இந்த உணர்வு அவனுக்குள் இன்று தோன்றியதல்ல, என்றோ பெண்ணவள் ஆணவனுக்குள் விதைத்து சென்றது தான், ஆனால் அன்று அதை கட்டுப்படுத்தி அதில் வெற்றியும் கண்டவன், பெண்ணவளின் நலனை கருதி அவளது நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு நிம்மதியாக வளம் வந்தான். ஆனால் வருடங்கள் கழித்து மீண்டும் அவளை கண்டதும் அன்று அவள் விதைத்த உணர்வு இன்று அவன் கட்டுப்படுத்துவதற்குள் மிக வேகமாக அவனது இதயம் முழுவதும் படர்ந்து இப்பொழுது அவனுள் விருட்சமாக வளர்ந்து நிற்க, திடமான ஆறடி ஆண்மகனும் சற்று தடுமாறினான்.
அன்று கல்லூரியில் வருடங்கள் கழித்து அவளை பார்த்த நொடி தன் சுயம் இழந்த ராவணன், தான் தீட்டிய திட்டம் பெரிதாக சொதப்பியதில் அவ்வளவு எரிச்சல் அடைந்தான், அதிலும் அவளது நினைவுகளில் இருந்து மீள முடியாது மிகவும் தவித்தவன் ஒரு கட்டத்தில் விடாப்பிடியாக மனதை ஒருநிலை படுத்தி, தான் வந்த வேலையை சிறப்பாக முடித்தவன் அஜூதியாவை பரந்தாமனின் அறையில் கோலம் களைந்து கண்ணீருடன் பார்த்ததில் வெறிகொள்ள, அதன் பிறகு எதை பற்றியும் யோசிக்கவில்லை.
பரந்தாமன் துவங்கி யாரையும் வைத்து பார்க்காது, முழுக்க முழுக்க அவளையும் அவளது எதிர்கால நிம்மதியையும் மட்டுமே கருத்தில் கொண்டு செயலாற்றியவன், அவள் ஒருத்திக்காக மட்டும் தான் வரத பெருமாள், சக்தி வேல் என அனைவரையும் எதிர்த்து நின்றது. ஆக தனக்கு என்ன ஆனாலும் சரி, அஜூதியா நிம்மதியாக இருந்தால் போதும் என்று அத்தனையையும் பார்த்து பார்த்து செய்தவன், அவள் மேல் எல்லை இல்லா காதல் இருந்த பொழுதும், மனம் அவள் தான் வேண்டும் என்று அடங்காது தவியாய் தவித்த பொழுதும் அவளுக்கு தான் எந்த விதத்திலும் தகுதி கிடையாது என முடிவெடுத்து பெண்ணவள் மனதில் தன்னை குறித்து ஏதும் சிறு சலனம் கூட வந்துவிட கூடாது என்று தான் அவளிடம் எப்பொழுதும் கடுமையாக நடந்து கொண்டவன், முழுக்க முழுக்க அவளின் நலனுக்காக மட்டும் தான் அவளை விட்டு ஒதுங்கியும் இருந்தான்.
இருந்தும் அவள் இன்று அவன் முன்பு வந்து நின்றதும் மனதிற்குள்
ஒருநொடி இன்பமடைந்தவன், அடுத்த நொடி தான் இருந்த சூழலையும் அங்கிருந்தவர்களையும் பார்த்தான். உடனே முகத்தை கடுகடுவென மாற்றிக்கொண்டவன், அஜூதியாவை வெளியே அனுப்புவதற்காக செக்யுரிட்டியை சற்று சத்தமாக அழைத்தான்.
சத்தமாக அழைத்ததும் நிச்சயம் பயப்படுவாள் என்று நினைத்து ராவணன் அவ்வாறு நடந்து கொள்ள ஆனால் பெண்ணவளோ அவனை கண்ட பரவசத்தில் கண்களில் காதல் பொங்க அவனை நோக்கி பயமே இல்லாது நெருங்கி வர, அவளது கண்கள் காட்டிய மாயாஜாலத்தில் இவன் தான் மிகவும் தவித்து போனான்.
ஆனாலும் அவளை எப்படியாவது அனுப்பி விட வேண்டும் என்பதால் தன் தவிப்பை ஓரம் கட்டியவன், காயப்படுத்தும் படி பேசினால் அவள் சென்றுவிடுவாள் என்கிற நோக்கில்,
“என்னை தெரியும் சொன்னா, என்கிட்ட கேட்காம கண்டவங்களையும் உள்ள விட்ருவியா” என்று செக்யுரிட்டியிடம் கூறினான். ஆனால் அவளோ ஒருவித பரிதவிப்புடன்,
“ஏங்க நான்தான், என்னை தெரியலையா?” என்றதோடு விடாமல் ,
“அன்னைக்கு பரந்த” தாமன் என ஆரம்பிக்க ராவணனுக்கு வந்ததே கோபம். கோபத்தில் அவன் அவளிடம் தாறுமாறாக கத்திவிட, அழுதாளே தவிர அவனை அவள் விட வில்லை.
மற்றவர்களின் பார்வை, சலசலப்பான பேச்சு என எதுவுமே அவள் மூளைக்கு எட்டவில்லை அவளது எண்ணம் எல்லாம் எப்படியாவது பேசியே தீரவேண்டும் என்பதில் மட்டுமே இருக்கே பெண்ணவளின் உறுதி ஆணவனின் திடமான இதயத்தை நிறையவே அசைத்து பார்க்க, அவனோ செய்வதறியாது திணற, சந்ரு வந்து நிலைமையை கையில் எடுத்தவன் அஜூதியாவை அழைத்து கொண்டு செல்ல, அவளும் போகும் வழியெல்லாம் பரிதாபமாக அவனை பார்த்து கொண்டே போக, உண்மையிலே ராவணன் அவளுக்காக வருந்தினான்.
ராவணனின் மனம் கொஞ்சம் அவளுக்காக இளகி இருந்த சமயம், அவனிடம் டீல் பேச வந்தவன் அஜூதியாவையே விழுங்கும் பார்வை பார்த்தது கண்ணில் பட்டுவிட, மனதில் மீண்டும் கோபம் குடியேற, அவளை நன்றாக திட்டி அனுப்பிவிட வேண்டும் என்று எண்ணி தான் கோபத்துடன் கீழே பார்க்கிங் ஏரியாவுக்கு வந்தான். ஆனால் மிக நெருக்கத்தில் அவளை பார்த்ததுமே அதுவரை அடங்கியிருந்த அவனது உணர்வுகள் அவனின் அடக்குமுறையை எதிர்த்து கொடிபிடித்து அவனையே உணர்வுகளின் கட்டுபாட்டுக்கீழ் கொண்டு வர, பின் எங்கிருந்து கோபம் கொள்ள?
வண்ணத்துப்பூச்சியாய் தட தடவென அடித்துக்கொண்ட அவளின் அகன்று விரிந்த விழிகள் அந்த ஆழ்கடலை அவனுக்கு நினைவு படுத்தி,
‘ஆர்ப்பாட்டம் இல்லாத எத்தனை பெரிய விழிகள்! நீந்தலாமோ? ஆனால் மூழ்கி விட்டால் என்ன செய்வது? கரை சேர்வோமா? சேரவேண்டுமோ?’ என கத்தியும் ரெத்தத்தையும் மட்டுமே பார்த்து வளர்ந்தவனை தனக்கு தானே கவிதை பேச வைத்துவிட, அவனுக்குள் அவளால் முகிழ்த்த வாலிப ஆசைகள் ஆணவனை திணறடிக்க இதற்கு மேல் முடியாது என்கின்ற நிலையில் அங்கிருந்து வேகமாக கிளம்பியவனை, அவளது “ராவணன்” என்ற உரிமையான விழிப்பு கட்டிப்போட அப்படியே நின்றவன்,
“உனக்கு என்ன தான் வேண்டும்?” என்று கேட்டான், ஒருவேளை தன்னிடம் உதவி ஏதும் கேட்க வந்திருப்பாளோ என்கின்ற எண்ணத்தில் தான் வினவினான்.
ஆனால் அதற்கு அவள் சொன்னாலே ஒரு பதில், “நீ தான் வேண்டும்” என்று, கோபத்துடன் தான் அவளை ஏறிட்டான், ஆனால் அவளது பார்வை, அதில் கொட்டிக்கிடந்த காதல் அவனுள் காதல் நெருப்பை பற்றவைக்க, ராவணனுக்கு கோபம் கொள்ளவா தோன்றும்? பேசாமல் அவளை அப்படியே தன்னுடன் கடத்தி சென்றுவிடுவோமா? என்று எண்ணியவன் தன் மனம் போகும் பாதையை நினைத்து தன்னை தானே கடிந்துகொண்டு அதற்கு மேல் தாமதிக்காமல் தன் காரில் பறந்துவிட்டான்.
பிளாசாவில் இருந்து நேராக தன் வீட்டிற்கு வந்தவன் தன் மனதை மாற்றுவதற்காக தான் மடிக்கணினியை கையில் எடுத்தான். ஆனால் எங்கே முடிந்தது? அவள் நினைவுகள் அவனை விடாமல் துரத்த, இதோ தண்ணீருக்கு அடியில் நின்றுகொண்டு புலம்பிக்கொண்டிருக்கிறான்.
“நான் தான் வேணுமாம், சின்ன பொண்ணுன்னு பார்த்தா பேச்சை பாரு” என்றவனுக்கு முகம் துவங்கி காதுமடல் முதற்கொண்டு சிவந்து, ஒருவித சிலிர்ப்பு மின்சாரமாய் உடலெங்கும் பாய, கொட்டும் குளிர் நீர் கூட அவன் மேனியில் பட்டால் வெந்நீர் ஆகுமோ என்று வியக்கும் அளவிற்கு அவனுள் இருந்த தாபதீ அணையாமல் அவளின் நினைவு வர வர மேலும் மேலும் தகித்து கொண்டே இருக்கவும், இன்னும் கொஞ்ச நேரம் தண்ணீரின் அடியில் நின்றவன், ஒருவழியாக ஆர்ப்பரித்த மனம் அமைதியாகவும், நீர் சொட்ட குளித்துமுடித்துவிட்டு, வெறும் ட்ராக்பேண்ட் மட்டும் அணிந்துகொண்டு வெளியே வந்தான்.