“பார்த்தியா அண்ணா உன் ஃபோனை கூட எடுக்க மாட்டிக்கிறான். நான் தான் சொன்னேன்ல அவன் சரி இல்லைன்னு திமிரு பிடிச்சவன்” என விக்ரம் பல்லை கடித்தபடி வரதனிடம் சீறிக்கொண்டிருந்தான். ஆனால் வரதன் எதுவும் பேச வில்லை நிமிர்ந்து அமைதியாக விக்ரமை பார்த்தவன், “அங்க என்ன நடந்துச்சுன்னு நாம கண்காணிக்க அனுப்பின ஆள்ட்ட விசாரி” என்று மட்டும் கூறினார்.
“நீ கேப்பன்னு தெரியும் அண்ணன், அதான் முன்னாடியே பேசிட்டேன், இப்போ வந்திருவான்” என்று சொல்லும் பொழுதே அவர்களை நோக்கி வந்த கட்டுமஸ்தான இளைஞன் ஒருவன் வரத பெருமாளை பார்த்து வணங்கிவிட்டு விக்ரமை பார்க்க,
“இவன் தான் அண்ணன் நாம அனுப்புனா ஆளு” என வரதனின் காதில் விக்ரம் சொல்லவும், அவனை ஆராய்ந்த வரதன் அவனிடம், “சரக்கு என்னாச்சு?” என்றார்.
“சரக்கு ராவணன் கிட்ட தான் இருக்கு ஐயா” என்றதுமே வரதனின் முகம் கோபத்தில் நெருப்பாய் தகிக்க,
“அது மட்டும் இல்லை ஐயா” என தொடர்ந்த அந்த ஆடவன், “ராவணன் கூட ஒரு பொண்ணும் கார்ல இருந்துச்சு, அதுக்கப்புறம் அவன் கூடவே ஒருத்தன் இருப்பானே சந்ரு, அவனும் இன்னும் கொஞ்ச பேரும் சேர்ந்து அந்த பரந்தாமனை தூக்கி கார்ல போட்டு கொண்டு போனாங்க, நான் கண்காணிச்ச வரை இவ்வளவு தான் ஐயா எனக்கு நடந்துச்சு” என்றான்.
ராவணனுடன் ஒரு பெண்ணும் இருந்தாள், என்பதை கேட்டதும் ஆச்சரியத்துடன் அந்த ஆடவனை பார்த்த விக்ரம் அவனிடம்,
“யாரது?” என்று ஆர்வத்துடன் வினவ,
“எனக்கு தெரியாது அண்ணன், இருட்டுல முகம் தெளிவா தெரியல” என்றவன் விடைபெறுவதற்காக அவர்களை பார்க்க, அவனை செல்லுமாறு தன் தன் கரம் அசைத்து வரதன் செய்கை செய்யவும் இருவரிடமும் விடை பெற்றுக்கொண்டு, அந்த ஆடவன் சென்ற மறுநொடி,
“சரக்கை கையில வச்சிட்டு நம்ம கிட்ட தரவும் இல்லை, ஃபோன் போட்டாலும் எடுக்க மாட்டிக்கிறான், நமக்கு எதிரா ஏதோ பண்ணிட்டு இருக்கான் அண்ணா. இவனை விட கூடாது, முதல்ல அந்த பொண்ணு யாருன்னு கண்டு பிடிக்கணும்” என தீவிரமாக கூறிய விக்ரமின் கன்னத்தில் ஓங்கி அறைந்த வரதபெருமாள்,
“முட்டாள்! சரக்கையும் தராம, பரந்தாமனையும் ஏன் தூக்கியிருக்கான்னு நான் குழம்பி போய் இருக்கேன் ஆனா உன் புத்தி பொண்ணு பின்னாடியே போகுது? ம்ம், தொலைச்சிடுவேன் வந்து வண்டியெடு” என சீற்றத்துடன் கூறிய வரதனின் கார் புயலென ராவணனின் கோட்டைக்குள் நுழைந்தது.
நொடிகள் நிமிடங்களாக, நிமிடங்கள் நேரமாகி, கடந்த பிறகு மெல்ல கண்விழித்த பரந்தாமன், முழு சுய நினைவை அடைந்த பொழுது, மரநாற்காலியில் சோர்வாக அமர்ந்திருக்க அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி அவனை தன் கனல் விழி தகிக்க பார்த்து கொண்டிருந்தான் ராவணன். சுற்றி இருந்த அவனது ஆட்கள் அவனின் உத்தரவுக்காக காத்திருக்க, அப்பொழுது ராவணனை ஆக்ரோஷமாக பார்த்த பரந்தாமன்,
“என் பலம் என்னனு தெரியாம மோதிட்டு இருக்க நீ, கடைசியா சொல்றேன் என்னை ஒழுங்கா விட்று இல்லை ஒருத்தனும் தப்ப மாடீங்க” என்று அந்த நிலைமையிலும் அவனை மிரட்ட, பரந்தாமனின் பேச்சில் பொங்கியெழுந்த சந்த்ரு ராவணனின் கட்டளைக்காக அவனை பார்க்க, தலைவனின் கண்ணசைவில் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டவன், இரும்பு ராடால் பரந்தாமனின் முதுகை தாக்கினான். அவ்வளவு தான் வலி தாங்காமல் அலறிவிட்டான் பரந்தாமன்.
அப்பொழுது அஜூதியாவின் கலங்கிய விழிகளை நினைத்து பார்த்த ராவணன்,
“இது போதாது இன்னும் இன்னும் இன்னும் சத்தமா கத்து” என பரந்தாமனின் முகத்தை பார்த்து வெறிகொண்ட மிருகம் போல உறும, ஒன்று இரெண்டு மூன்று என அடுத்தடுத்து பரந்தாமனின் முதுகு இரும்பு ராடால் தாக்கப்பட, பரந்தாமனின் அலறல் ஒலி அந்த அறையை நிரப்பியது.