❤️அத்தியாயம் 《29》

சில்லென்ற நீர் கொட்டிக் கொண்டிருந்த அந்த ஷவரின் அடியில், யஷ்வியின் கரங்களைச் சிறைபிடித்தபடி நின்றிருந்தான் ஆரியன். வெட்கத்தில் தலைகுனிந்திருந்தவளால், அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்கக்கூட முடியவில்லை.

“ஏய்… என்ன இப்படி நனைஞ்சுட்டு இருக்கோம்? டீ கொட்டுனது என் சட்டையில்தானே? அதுக்காக நீ என்னையே நனைய வச்சுட்டியே!” என்று ஆரியன் மெல்லச் சிரிக்க, அவனது குரலில் வழிந்த குறும்பு அவளை இன்னும் சங்கடப்படுத்தியது.

“அ… அது… பதட்டத்துல…” என்று அவள் இழுக்க,

“பதட்டத்துல என்ன பண்றதுன்னே தெரியாம, நேரா பாத்ரூமுக்குள்ள கூட்டிட்டு வந்து ஷவரைத் திறந்து விட்டுட்டியா?” என்று கேட்டபடி, அவன் அவளை இன்னும் நெருங்கினான்.

தண்ணீரில் முழுவதுமாக நனைந்திருந்த அவளது சுடிதார், அவள் மேனியோடு ஒட்டிக்கொண்டிருந்தது. ஆரியனின் பார்வையில் ததும்பிய காதலை அவளால் உணர முடிந்தது.

அவன் தனது கரங்களை மெதுவாக அவள் கன்னத்தில் பதித்து, “என்ன… பயந்துட்டியா?” என்று கிசுகிசுக்க,

“நீங்க திடீர்னு வருவீங்கன்னு நான் நினைக்கல… அதுவும் என் காதுகிட்ட வந்து அப்படிப் பேசுனீங்க…” என்று அவள் சொல்லும்போதே, அவனது இதழ்களில் புன்னகை அரும்பியது.

“ஏன், என் குரல் கேட்டா உனக்கு அவ்வளவு பயமா?” என்றவன், அவளை இன்னும் நெருக்கமாகத் தன் பக்கம் இழுத்து அணைத்துக் கொண்டான்.

ஷவரின் நீர் இருவரையும் முழுவதுமாக நனைத்திருக்க, ஆரியனின் அணைப்பில் இருந்த யஷ்வி, அந்தச் சில்லிட்ட நீரிலும் அவனது மூச்சுக்காற்றின் கதகதப்பில் உறைந்து போயிருந்தாள்.

அவனது நெஞ்சில் சாய்ந்திருந்தவள், மெதுவாகத் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் முகத்தில் வழிந்தோடிய நீர்த்துளிகளும், கண்களில் தெரிந்த அந்தத் தீவிரமும் அவளை ஏதோ செய்தன.

“ஆரியன்… விடுங்க… யாராவது வந்திடப் போறாங்க…” என்று யஷ்வி மிக மெல்லிய குரலில் சொன்னாள்.

ஆனால், அவளது கைகள் அவனை விலக்க நினைக்காமல், அவன் சட்டையை இன்னும் இறுக்கமாகப் பற்றியிருந்தன.

“யாரும் வரமாட்டாங்க… இந்த நிமிஷம்… இந்த இடம்… இது நமக்கானது மட்டும் தான்,” என்றான் ஆரியன். அவனது குரல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கனிவாகவும், ரகசியமாகவும் இருந்தது.

அவன் கைகள் மெதுவாக அவளது ஈரமான கூந்தலை ஒதுக்கி, காதோரம் வழிந்த நீர்த்துளிகளைத் துடைத்தன. அவனது விரல்கள் பட்ட அந்த நொடி, யஷ்விக்குள் மின்னல் வேகத்தில் ஒரு சிலிர்ப்பு பாய்ந்தது.

அந்த நேரம், வெளியிலிருந்து பெரியப்பா அழைக்கும் சத்தம் கேட்டதும், யஷ்வி சட்டென்று ஆரியனிடம் இருந்து விலகி நின்றாள்.

“ஐயோ! பெரியப்பா வந்துட்டாரு… நான் அப்பவே சொன்னேன்ல!” என்று படபடத்தாள்.

“சரி, இப்ப அதுக்கென்ன? நான் உன் புருஷன் தானே! அதெல்லாம் அவர் ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டார்,” என்றான் ஆரியன் இயல்பாக.

“சரி, நான் கிளம்புறேன்,” என்று யஷ்வி வெளியே செல்ல முயல,

“ஏய், இரு! இப்படியேவா வெளியே போகப் போற?” என்று அவளைத் தடுத்தான் ஆரியன்.

அவன் சொன்ன பிறகுதான் யஷ்வி தன்னைக் குனிந்து பார்த்தாள்.

தண்ணீரில் நனைந்திருந்த உடை, அவள் உடலோடு ஒட்டிக்கொண்டிருந்தது.

“ஐயோ!” என்று பதறியவள், கைகளால் தன்னை மறைத்துக் கொண்டாள்.

“நீ இங்கேயே இரு. நான் முதல்ல போறேன்,” என்றவன், அங்கிருந்த துண்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

வெளியே வந்து உடையை மாற்றிக்கொண்டு, அறைக் கதவைத் திறந்தான் ஆரியன்.

அங்கே நின்றிருந்த பெரியப்பா,

“மாப்பிள்ளை, யஷ்வி வந்துட்டாளா?” என்று கேட்டார்.

“வந்துட்டா மாமா… குளிச்சிட்டு இருக்கா,” என்றான் ஆரியன்.

“அஞ்சு மணிக்கே வந்துருவாளே… இப்பதான் குளிக்கிறாளா? நான் எத்தனையோ தடவை சொல்லிட்டேன், வந்ததும் டிவி பார்க்காதேன்னு! எங்கே என் பேச்சைக் கேக்குறா? வந்ததும் அந்த கார்ட்டூனைப் போட்டுட்டு உட்கார்ந்துடுவா,” என்று பெரியப்பா சலித்துக்கொள்ள, அதைக் கேட்ட ஆரியனுக்குச் சிரிப்பு வந்தது.

“சரி வாங்க மாப்பிள்ளை, நம்ம சாப்பிடலாம்,” என்று பெரியப்பா அழைக்க, இருவரும் டைனிங் டேபிளில் அமர்ந்தனர்.

அப்போதுதான் யஷ்வி அறையிலிருந்து வெளியே வந்தாள்.

அவளைப் பார்த்ததும் பெரியப்பா,

“என்னம்மா, இப்பதான் குளியல் முடிஞ்சதா? உனக்கு எத்தனை தடவை சொல்றது, வீட்டுக்கு வந்ததும் குளிக்கணும்னு! அதுவும் இல்லாம, இன்னைக்கு மாப்பிள்ளை வந்திருக்காரு. அவரைக் கவனிக்கணும்ல?” என்றார்.

உடனே ஆரியன் குறுக்கிட்டு,

“பரவாயில்லை மாமா, விடுங்க. நாளைக்கு நாம மூணு பேரும் இந்தியாவுக்குக் கிளம்பணும். நீங்க ரெடியா இருக்கீங்களா?” என்று பேச்சை மாற்றினான்.

“நாளைக்கேவா? இன்னைக்குத்தானே மாப்பிள்ளை வந்தீங்க… ஒரு ரெண்டு நாள் ஓய்வு எடுத்துட்டுப் போகலாமே?” என்றார்.

“இல்ல மாமா. அங்கே நிறைய வேலை இருக்கு. ருத்ரன் ஒருத்தனே எல்லாத்தையும் பார்க்க முடியாது. நான் யஷ்வியைக் கூட்டிட்டுப் போகத்தான் வந்தேன்,” என்றான் ஆரியன் உறுதியாக.

“சரி மாப்பிள்ளை. அப்ப நாளைக்கே கிளம்பலாம். அம்மா யஷ்வி, உனக்குத் தேவையான பொருட்கள் எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கோ. காலேஜ்ல நான் சொல்லிக்கிறேன்,” என்றார் பெரியப்பா.

“சரி பெரியப்பா,” என்றவள் தன் அறைக்குள் சென்றாள்.

அடுத்த நாள், அவர்கள் மூவரும் இந்தியாவிற்குப் பயணமானார்கள்.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top