நகரின் மறுபுறம் அமைந்திருந்த காவல் ஆணையர் அலுவலகத்தில், புதிதாகப் பொறுப்பேற்க வந்திருந்த அதிகாரியை வரவேற்கும் பணியில் காவல்துறை அதிகாரிகள் பரபரப்பாக இருந்தனர்.
வெள்ளை நிற கார் ஒன்று அலுவலக வளாகத்திற்குள் வந்து நின்றது.
கார் கதவு திறந்ததும், காக்கி சீருடையில் ஒருவன் மிடுக்காக நடந்து வந்தான்.
அவனைப் பார்த்ததும் அங்கிருந்த காவலர்கள் அனைவரும் விரைப்பாக நின்று சல்யூட் அடிக்க, அவர்களுக்கு தலையசைத்தவன், காவல்துறைக்கே உரிய தோரணையோடு, Assistant Commissioner of Police (ACP) என்ற பெயர்ப்பலகை கொண்ட அறைக்குள் நுழைந்தான்.
அவன் ஆத்மன் வெற்றிவேல்.
கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு முன்பு இதே ஊரில் SI-யாக பணியாற்றியவன்.
இன்று அதே ஊருக்கு புதிய ACP-யாக வந்துள்ளான்.
இந்த மண்ணில் மீண்டும் கால் வைத்த அந்த நொடியே, அவன் மனதிற்குள் புதைந்து கிடந்த பழைய ரணங்கள் சர்ப்பம் போல தலைதூக்க, மிகவும் சிரமப்பட்டு தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன், சமயம் வரும் பொழுது, பெற்றதை இருமடங்காகத் திருப்பிக் கொடுக்கக் காத்திருந்தான்.
அலுவலகத்திற்குள் நுழைந்ததும், பொறுப்புகளை ஏற்றுக்கொண்டவன் சில முக்கியமான கோப்புகளைப் பார்வையிட ஆரம்பித்தான்.
@@@@@
வார இறுதி என்பதால் வழக்கம் போல அனைவரையும் பார்ப்பதற்காக, நேற்று இரவு ரயில் ஏறிய இந்திரா, இன்று காலை வந்து இறங்கியிருந்தாள்.
ஸ்டேஷன் வந்ததும் முதலில் அஜூதியாவுக்கு அழைத்தவள்,
“ஹாய் டி? ஆஷ்ரமத்துல இருக்கியா… வெளியே இருக்கியா?” என்று கேட்டாள். அதற்கு அஜூதியா பதில் கூறவும்,
“இன்னும் வரலையா? சரி பார்த்து வா நான் ஆட்டோல போறேன்,” என்றவள், தன் கைப்பையுடன் சாலையைக் கடக்க காத்திருந்தாள்.
@@@
அதே நேரம் அஜூதியா அலைபேசியை அணைத்ததும்,
“என்னாச்சு டா?” காரை ஓட்டியபடி ராவணன் கேட்க,
“இந்து தான் அவ ஸ்டேஷன்ல வந்துட்டா. நானும் வந்திருப்பேன்னு நினைச்சு பிக் பண்ண கூப்பிட்டா,” என்றாள் அஜூதியா.
“ஓ வேணும்ன்னா உன் ஃப்ரண்டையும் பிக் பண்ணிட்டே போவோமா?” என்ற ராவணனிடம்,
“வேண்டாம் நாம போகவே லேட் ஆகும். அவ ஆட்டோல போய்டுவா,” என்றவள், அவன் தோள் வளைவில் சாய்ந்து கொள்ள, மென் புன்னகையோடு குனிந்து தன்னவளின் உச்சியில் இதழ் பதித்தான் ராவணன்.
@@@
“நாம இல்லைன்னா தான் ஊர்ல மழையெல்லாம் பெய்யும் போல” என்று தன் முன்னால், நேற்று பெய்த கனமழையின் காரணமாகத் தேங்கியிருந்த மழைநீரைப் பார்த்தபடி கூறிய இந்திரா, எதிரே வரும் பைக்கைக் கண்டு ஒதுங்குவதற்காக நகர முற்பட்ட கணம்,
அந்தப் பைக்கைத் தாண்டி வேகமாக வந்த ஜீப், சேறு கலந்த மழைநீரை இந்திராவின் மீது வாரி இறைத்தது.
இதை வண்டியில் இருந்த தேவராஜும் எதிர்பார்க்கவில்லை. இந்திராவும் எதிர்பார்க்கவில்லை.
தான் செய்த தவறை எண்ணி தன் தலையில் அடித்துக்கொண்ட தேவராஜ், மன்னிப்பு கேட்கும் நோக்கில் காரை ஓரமாக நிறுத்தினான்.
பின்பு வண்டியில் இருந்து இறங்கியவன் ரௌத்திரமாக நின்றிருந்த இந்திராவை நோக்கி வந்து,
“சாரி நான் வேணும்னு” என்று சொல்லி முடிப்பதற்குள், அவன் சட்டையை கொத்தாகப் பற்றியிருந்தாள் பெண்ணவள்.
@@@@@
தன் மார்பில் கன்னம் வைத்தபடி, தனது சட்டைப் பொத்தானை திருகிக்கொண்டிருந்தவளின் சிகையை மென்மையாக வருடிய ராவணன்,
“ஆஷ்ரமம் வந்திருச்சு டா.” என்றான்.
“ம்ம்” என்றவளோ, நிமிராது இன்னும் அவனோடு ஒன்றிக்கொள்ள அஜூதியாவின் செய்கையில் புன்னகைத்தவன்,
“இது ஐஞ்சாவது சட்டை.” என்றான்.
அதைக் கேட்டதும் அஜூதியா சட்டென்று நிமிரவும், அவனது சட்டையின் பொத்தான் கீழே விழுந்தது.
புன்னகையுடன் அதை கையில் எடுத்த ராவணன், தன்னை கேள்வியாகப் பார்த்துக்கொண்டிருந்த தன்னவளின் நெற்றியோடு நெற்றி முட்டி, தன் கையில் இருந்த சட்டைப் பொத்தானைக் காட்டி,
“திருக்கி திருக்கியே நாலு சட்டையோட பட்டன் போச்சு.”, என்றான்.
அவன் அவ்வாறு சொல்லவும் அவனது மார்பில் அடித்தவள்,
“நான் இங்க உன்னை விட்டு போக மனசே இல்லாம சோகமா இருக்கேன். உனக்கு இப்போ பட்டன் ரொம்ப முக்கியம்ல?” என்று கோபத்துடன் கூறிவிட்டு அதே கோபத்தோடு,
கதவில் கை வைக்க முற்பட்டவளின் கரத்தைப் பற்றி இழுத்து, தன் மார்பின் மீது போட்டவன்,
“எதுக்கு இவ்வளவு கோபம்? என்னாச்சு?” என்று தன்னோடு அணைத்துக்கொண்டபடி வினவினான்.
“உன்னை விட்டு போகவே மனசில்லை.” உள்ளே சென்ற குரலில் கூறினாள்.
அதற்கு அவனோ,
“சரி வா நம்ம வீட்டுக்குப் போகலாம்,” என்றதும் அவனை விட்டு விலகியவள்,
“ஐயோ ஜானகி மா தேடுவாங்க.” என்றாள்.
உடனே அவனோ, “சரி அப்போ வா இப்பவே வந்து பொண்ணு கேக்குறேன்.” என்றான் தாடாலடியாக.
அதற்கும், “ம்ஹூம் வேணி கல்யாணம் முடியட்டும். நானே பொறுமையா அவங்களுக்கு எடுத்துச் சொல்றேன் அப்புறம் வாங்க ” என்று உடனே மறுக்க,
“இப்போ நான் என்னதான்டி பண்றது?” என்று ராவணன் சலிப்பாகக் கேட்கவும், அஜூதியாவுக்கு முனுக்கென்று கண்கள் நீரால் நிறைந்துவிட,
“ஒண்ணும் வேண்டாம்” என்றாள் கோபமாக.
அவள் கலங்கவும் மனம் தாங்காது அவளது தாடையைப் பற்றி தன்னைப் பார்க்க வைத்தவன்,
“என்ன டா?” என்ற மறுகணம், தன்னவனது தாடியடர்ந்த கன்னத்தை பெண்ணவள் வருட, ராவணனின் பெருவிரல் தன்னவளின் விழி தாண்டி வழிய இருந்த கண்ணீரைத் துடைத்திருந்தது.
அவளோ,
“வெளிய இருந்து பார்த்தா உள்ள தெரியுமா?” என்று கேட்க,
‘தெரியாது’ என்ற பதிலை வார்த்தையில் சொல்லாது, தன் இதழை தன் இணையின் இதழோடு அழுத்தமாகப் பிணைத்து சொல்லியிருந்தான் ராவணன்.
நீண்டு கொண்டே இருந்த அவர்களின் இதழ் அணைப்பு, அஜூதியாவின் தொடர் அலைபேசி சிணுங்கல்களால் வேறுவழியின்றி முடிவுக்கு வந்தது.
@@@@@@@
முகம் சிவக்க, துள்ளலான நடையுடன் ஆஷ்ரமத்திற்குள் வந்த அஜூதியா, நேரே ஜானகியின் அறைக்குள் நுழைய, அவளது பார்வை அங்கே கம்பீரமாக அமர்ந்திருந்த ஆடவனின் மீது பதிந்தது.
வேணியும் இந்திராவும் அங்கே இருக்க, தன் தோழியரைப் பார்த்துவிட்டு புதியவனை அஜூதியா கேள்வியாகப் பார்க்க, அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
“வா மா லேட் ஆகிடுச்சு போல,” என்ற ஜானகி, அந்தப் புதியவனை நோக்கி,
“தம்பி இது தான் அஜூதியா,” என்றவர், அஜூதியாவிடம்,
“இவர் ACP ஆத்மன் வெற்றிவேல்” என்று கூறிவிட்டு வேணி மற்றும் இந்திராவைப் பார்த்து,
“அஜூவை கூட்டிட்டுப் போய் புடவை கட்டிக் கூட்டிட்டு வாங்க” என்றார்.
அதைக் கேட்டு அஜூதியாவோ நெஞ்சம் படபடக்க நிற்க, ஜானகியோ அஜூதியாவை பார்த்து,
“அவங்களோட போ மா” என்க, அவளுக்கும் மறுக்க தோன்றவில்லை மேலும் அங்கிருப்பது மூச்சு முட்டுவது போல இருக்கவும் அங்கிருந்து போனால் போகுது என்று எண்ணியவள் நகரவும்,
ஆத்மனோ ,
“வேண்டாம் இப்படியே அழகாத்தான் இருக்காங்க,” என்று ஜானகிக்குப் பதில் கூறிவிட்டு, அஜூதியாவிடம் பார்வையைப் பதித்தான்.
நடப்பது அனைத்தும் அஜூதியாவுக்கு இப்போது இன்னும் தெளிவாக விளங்கிவிட, முகம் வெளிறி நின்றிருந்தவளுக்கு, ஒரு அந்நிய ஆடவன் தன்னை உச்சி முதல் பாதம் வரை விழிகளால் அளப்பதும், அழகு என்று சொன்னதும் கொஞ்சமும் பிடிக்கவில்லை.
அவளோ என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க, அவனோ,
“எனக்கு பொண்ணை பிடிச்சிருக்கு. அவங்களுக்கும் என்னை பிடிக்கும்ன்னு நினைக்கிறேன். கல்யாணத்தை சீக்கிரமே வச்சிக்கலாம்,” என்றான் மிகவும் உறுதியாக.
‘என்னை போன்ற ஒருவனை வேண்டாம் என்று சொல்லிவிடுவாளா என்ன? சொல்லும் அளவுக்கு அவளிடம் அப்படி என்ன தகுதி இருக்கிறது?’ என்ற இருமாப்பை முயன்று மறைத்தபடி, ‘அவங்களுக்கும் என்னை பிடிக்கும்ன்னு நினைக்கிறேன்’ என்று நாசுக்காக கூறினான்.
ஜானகிக்கும் வேணிக்கும் அவ்வளவு சந்தோஷம்.
இந்துவுக்கு, வேணிக்கு பார்த்த மாப்பிள்ளையாவது கொஞ்சம் பிடித்திருந்தது. ஆனால் இந்த ஆத்மனை சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால் சபையில் தன் கருத்தை சொல்ல முடியாது அமைதியாக நின்றாள்.
ஜானகியும் ஆத்மனும் ஏதேதோ பேசிக்கொண்டே போக, இதற்கு மேல் அமைதி காப்பது சரி இல்லை என்பதை உணர்ந்த அஜூதியா, தன்னவனை மனதில் எண்ணியபடி கண்களை இறுக்கமாக மூடி திறந்தவள்,
“எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லை,” என்றாள் உறுதியாக.
அதுவரை இருந்த இலகுத்தன்மை போய், இறுகிய முகத்துடன்,ஆத்மன் அஜூதியாவைப் பார்க்க, ஜானகிக்கோ அவ்வளவு அதிர்ச்சி.
“என்னாச்சு அஜூ? ஏன் அப்படி?” என்று பரிதவிப்புடன் கேட்டார்.
“சாரி மா நான் வேற ஒருத்தரை விரும்புறேன்,” என்றாள் உறுதியாக.
தயக்கம் இருந்தாலும், உடைத்து சொல்லிவிட்டாள்.
விருட்டென்று எழுந்துகொண்ட ஆத்மன், ‘இதையெல்லாம் தெரிஞ்சிக்காமலா பொண்ணு பார்க்க வரச் சொல்லுவீங்க?’ என்பது போல ஜானகியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன், உள்ளுக்குள் கோபம் இருந்தாலும் நாகரிகம் கருதி அஜூதியாவுக்கு புன்னகையுடன் வாழ்த்து கூறிவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றான்.