ராவணா 22

தன் அறையில் உள்ள கட்டிலின் மேல் அமர்ந்து, துவாலையால் தலையை துவட்டிக்கொண்டிருந்த ராவணனின் மனதிற்குள் ஒருவித நெருடல்.

அஜூதியா, ஏதோ அவனுக்கு மிக அருகில் இருப்பது போல ஒரு உணர்வு. இப்பொழுது தான் ஒருவழியாக மனம் அமைதி அடைந்திருக்கும் நிலையில், இது என்ன? திடிரென்று தனக்கு ஏன் அப்படி தோன்றுகிறது? அவனுக்கு குழப்பமாக இருக்க கண்களை மூடி திறந்து தன் மனதை ஒருநிலை படுத்தியவன், தண்ணீர் அருந்துவதற்காக ஃபிரிட்ஜின் அருகே சென்ற பொழுது திகைத்தான். ஃபிரிட்ஜ் இருக்கும் இடத்திற்கு உட்புறமாக போடப்பட்டிருந்த சோஃபாவில் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள் அஜூதியா. 

இதயத்தில் காதல் வந்தால் கள்ளமும் வந்திடும் போல, ஒரு காலத்தில் கல்லூரியில் படிக்கும்பொழுது,

“ஒரு பொய் தானே அஜூ உன் ஜானகி மாட்ட க்ரூப் ஸ்டடின்னு சொல்லிட்டு வா, சினிமா போயிட்டு வரலாம் ஜாலியா இருக்கும்” என உடன் படித்த தோழிகள் எத்தனை முறை கேட்டிருப்பர், ஆனால் ஆஷ்ரமத்தின் விதிமுறைகளை மீறக் கூடாது மற்றும் பொய் கூறினால் ஜானகிக்கு பிடிக்காது என்னும் ஒரே காரணத்திற்காக அவர்களுடன் வெளியே வர மறுத்தவள், இன்று ராவணன் மேல் தான் கொண்ட எல்லையில்லா காதலின் உந்துதலில் எப்படியாவது அவனைச் சந்தித்து தன் மனதை அவனிடம் வெளிப்படுத்த வேண்டும் என்கின்ற ஆசையில் இதுவரை ஜானகியிடம் பொய்யே சொல்லிராத அஜூதியா இன்று, இன்டெர்வியூவ் விடயமாகத் தன் கல்லூரிக்கால தோழி ஒருத்தியை சந்திக்க வேண்டும் என்று ஜானகியிடம் பொய் கூறிவிட்டு, எதைப் பற்றியும் யோசிக்காமல் அவனது அடையாளட்டையில் இருந்த அவனின் விலாசத்தை வைத்து அவனைக் காண அவன் வீட்டு வாசலில் வரை வந்து வந்துவிட்டாள். 

இங்கே வரும் வரை இல்லாத பயம், இப்பொழுது விறைப்பாக நின்றிருந்த ராவணனின் வீட்டு காவல்காரனை பார்த்து லேசாக வந்தது.

“ராவணன் அவங்களை பார்க்கணும்” பதற்றத்தில் நா குழற காவலாளியிடம் கூறினாள்.

இதுவரை எந்த பெண்ணும் இங்கே வந்திராத நிலையில் ராவணனை தேடி ஒரு பெண் வந்திருக்கவும் அவளை ஏற இறங்க பார்த்த காவலாளி,

“இப்போ முடியாது மா உன் பேரு, நம்பர், எங்க இருந்து வரன்னு எழுதித் தந்துட்டு போ கூப்பிடுவாங்க” என்று கறாராக சொல்ல அதற்கு அவளோ,

“இல்லைண்ணா இப்போவே பார்க்கணும் அவருக்கு என்னை நல்லா தெரியும்” என்று  கெஞ்சி கொண்டிருக்கும் பொழுது வேலை விடயமாக வெளியே செல்வதற்காக அங்கே வந்த சந்ரு வாசலில் கரங்களை பிசைந்து கொண்டு நின்றிருந்த அஜூதியாவை உள்ளே விடுமாறு கட்டளையிட்டவன். 

“இங்க என்ன மா பண்ற உன்கிட்ட தான் அப்பவே சொன்னேன்ல” என அஜூதியாவை தனியாக அழைத்து சென்று பேச, அவளோ,

“வெளிய பார்த்தா தானே பேச கூடாது இது அவர் வீடு தானே” என்று சொல்லவும், முழுதாக ஒரு நிமிடம் அவளது முகத்தை அமைதியாக பார்த்தவன், 

“பையாவ லவ் பண்றியா” என்று கேட்டுவிட, அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை கரங்களை பிசைந்து கொண்டு தயக்கத்துடன் அவனை பார்த்தவள், “அண்ணா அது வந்து”

“ஆமாவா இல்லையா” அவன் திட்டமாக கேட்கவும் மறைக்க விருப்பம் இல்லாது, அஜூதியா மெளனமாக தலையை மட்டும் ஆம் என்பது போல அசைக்க சந்ருவுக்கு அவ்வளவு சந்தோஷம். 

“உள்ள வாடா” என்றவன் மகிழ்ச்சியுடன் அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைத்தான்.

அஜூதியாவை சந்ருவுடன் பார்த்து தங்களுக்குள் ஏதோ சொல்லி கிசுகிசுத்த ராவணனுடன் இருக்கும் மற்றவர்கள் சந்ருவை அழைத்து,

“டேய் இந்த பொண்ணை இங்க ஏன் கூட்டிட்டு வந்த அண்ணன் மறுபடியும் கத்த போறாரு”

“யாரு அவரு, அவரு சவுண்டெல்லாம் வெளியே மட்டும் தான் இங்க வச்சு கத்த மாட்டாரு” என அவர்களிடம் சிரிப்புடன் கூறிய சந்ரு, அஜூதியாவை ஹாலில் இருக்குமாறு கூறிவிட்டு மாடியேறி ராவணனின் அறைக்கு சென்றவன், “பாய்” என குரல் கொடுத்துவிட்டு கதவு திறந்து கிடக்கவும் வழக்கம் போல உள்ளே சென்று அவனை தேடினான். அந்நேரம் குளியல் அறையில் இருந்து சத்தம் கேட்கவும்,

‘நம்ம முன்னாடி அந்த பொண்ணுகிட்ட அப்படி கத்துறாரு, நாம இல்லைன்னா என்ன பண்ணுவாரு ம்ம்ம் இரெண்டு போரையும் தனியா விடுவோம் ரெண்டு பேரும் பேசட்டும் அப்போ தான் ஒரு முடிவு தெரியும், இவரு நம்ம முன்னாடி ஓவரா பண்ணுவாரு’ என்று தனக்குள் சிந்தித்தவன், இது தான் நல்லா சந்தர்ப்பம் என்று எண்ணி ஒன்றும் அறியாதவன் போல அஜூதியாவை மேல அழைத்து சென்று அவன் அறையில் இருக்கும் சோபாவில் அமரவைத்து,

“அண்ணன் இப்போ வந்திருவாரு மா நீ இங்கையே இரு” என்றவன், ராவணனின் எதிர்வினை என்ன என்று தெரிந்து கொள்ள தன் சகாக்களுடன் ராவணனின் அறையின் வாசலையே பார்த்தபடி ஆர்வமாக காத்துக்கிடந்தான்.

சந்துரு மூலமாக அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்ட மற்றவர்களுக்கு அவ்வளவு சந்தோசம் தன் அண்ணனுக்கு என்று ஒரு ஆள் வந்துவிட்டால் அப்படியே தாங்களும் தங்களுக்கென்று ஒரு துணையை தேடிக்கொள்ளலாம் அல்லவா, எத்தனை நாளைக்கு தான் கத்தியே பிடிப்பது கொஞ்சம் காதல் படிக்கவும் ஆசைக்கொண்டனர். அரக்கனோ அரசனோ மனிதனாய் பிறந்த அனைவருக்கும் உணர்வுகள் சமம் தானே.

ராவணனுக்கு நிஜமா பிரம்மையா என்று ஒன்றும் விளங்கவில்லை, ‘இவள் இங்கே எப்படி?’ என்கிற சிந்தனையோடு மெல்ல நெருங்கியவன், அவ்வளவு நேரம் ஒருக்களித்து படுத்திருந்தவள்  தூக்கத்திலே நேராக படுக்கவும் அஜூதியா இங்கே இருப்பது பொய் அல்ல உண்மை என்று உணர, சில நிமிடங்களுக்கு முன் அமைதியடைந்திருந்த அவனது உணர்வுகள் எல்லாம் அவளை கண்டதில் மீண்டும் உயிர் பெற, மிகவும் புத்துணர்ச்சியாக உணர்ந்தவனுக்கு அவளது தோற்றம் அவனது சிந்தையை மயக்கி முழுதாக சிறைப்பிடித்தது.

கலைந்திருந்த கற்றை குழல் அவளின் முகத்தில் வந்து விழுந்திருக்க, மெதுவாக அவளது உறக்கம் கலையாது அந்த கற்றை மூடியை எடுத்து அவளின் காதோரம் ராவணன் சொருக, அவனது விரல் தீண்டவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபடியே, “ராவணன்” என்று அவனது பெயரை உச்சரித்தவள் மெலிதாக புன்னகைக்க, அவளது உடலெங்கும் மெல்லிய சிலிர்ப்பு பரவியது.

அவள் ராவணன் என்றதும் பதறி தன் கரத்தை எடுக்க போன ராவணன், அவள் முழிக்காமல் மீண்டும் தூங்குவதை பார்த்து, 

“தூக்கத்துல கூட என்ன ஃபீல் பண்றா” என்றவனுக்கு உடலெங்கும் சொல்ல முடியாது ஒன்று வெகுவாக தாக்க, அவனுக்குள் ஏதோ ஒரு தவிர்க்க முடியாது உணர்வு தோன்றி அவனை ஏதோ ஏதோ செய்ய, அவளது மாசற்ற நிர்மலமான வதனத்தை பார்த்தபடி சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தான்.

அப்பொழுது “க்ரிங் க்ரிங்” என்று கீழே இருந்த அவளது கை பையில் இருந்து அலைபேசி ஒலியெழுப்ப, அலைபேசியின் சத்ததில் எழுந்து விட்டால் என்ன செய்வது? இனி இது போல ஒரு வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்காதோ என்று எண்ணியவன், உடனே அவசர அவசரமாக அவளது கைப்பையை திறந்து அலைபேசியை கையில் எடுத்து அதை அணைத்த விட்டு அவளை பார்க்க லேசாக இதழ் பிளந்திருக்க மெல்லிய குறட்டை சத்தத்துடன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்.

“கும்பகர்னி” அவளை பார்த்து புன்முறுவலுடன் முணுமுணுத்த ராவணன் அலைபேசியை மீண்டும் கைப்பைக்குள் வைக்கும் பொழுது கருப்பு நிற டைரி அவனது கண்ணை கவர அதை கையில் எடுத்தவனுக்கு அவளது அனுமதியின்றி அவளின் டைரியை படிப்பது தவறு என்று தோன்றவும், ஒரே ஒரு கணம் தயங்கியவன் பிறகு தன் தயக்கத்தை புறந்தள்ளிவிட்டு டைரியை புரட்டினான். 

புகைப்படங்கள் சில பின் செய்யப்பட்டிருக்க ஓவ்வொரு புகைப்படத்திற்கு கீழும் ஒவ்வொரு நிகழ்வுகளை எழுதியிருந்தாள். நிதானமாக படித்தான். அஜூதியாவின் குழந்தை பருவ புகைப்படங்களை முகத்தில் புன்முறுவலுடன் ஆர்வமாக பார்த்துக்கொண்டே வந்தவனின் கண்கள் ஒரு படத்தை மட்டும் பார்த்து அழகாக சிரித்தது. நீர் பாதி நிறைந்திருந்த வட்ட டப்பில் அமர்ந்து கொண்டு நான்கு விரலையும் வாய்க்குள் போட்டு சப்பியபடி இருந்த அந்த புகைப்படத்தை மட்டும் டைரியில் இருந்து எடுத்து மெதுவாக வருடினான்.

அவன் வருடிக்கொண்டிருந்த அந்த நொடி அவனது மனத்திற்குள் முகிழ்த்த அந்த ஆசை இது வரை அவன் வாழ்க்கையில் நினைத்து கூட பார்த்திராத ஒன்று. நினைத்து பார்க்கவும் கூடாது என்று அவன் எடுத்த திடமான முடிவுகளில் ஒன்று. இருந்தும் இன்று ஆசைப்பட்டான். நிறைவேறுவது சாத்தியம் இல்லை என்று தெரிந்தும் ஆசை பட்டான். தான் கொண்ட ஆசை நிறைவேறினால் நன்றாக இருக்கும் என்று பேராசை கொண்டவன் தூங்கும் அஜூதியாவை ஒருகணம் பார்த்துவிட்டு மீண்டும் டைரியை புரட்டினான். தாய் தந்தையின் மரணம், ஜானகி, மற்றும் மாரியின் அரவணைப்பு, இந்திரா மற்றும் வேணியின் தோழமை, நாட்டியத்தின் மீது தான் கொண்ட ஆசை, தாய் தந்தையின் நினைவாக இருந்த கழுத்து சங்கிலி, தவறவிட்ட தன் தாயின் சலங்கை, பரந்தாமன் வீட்டில் நடந்த சம்பவம், அதற்காக தான் செய்த உதவி என அவள் வாழ்க்கையில் நடந்த, அவளை மிகவும் பாதித்த முக்கியமான சில விடயங்களை எல்லாம் எழுதியிருக்க ஒன்று விடாமல் படித்துக்கொண்டே வந்தவனின் கண்கள் ஒரு இடத்தில் அப்படியே அசையாமல் நின்றுவிட, மிக சிரமப்பட்டு தன்னை சமாளித்தவன் டைரியில் எழுதியிருந்த அந்த வரிகளை,

“ஹே ராவணா! 

நான் சீதையல்ல!

எனவே, கணை தொடுத்து எனக்கு மாலையிட ராமன் வேண்டாம்!

என் கரம்பிடித்திழுத்து என்னைக் கடத்தி செல்ல நீயே வேண்டும்! நீ மட்டுமே வேண்டும்! 

ஊரார் சொல் கேட்டு என்னைத் தீக்குளிக்க வைக்கும் ராமன் வேண்டாம்!

என் ஒரு சொல்லிற்காக யுகம் தாண்டினாலும் காத்திருக்கும் நீயே வேண்டும்! நீ மட்டுமே வேண்டும்!

ராமன் செய்த போரே சீதைக்காகத் தானாம்! ஹம் இருக்கட்டும்,

ஹே ராவணா! நித்தமும் உன்னையே நினைக்கும், 

எனக்காக ஒரு யுத்தம் செய்வாயா?

என்னைச் சிறையெடுத்து செல்வாயா? 

இப்படிக்கு, 

அந்திரன் ராவண ஈஷ்வரனின் அஜூதியா தனிய ஷக்தி “என்று வாசித்தான். 

மீண்டும் அதே வரிகளை  வாசித்தான்! மீண்டும் மீண்டும் வாசித்தான், வாசித்துகொண்டே இருந்தான். கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு வரிகளில் அவன் மேல் தான் கொண்ட மொத்த காதலையும் அஜூதியா கவிதையாகவே வடித்திருக்க, டைரியை மூடிவிட்டு அவள் முன்பு வந்து நின்றவனின் மனதை, இதமாக கால்வருடி செல்லும் கடல் அலைகள் போல அவன் கொண்ட சுகமான கடந்தகால எண்ண அலைகள் இதமாக வருட, அவன் மனமும் கடந்தகாலத்தை நோக்கி பயணித்தது. 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top