மீனா அறைக்கு வெளியே சென்றதும், ருத்ரன் நந்திதாவைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்துவிட்டு வெளியே வந்தான். அங்கே நின்றிருந்த மீனாவின் அருகில் சென்று,
“ஏண்டி, இவ்வளவு பதட்டமா ஓடி வந்த? என்ன விஷயம்?” என்று வினவினான்.
“அண்ணா… அது வந்து… யாரோ வந்திருக்காங்க…” என்று இழுத்தாள் மீனா.
“யார் வந்திருக்காங்க?”
“அது… தாத்தா எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காருல்ல? அந்த வீட்டிலிருந்து ஒரு பெரியவர் வந்திருக்காரு.”
“சரி வா… கீழே போய் என்னன்னு பார்ப்போம்,” என்று கூறியபடி இருவரும் கீழே இறங்கினர்.
வரவேற்பறையில் ஒரு வயதானவர் அமர்ந்திருந்தார்.
அவரது அருகில் சென்ற ருத்ரன்,
“வாங்க தாத்தா… என்ன விஷயமா வந்தீங்க? வீட்ல தாத்தா, பாட்டி யாரும் இல்லையே?” என்று மரியாதையுடன் கேட்டான்.
“சரிங்க தம்பி. நான் உங்க தாத்தாவைப் பார்த்துப் பேசலாம்னுதான் வந்தேன். இங்கே ஒரு வேலையா வந்த இடத்துல, அப்படியே அவரைப் பார்த்துட்டுப் போலாம்னு தோணுச்சு,” என்றார் அவர்.
“சரிங்க தாத்தா. எல்லாரும் சாயங்காலம் வந்துருவாங்க. அதுவரைக்கும் இருந்துட்டுப் போங்களேன்,” என்றான் ருத்ரன்.
“ஐயோ இல்லப்பா. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. பொண்ணு பார்க்கிறதோட நிச்சயத்தையும் சேர்த்து வச்சிருக்கறதால ஓயாம வேலை ஓடுது. இப்பக்கூட அந்த விஷயமாத்தான் வந்தேன். எங்க சொந்தக்காரங்க இங்கே இருக்காங்க. அவங்களுக்கு நிச்சயதார்த்தப் பத்திரிகை வைக்கப் போனேன். அப்படியே உங்க தாத்தாவையும் பார்த்துட்டுப் போலாம்னுதான் வீட்டுக்கு வந்தேன்.”
“சரி தாத்தா… நீங்க வந்த முக்கியமான விஷயம் என்னன்னு சொல்லுங்க. தாத்தா வந்தவுடனே நான் எல்லா விபரத்தையும் சொல்லிடுறேன்,” என்றான் ருத்ரன்.
“முக்கியமான விஷயம் ஒன்னும் இல்லப்பா. நிச்சயதார்த்தத்தை இங்கேயே, பொண்ணு வீட்டிலேயே வச்சுக்கலாம். கல்யாணத்தை மட்டும் எங்க ஊர் கோவில்ல வச்சுக்கலாம்னு சொல்ல வந்தேன்,” என்றார் அந்தப் பெரியவர்.
“ஓகே தாத்தா. நான் வீட்டுல பெரியவங்ககிட்ட பேசிட்டு, தாத்தாவை உங்ககிட்ட பேசச் சொல்றேன்,” என்றான் ருத்ரன்.
அவரும் விடைபெற்று அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
அவர் கிளம்பியதும் நந்திதா கீழே இறங்கி வந்தாள்.
“யாரு மீனா வந்தது? என்ன சொன்னாங்க?” என்று கேட்டாள்.
மீனா நடந்த அனைத்தையும் விவரித்துச் சொல்லி முடித்ததும், நந்திதாவின் முகம் மாறியது.
“என்ன மீனா, இப்படி பண்ணிட்ட? வீட்டுக்கு வந்தவங்களுக்குக் குடிக்கத் தண்ணி கொடுத்து, ஏதாவது சாப்பிடக் கூட கேட்டிருக்கணுமே! அப்படியே அனுப்பிட்டீங்களே… அண்ணனும் தங்கச்சியும்!” என்று கோபமாகக் கேட்டாள்.
“ஐயோ… சாரி அண்ணி. நான் பதட்டத்துல அதை யோசிக்கவே இல்லை,” என்றாள் மீனா வருத்தத்துடன்.
ருத்ரனும் அப்போதுதான் தன் தவறை உணர்ந்து,
“ஆமா நந்திதா… நானும் அதை அப்படியே மறந்துட்டேன்,” என்றான்.
“மீனா… உன்னைப் பத்தி அவங்க என்ன நினைப்பாங்க? அவங்க வீட்டுக்கு மருமகளாப் போகப்போற பொண்ணு நீ. இவ்வளவு பொறுப்பில்லாம இருக்கலாமா?” என்று நந்திதா கேட்டாள்.
தன் தங்கையைக் குறை கூறுவதைக் கேட்க ருத்ரனுக்குப் பிடிக்கவில்லை.
“போதும், நந்திதா! அவளை எதுவும் சொல்லாத. அவளுக்கு இதுக்கு முன்னாடி இப்படிப்பட்ட பழக்கம் இல்லை. வீட்டுல அம்மாவும் பாட்டியும் இருக்கறதால யாரு வந்தாலும் அவங்கதான் கவனிப்பாங்க. இவளுக்கு அந்தப் பொறுப்பு இதுவரைக்கும் வந்ததே இல்லை,” என்று அவளுக்காகப் பேசினான்.
“தெரியலன்னா தெரிஞ்சுக்கணும்ல?” என்று நந்திதா விடாமல் கூறியதும், ருத்ரனுக்குக் கோபம் வந்தது.
“சரி… இப்ப அதுக்கு என்ன பண்ணச் சொல்ற? அவர் போயிட்டாரு. நான் வேணும்னா பின்னாடியே போய்க் கூட்டிட்டு வரவா?” என்று எரிச்சலுடன் கேட்டான்.
இருவரும் காரசாரமாக விவாதிப்பதைக் கண்ட மீனா கலங்கிப் போனாள்.
“ஐயோ கடவுளே! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரை சந்தோஷமா இருந்தவங்க, இப்போ என்னால சண்டை போட்டுக்கறாங்களே…” என்று மனதிற்குள் வருந்தினாள்.
உடனே நந்திதாவின் முன் வந்து நின்று,
“சாரி அண்ணி… இனிமே இப்படிச் நடக்காது. ப்ளீஸ்… அண்ணா, நீங்க எதுவும் சொல்லாதீங்க. நீங்க ஆபீஸ்க்கு கிளம்புங்க,” என்று ருத்ரனைச் சமாதானப்படுத்திவிட்டு, நந்திதாவை அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.
—
அமெரிக்காவின் அந்தப் பனிமூட்டமான மாலை நேரத்தில், யஷ்வியின் வீட்டு வாசலில் வந்து நின்றது ஆரியனின் கார்.
காரிலிருந்து இறங்கிய ஆரியன், நீண்ட பயணத்தின் களைப்பு முகத்தில் தெரிந்தாலும், யஷ்வியைப் பார்க்கப் போகும் உற்சாகத்துடன் காலிங் பெல்லை அழுத்தினான்.
கதவைத் திறந்த யஷ்வியின் பெரியப்பா, வாசலில் ஆரியனைக் கண்டதும் ஆச்சரியமடைந்தார்.
“வாங்க மாப்பிள்ளை! என்ன சொல்லாமலேயே வந்துட்டீங்க? ஒரு போன் பண்ணியிருந்தா, நானே ஏர்போர்ட் வந்து உங்களை கூட்டிட்டு வந்திருப்பேனே!” என்றார் அன்புடன்.
“பரவாயில்லை அங்கிள். கார் வசதி இருந்ததால உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம்னுதான் நானே வந்துட்டேன்,” என்றபடி உள்ளே நுழைந்த ஆரியனின் கண்கள் யஷ்வியைத் தேடின.
“யஷ்வி எங்க அங்கிள்? வீட்டுல இல்லையா?”
“அவ காலேஜ் போயிருக்காப்பா. வர ஈவினிங் ஆயிடும். நீங்க முதல்ல போய் குளிச்சிட்டு ரெஸ்ட் எடுங்க. நான் சாப்பாடு எடுத்து வைக்கச் சொல்றேன்,” என்றார் பெரியப்பா.
ஆனால் ஆரியனோ,
“இல்ல அங்கிள். வர்ற வழியிலேயே சாப்பிட்டேன். ரொம்ப டயர்டா இருக்கு. கொஞ்சம் தூங்குனா சரியாயிடும்,” என்றான்.
பெரியப்பா யஷ்வியின் அறையைக் காட்டி,
“இதுதான் அவ ரூம். போய் தங்குங்க. நான் கொஞ்சம் கடை வரைக்கும் போயிட்டு வர்றேன். வேலை ஆட்கள் இருக்காங்க. எதுன்னாலும் அவங்களைக் கூப்பிடுங்க,” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
யஷ்வியின் அறைக்குள் நுழைந்த ஆரியனுக்கு, அந்த அறையின் நேர்த்தி அவளை நினைவுபடுத்தியது.
எல்லாமே அவளைப் போலவே ஒழுங்காக இருந்தன.
திடீரென அவன் பார்வை சுவரில் மாட்டப்பட்டிருந்த பெரிய புகைப்படத்தின் மீது விழுந்தது.
அது அவர்களது திருமணப் புகைப்படம்.
அதைப் பார்த்ததும் அவன் இதழ்களில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.
பயணக் களைப்பு மேலிட, அப்படியே கட்டிலில் சரிந்தவன் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினான்.
மாலை 5 மணி…
யஷ்வி கல்லூரி முடிந்து வீடு திரும்பினாள்.
ஆரியன் வந்திருப்பது அவளுக்குத் தெரியாது.
நேராகத் தன் அறைக்குச் சென்று உடை மாற்றிவிட்டு, ஹாலுக்கு வந்து அமர்ந்தாள்.
“அக்கா, ஒரு ஸ்ட்ராங் டீ குடுங்க,” என்று வேலைக்காரப் பெண்ணிடம் கூறினாள்.
டீயை வாங்கி ஒரு மிடறு பருகியவள்…
திடீரென அவள் காதருகே மிக நெருக்கமாக,
“எனக்கெல்லாம் டீ இல்லையா?” என்ற ஆரியனின் காந்தக் குரல் கேட்டது.
அதிர்ச்சியில் உறைந்துபோன யஷ்வி சட்டென்று திரும்பினாள்.
எதிர்பாராதவிதமாக, அவள் கையில் இருந்த சூடான டீ ஆரியனின் சட்டையின் மீது கொட்டியது.
“ஐயோ! என்னடி பண்ற? டீ கேட்டா இப்படி என் மேல ஊத்துறதா?” என்று பதறினான் ஆரியன்.
“ஐயோ… சாரி… சாரி ஆரியன்! நீங்க எப்போ வந்தீங்க?” என்று பதற்றத்துடன் கூறியவள், அருகில் இருந்த டிஷ்யூ பேப்பரை எடுத்துச் சட்டையைத் துடைக்கத் தொடங்கினாள்.
“சூடான டீயை ஊத்திட்டு, இப்போ துடைக்கிறியா? சுடுதுடி!” என்று அவன் செல்லமாக முணுமுணுத்தான்.
யஷ்விக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
அவசரமாக அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் ஓடினாள்.
அங்கே ஷவரைத் திறந்து, அவனை அப்படியே தண்ணீருக்கு அடியில் நிற்க வைத்தாள்.
ஜில்லென்ற தண்ணீர் அவன் மீது பட்டதும், ஆரியன் சிரித்துக்கொண்டே,
“ஏய்! என்ன பண்ற? கொஞ்சம் டீ கொட்டுனதுக்கே இப்படி நனைய வைக்கிறியே?” என்று அவள் கையைப் பிடித்தான்.
அவன் தொட்ட அந்த நொடிதான், யஷ்விக்கு தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற சுயநினைவு வந்தது.
பதற்றத்தில் அவனை ஷவருக்கு அடியில் நிற்க வைத்தது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை உணர்ந்தாள்.
அவனது ஆழமான பார்வையை எதிர்கொள்ள முடியாமல், முகம் சிவக்கத் தலையைக் குனிந்தாள்.
அந்தச் சிறிய பாத்ரூமில், கொட்டும் தண்ணீரின் சத்தத்திற்கு நடுவே, இருவரின் இதயத் துடிப்பும் தெளிவாக ஒலித்தது.
தொடரும்…