மாறியிருந்த அவளது முக பாவமும், அசட்டையான சிரிப்பும் திமிரான பேச்சும் ஆத்மனுக்கு சந்தேகத்தை கொடுக்க,
“என்னடி பேச்சுல திமிர் தெரியுது” என்றவன் கோபமாக அஜூதியாவை நெருங்கி வர, அவளோ கொஞ்சமும் அசையாது அவனையே அழுத்தமாக பார்த்து கொண்டிருந்த அந்த நொடி, கீழே ஏதோ உடையும் சத்தம் கேட்கவும் ஓரளவு சுதாரித்து கொண்டவன் அஜூதியாவிடம்,
“என்னடி உன்னை அனுப்புற போல அனுப்பிட்டு பின்னாடியே அடி ஆட்களை அனுப்பி வச்சிருக்கானா அந்த வேலாயுதம், எவன் வந்தாலும் நீ இன்னைக்கு தப்பிக்க முடியாது” என்றவன் ஆக்ரோஷமாக அவளை நெருங்கிய மறு கணம் தன் மார்பில் கைவைத்தபடி கீழே கிடந்தான்.
ஆம் கதவை உடைத்து கொண்டு மின்னல் வேகத்தில் உள்ளே வந்திருந்த ராவணன், ஆத்மனின் மார்பில் ஓங்கி மிதித்ததில் நிலைகுலைந்த ஆத்மன் கீழே விழுந்துவிட, ராவணனோ தன்னவளின் இடை பற்றி தன் அருகே இழுத்து தன் கைவளையத்திற்குள் கொண்டு வந்திருக்க, அஜூதியாவோ விழிகள் அகல தன்னவனை தான் பார்த்து கொண்டிருந்தாள்.
தனக்கு நேர் எதிரே அஜூதியாவை தன்னோடு அணைத்தபடி, அவனது ஒன்பது சகாக்கள் சுற்றி நிற்க, வெறிபிடித்த அசுரன் போல நின்றிருந்த ராவணனை கண்டு அதிர்ந்தான் ஆத்மன்.
அதிர்ச்சியிலும் பேரதிர்ச்சி இதை ஆத்மன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, ராவணனின் கதை முடிந்துவிட்டது என்று அவன் எண்ணியிருக்க, ஆனால் அவனோ உயிரை குடிக்கும் வேங்கை போல அல்லவா தன் முன்னால் நிற்கிறான்.
தன் கண்ணெதிரே மரண தூதனாய் நிற்கும் ராவணனையும் அவனது கூட்டாளிகளையும் பார்த்ததும் ஆத்மனின் உடல் வெளிப்படையாகவே நடுங்க, தொண்டை வறண்டு போனது.
“நீ… நீ எப்படி இங்க?” நா குழற கேட்டான்.
“என் பொண்டாட்டி கிட்ட என்னடா சொன்ன ஹான்.” கர்ஜித்தபடி ஆத்மனை நோக்கி பாய்ந்த ராவணன் ஆத்மனின் தொடையில் மிதிக்க, வலியில் துடித்த ஆத்மனால் அடுத்து எதுவும் சிந்திக்க முடியவில்லை. ராவணன் சிந்திக்கவும் விடவில்லை.
தனது கையில் இருந்த காப்பை கழற்றி தன் விரல்களால் இறுக்கி பிடித்து கொண்ட ராவணன், ஆத்மன் விட்ட ஒவ்வொரு வார்த்தைக்கும் மும்மடங்காக திருப்பி கொடுக்க,
தன்னவனை இங்கே இந்த நொடி எதிர்ப்பார்த்திராத அஜூதியாவோ அதிர்ச்சியுடன் நின்றிருக்க அவள் அருகே வந்த சந்துரு,
“வா மா இனிமே நீ இங்க இருக்க வேண்டாம்” என்க ஆனால் அவளோ, ராவணனையே பார்க்க,
“இப்போ வேண்டாமா அண்ணன் பயங்கர கோபமா இருக்காரு, போகலாம்” என்றான்.
அஜூதியாவோ தன்னை கோபமாக பார்த்தபடி ரத்தம் தன் முகத்தில் தெறிக்க ஆத்மனை வேட்டையாடும் தன்னவனின் கனல் விழிகளை ஏக்கமாக பார்த்துக்கொண்டே சந்துருவுடன் சென்றாள்.
@@@
தான் கொண்டு சென்ற பட்டன் கேமராவையும் ரெக்கார்டரையும் வெளியே எடுத்த அஜூதியா சந்துருவின் கையில் கொடுக்க அதை வாங்கியவன்,
“டிரைவர் இருக்காரு உடனே நீ இந்திரா கூட கிளம்புமா” என்றான்.
ஆனால் அவளோ, “அவர் வரட்டும்ண்ணா ஒரு வார்த்தை பேசிட்டு போயிடுறேனே” என்று கெஞ்சலாக கேட்டாள்.
“மா கொஞ்சம் புரிஞ்சுக்கோ! இப்போ இது எதுக்கும் நமக்கு நேரமில்லை. இன்னும் ஒரு மணி நேரத்துல விடிஞ்சிரும், அதுக்குள்ள அண்ணன் அங்க இருக்கணும். கொஞ்ச நேரம்தான் மா பொறுத்துக்கோ, அப்புறம் அண்ணன் உன்கிட்டயே வந்திருவாரு. நீ இங்க இருக்க வேண்டாம், அண்ணன் ஏற்கனவே நம்ம மேல செம கடுப்புல இருக்காரு. உன்னை இன்னும் அனுப்பாம இங்கேயே வச்சிருந்தா அவ்வளவுதான் கிளம்பு மா” என்று சந்துரு வற்புறுத்தவும், வேறு வழியில்லாமல் இந்திராவுடன் காரில் ஏறினாள் அஜூதியா.
அஜூதியாவைக் கண்டதும் வேகமாக அவளை இறுக அணைத்து விடுவித்த இந்திரா,
“இனி எல்லாம் சரியாகிடும்டி!” என ஆறுதல் கூற, கண்கள் கலங்க இந்திராவைப் பார்த்துப் புன்னகைத்தாலும், அஜூதியாவுக்கோ தன்னவனின் கனல் பார்வையை நினைத்து தான் கவலையாக இருந்தது.
‘கோபமாம் கோபம் எல்லாம் அவனுக்காகத்தானே செஞ்சேன்? எப்போ பார்த்தாலும் கோபப்பட வேண்டியது!’ என்று உள்ளுக்குள் பொருமினாள்.
@@
தரையில் அரை மயக்கத்தில் வலியால் முனகிக் கொண்டு கிடந்த ஆத்மனைத் தீராத ஆத்திரத்துடன் பார்த்த ராவணன் , தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்த காளியின் அலைபேசியைச் சந்துருவிடம் நீட்டினான்.
பின்பு அதை வாங்கிக்கொண்ட சந்துருவிடம், “இதுல இந்த நாயும் அந்த நாயும் கூட்டு சேர்ந்து பண்ணின நிறைய விஷயங்கள் இருக்கு. லாயர்கிட்ட குடுடா, அவர் பார்த்துக்குவாரு,” என்றவன் சந்துரு சரி என்று தலையசைக்கவும்,
அஜூதியா பத்திரமாகச் சென்றுவிட்டதை உறுதி செய்துகொண்ட ராவணன், தன் சகாக்களிடம் சில விஷயங்களைப் பேசிவிட்டு, மீண்டும் வேலாயுதத்தின் விசுவாசியான ஜெயிலர் சதாசிவத்தின் ரகசிய உதவியோடு சிறைச்சாலைக்குள் சென்று தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
சில மணி நேரத்திற்கு முன்பு நடந்த சண்டையின் எந்தவொரு சுவடும் அங்கே இல்லாமல் இருக்கவும் ராவணன் சதாசிவத்தைப் பார்க்க, அவரோ அறையின் கதவைப் பூட்டியபடியே,
“அவனுங்களை அவனுங்க ரூம்ல தூக்கிப் போட்டிருக்கேன் தம்பி. வலியில கிடக்கட்டும், காலையில ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிக்கலாம். அவனுங்க அடிக்கடி இப்படி அடிச்சுக்குவானுங்க, அதனால இது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை,” என்றார்.
அதற்கு சிறு தலையசைப்பை கொடுத்துவிட்டு, “நான் வெளிய வந்ததும் உங்களுக்கானது உங்களைத் தேடி வரும்,” என்றான் ராவணன்.
அதற்குச் சதாசிவமோ மெல்லிய புன்னகையுடன், “வேலாயுதம் ஐயாவுக்காக உயிரையே கொடுப்பேன் தம்பி, நான் எதையும் எதிர்பார்த்து இதைச் செய்யல. இந்த விஷயத்தை நீங்களே பார்த்துக்கிறேன்னு சொன்னதுனாலதான், சண்டை நடந்தப்போ கூட நான் தலையிடாம அமைதியா இருந்தேன். நீங்க வேற ஆயுதம் எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டீங்க, ஆனா பாருங்க, உங்களுக்குக் தான் அடி கொஞ்சம் அதிகமாவே பட்டிருக்கு. உள்ள மருந்தும் மாத்திரையும் இருக்கு, போட்டுக்கோங்க தம்பி. இன்னும் கொஞ்ச நேரம்தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க,” என்றார் அக்கறையாக.
அவரிடம் சரி என்பது போலத் தலையசைத்து விட்டு வந்து அமர்ந்த ராவணனின் மனக்கொதிப்பு மட்டும் இன்னும் ஆறவே இல்லை.
‘அவன் எப்படி என்னவளை அப்படிப் பேசலாம்? என்ன வந்தாலும் பரவாயில்லை, ஆத்மனை இனி விட்டுவைக்கக் கூடாது!’ என்று நெஞ்சுக்குள் எழும் ஆவேசத்தைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டவனுக்கு, அஜூதியா சொன்னாள் என்பதற்காக அவளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு இந்த ஆபத்தான காரியத்தைச் செய்த சந்துரு உள்ளிட்ட அனைவர் மீதும் கடும் கோபம் வந்தது.
அதேசமயம் இவர்களை விட, இந்த விபரீதத்திற்கு மூல காரணமான தன் உயிருக்குயிரான மனையாள் மீது கொஞ்சம் அதிகமாகவே கோபம் வந்தது.
சிறைச்சாலையில், யாருக்கும் தெரியாமல் ராவணனை வந்து சந்தித்த சதாசிவம் ஆத்மன் போட்ட திட்டம் பற்றி கூறி ஏற்கனவே அவனை எச்சரித்திருந்தாலும், ஆத்மன் அடுத்து இப்படி ஒரு குறுக்கு வழியைத்தான் தேர்ந்தெடுப்பான் என்பதை ராவணன் முன்னமே கணித்திருந்தான்.
அதனால்தான், காளியையும் அவனது கூட்டாளிகளையும் வீழ்த்துவதில் ராவணனுக்குப் பெரிதாக எந்தச் சிரமமும் இருக்கவில்லை.
தனக்காக இல்லாவிட்டாலும், தன்னை எண்ணி நித்தமும் உருகுகிறாளே, அவளுக்காகவாவது இந்த உயிரைப் பத்திரப்படுத்த வேண்டுமே என்ற எண்ணத்தில் அவன் இன்னும் விழிப்பாகவே இருந்தான்.
லாக்கப் சண்டை முடிந்த அடுத்த நொடி,
இன்று போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தான் அவளுக்கு கட்டிய தாலியோடு கண்கள் கலங்கத் தன்னைப் பார்த்த தன்னவளின் கண்ணீர் விழிகளே ராவணனின் நினைவலைகளில் நீந்திக் கொண்டிருக்க, தன்னவளை உடனே போய்ப் பார்க்க வேண்டும் என்ற தவிப்பு அவனின் நரம்புகளுக்குள் தீயாய்ப் பரவியது.
காளியையும் அவனது ஆட்களையும் அங்கே ரத்தக் களறியில் அடித்துத் துவம்சம் செய்துவிட்டு, கீழே விழுந்து கிடந்த காளியின் அலைபேசியைக் கூர்மையாகப் பார்த்தான் ராவணன்.
நிச்சயம் இதில் ஆத்மனுக்கு எதிரான ஆதாரங்கள் ஏதேனும் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், அதை எடுத்துத் தன் சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டான்.
அதன் பின், ஜெயிலர் சதாசிவத்தின் ரகசிய ஏற்பாட்டில், அவரது ஜீப்பிலேயே அவசர அவசரமாகத் தன்னவளைக் காண தன் வீட்டை நோக்கி புறப்பட்டான்.
தன் எண்ணம் முழுக்கத் தன்னவளையே சுமந்தபடி ஜீப்பை விரட்டியவனின் சட்டைப் பையிலிருந்த காளியின் கைப்பேசி திடீரென அதிரவும், எடுத்துப் பார்த்தபோது திரையில் ‘ஆத்மன்’ என்று பெயர் மின்ன, உதட்டில் அரும்பிய ஏளனப் புன்னகையோடு, அழைப்பை ஏற்று அலைபேசியைக் காதில் வைத்தான் ராவணன்.
ஆனால், அடுத்த கணம் மறுமுனையில் ஆத்மன் உதிர்த்த வக்கிர வார்த்தைகள் அவனது கோபத்தை உச்சிக்குக் கொண்டு சென்றது.
இருப்பினும், அஜூதியாவின் பாதுகாப்பை எண்ணித் தன் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டவன், ஆத்மன் சொன்னதற்கு, “ம்ம்” என்று மட்டும் அழுத்தமான குரலில் பதில் சொல்லிவிட்டு அவனது அழைப்பைத் துண்டித்தான்.
அதன் பிறகு உடனடியாகக் காளியின் கைப்பேசியில் ஆத்மன் அனுப்பியிருந்த அந்த வீடியோவை ஓடவிட்டான். அதில் தெரிந்த காட்சியைக் கண்ட மாத்திரத்தில், ராவணனின் உடம்பில் ஓடிய ரத்தம், கொதிநிலையைத் தொட்டிருந்தது.
ஆத்மனின் அருவருப்பான பேச்சும், அவனது அந்தப் பாழாய்ப்போன வீட்டில் நிற்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த தன் அஜூதியாவின் கண்களில் தெரிந்த பயமும், அவனுக்கு அனைத்தையும் புரிய வைத்ததில், தன் உயிருக்கு ஆபத்து என்று ஏதாவது பொய் சொல்லி பயமுறுத்தித்தான், அந்த ஆத்மன் தன்னவளை அங்கு வரவழைத்திருக்கிறான் என்பதை ராவணன் நொடியில் ஊகித்துவிட்டான்.
அடுத்த நொடி, ஜீப்பை ஒடித்து திருப்பியவன் சாலையில் சீறிப் பாய, அடுத்த சில நிமிடங்களில் ஆத்மனின் வீட்டின் முன் ராவணன் வந்த ஜீப் தரையை வழுக்கிக்கொண்டு வந்து நிற்கவும், அதே நேரத்தில் ராவணனின் சகாக்களும் அங்கே வந்து இறங்கவும், சரியாக இருக்க அதன் பின் அங்கே நடந்தது அனைத்தும் அதிரடி தான்.
முழுக்க முழுக்கத் தனக்காக மட்டும்தான் அவள் இதைச் செய்திருக்கிறாள் என்பது அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. ஒருவேளை தான் அங்கே வராமல் போயிருந்தால் கூட, வேலாயுதம் ஐயாவும் அவளது அண்ணன்களும் அவளுக்கு எந்தவொரு சிறு கீறல் கூட விழாமல் அவளை பத்திரமாக காப்பாற்றியிருப்பார்கள் என்பதும் நன்றாகவே தெரியும்.
ஆனால் ஆத்மன்? அவன் சாதாரணமானவன் இல்லையே!
நெஞ்சுக்குள் அவ்வளவு வன்மங்களை வளர்த்து வைத்திருக்கும் விஷப்பாம்பு ஆயிற்றே, ஏதோ அவனது திட்டப்படி அனைத்தும் நடக்கவும், இன்று கொஞ்சம் அவன் அசட்டையாக இருந்துவிட்டான்.
ஒருவேளை அவன் தனக்குக் குழி பறித்தது போல, அஜூதியாவையும் அங்கே இருந்த மற்றவர்களையும் மொத்தமாகத் தீர்த்துக்கட்டத் திட்டம் ஏதும் தீட்டியிருந்தால்? ஐயோ! நினைத்துப் பார்க்கும்போதே ராவணனின் நெஞ்சம் தாங்க முடியாமல் துடிக்க, இந்தப் பயமும் பதற்றமும் தான் அவனது முகத்தில் இறுக்கமாகவும், தன் உயிரானவள் மீது கோபமாகவும் வெளிப்பட்டது.