரோஷமாக அவனை அடிக்க போன அவள் கையை லாவகமாக பிடித்தவன் அவள் இரு கைகளையும் அவள் பின்னால் கொண்டுச் சென்று அவளை பின்னால் வளைத்து தன் உடல் முழுதும் அவளுடலில் உரசும் படி நின்றவன், “நானாடி பொம்பள பொறுக்கி ? பொம்பள பொறுக்கி இது தான் பண்ணுவான்… அன்னைக்கு நீ அலங்கோலமா கிடந்த போதே உன் கண்ணை தவிர நான் எதையும் பார்க்கலடி… அப்படி பட்ட என்னை பொம்பள பொறுக்கி என்று சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் வேணும்?? நேரில் எந்த பொண்ணையும் நான் கண்ணுக்கு கீழே பார்த்து பேசியதில்லடி. அப்படி பட்ட என்னை இவ்ளோ கேவலமா நடக்க வச்சது நீதான்.” என்று தான் செய்த பிழைக்கு அவள் மேல் பழி போட்டு தன்னை நியாயப்படுத்திக் கொண்டான். மேலும், “இது பேசுனதுக்காக நான் கொடுக்கும் தண்டனை… இத வச்சு நான் உன்ன கல்யாணம் பண்ணுவேன் என்று கற்பனை பண்ணாதே. அதுக்கு நீ தகுதி இல்லாதவள்” என்று அவளை உதறி கட்டிலில் தள்ளியவன் அறையை விட்டு வெளியேறி விட்டான்

போகும் போது கண்ணாடியில் தன்னை பார்த்து சரி செய்துக் கொண்டவன் உதட்டில் அப்பி இருந்த உதட்டு சாயத்தை தன் கைக்குட்டையால் நன்றாக துடைத்தபடி வெளியேறினான்.

கட்டிலில் விழுந்தவளுக்கு நிலை பெற நிறைய நேரமெடுத்தது. அவளால் முடிந்தது அழ மட்டுமே. இதை யாரிடம் சொல்லி என்ன செய்வது என்று புரியாமல் தவித்தாள். அவன் செயல்களால் அவனை அவள் முழுமையாக வெறுத்தாள். அவன் அழகு மேல் அவளுக்கு முதலிருந்த ஈர்ப்பு அவன் தன்னை கண்ணியமாக காப்பாற்றியதில் அவன் மேல் வந்த மரியாதை அனைத்தும் நொறுங்கி இருந்தது. இப்போது எஞ்சி இருந்தது வெறுப்பு மட்டுமே.

கண்ணீரில் அழுது  கரைந்தவள் சிறிது நேரம் கழித்து முகத்தை நன்றாக கழுவினாள் அலங்காரம் எதுவும் பண்ணாமல் பொட்டு மட்டும் வைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

வெளியே வந்த ஆத்ரேயன் கீழே செல்லாமல் மனதினை ஒரு  நிலைப்படுத்த பால்கனியில் வந்து குளிர் காற்று முகத்தில் பட நின்ற பிறகு தான் தன்னிலை அடைந்தான். மூளை  தான் செய்தது சரி என்று வாதிட்டாலும் மனம் அடித்து கூறியது, “நீ நடந்துக் கொண்டது பிழை” என்று.

காதல் அழகு சம்பந்தப்பட்டது என்று வரையறுத்து வைத்த ஆத்ரேயனால் காதல் மனம் சம்பந்தப்பட்டது என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில நேரங்களில் மிக நிதானமாக யோசித்து பார்ப்பான். “இது காதலா இருக்குமோ?” என்று ஆழ் மனம் கேள்வி கேட்டால் கூட… “என் அழகென்ன அவள் அழகென்ன… இதெல்லாம் சாத்தியமே இல்லை” என்று முரண்பட்ட மனம் பதிலளிக்கும். எதிரியாக மனதுக்குள் நுழைந்தவள், அவன் அறியாமலே அவன் மனதில்  சிம்மாசனம் போட்டு உட்காந்திருந்தாள். அவன் ஈகோ  அந்த காதலை உணர மறுத்தது. சாதாரண நேரங்களில் எதிரியாக தெரிகின்றவள் மேல் ஏனிந்த அக்கறை என்று குழம்பினான். இதிலிருந்து எப்படி வெளிவருவது என்று தெரியாமல் தவித்தான்.

அவள் மேல் காதல் கொண்டால் தன் நிலை கீழே இறங்கிவிடுமோ என்று பயந்து அவன் ஈகோ அவனை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தது. சில நேரங்களில் அவனின் ஈகோவை உடைத்துக் கொண்டு அவன் காதல் வெளியில் பெருக்கெடுத்து இருந்தது.  நிறைய நேரம் நின்று யோசித்தவன், இனி லீவுக்கு கூட  இங்கு வரக்கூடாது வைஷ்ணவியை பார்ப்பது இன்று தான் கடைசியாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தான். 

ஆழ்ந்த மூச்செடுத்தவன் தன்னை சமப்படுத்திக் கொண்டு கீழிறங்கினான்.

அழுது வீங்கிய கண்களை கண்டு பதறிய தாயிடம், “தலைவலி ம்மா” என்று சமாளித்தவள் மறந்தும் ஆத்ரேயன் நின்ற பக்கம் போகவில்லை. நிச்சயதார்த்த நேரத்திலும் ஆதி வர்ஷினியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஆத்ரேயனின் கண்கள் அவள் மீது காண நேரம் நிலைத்து விலகியது. ‘சொன்னா கேளுடா மடையா… அவளை பார்க்காதே’ என்று அவன் மனம் அவனை திட்டிக் கொண்டிருந்தது.

நிச்சயதார்த்தம் முடிந்து வீட்டுக்கு வந்தவன் தனக்கு முக்கியமான பரீட்சை இருப்பதாக பொய் சொல்லிவிட்டு அன்றிரவே புறப்பட்டான். ஆதிக்கு அது பொய் என்று தெரிந்தாலும் அதனை சொல்லும் தைரியம் இல்லாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து விட்டான்.

சில வருடங்கள் கழித்து ஆத்ரேயன் கடைசி வருடத்தில் காலடி எடுத்து வைத்திருந்தான். ஆதி படித்து முடித்து விட்டு தந்தையின் கம்பெனியை அவருடன் சேர்ந்து நடத்த தொடங்கி இருந்தான். அவனுக்கும் வர்ஷினிக்கும்  இன்னும் ஆறு மாதத்தில் கல்யாணம் என்ற நிலை இருந்தது.

ஆளுமை அதிகம் கொண்ட ஆத்ரேயன் கல்லூரியையே தன் கட்டுக்குள் வைத்திருந்தான். யூனியன் லீடர் ஆக இருந்த அவனின் கண்பார்வையிலேயே கல்லூரி அசைந்தது. வெறித்தனமாக கோபத்தை காட்டாமல் நிதானமாக காட்டி எதிரிகளை பந்தாடும் கலையை கற்றிருந்தான். அவனின் முறுக்கேறிய உடலிலும்  வசீகரிக்கும் வதனத்திலும் சொக்கிப்போய் அந்த கல்லூரி பெண்கள் இருந்தனர். கல்லூரியின் ஸ்டுடென்ட்ஸ் யூனியன் ஆல் வெளிவிடப்படும் புத்தகத்தின் அட்டையில் தனது சிக்ஸ் பேக் உடலை காட்டியபடி கொடுத்த போஸ் இனால் என்றுமில்லாதவாறு அந்த புத்தக விற்பனை களைகட்டியது. அவன் மீது பைத்தியமான பல பெண்கள் அவர்களின் காதலை சொல்லியும், எங்கே  காதலித்தால் தன் மேலுள்ள க்ரேஸ் குறைந்துவிடும் என்ற நினைப்பினாலும், தன்னை மயக்கும் அழகி இன்னும் தன்னை தேடி வரவில்லை  என்ற திமிரினாலும் அனைவரையும் புறக்கணித்தான். 

படிப்பிலும் அவன் தான் டாப்பர் ஆக இருந்தான். விளையாட்டு, நடனம், பாடல் என்று எல்லா திறமைகளும் கொண்ட சகலகலா வல்லவனவன்.  அவன் கோபத்தை வெகுவாக குறைத்து முகத்தில் புன்னகையை ஏந்திக் கொண்டான். அடுத்தவரை காயபடுத்துவதை குறைத்துக் கொண்டான். 

அதற்கு அவன் வைஷ்ணவியை மறக்க மேற்கொண்ட தியானமும் காரணம். லீவுக்கு கூட போகாமல் ஏதும் சாக்கு சொல்லி நின்று விடுவான். இரு தடவைகள் கார்த்திகேயனும் மாலதியும் மனம் கேட்காமல் கல்லூரிக்கு வந்து பார்த்து விட்டுச் சென்றனர். 

அவனின் இந்த மாற்றம் அனைவருக்கும் பெருத்த நிம்மதியாக இருந்தது. சுருங்க சொன்னால் அவன் வைஷ்ணவியின் நினைப்பிலாமல் சந்தோஷமாக வாழ பழகி இருந்தான்.

அங்கு பையன்களும் பெண்களும் அரட்டையடித்தபடி மர நிழலில் உட்காந்திருந்தனர். அங்கே வந்த மூன்றாம் வருடம் படிக்கும் பெண் ஆத்ரேயனிடம் ஒரு கார்ட் ஐ நீட்டினாள். அவனுக்கு இது பழகி போன ஒன்று சலித்தபடி வாங்கியவன் அதில் அவனை பற்றி வர்ணித்து ஒரு கவிதை எழுதி  இருந்தது. அதை படித்து விட்டு,

“உனக்கு நன்றாக கவிதை எழுதும் திறன் இருக்கிறது தங்கச்சி… நீ இந்த வருட யூனியன் இதழில் ஒரு கவிதை எழுதலாமே” என்றான். தங்கச்சி என்ற விளிப்பில் அவனுக்கு தன் மேல் ஈர்ப்பில்லை என்று அறிந்தவள், தன்னை காயப்படுத்தாமல் காதலை புறக்கணிக்கும் அவனின் குணம் கண்டு அவள் காதல் ரெட்டிப்பானது.

“என்னம்மா லவ் ஆ?” என்று அங்கிருந்த அவனின் தோழர்கள் அவளை கலாய்த்து விட்டு, ஆத்ரேயனிடம், “உனக்கு எங்கோ மச்சம்டா” என்றபடி தங்களது அரட்டையை தொடங்கினர். அவர்களை பார்த்து முறைத்தவன், “நீ வா” என்று அவளை அழைத்துக் கொண்டு அவளோடு நடந்தபடி, “எதற்காக எல்லார் முன்னிலையிலும் இதை தந்தாய்?  இதனால் உன் பெயர் தான் கெட்டு போகும். இங்கே நீ நன்றாக படிக்க வேண்டும். இந்த காதல் கத்தரிக்காய் எல்லாம் தூக்கி போட்டுவிட்டு உன் அம்மா அப்பாவுக்காக படி. அவர்களுக்காக வாழ். அவர்களே உனக்கு என்னைவிட எல்லாத்திலும் உயர்ந்த ஒரு பையனாக பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பார்கள். இப்போ நீ கிளாஸ் க்கு போ…இதை நீ யாரிடமும் சொல்லாதே  நானும் யாரிடமும் சொல்ல மாட்டேன்” என்று அவளை அனுப்பி வைத்துவிட்டு தன் நண்பர்கள் இருக்கும் இடத்துக்கு வந்தான்.

“என்னடா அந்த பொண்ணு காதுல ரத்தம் வந்ததா?” என்று ஒருவன் கலாய்க்க, “சும்மா இருடா?” என்று சிரித்தபடி வரும் பெண்களை சைட் அடிக்க தொடங்கினான். அவன் சாமியாரில்லை ஆனால் உத்தமன்.

“டேய் அடுத்தவாரம் 1st இயர் வருவாங்கடா… நிறைய புது பொண்ணுங்க வருவாங்க…  ராகிங் பண்ணி செம ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ணலாம்…” என்றவனை பார்த்து இன்னொருவன், “வரபோற பொண்ணு ஒண்ணு கூட நம்மள திரும்பி பார்க்காது… அதுக்கு தான் நம்ம ஹீரோ இருக்காரே” என்றான் ஆத்ரேயனை சுட்டி காட்டியபடி. அதுக்கு முத்து பற்கள் தெரிய வசீகரமான புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்தான் ஆத்ரேயன். “இப்படி சிரிக்காதடா..உன்ன பார்க்கும் போது எனக்கே லவ் பண்ண தோணுது.” என்ற தன் நண்பனை பார்த்து அவன் தோளில் கை போட்டு, “அவனா நீ?” என்று கண்ணடித்தான். “டேய்…” என்று முறைக்க போன நண்பனால் அவனை முறைக்க முடியாமல் சிரித்து வைத்தான்.

மலர்வேந்தன் வீட்டில்…

“அப்பா கண்டிப்பா அந்த கல்லூரிக்கு தான் போகணுமா? வேற இடத்தில் சேர்த்து விடுங்கப்பா ப்ளீஸ்…” என்று  அன்று மட்டும் பத்தாவது தடவையாக கெஞ்சிக் கொண்டிருந்தவளை பரிதாபமாக பார்த்தவர், “அது தான் நம்பர் 1 கல்லூரியம்மா அங்கே தான் ஆதி அத்தான் படித்தார் ஆத்ரேயன் அத்தானும் படிக்கிறார்…அவங்கள போல நீயும் நல்லா படிக்கணும். வேணும் என்றால் ஆத்ரேயன் அத்தானிடம் உன்னை கவனமாக பார்த்துக் கொள்ள சொல்லி விடுறேன்” என்றார். ‘பாலுக்கு பூனை காவலா?’ என்று நினைத்தவள், “நீங்க அவர்ட்ட சொன்னா நான் அங்கே போக மாட்டேன். எனக்கு யார் உதவியும் தேவையில்லை நான் சுயமாக முன்னேறுவேன்.” என்றாள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, “இது தான் என் பொண்ணு” என்று கட்டி அணைத்துக் கொண்டார். ‘அவனுக்காக நீ ஏன் பயப்படணும்’ என்று அவள் மனம் கேட்டுக் கொண்டது. “சரி போய் தான் பார்ப்போமே” என்று முடிவெடுத்தவளாக தேவையானபொருட்களை அடுக்க தொடங்கினாள்.

அது தேவையா இது தேவையா என்று குழம்பியவள், “ஆதி அத்தானிடம் கேட்போம்” என்றவாறு கார்த்திகேயன் வீட்டுக்குள் நுழைந்தாள். அங்கே ஆதியும் கார்த்திகேயனும் வேலைக்குச் செல்ல ஆயத்தமாகி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். “அத்தான் என்னென்ன தேவை என்று குழப்பமா இருக்கு… ஒரு லிஸ்ட் போட்டு தர்றீங்களா ப்ளீஸ்?” என்று கேட்டாள்.

“நான் போய் நிறைய வருஷம் ஆச்சு மா…மறந்துட்டேன். வேணும்னா ஆத்ரி ட்ட கேட்டு பாரேன்…நில்லு கால் பண்ணி  தர்றேன்” என்றவனை முறைத்தவள், “எனக்கு யார் உதவியும் தேவையில்லை. எனக்கு தனியா சமாளிக்க தெரியும்…அப்படி நீங்க யார்கிட்டயும் என்ன பார்த்துக்க சொல்லி சொன்னீங்க என்றால் நான் அங்கே போகமாட்டேன்… இது உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து தான்” என்று கார்த்திகேயனையும் மாலதியையும் சுட்டிக் காட்டியவளை   பார்த்தவர்களுக்கு சிரிப்பு தான் வந்தது.  “சரி நாங்க சொல்ல மாட்டோம்… நீ வந்து சாப்பிடு” என்ற மாலதியை பார்த்து, “நான் டயட்ல இருக்கேன் அத்தை” என்றபடி தன் வீட்டுக்குச்   சென்றாள். அவளின் நடவடிக்கை அவர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது.  சொல்லா விட்டாலும் ஆத்ரேயன் பார்த்துக் கொள்ளுவான் என்ற நம்பிக்கையில் யாரும் அவனிடம் இது பற்றி வாய் திறக்கவில்லை.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top