ராவணா 38

“பஜாரி” என்று திட்டியபடியே வண்டியை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்த தேவராஜுக்கு இன்னமும் காதடைத்த உணர்வுதான்.

ராவணனும் அப்போதுதான் வீட்டிற்கு வந்திருக்க, அனைவரும் வாசலில் நின்றிருந்த நேரத்தில், வெற்று மார்புடன் ஜீப்பை விட்டு இறங்கிய தேவராஜை அனைவரும் அதிர்ந்து பார்த்தனர்.

அவனோ தன் சகாக்கள் அனைவரும் அங்கே இருப்பதைப் பார்த்து, ‘போச்சு டா வச்சு செய்யப் போறானுங்க!’ என்று தன் மனதிற்குள் நினைத்தபடியே வர,

“என்னடா இது கோலம்? மாடல் போல வந்து இறங்குற?” என்று கிண்டலாகக் கேட்டான் மஹத்.

“அதைப் பத்தி என்கிட்ட கேக்காத டா செம காண்டுல இருக்கேன்!” என்று மூக்கு விடைக்கக் கூறினான் தேவராஜ்.

“என்னாச்சு?” என்ற ராவணனிடம் நடந்த அனைத்தையும் அவன் சொல்லவும்,

“சாரி கேக்க வேண்டியதுதானே?” என்றான் விக்கி.

“எங்க கேக்க விட்டா பஜாரி போல ஆடுறா டா!”

“அதுக்கு பொண்ணுகிட்ட போய் திட்டு வாங்கிட்டு வந்திருக்க நீ ரௌடியா? அவ ரௌடியா டா?” என்று கேலி செய்த டேவிட்டைப் பார்த்து முறைத்த தேவராஜ்,

“டேய் அவகிட்ட பேசி பாரு, அப்போ புரியும். காதுல ரத்தம் மட்டும் தான் வரல! அந்தக் கத்து கத்துறா, சட்டையைக் கழட்டித் தான்னு நிக்கிறா. மத்தவங்ககிட்ட டீல் பண்றது போலவா பொண்ணுங்ககிட்ட டீல் பண்ண முடியும்?” என்றதும் சிரித்த ராஜ்,

“அது என்னவோ உனக்கும் பொண்ணுங்களுக்கும் ஏழாம் பொருத்தம்தான்!” என்க, அனைவரும் சிரித்தனர்.

அதற்கு,

“எனக்கு பொருந்தவே வேண்டாம் டா ஆள விடுங்க!” என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டான் தேவராஜ்.

உடனே விஷ்ணுவோ,

“அதையும் பாப்போம் டா” என்று பக்கத்தில் இருந்த இமானுடன் கையடித்துக்கொண்டு சிரிக்க,

“டேய் சும்மா இருங்க டா!” என்ற தேவராஜின் கைக்குள் இருந்த துணியைப் பார்த்த ஜெய்,

“என்னடா இது?” என்று கேட்டான்.

“என் டிரஸ்ஸைப் போட்டுக்கிட்டு, அவளோட சேறு படிஞ்ச டிரஸ்ஸ என் மேல தூக்கிப் போட்டுட்டு போய்ட்டா.”

“சரி அதை அங்கேயே தூக்கிப் போட்டுட்டு வராம, உள்ள வேற ஏன் கொண்டு போற?” என்ற சந்துருவிடம்,

“என்ன பண்றதுன்னு தெரியல. ரூம் தொடைக்க உதவும்னு கொண்டு போறேன்,” என்றதும்,

“டேய் தேவா உன்னோட முடியல டா!” என்று அடக்க முடியாமல் அனைவரும் சிரித்துவிட்டனர்.

நண்பர்கள் அனைவரும் அவனை விடாமல் கேலி செய்ய, கடைசியில்,

“இதை குப்பையில போட்டுட்டு போய் ஃப்ரெஷ் ஆகு,” என்று சொன்ன ராவணன், அவர்களுடன் பொதுவாக சில விஷயங்களைப் பேசிவிட்டு உள்ளே செல்ல, தேவராஜை அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவழி செய்துவிட்டனர்.

@@@@

தன் சகாக்களிடம் பேசிவிட்டு தன் அறைக்குள் நுழைந்த ராவணன், அப்படியே கட்டிலில் விழுந்து கண்களை மூடிய நொடி அலைபேசி சிணுங்க, அவனது இதழ்கள் அவனவளை எண்ணி தானாகப் புன்னகைத்தன.

உடல் என்னவோ அடித்துப் போட்டது போலத்தான் இருந்தது. எனினும் அலைபேசி சிணுங்கவும், விடலைப் பையன் போல குதூகலித்தான் ராவணன்.

பின்பு அலைபேசியை எடுத்து பார்க்க, அவன் எண்ணம் போலவே அவனுக்கு சொந்தக்காரிதான் அழைத்திருக்க,

“என்னடி அதுக்குள்ள என்னை தேடிடுச்சா?” என்று உற்சாகமாக வினவினான் ராவணன்.

அதற்கு அவளோ,

“ராவணா” என்று அழைத்திருந்தாள். ஒற்றைச் சொல்தான், உடனே கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தவன்,

“வரவாடா?” என்றான்.

இத்தனைக்கும் அவள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் குரல் சற்று உள்ளே சென்றிருந்ததிலேயே ஏதோ சரியில்லை என்பதை யூகித்திருந்தவன் அவ்வாறு கேட்டிருந்தான்.

இன்று நடந்த அனைத்தையும் கூறி, ராவணனை வந்து உடனே பேசச் சொல்ல வேண்டும் என்றுதான் அவளும் சற்றும் யோசிக்காது உடனே அழைத்தாள்.

ஆனால் ஜானகி கோபமாக இருக்கும் பொழுது ராவணன் வந்து பேசினால் சரியாக இருக்காதே. ஒருவேளை ஜானகி ராவணனின் மனம் நோகும்படி பேசி விட்டால், அஜூதியாவால் அதை தாங்கிக்கொள்ள முடியாது.

இது எல்லாவற்றையும் தாண்டி, பல மணி நேரம் ஒற்றை ஆளாய் வண்டி ஓட்டிக்கொண்டு வந்திருக்கிறான். அவன் ஓய்வெடுக்கட்டும், இப்பொழுதே கூறி அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம்.

ஜானகியை சமாதானப்படுத்திவிட்டு சொல்லலாம் என்று கண நேரத்தில் முடிவெடுத்தவள்,

“சும்மாதான் வீட்டுக்கு ரீச் ஆகிட்டியான்னு தெரிஞ்சிக்க தான் கூப்பிட்டேன். நீ ரெஸ்ட் எடு,” என்று முயன்று இயல்பாகப் பேசுவது போல் பேச,

“வந்துட்டு இருக்கேன்,” என்றவனின் கரத்தில் கருப்பு நிற ஜீப் பறந்தது.

@@@@

“ஜானகி மா என்கிட்ட பேசவே மாட்டிக்கிறாங்க ராவணா” அவனைக் கண்டதும் முடியாமல் அணைத்துக்கொண்டு அழுதுவிட, ஆறுதலாய் அவளின் முதுகை வருடிய ராவணன்,

“இப்போவே வந்து பேசவா?” என்று கவலையோடு அமர்ந்திருந்தவளைப் பார்த்துக் கேட்டான்.

“வேண்டாம் நான் சொல்லும் பொழுது வாங்க,” என்று கண்களைத் துடைத்துக்கொண்டவள்,

“ரொம்ப பயந்துட்டேன். என் எண்ணம் முழுக்க நீங்கதான் இருந்தீங்க. உங்கள மனசுல நினைச்சிட்டுத்தான் எல்லார் முன்னாடியும் சொன்னேன்,” என்றாள்.

உடனே அவளின் நெற்றியில் இதழ் பதித்த ராவணன்,

“நான் இருக்கேன் பாத்துக்கலாம்,” என்றான்.

அவளிடம் அப்படி சொன்னாலும்  ஜானகியை எண்ணி அவனுக்குச் சற்று கலக்கமாகத்தான் இருந்தது.

ஒருவேளை ஜானகி மறுத்துவிட்டால், அவரை மீறி அஜூதியாவின் கரம் பிடிக்க அவனுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை.

ஆயிரம் இருந்தாலும் தன்னவளை வளர்த்தவர் ஆயிற்றே.

யார் மனதையும் வருத்தாமல், அனைவரின் ஆசீர்வாதத்தோடு தன்னவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறான்.

ஆனால் அதே நேரம்,

‘என்ன ஆனாலும் சரி இதற்கு மேல் தாமதிக்கக் கூடாது. சீக்கிரம் பேசி எப்படியாவது ஜானகியின் சம்மதத்தோடு சீக்கிரமே திருமணம் செய்துகொள்ள வேண்டும்’, என்று மனதிற்குள் உறுதியாக எண்ணிக்கொள்ள,

அஜூதியாவோ, ‘நான் இருக்கேன்’ என்று அவன் சொன்னதில் கவலை மறந்து புன்னகைத்தவள் அதே புன்னகையுடன் தன்னவனை அணைத்துக்கொண்டாள்.

@@@@

“பாத்தியாடி தனியாவெல்லாம் போய் மீட் பண்ணிட்டு வரா,” என்று இந்திராவிடம் சொன்ன வேணி, தங்கள் முன்பு பாவம் போல வந்து நின்ற தோழியைப் பார்த்து முறைக்க,

இந்துவோ,

“இதோ ஒண்ணுமே தெரியாத மாதிரி ஒரு பார்வை பாக்குறியே அதை முதல்ல ஸ்டாப் பண்ணு டி ஃபிராடு!” என்றாள்.

அதற்கு அஜூதியாவோ,

“திட்டாதீங்க டி” என்று பாவமாகச் சொல்ல,

அவர்களுக்கோ அவள் காதலித்ததை மறைத்துவிட்ட கோபம் இருந்தாலும், அவளைப் பார்க்க பாவமாக இருந்ததால் அதற்கு மேல் இருவரும் ஒன்றும் சொல்லவில்லை.

வேணியும் அவளை அருகே அமர வைத்து அவளின் காதல் கதையைக் கேட்க, கதை கதையாக அளந்துவிட்டவளோ ராவணனின் உண்மையான தொழிலைப் பற்றி மூச்சுவிடவில்லை.

அனைத்துக் கதையையும் கேட்டு முடித்த வேணியோ இறுதியில்,

“பிஸ்னஸ் பண்றாருன்னு சொல்ற அப்போ வசதியானவர்தான்” என்றவள், திலீப்பிடமிருந்து அழைப்பு வரவும் வெட்கப்பட்டுக்கொண்டே சென்றுவிட,

செல்லும் அவளையே சலிப்புடன் பார்த்த அஜூதியாவோ இந்துவிடம்,

“இவ மாறவே இல்லைடி” என்றாள்.

அதற்கு இந்திராவோ,

“அவ மாறுறது இருக்கட்டும் இப்போ உண்மைய சொல்லு” என்றாள் கோபமாக.

“உண்மையதான் சொல்றேன்” என்ற அஜூதியாவின் உறுதியான குரல்,

இந்து,

“செருப்பாலயே அடிப்பேன்!” என்று முறைத்தபடி சொல்லவும் உள்ளே சென்றுவிட, அதன் பிறகு இந்துவிடம் அவள் எதையும் மறைக்கவில்லை.

அதை கேட்டு அதிர்ச்சியடைந்த இந்திராவோ வேகமாக அஜூதியாவின் தலையிலேயே கொட்டியவள்,

“ஆன்ட்டி ஹீரோ நாவல் படிக்காத படிக்காதன்னு சொன்னா கேட்டியா?” என்றாள்.

“அடிக்காத இந்து வலிக்குது” என்று தன் தலையைத் தடவிய அஜூதியாவோ,

“அவர் ஒண்ணும் ஆன்ட்டி ஹீரோ இல்லை நல்ல ஹீரோ தான். ரொம்ப ரொம்ப நல்லவர்” என்றாள் உறுதியாக.

“இது விளையாட்டு இல்லை அஜூ.” தோழிக்கான வருத்தம் இந்திராவின் குரலில் அப்பட்டமாகத் தெரிந்தது.

“நிஜமா அவர் நல்லவர்டி. என் மேல உயிரே வச்சிருக்கார். இப்போ வரைக்கும் வார்த்தையால கூட என்னை காயப்படுத்தினது இல்லை.

ஏன் அவர் நினைச்சிருந்தா என்னைக்கோ என்னை எடுத்திருக்க முடியும். ஆனா அவர் இப்போ வரைக்கும் அவ்வளவு கண்ணியமா நடந்துட்டு இருக்காரு.

ஒரு பொண்ணு ஒரு ஆண் கிட்ட என்ன எதிர்பார்ப்பா? நம்பிக்கையும் பாதுகாப்பும்.

நம்பிக்கை, அவர் மேல எனக்கு நிறையா இருக்கு.

பாதுகாப்பு, அவரைத் தவிர வேற யாராலயும் எனக்கு அதை குடுக்க முடியாது.

அவரைப் போல என்னை யாராலயும் காதலிக்கவும் முடியாது, என்னாலையும் அவரை விட்டு இருக்க முடியாது இந்து”

என்று அஜூதியா கண்ணீருடன் சொல்ல, இந்திராவுக்கு பேச்சே வரவில்லை.

அதே நேரம் தோழியின் மூலமாக அனைத்தையும் தெரிந்துகொண்ட இந்திராவுக்கோ, ஏற்கனவே பரந்தாமன் விஷயமும் அறிந்திருந்ததால், ராவணனின் தொழிலை மட்டும் வைத்து அவனைத் தப்பானவன் என்று சொல்ல முடியவில்லை.

அவளுக்கு வேண்டியது எல்லாம் தன் தோழி சந்தோஷமாகவும் நலமுடனும் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான்.

ஆக, அஜூதியா அவ்வளவு உறுதியாக இருக்கவும், அதற்கு மேல் இந்திரா எதுவும் கூறவில்லை.

“சரி என்ன நடந்தாலும் நான் இருக்கிறேன்,” என்ற இந்திரா, தன் தோழியை ஆதரவாக அணைத்துக்கொண்டாள்.

@@@@

இரவு உணவின் பொழுது ஜானகியின் முகத்தைப் பார்க்கவே அஜூதியாவுக்குச் சங்கடமாக இருந்தது.

இத்தனை வருடங்கள் தனக்கு அடைக்கலம் கொடுத்து, பாதுகாப்பாக வளர்த்தவரின் மனதை நோகடித்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வில் அவள் அமர்ந்திருக்க,

ஜானகிக்கும் அஜூதியாவை எண்ணி அவ்வளவு வருத்தமாகத்தான் இருந்தது.

இங்கு இருக்கும் யார் வந்து தான் காதலிப்பதாகச் சொல்லியிருந்தாலும், இவ்வளவு வருத்தப்பட்டிருக்க மாட்டார்.

அது அஜூதியா என்றதும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

சிறு வயதிலேயே அன்போடும் பண்போடும் நடந்து கொள்ளும் அஜூதியா என்றால் ஜானகிக்கு தனிப்பாசம்தான்.

அவரைப் பொறுத்தவரை அவள் வெகுளி. யாரிடமும் சீக்கிரம் ஏமாறக்கூடியவள்.

அந்தக் கருத்து இப்பொழுதும் அவருக்கு மாறவில்லை.

எங்கே காதல் என்று யாரிடமும் ஏமாந்துவிட்டாளோ என்ற பயம் அவருக்கு இப்பொழுதும் இருந்தது.

அதனாலேயே அவளுடைய காதலுக்கு அவரால் ஒப்புதல் கொடுக்க முடியவில்லை.

ஆனால் அதே நேரம், அவன்தான் வேண்டும் என்று உறுதியாகச் சொல்பவளிடம் என்ன சொல்வது என்று தவித்தவர், ஒரு முடிவுடன் அஜூதியாவைப் பார்த்து,

“நாளைக்கு நீ காதலிக்கிறவர என்னைப் பார்க்க கூட்டிட்டு வா,” என்று சொல்லிவிட்டு எழுந்துகொள்ள,

“தேங்க் யூ மா” என்ற அஜூதியா மகிழ்ச்சியில் கண்ணீர் தழும்ப ஜானகியை அணைத்துக்கொண்டாள்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top