நொடிப்பொழுதில் நடந்தேறிய சம்பவத்தால் மூச்சடைத்துப்போன அஜூதியாவின் உடல் நடுங்கவும், அவளைப் பார்த்த ராவணன் அவளது கண்களில் தெரிந்த பயத்தை புரிந்துகொண்டு, தன் துப்பாக்கியை முதுகில் சொருகிவிட்டு,
“ஹே ஈஸி, ரிலாக்ஸ் ஹீ இஸ் ஓகே, ஜஸ்ட் மயக்கமாகிருக்காரு அவ்வளவு தான்” வாழ்க்கையில் இதுவரை யாருக்கும் எதற்கும் பெரிதாக விளக்கம் கொடுத்து பழகிராதவன் அஜூதியாவிடம் எதோ குழந்தைக்குச் சொல்லுவது போல, அதுவும் புன்னகையுடன் கதை சொல்ல, அதைப் பார்த்த சந்ருவால் அதிர மட்டும் தான் முடிந்தது.
தான் சொன்னபிறகும் தனது கரங்களுக்குள் இருந்த பெண்ணவளின் கரங்கள் நடுங்குவதை உணர்ந்த ராவணன் சந்ருவிடம் கண்காட்ட, வேகமாகக் கீழே பேச்சு மூச்சின்றி கிடந்த பரந்தாமனின் அருகே சென்ற சந்ரு, அவனது நாடியை பரிசோதித்து விட்டு,
“உயிர் இருக்கு, மயக்கமா தான் இருக்காரு” என்று கூறினான்.
அவன் கூறியதும் நான் சொன்னேன்ல என்பது போல அஜூதியாவை பார்த்த ராவணன் அவளை தன்னுடன் வருமாறு செய்கை செய்ய, ஆனால் அவளோ இன்னும் ஒருவித தயக்கத்துடன் அதே இடத்தில தன் கண்களை சுழலவிட்டபடி நிற்பதை பார்த்து எரிச்சலடைந்தவன்,
“இப்போ என்னாச்சு?” என்று சற்று காட்டமாகவே கேட்டுவிட, முதுகு பக்கத்தில் கிழிந்திருந்த ஆடையை தன் ஒற்றை கரத்தால் பிடித்துக்கொண்டு, பரந்தாமன் கையில் இருந்த துண்டை எப்படி எடுப்பது என்று பார்த்து கொண்டிருந்த அஜூதியா அவன் கத்தவும் அவனிடம் எவ்வாறு தன் தவிப்பிற்கான காரணத்தை கூறுவது என்று புரியாமல் மிகவும் தயங்கினாள்.
என்ன தான் தன் மானத்தை காத்திருந்தாலும் அவனும் ஒரு ஆடவன் தானே, அவனிடம் எப்படி கூறுவது என்று புரியாமல் விழித்தவளுக்கு அவனது அதட்டலிலும் அவன் பார்த்த பார்வையிலும் கண்ணீர் வந்துவிட, அவளது கலங்கிய விழிகளை எதிர்கொண்ட ராவணனின் மனதிற்குள் ஏதோ செய்தது.
“ப்ச்” என தன் நெற்றியை நீவியவன், “என்னாச்சு” இந்த முறை மிகவும் பொறுமையாக அவளிடம் வினவினான்.
ஆனால் அவளோ, “அது வந்து அது” என சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டிருக்க, நிதானத்தை இழந்து கொண்டிருந்த ராவணன் பல்லை கடித்தான்.
இவ்வளவு நடந்த பிறகும் இங்கு நிற்பது தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே எவ்வளவு சீக்கிரம் இவளை அழைத்து கொண்டு இங்கு இருந்து செல்கிறார்களோ அவ்வளவு நல்லது! ஆக துரிதமாக செயல்பட வேண்டிய இந்த நேரத்தில், நிலைமையை உணராமல் அஜூதியா இவ்வாறு செய்வது ராவணனின் கோபத்தை அதிகப்படுத்த, தன் பொறுமையை இழந்தவன்,
“இங்க உனக்கு வேற எதுவும் வேலை இருக்கா?” நெருங்கி வந்து ஆத்திரத்துடன் வினவினான்.
அஜூதியாவின் முகமெல்லாம் பயமும், பதட்டமும் சூழ்ந்துகொள்ள, “இல்லை” தலையை மட்டும் இடவலமாக அசைத்தாள்.
“இவன் உனக்கு சொந்தமா?” பரந்தாமனை காட்டி வினவியவனது குரலில் தன்னை நம்பவில்லையோ என்ற கோபம் எட்டி பார்க்க, அவளோ கன்னத்தில் கண்ணீர் வடிய இல்லை என்று மீண்டும் தலையை அசைத்தாள்.
“அப்போ என் கூட வர்றதுக்கு என்ன?” அவள் பதில் சொல்ல வில்லை ஆனால் அவளிடம் கண்ணீரும் நடுக்கமும் இன்னும் அதிகமாக, அவனுக்கு நிஜமாகவே ஒன்றுமே புரியவில்லை.
“சொன்னா தானே தெரியும்” கட்டுப்படுத்தியும் அவனது குரலில் ஆத்திரம் எட்டி பார்த்தது. அவளுடைய கண்கள் இப்பொழுது அவனை தான் நோக்கி இருந்தது. ஆனால் பார்வை அவனிடம் இல்லை அது கீழே இருக்க,
“என் டிரஸ்” இதற்கே அவள் உளறினாள்.
“ஏய் என்ன டிரஸ்? முதல்ல வா” அவளது கரத்தை பிடித்து கொண்டு செல்ல முயன்றான்.
“இல்லை ப்ளீஸ்” பதற்றத்துடன் விலகினாள்.
இப்பொழுது அவனது பார்வை அவளை நிதானமாக ஆராய்ந்தது, அவளது இடது கரம் பின்னால் இருக்க, தன் வலது கரத்தால் முன் ஆடையை பிடித்திருக்கின்றாள், அவளின் பார்வை கீழே பரந்தாமனின் கரத்தில் இருந்த பூந்துவாலையில் நிலைத்திருக்க, இப்பொழுது அவளது நிலையை தெளிவாக புரிந்து கொண்டவனுக்கு தன் மீதே கோபம் வர, தன் முகத்தை அழுத்தமாக தேய்த்து தன்னை நிலை படுத்தி கொண்டவன்,
“ஹே ரிலாக்ஸ் எல்லாம் சரியாகிடும்” என அவளது பதற்றத்தை குறைக்க முயன்றான். ஆனால் பெண்ணவளின் கண்கள் மேலும் கலங்கவும் , ஒருகணம் யோசித்தவன் சட்டென்று தன் மேல் சட்டையை கழட்டி அவளிடம் நீட்ட, அவள் வாங்க தயங்கவும் அதை அவள் மீது தன் விரல் நுனி கூட படாது போட்டுவிட்டவன், அவளை பார்த்துக்கொண்டே “டவல்ல ப்ளட் மார்க்ஸ் இருக்கு அது வேண்டாம்” என்று சொல்ல, அதன் பிறகு அவள் மறுக்கவில்லை. சரியென்பதாய் தலையசைத்து அவனது சட்டையை இறுக்கமாக அவள் பிடித்து கொள்ள,
“இப்போ போலாமா” என்று அவன் கேட்கவும், மந்திரத்திற்கு கட்டுப்பட்ட பதுமை போல அவனுடன் அவள் கிளம்பினாள்.
அப்பொழுது போகும் முன் வெளியே நின்ற சந்ருவை பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்த ராவணன், “க்ளியர் பண்ணிடு” என்று வாயசைத்துவிட்டு செல்ல, சரி என்பதாகத் தன்தலையசைத்த சந்ரு தன் சகாக்களுடன் ராவணன் சொல்லியதை செயல்படுத்தும் வேலையில் இறங்கினான்.
விக்கியின் கரத்தில் கார் மிதமான வேகத்தில் சாலையில் சென்று கொண்டிருக்க, விழிகளில் இருந்து வழியும் கண்ணீரை துடைக்க கூட தோன்றாமல், தான் அணிந்திருந்த ராவணனின் மேல் சட்டையை இறுக்கமாக பிடித்து கொண்டிருந்தவளின் கரங்கள் மெலிதாக நடுங்க, அவளது பார்வை சாலையை வெறித்திருந்தது.