சொன்னது போலவே ஐந்து நிமிடத்தில் கீழே வந்தவன், அஜூதியாவை நோக்கித் தன் கரத்தை நீட்ட,
அவன் கரத்தைப் பற்றிக் கொண்டு அவனோடு மேலே வந்தவளுக்கு, சந்தோஷமும் கண்ணீரும் சேர்ந்தே வந்தது.
அங்கே அழகான வெள்ளை நிற டேபிள் போடப்பட்டிருக்க, அதில் ஆங்காங்கே ரோஜா இதழ்கள் தவழ, அதற்கு நடுவே வெள்ளை நிற கேக் இருந்தது.
இப்பொழுது அஜூதியாவுக்கு தான் அணிந்திருக்கும் இந்தப் புடவை தொடங்கி, இந்த ஏற்பாடு வரை எல்லாமே எதற்காக என்று நன்றாகப் புரிந்தது.
அன்று கேக்கைத் தட்டிவிட்டு, தன்னை கஷ்டப்படுத்திய தன் பிறந்த நாளின் கசப்பான நினைவைத் தன் மனதில் இருந்து அழித்து, அதற்குப் பதிலாகத் தன் மனதிற்குள் ஓர் அழகான நினைவைப் பதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை ஏற்பாடும்.
அது மட்டுமல்ல…
‘இனி நீ அனாதை அல்ல… உனக்கே உனக்காக, உன் ஆசைகள் உன் எண்ணங்களை எல்லாம் எல்லாம் நிறைவேற்ற நான் இருக்கிறேன்.’
என்பதைச் சொல்லில் அல்லாது, தன் செயலால் அவளுக்கு உணர்த்திவிட, கலங்கியிருந்த தன் விழிகளை அவன் அறியாது துடைத்துவிட்டு நிமிர்ந்தவள், ராவணனைப் பார்த்தாள்.
ஐந்து வயது சிறுவன் நல்ல மார்க் வாங்கிவிட்டு, தனக்குப் பிடித்த ஆசிரியரிடம் இருந்து பாராட்டு வாங்குவதற்காக ஏக்கம் கலந்த ஆர்வத்துடன் பார்ப்பானே… அதேபோல ராவணன் அஜூதியாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளோ இடுப்பில் தன் கரத்தை வைத்தபடி பொய்யான கோபத்துடன் ராவணனை முறைக்க,
ராவணனோ, பிடிக்குதா? பிடிக்கலையா? என்கிற தவிப்புடன் அவளை நோக்க,
வெடித்துச் சிரித்தவள்,
“உலகத்திலேயே பத்து நாள் கழிச்சு காதலியோட பர்த்டே கொண்டாடுற ஒரே காதலன் நீங்க தான், டான் சார்” என்று கிண்டலாகக் கூறினாள்.
தன்னவளின் உரிமையான கேலிக்கு எதிர்வினையாற்றத் தெரியாது, முகத்தைப் பக்கவாட்டாகத் திருப்பிக் கொண்டு தன் சிகையைக் கோதிய ராவணனின் வெட்கத்தை ரசித்தவள், அப்படியே அவன் முகத்தைப் பற்றி தன்னை நோக்கித் திருப்பி,
“ஆனாலும் நீங்க எவ்வளவு க்யூட் தெரியுமா?” என்றபடி அவனது தாடியடர்ந்த கன்னத்தைக் கிள்ளி விட்டு, அவன் கரத்தைப் பற்றிக் கொண்டு டேபிள் அருகே வந்தாள்.
வட்ட வடிவம் கொண்ட எளிமையான கேக், பார்த்ததுமே ஒன்றைக் கண்டுபிடித்தவள்,
“இது நீங்களே தானே செஞ்சீங்க?” என்று கேட்க, லேசாகப் புன்னகைத்தான் ராவணன்.
பிறகு மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட, அதை அணைத்துவிட்டு கேக்கை வெட்டி, இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள,
அஜூதியா ராவணனை அணைத்துக் கொண்டாள்.
பதிலுக்கு அவளை அணைத்துக் கொண்ட ராவணனோ,
“சாரி தியா… அன்னைக்கு உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்” என்றான்.
“இட்ஸ் ஓகே” என்றவளின் உச்சந்தலையில் புன்னகையுடன் இதழ் பதித்தவன், ஏதோ நினைவு வந்தவனாய் தன்னவளைத் தன்னிடம் இருந்து விலக்கி, அவளை அருகில் இருந்த நாற்காலியில் அமரவைத்தான்.
பின் அவள் முன் தன் ஒற்றைக் காலைத் தரையில் ஊன்றி மண்டியிட்டு அமர்ந்தவன், மெல்ல அவளது கால்களைப் பற்றிக் கொண்டு, திறந்திருந்த தன் சட்டையின் வழியே தெரிந்த தனது வெற்று மார்பில், தன்னவளது மென்பாதம் பதிய, அவளது பாதத்தைத் தூக்கித் தன் மடி மீது வைத்தான்.
அதன் பிறகு ஏற்கனவே அவள் பாதங்களில் இருந்த கொலுசுகளை நீக்கியவன், தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த ஒரு சிறிய நகைப் பெட்டியை எடுத்து, அதில் இருந்த தங்கக் கொலுசுகளைத் தன்னவளின் கால்களில் அணிவிக்க,
இதை கொஞ்சமும் எதிர்பார்த்திராத அஜூதியா மகிழ்ச்சியுடன் தன் கால்களில் மிளிர்ந்து கொண்டிருந்த கொலுசுகளை ஒருகணம் பார்த்தவள், அப்படியே தன் முன்னால் இருந்தவனின் முகத்தைப் பற்றி, அவனது நெற்றியில் தன் ஈர இதழ்களைப் பதித்துவிட,
அதில் கண்மூடி திறந்தவனோ, குனிந்து தன் மார்பைத் தீண்டிக் கொண்டிருந்த தன்னவளின் மென்பாதத்தைப் பற்றி, அதில் இருந்த காயங்களுக்கு அழுத்தமாக முத்தம் பதிக்கவும், அவன் நேற்றைய நிகழ்வுக்காக வருந்துவது புரிந்துவிட,
“என்ன பா விடுங்க சரியாகிடும் ஒண்ணுமில்ல” என்ற அஜூதியா தன் பாதத்தை இழுத்துக் கொள்ளப் பார்க்க, விடாமல் தன் மார்போடு இன்னும் அழுத்திக் கொண்டவன், அவளது இன்னொரு பாதத்திலும் அவள் விழிகளைப் பார்த்துக் கொண்டே கொஞ்சம் அழுத்தமாகவே இதழ் பதித்துவிட,
உச்சி முதல் பாதம் வரை தேகம் முழுவதும் அஜூதியாவுக்குச் சிலிர்த்துவிட்டது.
அவளோ அவன் முகம் பார்க்க முடியாது குனிந்தே அமர்ந்திருக்க, அப்பொழுது தான் அந்தக் கொலுசில் தொங்கிக் கொண்டிருந்த லாக்கெட்டை எடுத்து பார்த்தாள்.
அதில், தியா என்று தமிழில் எழுதியிருக்க, அதைச் சுற்றி பெரிய R என்ற ஆங்கில எழுத்து இருந்தது.
அதாவது,
‘உன்னைச் சுற்றியே நான்! நீயே என் உலகம்!’
என்பதை அந்த லாக்கெட்டின் வடிவிலேயே அவளுக்குள் உணர்த்தியிருந்தான் ராவணன்.
அஜூதியாவுக்கு வார்த்தைகளே வரவில்லை.
காதல் தளும்ப அவன் முகம் பார்க்க, அவனோ அவள் பாதத்தில் இருந்த பழைய காயங்களையே வருடிக் கொண்டிருந்தான்.
அவன் முகத்தை அழுத்தமாகப் பார்த்தவள்,
“ராவணா…” என்று அழைத்தாள்.
அவனோ,
“ம்ம்…” என்றான்.
“நானும் முயற்சி பண்ணிப் பாக்குறேன். ஆனா என்னால முடியல. இப்படி ஒவ்வொரு செகண்டும் உன்னை ரசிக்க வச்சிட்டே இருந்தா நான் என்னதான் பண்றது?” என்றவளோ, அவனது சட்டையைப் பற்றி சற்று குனிந்து, ராவணனின் இதழ்களைத் தன் செவ்விதழால் அணைத்துக் கொண்டாள்.
வழக்கத்திற்கு மாறாக, கிடைத்த கொஞ்சம் அழுத்தமான இதழ் ஒற்றலை சுகமாக வாங்கிக் கொண்டவன், அவள் எதிர்பார்த்தது போல அவளை அணைக்கவும் இல்லை, விலக்கவும் இல்லை.
இவளுக்கோ கோபமாக வந்தது.
எப்பொழுதும் இதைக் கடந்து விடுபவளால், இப்பொழுது முடியவில்லை.
“உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? என்கிட்ட இருந்து வாங்கிட்டே இருக்கியே… என்னைக்காவது குடுத்திருக்கியா?” என்று ராவணனைப் பார்த்து அதே கோபத்துடன் கேட்டாள்.
அவள் கேட்ட தோரணையில் அவனுக்குச் சிரிப்பு வந்துவிட, அதை அடக்கிக் கொண்டே அவளது கன்னத்தைப் பார்த்தான்.
அதாவது, இன்று கொடுத்த முத்தத்தைத்தான் காண்பிக்கிறானாம்.
“அதுக்குப் பேர் முத்தமா?” என்று கோபத்துடன் கேட்டாள் அஜூதியா.
அவன் புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.
“உனக்கும் எனக்கும் கல்யாணம்னு ஒன்னு ஆனதும், ஃபர்ஸ்ட் நைட்டுன்னு ஒன்னு நடக்கும்… அதாவது தெரியுமா?” என்றாள்.
அதற்கும் அவன் சிரித்து வைக்க, அவன் மேல் கொண்டுள்ள காதல் ஒருபுறம், அதனால் தனக்குள் நடக்கும் உணர்ச்சிப் போராட்டம் ஒருபுறம் என்று ஏற்கனவே தவித்துக் கொண்டிருந்தவள், அவன் சிரிக்கவும் தன்னை கட்டுப்படுத்த முடியாமல்,
“எனக்கு உங்கள ஹக் பண்ணிக்கணும்… கிஸ் பண்ணிக்கும்னு தோணிட்டே இருக்கு. உங்களுக்கு என்கிட்ட எதுவுமே தோணலையா? நானே எப்பவும் பண்றேன்… ஒரு மாதிரியா இருக்கு” என்றவளுக்கு கண்கள் இரண்டும் கலங்கிவிட,
ராவணனுக்கு இப்பொழுது ஒருமாதிரி ஆகிவிட்டது.
அவனுக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன?
சின்னச் சின்ன தொடுதலுக்கே மனம் கண்டதையும் கேட்டு அடம் பிடிக்க, இன்னும் ஆழமாக நெருங்கினால் அவனால் நிச்சயம் விலக முடியாதே,
இதுவரை அவன் எப்படியோ… ஆனால் அவளுக்கென்று என்று வரும் பொழுது எல்லாம் முறையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான்.
அவளது நிலையும் அவனுக்கு நன்றாகவே புரிந்தது.
தன் மீது அதீத காதலை வைத்திருக்கிறாள். அந்தக் காதலால் அவளுள் ஏற்படும் உணர்ச்சிக் குவியலுக்குள் சிக்கிக்கொண்டு தவிக்கிறாள்.
அதற்கான நிவாரணத்தை யாரிடம் கேட்க முடியும்? உரிமைப்பட்ட என்னிடம் தானே எதிர்பார்க்க முடியும். அதுவும் அவனுக்கு நன்றாகவே புரிகிறது.
ஆனால் தன் நிலையை எப்படி விலக்கி சொல்லி சமாதானம் செய்வது என்று புரியாமல் அவன் அமைதியாக அவளைப் பார்க்க,
“உன்னை… என்னை சொல்லணும் போ!” என்று கோபத்தில் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அவனோ சமாதானம் செய்யும் நோக்கில் தான் பற்றியிருந்த அவள் பாதத்தை இன்னும் மென்மையாக வருட,
அவளோ கோபத்தில் அவனை முறைக்கவும், புன்னகையுடன் இன்னும் உறுதியாகப் பற்றிக் கொண்டவன்,
“இந்தக் கொலுசு உன் கால்ல எப்பவும் இருக்கணும். இதை நீ எப்பவும் கழட்டக் கூடாது. இது உன் கிட்ட இருக்கிறது… நானே உன் கூட இருக்கிறது போல” என்றான்.
அதற்கு அவளோ,
‘இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை. நான் என்ன சொல்றேன், இவர் என்ன சொல்றார்!’ என்று முனுமுனுத்தவள்,
“இதென்ன தாலியா? ம்ம்… எப்பவும் கூடவே வச்சிக்கிறதுக்கு? தாலி கட்டுங்க, பாத்துக்கலாம்” என்று தன் இதழைச் சுழித்துவிட்டு அவனைப் பார்த்தாள்.
அவளது இதழைப் பார்த்துவிட்டு அவளைப் பார்த்தவனோ,
“அதுக்கென்ன? கல்யாணம் பண்ணிட்டா போச்சு” என்று கூறவும், அவனது பிடியில் இருந்த தன் பாதத்தை உருவிக் கொண்டு அவனைப் பார்த்தவள்,
“அதுசரி… விட்டா இப்பவே கல்யாணம் பண்ணிடுவீங்க போல” என்று புன்னகையுடன் விளையாட்டாகக் கேட்டாள்.
அவளது விழிகளை ஊடுருவிப் பார்த்தவனோ,
“தாலி கட்டட்டுமா?” என்று தீவிர குரலில் வினவினான்.
அதற்கு அவனைப் புருவம் உயர்த்திப் பார்த்தவளோ,
“ஆஹான்… எங்க கட்டுங்க பாப்போம்” என்றாள்.
அதற்கு புன்னகையுடன் எழுந்து கொண்ட ராவணன், அஜூதியாவை அழுத்தமாகப் பார்க்க,
பதிலுக்கு அவனது விழிகளை அழுத்தமாக பார்த்தவளுக்கோ கண்களில் சட்டென்று நீர் கோர்த்து விட அவனை விட்டு விலகி, நேரே சென்று படகின் முகப்புப் பக்கம் உள்ள விளிம்பைப் பிடித்துக் கொண்டு குளிர்ந்த காற்றைத் தன் முகத்தில் வாங்கியபடி நின்றாள்.
அவளது மனமோ, ‘கல்யாணமாம் கல்யாணம்! தாலிகட்டுறதுகுள் இன்னும் என்னை என்ன பாடு படுத்தப் போறாரோன்னு நானே பயந்துபோய் இருக்கேன் . இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை’ என்று தன்னவனை வசைப்பாடிக்கொண்டிருக்க,
அவளுக்குப் பின்னால் வந்து நின்றான் ராவணன்.
தன்னவனின் சூடான மூச்சுக்காற்று தனது மேனியைத் தீண்டியதும், கம்பிகளை அவள் இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொள்ள,
“தியா…” என்று அழைத்தான் ராவணன்.
கண்களைத் துடைத்துக்கொண்டே திரும்பி அவன் முகம் பார்த்தவள்,
“சும்மா இருங்க… ஏதாவது பேசி என்னை கஷ்டப்படுத்தாதீங்க. அவ்வளவு சாகசங்களைத் தாண்டிதான் உங்கள லவ் பண்ணவே வச்சிருக்கேன். இதுல சார் தாலி கட்டுவாராம்… அதெல்லாம் நடக்கணும்னானா எனக்கு ஏதாவது பெரிய சம்பவம் நடக்…” ‘நடக்கணும்’ என்ற சொல்லை அவள் சொல்லி முடிக்கவில்லை.
அதற்கு மேல் தாமதிக்காது தன்னவளின் முகத்தைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டு சட்டென்று அவளின் துடிக்கும் இதழில் தன் இதழை பதித்து விட்டு விலகியவன், ஒரு கணம் அவள் விழிகளைப் பார்த்தான்.
கண்ணீரில் நனைந்திருந்தது.
என்ன நினைத்தானோ… அப்படியே அவளது இரு கண்களிலும் மாறி மாறி இதழ் பதிக்க,
பெண்ணவளின் கண்கள் தாமாக மூடிக் கொண்டன.
அவளைப் புடவையில் பார்த்த முதலே கட்டவிழ்ந்த தன் உணர்வுகளை அடக்க வழி தெரியாது தவித்தவனுக்குள், அவள் அறியாது பிரளயமே நடந்து கொண்டிருக்க,
இதில் அவளது கண்ணீரும் காதலும், அத்தனை நேரம் அவன் காத்திருந்த கட்டுப்பாட்டைத் தகர்த்தெறிய வைத்துவிட, அதற்கு மேல் ராவணனால் நிதானிக்க முடியவில்லை.
சட்டென்று குனிந்தவன், இம்முறை தன்னவளின் இதழை வேகமாக சிறையெடுக்க தொடங்கிவிட,
மென்மையான அவளது இதழோ, வன்மையான அவனது முத்தப் போரில் சிக்கித் தவித்தது.
நீண்ட நேரம் நடந்த இந்த இதழ் யுத்தத்தில், சுவாசத்துக்காக அவன் நெஞ்சில் கைவைத்து அவனை விலக்கி, பெரிய பெரிய மூச்சுகளை உள்ளிழுத்து வெளியிட்ட அஜூதியாவோ தன்னவனின் அதிரடியில் அதிர்ந்துதான் போனாள்.
முகம் ஒரு பக்கம் பூரிப்பிலும், இதழ்கள் மறுபக்கம் அவனது முத்தத்தின் தாக்கத்திலும் சிவந்திருக்க,
அதைப் பார்த்தவனுக்குள் கட்டவிழ்ந்த உணர்வுகள் எல்லாம் ஒன்று கூடி பேயாட்டம் போட, இதற்கு மேல் நெருங்கினால் சரியாக இருக்காது என்று அவளை விட்டு விலகியவன் தனது உணர்வுகளை அடக்க முடியாது அப்படியே தன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
அஜூதியாவுக்கோ அவனைப் பார்க்க கஷ்டமாக இருந்தது.
அவன் கொடுத்த முத்தத்திலேயே அவனுக்குள் நடக்கும் போராட்டமும், தன்னை விட அதிகமாக உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறான் என்பதும் புரிந்து விட,
தேவையில்லாமல் பேசி விட்டோமோ என்பது தாமதமாக அவளுக்குப் புரிந்தது.
ஆனாலும் மனமோ,
‘ஏன் இவ்வளவு கஷ்டப்படணும்? என்கிட்ட என்ன தயக்கம்? நான் அவனவள் இல்லையா?’
என்று எண்ணியவள், மெல்ல அவன் அருகே வந்து அவனது நெற்றியைப் பிடித்து விட்டாள்.
அதில் சுகமாகக் கண்மூடியவனின் காதருகே குனிந்து,
“ஐம் ஓகே… என்னைக்கு இருந்தாலும் நான் உங்களுக்கு தான். இப்படி உங்கள நீங்களே வருத்திக்காதீங்க” என்றாள்.
அவள் அப்படிச் சொன்ன மறுகணம் அங்கிருந்து எழுந்தவன், அவளது இதழ் மீது விரல் வைத்து,
‘பேசாதே’ என்பது போல செய்கை செய்து, அஜூதியாவின் முகத்தைத் தன் கையில் தாங்கி, அவளது விழிகளை நேராகப் பார்த்தபடி,
“நீ என் வரம். உன்னை ஊர் அறிய கல்யாணம் பண்ணி என் மனைவி ஆக்கிக்கணும். அது தான் உனக்கும்… உன் காதலுக்கும்… நான் கொடுக்கிற மரியாதை” என்றவன்,
தன்னவளின் இடையைப் பற்றி தன்னருகே நெருக்கிக் கொண்டே அவளது நெற்றியில் இதழ் பதித்து,
“கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டுவிட்டு அவள் முகம் பார்த்தான்.
அவன் கண்களில் தான் எவ்வளவு காதல்!
அது அவ்வளவும் தனக்கே தனக்கென்று உணர்ந்தவளின் இதயம் ஒருபக்கம் பூரித்துப் போக,
ஏற்கனவே அவனோடு வாழப்போகும் நாட்களை எண்ணிக் கனவில் இருப்பவள் மறுக்கவா போகிறாள்?
புன்னகையுடன் ஆம் என்பது போலத் தன் தலையை அசைத்து அவள் சம்மதம் சொன்ன மறுகணம்,
அவளது முகம் முழுவதும் முத்தமிட்டவன், மூச்சிரைக்க தன்னவளது நெற்றியோடு நெற்றி முட்டி இளைப்பாறினான்.