“புல்லட் ஹார்ட் பக்கத்துல பட்டிருக்கு , ப்ளட் லாஸ் வேற அதிகமா இருக்கு உயிர் பிழைக்கிறது கஷ்டம் சந்ரு” கழுத்தில் செத்தோஸ்க்கோப் அணிந்திருந்த மருத்துவர் சந்ருவிடம் கூறினார்.
“இல்லை டாக்டர் பையாவோட ஆர்டர், ஏதாவது பண்ணுங்க ஆனா சாகக் கூடாது” என்று சந்ரு பிடிவாதமாக கூறவும் தன் புருவத்தை நீவியவர்,
“என்னால முடிஞ்ச அளவு முயற்சி பண்றேன்” என்றுவிட்டு உள்ளே சென்றார்.
அஜூதியாவை ஆஷ்ரமத்தில் இறக்கிவிட்ட பிறகு, தன் வீட்டிற்கு வந்த ராவணன் நேராக தன் அறையின் குளியலறைக்குள் புகுந்து, தனது முகத்தை நான்கைந்து முறை தண்ணீரால் வேகமாக அடித்து கழுவிவிட்டு நிமிர்ந்து கண்ணாடியை பார்த்த பொழுது, மேல் சட்டையின்றி போட்டிருந்த கருப்பு நிற ஆம்கட் வெஸ்டுடன் தான் நிற்பதை கவனித்தவனின் மனம் எதை நினைக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருந்ததோ அதை மீண்டும் நினைக்க துவங்க, முகத்தை கூட துடைக்காது ஜன்னல் ஓரம் வந்து கண்களை மூடி அமர்ந்தான்.
ஜில்லென்ற தென்றல் காற்று அவனது ஈர வதனத்தில் வந்து வந்து மோதி சிலிர்ப்பை உண்டாக்க, தன் அறையில் தனிமையாக அமர்ந்திருந்த ராவணனின் மனம் முழுவதையும் அஜூதியாவே ஆக்கிரமித்திருக்க, இனி இது தனக்கு வேண்டாம் என்று தன் அறையில் அவன் ஒரு ஓரமாக போட்டிருந்த பழைய கிட்டார் இன்று வெகு நாட்கள் கழித்து, குழந்தையாக அவனின் கரங்களில் தவழ்ந்தபடி அவன் விரல் அசைவிற்கு இணங்க இசைத்து கொண்டிருக்க, கண்களை மூடி அமர்ந்திருந்தபடி கடந்த கால நிகழ்வுகளை, இதழில் மெல்லிய புன்னகை மலர, நினைத்துக் கொண்டிருந்தவனின் மனதில் இன்று நடந்த நிகழ்வுகளும் ஒவ்வொன்றாக வரிசை வகுக்க, முகம் மலர அமர்ந்திருந்தவனின் வதனம் திடிரென்று கடுமையாக மாறியது.
அப்பொழுது பார்த்து சந்ருவிடம் இருந்து அழைப்பு வர, சில நொடிகளில் அழைப்பை ஏற்றவனின் முகம், எதிர் தரப்பில் என்ன சொல்ல பட்டதோ அதில் இன்னும் ஆக்ரோஷமாக மாற, அலைபேசியையும் கிட்டாரையும் கீழே வைத்துவிட்டு தனது அறையில் இருந்து வெளியேறி, கீழே வந்து, பேஸ்மெண்டில் இருக்கும் சவுண்ட் ப்ரூஃப் அறையின் உறுதியான கதவை வேகமாக திறந்து கொண்டு, கொலைவெறி கண்களில் தாண்டவமாட உள்ளே நுழைந்தான் ராவணன்.
அவன் உள்ளே நுழைந்ததுமே அவனை நோக்கி வந்தது தேவராஜ் தான், சரக்கைப் பத்திரப்படுத்திவிட்டு அவனும் அங்கே வந்திருந்தான்.
“சரக்கை சேஃப் பண்ணியாச்சு பாய்” ராவணனின் வேகத்திற்கு ஈடு கொடுத்தபடி நடந்துகொண்டே கூறினான்.
“ம்ம்” அவ்வளவு தான் அதற்கு மேல் அவன் ஒருவார்த்தை பேசவில்லை. தேவராஜும் மெளனமாக அவனுடனே நடந்தான்.
சில தூரம் நடந்த பிறகு மீண்டும் ஒரு சிறிய கதவு தெரிய, ராவணன் திறப்பதற்குள் தேவராஜ் கதவைத் திறக்கவும் உள்ளே சென்றவன், அங்கே கட்டிலில் சுவாசத்திற்கான கருவி பொறுத்தப்பட்டிருக்க மயக்கத்தில் கிடந்த பரந்தாமனை அழுத்தமாகப் பார்த்தபடி அவன் அருகே வந்து நின்றவன்,
“எப்போ முழிப்பான்?” எனச் சந்ருவை பார்த்து வினவினான்.
அதற்கு அவன், “ஒருமணிநேரம் ஆகும் பாய்” என்று சொல்லவும், பரந்தாமனை வெறித்துப் பார்த்தபடியே நின்றிருந்தான் ராவணன்.
பொதுவாகவே ராவணன் கத்தி கோபப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் ரகமெல்லாம் கிடையாது. எத்தனை பெரிய சிக்கல்கள் வந்தாலும் முடிந்தளவு நிதானமாகவே செயல்படுபவனின், இந்த நிமிட வேகமும், அவன் கண்களில் இருக்கும் வெறியும், அவனது சகாக்களுக்கே புதிதாக இருக்க, அதிலும் பரந்தாமனை சுடாமலே அஜூதியாவை காப்பாற்றி வர முடிந்திருந்தும், ஏன் ராவணன் அவனை சுட்டான்? சரி அவனை சுட்ட பிறகு ஏன் இப்பொழுது காப்பாற்றி வைத்திருக்கிறான்? என இப்படி பல கேள்விகளுக்கு காரணம் புரியாமல் அவர்கள் குழம்பி நிற்க, ராவணனை நன்றாக கணித்து வைத்திருக்கும் சந்ருவோ அவனது செயல்பாட்டிற்கான காரணம் தெரிந்தும், யாரிடமும் எதுவும் வாய் திறக்கவில்லை. நடப்பதை வேடிக்கை பார்த்தபடி அவன் இடும் கட்டளைகளை மற்றும் நிறைவேற்றிக்கொண்டிருந்தவன், மனதிற்குள் ராவணனும் அஜூதியாவும் எப்படியாவது இணைந்துவிட வேண்டும் என மனதார விரும்பினான்.
ராவணனும் அவனது ஆட்களும் திரும்பி விட்டனர், ஆனால் சரக்கு மட்டும் இன்னும் வந்து சேரவில்லை என்னும் செய்தி வரதனின் தமயன் விக்ரமின் காதுக்கு எட்டியபொழுது மிகவும் கொந்தளித்தவன், அதை தாமதிக்காமல் வரதனிடம் சென்று கூற, அவன் சொன்னதை நிதானமாக கேட்ட வரத பெருமாள் அடுத்து அழைத்தது என்னவோ ராவணனுக்கு தான். அழைப்பு போய் கொண்டே இருந்ததே தவிர, அவன் எடுக்கவே இல்லை. அவன் எடுக்காததும் தேவ்ராஜ்க்கும், சந்ருவுக்கு அவர் மாறி மாறி அழைக்க அவர்களும் எடுக்காது போக, அது வரதனின் கோபத்தை பன்மடங்காக தூண்டிவிட்டது.
பரந்தாமன் மீதிருந்து தன் பார்வையை அகற்றாது நின்றிருந்த ராவணனின் அருகே வந்த தேவராஜ்,
“பாய் வரதன் கால் மேல கால் பண்ணிட்டே இருக்காரு, சரக்குக்காக தான் இருக்கும். நான் வேணும்ன்னா சரக்க கொடுத்துட்டு வரட்டுமா?” என்று ஆர்வத்துடன் கேட்க, திரும்பி அவனை பார்த்தானே ஒரு பார்வை தேவ்ராஜ்க்கு முதுகுத்தண்டு சில்லிட்டு உடம்பெல்லாம் ஒருமாதிரி ஆகிவிட, தேவராஜை தொடர்ந்து அனைவரையும் ஒருமுறை அதே பார்வை பார்த்த ராவணன்,
“நான் சொல்ற வரை சரக்கு எங்கையும் போக கூடாது” என்றான் ஆனால் குரலையெல்லாம் உயர்த்தவில்லை இருந்தும், அவனது குரலும் அதில் இருந்த அழுத்தமும் அனைவருக்குள்ளும் கிலியை பரப்பியது.