மித்ரன் தன் காரில் விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவைச் சரிபார்த்தபடியே சென்றவன், ஒரு பேருந்து நிறுத்தத்தைக் கடக்கும்போது சட்டென அதிர்ந்தான். சில நிமிடங்களுக்கு முன்புதான் தன் அலுவலகத்திற்கு வந்திருந்த தன் தூரத்து உறவினரான மாமாவை அங்கே கண்டான்.
காரைச் சற்று தூரத்தில் நிறுத்தியவனின் மனதில் ஏதோ ஒரு பொறி தட்டியது. அடுத்த நொடியே காரைச் சட்டென்று திருப்பி, பாண்டியனின் வீட்டை நோக்கி விரைந்தான்.
பாண்டியனின் வீட்டில் அவர் மனைவி மட்டுமே தனியாக இருந்தார். நேராக வீட்டிற்குள் நுழைந்த மித்ரன்,
“எங்கே உங்க புருஷனும் பிள்ளையும்?” என்று ஆவேசமாகக் கத்தினான்.
அவனது கோபத்தைக் கண்டு மிரண்டுபோன பாண்டியனின் மனைவி,
“ஏம்பா… ஏன் இவ்வளவு கோபமா இருக்க?” என்று நடுக்கத்துடன் கேட்டார்.
“கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க!” என்று அதட்டியவன்,
“அவங்க… அவங்க மதுரைக்குப் போயிருக்காங்கப்பா…” என்றார் அவர்.
“மதுரைக்கு எதுக்குப் போனாங்க? என்ன விஷயமா போனாங்க?”
“எனக்குத் தெரியாதுப்பா…” என்று அவர் மழுப்ப,
“பொய் சொல்லாதீங்க! அங்கே நந்திதா அக்கா வீட்ல பெரிய பிரச்சனை. நந்திதா அக்கா, ஆரியன் அண்ணாவோட மனைவி யஷ்வி, அப்புறம் ஆரியன் அண்ணாவோட தங்கை மீனா… மூணு பேரையும் யாரோ கடத்திட்டாங்க!” என்றான் மித்ரன்.
அதிர்ச்சியில் உறைந்துபோன பாண்டியனின் மனைவி,
“ஐயோ! என்னப்பா சொல்ற?” என்று வாயடைத்துப் போனார்.
“இப்போ பேச நேரமில்லை. தயவுசெஞ்சு சொல்லுங்க… அவங்க ரெண்டு பேரும் எங்கே போயிருக்காங்க?” என்று கெஞ்சலும் மிரட்டலும் கலந்த குரலில் கேட்டான்.
“மதுரைக்குத்தான் போயிருக்காங்க தம்பி. ஒரு வாரத்துக்கு முன்னாடி அந்தத் தம்பி குடும்பத்தைச் சேர்ந்த யாரோ ஒரு அத்தை இங்கே வந்தாங்க. அந்தக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தணும்னு பேசிக்கிட்டாங்க. அது மட்டும்தான் எனக்குத் தெரியும். ஆனா, இப்படி கடத்தல் வேலை எல்லாம் செய்வாங்கன்னு நான் நினைக்கல தம்பி!” என்று அழுதுகொண்டே உண்மையைச் சொன்னார்.
‘அப்படின்னா ரெண்டு குடும்பமும் சேர்ந்துதான் இதைத் திட்டமிட்டு இருக்காங்க…’ என்று மித்ரனுக்குப் புரிந்தது.
அவர் கண்களை நேராகப் பார்த்து,
“இங்க பாருங்க… அவங்க மூணு பேருக்கும் ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா, அப்புறம் உங்க புருஷனையும் பிள்ளையையும் நீங்க உயிரோட பார்க்க முடியாது. ருத்ரன் குடும்பம் நல்லவங்கதான். ஆனா, அவங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா அவங்க சும்மா இருக்க மாட்டாங்க. முக்கியமா ஆரியன் அண்ணா உங்களை யாரையும் விடமாட்டாரு!” என்று எச்சரித்துவிட்டு மின்னல்போல் அங்கிருந்து வெளியேறினான்.
மீண்டும் விமான நிலையத்திற்குச் சென்றவன், ருத்ரனைத் தொடர்புகொள்ள முயன்றான். ஆனால், ருத்ரன் போனை எடுக்கவில்லை.
‘சரி… மதுரைக்கே போய் நேரில் பேசிக்கலாம்.’ என்று முடிவெடுத்தவன், விமானத்தில் ஏறினான்.
மதுரை வந்திறங்கியதும் நேராக வீட்டிற்குச் சென்றான். வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை. அவனைக் கண்டதும் காயத்ரி ஓடி வந்து அவனைக் கட்டிப்பிடித்துக் கதறினார்.
“அம்மா… இப்படி அழுதுட்டே இருந்தா எதுவும் சரியாகாது. நாங்க இருக்கோம். அவங்க மூணு பேருக்கும் எதுவும் ஆகாது. பயப்படாம இருங்க,” என்று அவரைத் தேற்றினான்.
ருத்ரனும் ஆரியனும் எங்கே என்று விசாரித்தபோது, அவர்கள் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்பது தெரிந்தது.
“நான் பார்த்துக்கிறேன்…” என்று கூறிவிட்டு வெளியேறிய மித்ரன், இந்த முறை ஆரியனுக்கு அழைத்தான்.
ஆரியன் போனை எடுத்ததும்,
“அண்ணா… எங்கே இருக்கீங்க?” என்று கேட்டான்.
“போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கேன்.”
“அங்கேயே இருங்க. இதோ பத்து நிமிஷத்துல வந்துடுறேன்,” என்று கூறிவிட்டு விரைந்தான்.
சொன்னது போலவே பத்தே நிமிடங்களில் காவல் நிலையத்தை அடைந்தான். அவன் உள்ளே நுழையவும், ருத்ரனும் ஆரியனும் வெளியே வரவும் சரியாக இருந்தது.
அவர்களைக் கண்டதும் மித்ரன் ஓடிச்சென்று,
“டேய்… என்னடா சொன்னாங்க?” என்று பதற்றத்துடன் கேட்டான்.
“அவங்களும் கண்டுபிடிக்க முயற்சி செஞ்சுகிட்டுதான் இருக்காங்கடா… ஆனா இதுவரைக்கும் எந்தத் தகவலும் கிடைக்கல,” என்றான் ருத்ரன் விரக்தியுடன்.
“டேய்… அவங்க மூணு பேரையும் கடத்துனது யாருன்னு எனக்குத் தெரியும்டா!”
மித்ரன் சொன்னதைக் கேட்டதும், ஆரியன் அவன் அருகில் பாய்ந்து வந்தான்.
“என்ன சொல்ற மித்ரன்? யாரு? உனக்கு எப்படித் தெரியும்?”
மித்ரன், பாண்டியன் வீட்டிற்குச் சென்றது முதல் அவர் மனைவி சொன்ன உண்மைகள் வரை அனைத்தையும் விவரமாகக் கூறினான்.
அதைக் கேட்கக் கேட்க ருத்ரனுக்கும் ஆரியனுக்கும் கோபம் தலைக்கேறியது. அவர்களின் நரம்புகள் புடைக்க, கண்கள் சிவந்து நின்றனர்.
“வாங்க… இப்போவே உங்க அத்தை வீட்டுக்குப் போய் விசாரிப்போம். அவங்களுக்குக் கண்டிப்பா தெரியும். இவங்களை எங்கே வச்சிருக்காங்கன்னு. மதுரையில் யாரோட உதவியும் இல்லாம பாண்டியனால எதுவும் பண்ண முடியாது. உங்க அத்தைதான் எல்லாத்துக்கும் பின்னாடி இருப்பாங்க,” என்று மித்ரன் சொல்லி முடிக்கும் முன்பே,
ஆரியனும் ருத்ரனும் காரை ஸ்டார்ட் செய்திருந்தனர். மித்ரனும் அவர்களுடன் ஏறிக்கொண்டான்.
கார் நேராக ஜமுனாவின் வீட்டை அடைந்தது.
உள்ளே ஜமுனாவின் குடும்பம் ஏதோ பெரிய காரியத்தைச் சாதித்த மகிழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தது. ஆனால், புயலென உள்ளே நுழைந்த இம்மூவரையும் கண்டதும், அவர்கள் பயத்தில் உறைந்துபோனார்கள்.
ஆரியன் நேராக ஜமுனாவின் முன் சென்று நின்று,
“எங்கே அவங்களைக் கடத்தி வச்சிருக்கீங்க?” என்று கர்ஜித்தான்.
“யாரு… யாரை நாங்க கடத்தினோம்?” என்று ஜமுனா மழுப்பலாக இழுக்க,
அவர் சொல்லி முடிக்கும் முன்பே, பக்கத்தில் நின்ற சுஜித்ராவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் ஆரியன்.
அந்த அறையில் நிலைகுலைந்த சுஜித்ரா, சோபாவில் போய் விழுந்தாள்.
அதிர்ந்துபோன ஜமுனா,
“ஐயோ கடவுளே! இப்போ எதுக்கு என் பொண்ணை அடிச்ச? நாங்கதான் உங்க உறவே வேண்டாம்னு வந்துட்டோமே!” என்று கத்தினார்.
“இங்கே யாரும் உங்க உறவு வேணும்னு வரல! எங்க வீட்டுப் பெண்களை எங்கே கடத்தி வச்சிருக்கீங்க? மரியாதையா உண்மையைச் சொல்லிட்டா இதோட விட்டுட்டுப் போவோம். இல்லைன்னா… குடும்பத்தோட இங்கேயே குழி தோண்டிப் புதைச்சிடுவேன்!” என்று ஆரியன் எச்சரித்தான்.
அவனது கண்களில் தெரிந்த கொலைவெறி அவர்களை நடுங்க வைத்தது.
நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த ஜமுனாவின் கணவர் பதற்றத்துடன் முன்வந்தார்.
“ஐயோ தம்பி! அப்படி எதுவும் பண்ணிடாதீங்க… நான் சொல்லிடறேன்,” என்றார்.
அந்த நிலையிலும் ஜமுனாவும் அவரது மகள்களும் அவரை முறைத்துப் பார்த்தார்கள்.
“சீக்கிரம் சொல்லுங்க… எங்கே இருக்காங்க?” என்று ஆரியன் மீண்டும் அதட்ட,
அவர் அவர்கள் மறைத்து வைத்திருந்த இடத்தை விவரமாகக் கூறினார்.
மித்ரன் உடனடியாக போலீஸுக்குத் தகவல் கொடுத்தான். அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த காவல்துறை ஜமுனாவின் குடும்பத்தைக் கைது செய்தது.
ஜமுனாவின் கணவர் சொன்ன இடத்தை நோக்கி மூவரும் காரில் மின்னல் வேகத்தில் பறந்தார்கள்.
அந்த இடம் வந்ததும் மித்ரன்…
தொடரும்…