ராவணா 49

சிறைச்சாலையின் முன்பு வேலாயுதம் மற்றும் ராவணனின் சகாக்கள் அத்தனை பேரும் அளவற்ற மகிழ்ச்சியோடு ராவணனுக்காக காத்திருக்க, அந்த பிரம்மாண்டமான இரும்பு வாசல்கள் மெல்லத் திறக்கப்படவும் உள்ளே இருந்து கம்பீரமாக வெளியே வந்தான் ராவணன்.

ராவணனைக் கண்டதும் அவனது சகாக்கள் ஒன்பது பேரும் ஓடிவந்து அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டனர். 

அப்பொழுது அவனது தோளைத் தட்டிய வேலாயுதமோ,

“எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுடா. இனி நீ நல்லா இருப்ப,” என்று உணர்ச்சி பொங்கக் கூற, அனைவரின் தன்னலமில்லா அன்பிலும் நெகிழ்ந்து போனான் ராவணன்.

அவனுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்றே தெரியவில்லை.

கண்கள் கரித்துக்கொண்டு வர, நன்றியோடு வேலாயுதத்தைப் பார்த்தவன், தன் தமையன்கள் அனைவரையும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான். 

அவன் விழி சிந்திய இந்த ஒற்றைத்துளி கண்ணீரும் அவனது இறுக்கமான அணைப்பும், அவன் அவர்கள் மீது கொண்டிருந்த ஆழமான அன்பை மௌனமாகப் பறைசாற்றியது.

சில நொடிகள் கழித்து அவர்களின் அணைப்பில் இருந்து விடுபட்டு அனைவரையும் பார்த்து லேசாகத் தலையசைத்துப் புன்னகைத்த ராவணனது விழிகள், இப்பொழுது தன்னவளைத் தீவிரமாக தேடவும்,

அவனது பார்வையிலேயே அவனது எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்ட வேலாயுதம்,

“உன் பொண்டாட்டி வரலடா. நான் தான் இங்கெல்லாம் வர வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். வீட்டுக்கு போய் உன் பொண்டாட்டிய உன் கிட்டேயே வச்சிக்கோ,” என்று கேலி செய்தபடி வண்டியில் ஏறினார்.

அதைக்கேட்டு அனைவருமே சத்தமாகச் சிரித்துவிட, ராவணனோ வழமை போலத் தன் கீழ் அதரத்தை அழுத்திக் கொண்டவன், அஜூதியாவை இன்னும் சில நிமிடங்களில் காணப்போகிறோம் என்கிற ஒருவித இன்பமான மனநிலையோடே காருக்குள் அமர்ந்திருந்தான்.

அவன் மட்டுமன்றி, அத்தனை பேருமே இத்தனை நாள் இருந்த இறுக்கம் தளர்ந்து மனம்விட்டுப் பேசிச் சிரித்தபடி வந்தனர்.

சில மணி நேரப் பயணத்திற்குப் பின், கார் அவர்களின் வீட்டு வாசலில் வந்து நிற்க, ராவணன் காரை விட்டு இறங்கும் முன்பே, கால் கொலுசு சிணுங்க ஓடி வந்து அங்கே நின்றிருந்தாள் அவனது மனையாள்.

தலை முதல் பாதம் வரை அவளைத் தன் பார்வையாலே வருடினான். 

வண்டி சத்தம் கேட்கவும் அடுப்பாங்கரையில் இருந்து அப்படியே ஓடி வந்திருப்பாள் போல! கன்னத்தில் சப்பாத்தி மாவு லேசாக ஒட்டியிருக்க, அவளது மென்கழுத்தில் அவன் கட்டிய மங்கல நாண் கம்பீரமாகத் தொங்க, நெற்றி வியர்வைத் துளி பட்டு முன் வகிட்டில் இருந்த குங்குமம் லேசாகக் கலைந்திருக்க, அவன் கண்ணுக்குப் பேரழகாய் விருந்தளித்தாள் அவனது மனையாள்.

முன்பு காதலி ஆனால் இப்பொழுதோ மனைவி அல்லவா? உரிமை கூடிவிட, காதலும் தாபமும் இன்னும் பல மடங்கு அவனுக்கு கூடியிருந்தது. ‘இனி அவள் மொத்தமே மொத்தமாக உனக்கு மட்டும்தான் சொந்தம்’ என்கிற உணர்வே அவனுக்குள் ஒருவித இன்பப் போதையைத் தந்தது.

இதற்கு முன் ஒருவிதமாய் அவனைத் தவிக்க வைத்தாள் என்றால் இப்பொழுது மனைவியாகக் கொஞ்சம் அதிகமாகவே தவிக்க வைத்தாள்.

நேற்று இரவு இருந்த கோபத்தில் இதெல்லாம் தோன்றவில்லை. தன் ஒற்றை அழுத்தமான பார்வையிலேயே கோபத்தைக் காட்டிவிட்டான்.

ஆனால் இப்பொழுது, கோபம் ஒருபக்கம் இருந்தாலும், தன்னவளைத் தன் கையணைவில் வைத்துக்கொண்டு முத்தமிட்டே தன் கோபத்தைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று வேறுவிதமாய் அவனது மனது பேயாட்டம் போட,

இருவரின் பார்வைகளும் அங்கேயே ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொண்டன.

அவளுக்கோ அவனை உடனே ஓடிவந்து அணைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. 

ஆனால், அத்தனை பேருக்கு முன்னால் அப்படிச் செய்ய முடியாதே! அதுவும் காதலிக்கும் சமயம் அவனைப் பார்க்கும் பொழுது வராத தயக்கமும் படப்படப்பும், அவன் மனைவியான பிறகு அநியாயத்திற்கு வந்து தொலைய, அவளுக்குக் கால்கள் நிலத்தில் நிலையாக நிற்கவில்லை. 

தன்னவனை நெருங்க முடியவில்லையே என்கிற தவிப்புடன் புடவையின் முந்தானையைக் கசக்கியபடி, ஒருவித இன்பப் தவிப்புடனே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது ஒவ்வொரு அசைவையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த ராவணனின் பார்வையில் இப்பொழுது ரசனை கூடியது. 

நேற்று ஸ்டேஷனில் தன்னை நிற்க வைத்துத் தாலி கட்டச் சொல்லி கண்ணை உருட்டியவளுக்கும், இப்பொழுது தன் எதிரே வெட்கப்பட்டு நிற்பவளுக்கும் உள்ள மலையளவு வித்தியாசத்தை எண்ணித் தன் இதழ்களுக்குள் புன்னகைத்துக் கொண்டான் ராவணன்.

அவனுக்கோ இப்பொழுது தன்னவளைச் சீண்டிப் பார்க்கும் எண்ணம் வர,  வேண்டுமென்றே கோபமாக இருப்பது போல முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டான்.

  ராவணனின் இறுகிய முகம் கண்டதும் அஜூதியாவின் முகம் வாடிவிட,

“அச்சோ இன்னும் கோபமா இருக்காரே! இப்போ என்ன செய்யுறது?” என்று தனக்குள்ளே அவள் சிணுங்கிக் கொண்டாள்.

அப்பொழுது அங்கே கையில் ஆரத்தி தட்டுடன் வந்த மீனாட்சி, 

“வாமா, நீயும் போய் உன் புருஷன் பக்கத்துல நில்லு,” என்றவர், அஜூதியா – ராவணன் இருவருக்கும் சேர்த்து ஆரத்தி எடுக்க, இருவரும் ஒன்றாக தங்களின் இல்லத்திற்குள் நுழைந்தனர். 

அவர்கள் இருவரையும் அப்படிச் சேர்த்துப் பார்த்த பிறகுதான் ஜானகியின் மனதிற்குள் முழு நிம்மதியே வந்தது.

அதன் பிறகு பொதுவான நல விசாரிப்புகளுக்குப் பின் உணவு அருந்திவிட்டு, கொஞ்ச நேரம் கழித்து,

“சரிடா நாங்க கிளம்புறோம். பார்த்துக்கோ, எதுனாலும் கால் பண்ணு. ஜானகிமா, நீங்களும் இந்திராவும் எங்க கூடவே வந்துடுறீங்களா?” என்று கேட்ட வேலாயுதம், அதற்கு அவர்கள் சரி என்று சொல்லவும், அஜூதியாவிடம் கூறிவிட்டுக் காரில் ஏறிக்கொண்டனர்.

ராவணன் அஜூதியா இருவரையும் மனதார வாழ்த்திய ஜானகியோ, அஜூதியாவுக்கு ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து பொதுவான அறிவுரைகளை வழங்கினார். 

அதன் பிறகு இந்திராவும் மீராவும் அஜூதியாவை அணைத்து விடைபெற்று விட்டு அனைவரிடமும் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட, இப்பொழுது அங்கே ராவணன், அஜூதியா மற்றும் அவனது ஒன்பது சகாக்கள் மட்டுமே இருந்தனர். 

அஜூதியாவின் பார்வை தன்னவனையே சுற்றி வர, அதைத் தெரிந்து கொண்ட பொழுதிலும் அவனோ வேண்டுமென்றே அவளின் பார்வையைத் தவிர்த்துத் தன் சகாக்களோடு பேசிக் கொண்டிருந்தான்.

அவளுக்கோ இப்பொழுது கோபம் பொத்துக்கொண்டு வந்தது. 

ஆனாலும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாது அவர்கள் அருகே வந்தாள்.

“உங்க அண்ணனுக்கு இப்போ என்னதான் வேணுமாம்? பேசுவாரா மாட்டாரான்னு கேட்டுச் சொல்லுங்க அண்ணா!” என்று ராவணனைப் பார்த்து முறைத்துக்கொண்டே பொதுவாக அனைவரையும் பார்த்து முறையிட்டாள் அஜூதியா.

அதற்கு ராவணனோ தன் சகாக்களிடம்,

“அதெல்லாம் பேச முடியாதுன்னு சொல்லுங்கடா,” என்றான் அவளைப் பார்க்காமலேயே.

அவ்வளவுதான், பெண்ணவள் வெடித்துவிட்டாள்!

“இப்போ என்ன சொல்ல வர்றீங்க? உங்களுக்கு என்ன நடந்தாலும் எனக்கு என்னன்னு நான் சும்மா இருக்கணுமா? சத்தியமா முடியாது! இப்போன்னு இல்லை, எப்பவுமே மாட்டேன்! உனக்கு ஒன்னுன்னா என்னால என்ன முடியுமோ அதை நான் இறங்கிச் செய்வேன்! பேசாட்டி போ நானும் பேச மாட்டேன்!” என்று படபடவெனப் பொரிந்து தள்ளிவிட்டு அங்கிருந்து வேகமாகத் தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.

ராவணனுக்கு ஒருபக்கம் தன் மேல் இருக்கும் தன்னவளின் அதீத காதலை நினைத்துச் சந்தோஷமாக இருந்தாலும், மறுபக்கம் கொஞ்சம் அதிகப்படியாக நடந்து கொண்டு அவளை வருத்தி விட்டோமே என்று கவலையாகவும் இருந்தது.

அந்நேரம்,”பாவம் அண்ணே தங்கச்சி ரொம்பவே தவிச்சுப் போயிருச்சு. போய் சமாதானம் பண்ணுங்க,” என்று அத்தனை பேரும் கோரசாகச் சொன்னார்கள்.

அதற்கு ராவணனோ, 

“டேய் நிறுத்துடா! உங்க தங்கச்சின்னு வந்தா போதுமே ஓவரா பண்ணுவீங்களே!” என்றவன், 

“எனக்கு உங்க மேலயும் கோபம்தான். ஆனா பாவமேன்னு தான் விட்டு வச்சிருக்கேன்,” என்றான். 

அவன் சொன்ன தோரணையிலே அவர்களுக்கு சிரிப்பு வந்துவிட, அதைப்பார்த்த ராவணனோ,

“எல்லாம் பண்ணிட்டு சிரிப்பு வேற வருதா உங்களுக்கு? இனிமே இதுபோல எனக்குத் தெரியாம ஏதாவது செய்யுங்க அப்போ கவனிச்சுக்கிறேன்,” என்று மிரட்டிவிட்டு, தன் மனைவியைத் தேடித் தங்களின் அறைக்குச் சென்றான் ராவணன்.

@@@

அவர்களின் அறையில், “பேசமாட்டாராம் பேசாட்டி போங்க! யாரும் இங்க ஏங்கி நிக்கல. இவருக்காக நான் எவ்வளவு தவிச்சுட்டு இருக்கேன். ஆனா இவரு கண்டுக்க கூட இல்லை,” என்று சுவரில் மாட்டியிருந்த ராவணனின் ஆளுயரப் படத்தின் முன்பு நின்றுகொண்டு, தன்னவனைத் திட்டிக் கொண்டிருந்தாள் அஜூதியா.

அப்பொழுது அறைக்குள் நுழைந்த ராவணன், தன்னவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் புன்னகையுடன் கேட்டபடியே அவளுக்குப் பின்னால் வந்து நிற்க, வேண்டுமென்றே இன்னும் இரண்டு வார்த்தைகளைச் சேர்த்துச் சத்தமாகத் திட்டினாளே தவிர பெண்ணவள் திரும்பவே இல்லை.

அதில் அவனது இதழ்கள் தாராளமாய் விரிந்து கொள்ள, இப்பொழுது அவளுக்கு இன்னும் மிக நெருக்கத்தில் வந்து நின்றான் அவன்.

தன்னவனின் சூடான மூச்சுக்காற்று தன் வெற்று முதுகைத் தீண்டவும், அவன் தனக்கு பின்னால் மிக நெருக்கத்தில் வந்து நிற்கிறான் என்பதைப் புரிந்து கொண்டவளோ, அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவிட்டு, அங்கிருந்து விறுவிறுவெனக் கடந்து செல்ல முயன்றாள்.

என்ன அவளால் முயற்சி மட்டும்தான் செய்ய முடிந்தது. ஏனென்றால் அடுத்த நொடி, அவளது கரங்களைப் பிடித்த ராவணன், அப்படியே தன்னை நோக்கி இழுத்துத் தன் தேகத்தோடு ஒட்டி நிற்க வைத்துவிட்டான்.

ராவணனின் இந்த அதிரடியில் முதலில் அதிர்ந்தவள், பிறகு தீயாய் முறைத்துவிட்டு அவனது மார்பில் கையை வைத்துத் தள்ள முயன்றாள்.

மீண்டும் அவளால் முயற்சி மட்டும்தான் செய்ய முடிந்திருக்க, அவளவனோ அப்படியே அவளைச் சுவரோடு சாய்த்தான்.

பிறகு ஒரு நொடியும் தாமதிக்காது, உடனே அவளது இரு கரங்களையும் பிடித்துத் தன் ஒற்றைக் கரங்களுக்குள் அடைத்து, அதைத் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்து, அவள் அருகே இன்னும் நெருக்கமாக வந்து நின்றான்.

தன்னவனின் நெருக்கமும், அவனது நாசியில் இருந்து வெளிவந்த சூடான மூச்சுக்காற்றும், மோகம் வழியும் அவனது பார்வையும் அவளைத் திணறடித்தன.

அவளோ, “என்னது இது ம்ம்? யாரோ பேசமாட்டேன்னு சொன்னாங்க?” என்று தன் திணறலை மறைத்துக்கொண்டு வினவ,

“ஆமா ஆனா நான் தான் இப்போ பேசலையே!” என்ற ராவணனின் அதரங்கள் குறும்புச் சிரிப்புடன் அவளது இதழை நோக்கி நெருங்கின.

நூலளவு இடைவெளியில் இருவரின் சூடான மூச்சுக்காற்றும் மோதிக்கொள்ள, அதற்கே அவள் தடுமாறிக்கொண்டிருந்த நொடி, தன்னவளின் கீழ் இதழைத் தன் பெருவிரலால் மென்மையாக ராவணன் வருடினான்.

அவ்வளவுதான் தேகம் சிலிர்த்தடங்க காற்றினும் மெல்லிய குரலில், 

“ராவணா… நான் கோபமா…” என்று தொடங்கியிருக்க, அவளது மிச்ச வார்த்தைகள் எல்லாம் ராவணன் அவளது மென்மையான இதழைத் தன் முரட்டு அதரங்களால் சிறைபிடித்ததில், அவனது இதழ்களுக்குள்ளேயே சென்று முடிந்துபோயின.

மெல்லத் தொடங்கிய முத்தம் யுத்தமாய் வேகம் எடுத்ததில், அஜூதியாவோ தாப மிகுதியில் கண்கள் மெல்லச் சொருக, தன் சமநிலையை இழந்து தடுமாறினாள்.

முத்தமிட்டே அவளின் உயிரைக் குடிக்கத் திட்டமிட்டானோ என்னவோ, தடுமாறியவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டானே தவிர, அவன் முத்தமிடுவதை மட்டும் நிறுத்தவே இல்லை!

உணர்வின் மிகுதியில் பிடிமானத்திற்காக அவனது சட்டை காலரை இறுக்கமாகப் பற்றிக்கொண்டிருந்த அவளும் விலகவில்லை.

உடையவன் முத்தமிடும் பொழுது விலகத் தோன்றுமா என்ன? காற்று கூட நுழையாத அளவுக்கு அவனோடு இன்னும் நெருக்கமாக நின்றிருந்தாள் அவள்.

அப்படியே அவளின் இடையை வளைத்துத் தன் அகன்ற மார்போடு நெருக்கிக்கொண்டவன், காட்டாற்றுப் பெருவெள்ளத்திற்கு நிகரான ஓர் உணர்ச்சிக் குவியலுக்குள் தன்னவளை மூழ்கடித்துக் கிறங்க வைத்தான்.

தன்னவனின் வேகமான, இடைவிடாத தீண்டலில் என்னென்னவோ உணர்வுகள் அடிவயிற்றில் தோன்ற, இம்முறை அவனது தோள்ப்பட்டையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள் அஜூதியா.

தொடர்கதையாய் நீண்டுகொண்டிருந்த இந்த முத்த யுத்தத்தில், ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாது மூச்சுக்காற்றுக்குப் பெண்ணவள் ஏங்கவும், முத்தத்தைத் தற்காலிகமாய் நிறுத்தியவன், மூச்சுவாங்கத் தன் முன்னால் நின்றவளைப் பார்த்தான்.

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top