ராவணா 35

மறுநாள் காலை.

வழக்கத்தை விட நேரமே கண் விழித்த அஜூதியாவுக்கு நேற்றிரவு நடந்த அனைத்தும் நினைவடுக்கில் வந்து போக அவள் விழிகள், அவன் படுத்திருந்த இடத்தைத்தான் பார்க்க,

அங்கே அவன் இல்லை.

அதற்குப் பதிலாக, அவளுக்காக ஃப்ளாஸ்க்கில் சூடான காலைத் தேநீரும், சாண்ட்விச்சும் அருகே ஒரு டேபிளில் வைக்கப்பட்டிருக்க, அதைப் பார்த்ததும் அவளது முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.

“இதுல எல்லாம் நம்ம ஆள அடிச்சிக்கவே முடியாது” என்று தனக்குள் புன்னகைத்தபடி முணுமுணுத்துக் கொண்டவள், ப்ரெஷ் ஆகிவிட்டு, தன் ஈரத்தலையை உலர்த்தி விட்டு தேநீரை எடுத்துப் பருகியபடியே அறையை விட்டு வெளியே வந்தாள்.

அவனைத் தேடிய அவளது பார்வை சிறிது தொலைவில் சென்று நின்றது.

அங்கே…

வெற்று மேனியோடு வெறும் ஜீன்ஸ் மட்டும் அணிந்திருந்த ராவணன், யாருடனோ பேசிக்கொண்டே படகை செலுத்திக் கொண்டிருந்தான்.

வழக்கம் போலவே அவளது பார்வை ரசனையோடு அவன் மீது படர்ந்த அவனின் முதுகில் இருந்த அந்தப் பெரிய டாட்டூவில் நிலைத்தது.

கருமையான மையில், இருளுக்குள் தனித்து நின்ற ஒரு ஆண் உருவம்.

அவனது முகம் முழுமையாகத் தெரியாத அளவுக்கு நிழல்களுக்குள் மறைந்திருக்க, அவனைப் பின்னால் இருந்து இறுக்கமாக அணைத்தபடி ஒரு தேவதை இருந்தாள்.

அவளது பெரிய சிறகுகள் இருபுறமும் விரிந்து, அந்த ஆண் உருவத்தை முழுமையாகச் சூழ்ந்திருந்தது.

அதில் ஏதோ எழுதியும் இருந்தது.

அழகாக இருந்தது.

வித்தியாசமாகவும் இருந்தது.

ஆனால் அதில் என்ன வார்த்தைகள் எழுதியிருந்தது? அந்த டாட்டூவுக்கு என்ன அர்த்தம்? என்று மட்டும் அவளுக்குப் புரியவில்லை.

அருகில் சென்று அதைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போல ஆசையாக இருந்தது.

ஆனால் ஏதோ ஒரு தயக்கம். அவனை பலமுறை முத்தமிட்ட பொழுது வராத தயக்கமும், கூச்சமும் அவன் நேற்று முத்தமிட்ட நொடியில் இருந்து அநியாயத்திற்கு வந்து தொலைய,

சற்று தள்ளி நின்றுக்கொண்டே, தன்னவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.

காற்றில் கலந்து வந்த அவளது பாதக் கொலுசின் மெல்லிய சத்தம் வைத்தே தன்னவள் வந்திருப்பதை, உணர்ந்து கொண்டவன் திரும்பிப் பார்க்காமலேயே,

“தள்ளி இருந்து பாக்கணும்னு இல்லை கிட்ட வந்தும் பாக்கலாம்.” கேலி குரலில் கூற, அவள் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.

“நான் வந்தது எப்படி தெரியும்?”

அவளது கேள்விக்கு பதில் சொல்லாமல், தன் தலையை மட்டும் சற்றுத் திருப்பி ஒரு கணம் அவளது காலில் இருந்த கொலுசைப் பார்த்தவன் மீண்டும் முன்னால் திரும்பிக் கொள்ள, அவளது உதடுகளில் புன்னகை.

“கொலுசை வச்சி கண்டுபுடிச்சீங்களா?”

அவனது உதடுகளிலும் மெல்லிய புன்னகை அரும்ப, அது அவனது உடல் மொழியிலே தெரிந்தது.

“ம்.” திரும்பி அவள் முகம் பார்த்து சொல்ல 

அவனது சில நொடி பார்வை கூட பெண்ணவளுக்கு ஒரு விதமான மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள்,

“இதெல்லாம் டிரைவ் பண்ண எப்போ கத்துக்கிட்டீங்க?” என்று கேட்டாள்.

“வேலாயுதம் அய்யாட்ட இருக்கும் போதே கத்துக்கிட்டேன். ஒரு பத்து வயசு இருக்கும்.”

“பத்து வயசா! குழந்தையா இருக்கும் போதே இதெல்லாம் தெரியுமா!” 

‘குழந்தையா நானா!?’ அவனுக்கு சிரிப்பு தான் வந்தது, அந்த பருவம் எல்லாம் நான் கடந்து வந்தேனா என்று தன்னை தானே கேட்டுக்கொண்டான். 

தன் சூழ்நிலை காரணமாக சிறு வயதில் இருந்தே முரட்டு தனமாகவே வளர்ந்து வந்த ராவணனுக்கு தன்னை குழந்தையாக கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

“ஆமா” என்று மட்டும் கூறினான்.

“என்ன இவ்வளவு ஈஸியா சொல்றீங்க. இதெல்லாம் உங்களுக்கு பயமே இல்லையா?” என்று அவள் கேட்டதும் அவன் அவளை திரும்பிப் பார்க்க, அவளோ, 

“இந்த கேள்விய நான் உங்க கிட்ட கேட்ருக்கவே கூடாது, உங்களுக்கு தான் எதுக்குமே பயம் கிடையாதே” என்று அவள் கடலைப் பார்த்து கொண்டே கூற,

“யார் சொன்னா எனக்கு பயம் இல்லைன்னு” என்றான் ராவணன்.

அதைக்கேட்ட அஜூதியாவோ,

“உங்களுக்கு பயமா! எதை பார்த்து? யார் மேல?” கண்களில் சுவாரசியம் மின்னியது.

இப்பொழுது திரும்பி அவள் விழிகளை பார்த்தவன்,

“என்னை கொல்லாம கொல்ற உன் கண்ணு, என் கட்டுப்பாட உடைக்கிற நீ, உன் காதல், உம் பிடிவாதம்” என்று அவளது அதிர்ந்த விழிகளை பார்த்துக்கொண்டே கூறியவன், தன்னவளின் இதழோரம் தவிழ்ந்த கர்வ புன்னகையை ரசித்தபடியே தன் கரத்தை அவளை நோக்கி நீட்டினான்.

‘ஊரே பார்த்து நடுங்கும் தன்னவனுக்கு என்னை கண்டு பயமாம்’ கர்வம் வாராது போகுமே?

அவனது பேச்சும், அதில் கொட்டிக்கிடந்த காதலும், அவனின் காந்த பார்வையும், ஏதோ ஒரு மாயைக்குள் இழுத்துச் செல்ல,

அவனது விழிகளைப் பார்த்தபடியே அவன் கரத்தைப் பற்ற,

அந்நேரம் பார்த்து அலைகள் படகின் மீது மோதிய சத்தம் அவளுக்குள் சிறு பயத்தை ஏற்படுத்த, அதில் படகின் நடுவில் இருந்த படியை கவனிக்காமல் தடுமாறினாள்.

“அச்சோ” என்று அவள் கீழே விழப் பார்க்க,

அடுத்த நொடியே ராவணனின் ஒற்றைக் கை அவளது இடையை வளைத்து தன் மார்போடு இழுத்துக் கொள்ள தன்னவனின் தோள் வளைவில் முகம் புதைத்திருந்தவள் அதிர்ச்சியோடு அவனைப் பார்க்க, 

அதற்கு அவனோ சிரித்தபடி,

“மேடமோட கவனம் வேற எங்கையோ இருக்கு போல” என்கவும் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், 

“சாரி அலை அடிக்கவும் பயந்துட்டேன்” என்றாள் மெதுவாக.

அஜூதியாவை புன்னகையுடன் பார்த்த ராவணனோ, “ராவணனோட பொண்டாட்டி இதுக்கெல்லாம் பயப்படலாமா?”என்று அவளது விழிகளை நேராகப் பார்த்துக் கேட்டான்.

அவ்வளவுதான்.

எப்போதும் அவனது பேச்சுக்குப் பதிலுக்கு ஏதாவது சொல்லிவிடும் அஜூதியாவால், அந்த நொடி ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை.

‘ராவணனோட பொண்டாட்டி.’

அவன் சொன்ன அந்த வார்த்தை காதுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

அவளோ வெட்கத்தில் முகம் சிவக்க தன் தலையை தாழ்த்திக்கொள்ள, 

தன்னவளது முக சிவப்பை ரசித்தபடியே தன்னவளை ஸ்டீயரிங்கின் முன் நிறுத்தி அவளது இரு கரங்களாலும் ஸ்டீயரிங்கைப் பிடிக்க வைத்தவன், அவளுக்கு பின்னால் நின்று கொண்டு அவளின் கரங்களின் மேல் தன் கரங்களை வைத்து பிடித்துக் கொண்டு படகை இயக்கக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினான்.

“இப்படி ” என்று சொல்லிக் கொண்டே,

படகை செலுத்துவதில் இருக்கும் நெளிவு, சுழிவுகள்.

எப்படிக் படகின் வேகத்தை குறைக்க வேண்டும்?

எப்படித் திருப்ப வேண்டும்?

என்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தான்.

முதலில் பயந்தவள், சிறிது நேரத்திற்குப் பிறகு சிரத்தையோடு கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள்.

அவன் கொடுத்த தைரியத்தில்.

கொஞ்சம் கொஞ்சமாக அவனது உதவியில்லாமல் படகை இயக்கியவள், சில தூரம் தனியாகவே ஓட்டிப் பார்த்தாள்.

அதைப் பார்த்த ராவணனின் இதழ்கள் தன்னவளை எண்ணி பெருமையாக  புன்னகைத்து கொண்டன.

@@@

வேலாயுதமும் அவர் மனைவியும், பிரச்சனை நடந்த மறுநாளே, ராவணனுக்கு அழைத்து அஜூதியாவின் நலனை விசாரித்து விட்டு,அவளை அழைத்து கொண்டு வீட்டுக்கு வருமாறு சொல்லியிருக்க, ராவணனால் மறுக்க முடியவில்லை.

அதே நேரம் அஜூதியாவின் விருப்பமும் அவளின் மனநிலையும் அவனுக்கு முக்கியமே, ஆக அவளிடம் பேசி அவள் விருப்பத்தை உறுதி செய்து கொண்டவன் திட்டமிட்டப்படி வேலாயுதத்தின் இல்லத்திற்கு அஜூதியாவையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.

ராவணன் காரை ஒட்டிக் கொண்டிருக்க, அருகில் அமர்ந்திருந்த அஜூதியாவின் அலைபேசி சிணுங்க, எடுத்து பார்த்தவளின் முகம் புன்னகையில் விரிய, அட்டென்ட் செய்தவள்,

“சந்துரு அண்ணா” முகம் கொள்ளா புன்னகையோடு அழைத்தவள், 

“இதோ சீக்கிரம் வந்திருவோம்ண்ணா எல்லாரும் எப்படி இருக்காங்க” என்று கேட்டவள் தேவா, விக்கி, டேவிட், ராஜ், என மிச்சமுள்ள ஒன்பது பேரிடமும் பேசிவிட்டு வைக்க, ராவணனின் இதழ்கள் லேசாக வளைந்தன.

ராவணன் புன்னகைக்கவும்,”ஏன் சிரிக்கிறீங்க” என்று கேட்டாள் அஜூதியா.

அதற்கு அவனோ,

“இன்னும் கொஞ்ச நேரத்துல நேர்லயே பார்த்துக்க போறோம். இதெல்லாம் உன் அண்ணன்களுக்கும் உனக்கும் கொஞ்சம் ஓவரா தெரியலையா” 

“அதெல்லாம் அண்ணன் தங்கச்சின்னா அப்படி தான், கண்ணு வைக்காதீங்க” என்று சிரிக்க, ராவணனின் அதரங்களும் மெலிதாய் புன்னகைத்துக்கொண்டன.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top