ராவணா 9

அந்த காமுகனின் பிடியில் இருந்து தப்பித்தாயிற்று! எல்லாம் முடிந்துவிட்டது! இதோ அவனை விட்டு வெகு தூரம் வந்தாயிற்று! ஆனாலும் பரந்தாமனின் முகம் அவளது எண்ண அடுக்கில் இருந்து நீங்க மறுக்க நடந்த ஒவ்வொன்று அவள் முன் மீண்டும் மீண்டும் தோன்றி அவளை அச்சுறுத்தி கொண்டிருக்க, இனி எந்த பிரச்சனையும் இல்லை என மூளைக்கு புரிந்தாலும், மனதளவில் அவளால் பயம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. போதாக்குறைக்கு துப்பாக்கியுடன் திரியும் இவர்களை பார்த்தும் உள்ளுக்குள் உதறலாக இருக்க தன் நிலையை எண்ணி வருத்தத்தில் இருந்தவளை அவளது மனசாட்சி, 

‘துப்பாக்கியுடன் திரிந்தாலும், இவன் உனக்கு உதவவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும் என்பதை மறந்துவிடாதே!’ என்று சொல்ல, மனசாட்சியின் கூற்றை எண்ணும் பொழுதே அவளது உடல் ஒருமுறை அதிர்ந்தடங்க, கண்களை இறுக்கமாக மூடி திறந்தவள், எதில் இருந்தோ வெளிவந்தவள் போல, கன்னத்தில் வழியும் நீரை துடைத்துவிட்டு நிமிர்ந்து ராவணனை பார்க்க,  முன் சீட்டில் அமர்ந்திருந்தபடி கண்ணாடி வழியாக அவனும் அவளை தான் பார்த்தான்.

அழைத்து, பெயரை கேட்டு, ஒரு நன்றியாவது கூறிவிட வேண்டும் என்கின்ற எண்ணத்தில் தான் அவள் அவனை பார்த்தாள். ஆனால் அவன் விழிகளை நேருக்கு நேர் சந்தித்த பொழுது, என்ன செய்வதென்று? அவளுக்கே தெரியவில்லை, தன்னுள் ஊடுருவி தன்னை ஏதோ செய்யும் அவனது பார்வையை கண்ட பிறகு பேசவந்ததை மறந்தவளாக  அப்படியே அவனை பார்த்தபடியே பெண்ணவள் அமர்ந்திருக்க,  அவளை ஒருகணம் ஆழமாக பார்த்துவிட்டு விக்கியிடம்  காரை நிப்பாட்டும் படி கூறிய ராவணன், கார் நின்றதும்  தன் பக்க கதவை திறந்து, கீழே இறங்கி, வேகமாக சாலையை கடந்து, மூடும் தருவாயில் இருந்த ஒரு கடைக்குள் நுழைந்தான்.

கறுப்போ வெள்ளையோ நிறங்கள் எதுவும் அவன் கருத்தில் பதியவில்லை, தொங்கவிடப்பட்டிருந்த ஹங்கரில், அணிவதற்கு ஏதுவான ஒரு உடையை, தனது நிமிட நேர ஆராய்ச்சியில் வேகமாக கையில் எடுத்தவன், பில் கூட போடாது, பர்ஸை திறந்து தன் கையில் வந்து பணத்தை கடையில் இருந்தவரிடம் கொடுத்துவிட்டு, நொடி பொழுதில் சாலையை கடந்து காரில் ஏறினான். 

அப்பொழுதும்  அஜூதியாவின் கரங்கள் அவனது சட்டையை விடாமல் இறுக்கமாக பிடித்திருக்க, அழுத்தமாக மூடியிருந்த அவளது விழிகளில் இருந்து  கண்ணீர் துளிகள் வழிந்து கொண்டிருந்தன.

மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளாள்! அதீத வேதனையில் இருக்கிறாள்! என்பது புரிந்தது. எப்படியாவது அவளது வேதனையை நீக்கி, இந்த பாதிப்பில் இருந்து அவளை வெளியே கொண்டு வர வேண்டும், என்று உறுதியாக நினைக்கும் தன் மனதை நினைத்து அவனுக்கே வியப்பாக தான் இருந்தது. எனினும் என்ன நேர்ந்தாலும் அவளை முழுவதும் இந்த சிக்கலில் இருந்து வெளி கொண்டு வரவேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்து, அடுத்து தான் என்ன செய்ய வேண்டும்? என மனதிற்குள் குறித்து கொண்டு,

“ம்ம் ஹெலோ” சொடக்கிட்டு அவளை அழைத்தான். திடிரென்று கேட்ட அவனது குரலில் திடுக்கிட்டு   விழித்தவள், 

“என்ன?” என காற்று குரலில் அவனிடம் கேட்டாள்.

“சேன்ஜ் பண்ணிக்கோ” என்று அவளிடம் கவரை நீட்டியவன், காரில் இருந்து இறங்க, என்ன இது என்று கேட்க வந்தவள் அவனது குரலில் தெரிந்த கட்டளையில் மறுக்காமல் வாங்கிக்கொண்டு, கவரை பிரித்து பார்த்தாள். நீல நிறத்தில் ஆடை ஒன்று இருந்தது. தனக்காக தான் வாங்கி வந்திருக்கின்றான் என்று புரிந்து கொண்டவள், நன்றியுணர்வுடன் அவனை பார்த்து,

“தேங்க்ஸ்” என்றாள்.

“ம்ம்” லேசாக தலையசைத்தவன், 

“கண்ணாடியை ஏத்தி விட்டுட்டு சேன்ஜ் பண்ணு, நாங்க அங்க நிக்கிறோம், முடிச்சிட்டு கூப்பிடு” என தன் கை கடிகாரத்தை பார்த்து விட்டு அங்கிருந்து தள்ளி செல்ல போனவன், மனதிற்குள் ஏதோ தோன்றவும் நின்று திரும்பி அவளை பார்த்தான். இப்பொழுது மீண்டும் அவளது முகத்தில் சிறு பதட்டம், தான் அணிந்திருந்த தன் மேல் சட்டையை இறுக்கமாக பிடித்து கசக்கியபடி, மலங்க மலங்க விழித்து கொண்டிருந்தாள்.

“என்னாச்சு?” இப்பொழுது நிதானமாக கேட்டான், நிமிர்ந்து அவனை பார்த்தவளின் முகம் தயக்கத்தை பிரதிபலிக்க, அரை நொடி சிந்தனையில் காரணத்தை புரிந்து கொண்டவன், விக்கியை அழைத்து அவனின் உதவியுடன் காரின் கவர் கொண்டு காரை மூட துவங்கினான்.

அப்பொழுது அஜூதியாவின் விழிகள் ஆச்சரியத்துடன் அவனை பார்த்தது! எதுவும் சொல்லாமலே பாவையவளின் ஒற்றை பார்வை வைத்தே அவள் நிலையை புரிந்து கொண்டு அவன் செயலாற்றுவதை, பார்க்க பார்க்க பெண்ணவளின் உள்ளத்தில் இனம் புரியாத இதம் ஒன்று மிதமாக அவளுள் பரவி, அவளது காயம் பட்ட மனதை மெதுவாக வருடியது போன்ற ஒரு பிரம்மை, அவள் கொண்ட பாரத்தை லேசாக  குறைக்க, பெண்ணவளின் இதயம் மெல்ல மெல்ல நழுவிக்கொண்டிருந்தது. 

“விக்கி உன் சைட் ஃபர்ஸ்ட் கீழ இறக்கு” என்ற ராவணன் தன் வலது பக்கத்தில் உள்ள கவர் எதிலோ சிக்கிக்கொண்டு இழுக்க இழுக்க கீழே வராமல் இருக்கவும், “ப்ச்” என்று தன் பல்லை கடித்தபடி கவரை பிடித்து கொஞ்சம் வேகமாக கீழே இறக்கியவன், ஏதோ தோன்றவும் நிமிர்ந்து பார்த்தான். 

பெண்ணவளின் பார்வை தன் மீதே நிலைத்திருப்பதை கண்டான்! ஆச்சரியமாக இருந்தது!

‘கொஞ்ச நேரத்திற்கு முன்பு, அழுது கொண்டு, தன்னை பார்க்கவே பயந்து, பேசவே தயங்கி கொண்டிருந்த பெண்ணா இவள்! நிமிட பொழுதில் அவளது விழிகளில் தான் எவ்வளவு மாற்றம்?! எத்தனை ஒளிமிக்க கூர்மையான விழிகள்!’ அவனுக்கு வியப்பாக இருந்தது. 

‘இதுவோ கெண்டை விழிகள் ம்ஹூம் இல்லை வேல் விழிகள் ம்ஹூம் அவளது விழிகளுக்கு எதை உதாரணமாய் கூறுவது? அதன் அழகை எதை கூறி வர்ணிப்பது என்ற ஆராச்சியில் இறங்கியவனை, வர்ணனைகளை தாண்டி விஞ்சி நின்ற அவளது விழிகளின் எழில், கருந்துளையாக ஈர்த்து எங்கோ இழுத்து செல்வதை உணர்ந்தவன், முயன்றும் அதில் இருந்து மீளமுடியாது தவிக்கும் தன் நிலையை எண்ணி மிகவும் திணறினான்.

பின்பு சில நொடிகள் தீவிர முயற்சியின் முடிவில், மிக சிரமப்பட்டு அவளது விழிகளில் இருந்து தன் பார்வையை அகற்றி, காரை கவர் கொண்டு முழுவதும் மூடிவிட்டு அங்கிருந்து தள்ளி வந்து நின்றவனின் இதயம் வேகமாக துடிக்கவும், கண்களை இறுக்கமாக மூடி ஆழமாக மூச்சிழுத்து வெளியிட்டவன், அஜூதியா உடைமாற்றிவிட்டு காரின் கதவை தட்டவும், மீண்டும் காரை நெருங்கிய பொழுது சலனப்பட்டிருந்த தன் மனதை முழுவதுமாக தனது கட்டுக்குள் கொண்டு வந்திருக்க, 

இப்பொழுது பெண்ணவளும் கூட சில மணிநேரத்திற்கு முன்பு இருந்தது போல அதீத பயத்தில் எல்லாம் இல்லை, அதற்காக பயமே இல்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது, நடந்த சம்பவத்தின் தாக்கம் அவளது இதயத்தின் ஓரம் இருக்க தான் செய்கிறது. ஆனால் முன்பு போல அதற்காக அவள் கண்ணீரெல்லாம் வடிக்கவில்லை, தன்னை காப்பற்றிய இவன் நல்லவனோ கெட்டவனோ என்கின்ற ஆராய்ச்சியை விட்டுவிட்டவள், இவன் அந்த பரந்தாமனை போல பெண்களை வேட்டையாடும் மிருமகம் இல்லை என ராவணனை உறுதியாக நம்பியவள், எப்படியோ தன் மானமும், உயிரும் காப்பாற்றப்பட்டதே அதுவே போதும், என்று தனக்கு தானே தைரியம் கொடுத்து தன்னை தானே தேற்றியவள், பதற்றத்தை விடுத்து சிறு நிம்மதியுடன் சாலையை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

அப்பொழுது, 

“உங்க வீடு எங்க இருக்கு?” என ராவணன் உத்தரவின்படி விக்கி அவளிடம் வினவ, அதற்கு அவள் பதில் கூறிய மறுநிமிடம்,

“ஆஷ்ரமத்துல உனக்கு என்ன வேலை?” தன் கட்டுப்பாட்டையும் மீறி ராவணன் கேட்டுவிட, ஆனால் அஜூதியா அவனது அழுத்தமான குரலை கேட்டு பதற்றப்படவும் இல்லை, என்ன பதில் கூறுவது என தயங்கவும் இல்லை, 

“நான் அனாதை, சின்ன வயசுல இருந்து அங்க தான் வளர்றேன்” என்று மிக இயல்பாக கூறினாள். 

அப்பொழுது அதை கேட்டு, “அட நம்ம கேஸ் தான்” என்ற விக்கி ராவணன் பார்த்த ஒரு பார்வையில் அமைதியாகிவிட, இவர்கள் யார் என்று கேட்டு, நன்றி சொல்லிவிட வேண்டும் என்று வெகு நேரமாக எண்ணிக்கொண்டிருந்த அஜூதியாவும்,  ராவணன் விக்கியை பார்த்த பார்வையையும் அதில் இருந்த அதட்டலையும் கண்டு அவனிடம் எப்படி பேசுவது என்று தயங்கிக்கொண்டே பேசாமல் அமர்ந்துவிட, சில மணிநேர பயணத்திற்கு பிறகு கார் நிற்கவும், தனது ஆஷ்ரம பலகையை பார்த்தவள் காரில் இருந்து இறங்காது அப்படியே அமர்ந்திருக்க, அவள் இறங்காததை உணர்ந்த ராவணன், 

“நீங்க போக வேண்டிய இடம் வந்தாச்சு” என்று அவளை திரும்பி கூட பார்க்காது கூற, அவனது குரலில் தெரிந்த அழுத்தத்தில் காரில் இருந்து இறங்கியவள், கார் கிளம்பவும், வேகமாக அவன் அமர்ந்திருந்த பக்கம் சென்று,

“நீங்க உங்க பேரு உங்க கிட்ட பேசணும்” என்று தயத்துடன் நா குழற அவள் ஏதேதோ ஆரம்பிக்கும் முன்பே, தன் கரம் உயர்த்தி அவளை தடுத்தவன்,

“மறந்திரு! மொத்தமாக எல்லாத்தையும் மறந்துட்டு, உனக்கான வாழ்க்கையை சந்தோஷமா துணிவோட வாழு” என இன்று நடந்த சம்பவத்தையும் தன்னையும் சேர்த்து மறந்துவிடு என்று இரு பொருள் பட  கூறிவிட்டு, அவள் அடுத்த வார்த்தை பேசுவதற்குள் சிறு புள்ளியாய் அவள் பார்வையில் இருந்து மறைந்திருந்தான்.

ராவணன் சிறையெடுப்பானா?

❤️ Loading reactions...
2 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top