அண்ணா! அவசரப்பட்டு கீழே இறங்காதீங்க. அங்கே எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியல. யோசிச்சுதான் உள்ளே போகணும். இல்லாட்டி உள்ளே இருக்கிற மூணு பேருக்கும் ஆபத்து வந்திடும்,” என்று மித்ரன் எச்சரித்தான்.
அவன் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகத் தோன்றவே, மூவரும் காரிலேயே அமர்ந்து அந்த இடத்தைக் கவனித்தனர்.
இருள் சூழ்ந்திருந்ததால், காரை ஒரு பெரிய மரத்தின் மறைவில் நிறுத்தியிருந்தார்கள். அதனால் வெளியே இருந்தவர்களுக்கு கார் இருப்பது தெரியவில்லை.
அங்கே மொத்தம் பத்து பேர் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். அதைக் கண்ட ருத்ரன்,
“அண்ணா… பேசாம போலீஸ்க்கு கால் பண்ணி வரச் சொல்லுவோமா?” என்று கேட்டான்.
“இல்லடா… இப்போவே வேண்டாம். மித்ரன் சொல்ற மாதிரி உள்ளே இருக்கிறவங்களுக்கு ஆபத்து வந்துடக் கூடாது. பொறுமையாதான் களம் இறங்கணும்,” என்றான் ஆரியன்.
அப்போது, ஒரு ஐயரை இரண்டு அடியாட்கள் வலுக்கட்டாயமாக உள்ளே அழைத்துச் செல்வதை மித்ரன் கவனித்தான்.
“அண்ணா! நீங்க உடனே போலீஸ்க்கு கால் பண்ணுங்க. அவங்க வெளியே இருக்கிறவங்களைப் பார்த்துக்கட்டும். நாம உள்ளே போவோம். ஐயர் போறதைப் பார்த்தா வேற ஏதோ பிளான் பண்றாங்க. கண்டிப்பா கொலை பண்ற அளவுக்குப் போக மாட்டாங்க. ஏதோ கட்டாயக் கல்யாணம் நடக்கப் போகுது!” என்றான்.
ருத்ரன் உடனடியாக போலீஸுக்குத் தகவல் தெரிவித்தான். அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே, மூவரும் காரைவிட்டு இறங்கினர்.
தங்களிடமிருந்த துப்பாக்கிகளைத் தயார் நிலையில் வைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்கள்.
உள்ளே…
மீனாட்சி மணப்பெண் கோலத்தில் அமர்ந்திருக்க, அவளருகில் பாண்டியனின் மகன் ரகுராம் அமர்ந்திருந்தான்.
மீனாவின் முகம் அழுது அழுது வீங்கிப் போயிருந்தது. அவள் கன்னத்தில் யாரோ பலமாக அறைந்த தழும்பு தெளிவாகத் தெரிந்தது.
ஒரு தூணில் நந்திதாவையும் யஷ்வியையும் கட்டி வைத்திருந்தார்கள்.
அவர்களைக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டித்தான் மீனாவை மணமேடையில் அமர வைத்திருந்தார்கள் என்பது புரிந்தது.
நந்திதாவின் தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்துகொண்டிருந்தது.
யஷ்வியின் கலைந்த தலைமுடியும், உதட்டோரம் காய்ந்து உறைந்திருந்த இரத்தமும் அவர்கள் அனுபவித்த சித்திரவதையைப் பறைசாற்றின.
அவர்களை அந்தக் கோலத்தில் பார்த்த மாத்திரத்தில், மூன்று ஆண்களின் ரத்தமும் கொதித்தது.
உள்ளே வந்தவர்களைக் கண்ட பாண்டியனின் அடியாட்கள் அவர்களைத் தாக்கப் பாய்ந்தார்கள். ஆனால், மூவரின் கைகளிலும் இருந்த துப்பாக்கிகளைப் பார்த்ததும் பயந்து அப்படியே நின்றுவிட்டார்கள்.
பாண்டியன் மட்டும் நக்கலாகச் சிரித்தான்.
“வாங்கடா வாங்க! இவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிச்சிட்டீங்க… பரவாயில்லையே! சரி… வந்ததும் வந்தீங்க, உங்க வீட்டுப் பொண்ணு கல்யாணத்தைப் பார்த்துட்டுப் போங்க!” என்று ஏளனமாகச் சொன்னான்.
மித்ரனின் கண்கள் கோபத்தில் சிவந்தன.
“கல்யாணம் பண்ண உன் மகன் உயிரோட இருந்தாதானேடா?” என்று உறுமியவன், அடுத்த நொடியே யாரும் எதிர்பார்க்காத வகையில் ரகுராமை நோக்கித் துப்பாக்கியை இயக்கினான்.
“டுமீல்!”
என்ற சத்தம் அந்த இடத்தையே அதிரவைத்தது.
அடுத்த கணமே, ரகுராமின் உயிர் பிரிந்து, ரத்த வெள்ளத்தில் பிணமாகச் சரிந்தான்.
ருத்ரனுக்கும் ஆரியனுக்கும் கூட இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. மித்ரன் இவ்வளவு வேகமாக முடிவெடுப்பான் என்று அவர்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
ரகுராம் ரத்த வெள்ளத்தில் சரிந்ததைக் கண்ட பாண்டியன் அலறினான்.
“டேய்! என் புள்ளையை என் கண்ணு முன்னாடியே கொன்னுட்டீங்களேடா! உங்க யாரையும் உயிரோட விடமாட்டேன்!” என்று வெறியோடு கத்திக்கொண்டு அவர்களைத் தாக்கப் பாய்ந்தான்.
அவனைத் தடுத்த ருத்ரன் ஆவேசமாகத் திருப்பித் தாக்கினான்.
ருத்ரன், ஆரியன், மித்ரன் மூவரும் சேர்ந்து பாண்டியனையும் அவனது அடியாட்களையும் அடித்துத் துவம்சம் செய்தார்கள்.
அடி வாங்கிக்கொண்டே பாண்டியன் தன் ஆட்களைப் பார்த்து,
“டேய்! அந்தப் பொண்ணுங்களைக் கொல்லுங்கடா!” என்று கத்தினான்.
உடனே அடியாட்கள் பெண்களை நோக்கி ஓட, ருத்ரனும் ஆரியனும் அவர்களைத் தடுத்து மோதினார்கள்.
அந்த நேரத்தில், ஒருவன் மீனாவை நோக்கிக் கத்தியுடன் பாய்ந்தான்.
ஆனால், மீனாவோ எதையும் உணராதவளாய் உறைந்து போயிருந்தாள்.
தன் அருகிலேயே நெற்றியில் குண்டு பாய்ந்து பிணமாகக் கிடந்த ரகுராமையும், பெருகி ஓடிய ரத்தத்தையும் பார்த்த அதிர்ச்சியில், அவளது கண்கள் நிலைகுத்திப் போயிருந்தன.
கத்தியுடன் ஒருவன் நெருங்குவதைக்கூட அறியாமல் சிலைபோல் அமர்ந்திருந்தாள்.
அதைக் கண்ட மித்ரன் மின்னல்போல் ஓடிச்சென்று அந்த ரவுடியை எட்டி உதைத்தான்.
அவன் தள்ளிப் போய் விழ, மீனாவின் கையைப் பிடித்துச் சுரீரென்று இழுத்தான்.
அவன் இழுத்த வேகத்தில் சுயநினைவு பெற்றவள் போல எழுந்த மீனாட்சி, எதிரே நின்ற மித்ரனைப் பார்த்தாள்.
அவளது கண்கள் கலங்கித் தவித்தன.
மித்ரனின் உறுதியான பிடிமானமும், அவனது பார்வையும் அவளுக்குள் ஒரு பாதுகாப்பு உணர்வை விதைத்தது.
அடுத்த நொடி, எதையும் யோசிக்காமல் அவள் மித்ரனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள்.
மித்ரனும் அவளைத் தன் அரவணைப்பிற்குள் இழுத்துக் கொண்டான்.
மித்ரன் அவ்வளவு ஆத்திரத்தில் ரகுராமைச் சுட்டதற்குக் காரணமே, அவன் மீனாவின் அருகில் அமர்ந்து அவளுக்குத் தாலி கட்ட முயன்றதுதான்.
அந்தக் கோபம்தான் அவனை எதைப் பற்றியும் யோசிக்க விடாமல் துப்பாக்கியை இயக்க வைத்தது.
ஆரியனும் ருத்ரனும் எஞ்சியிருந்தவர்களை அடக்கிக் கொண்டிருக்கும் போதே, போலீஸார் உள்ளே நுழைந்தனர்.
குற்றவாளிகளை போலீஸாரிடம் ஒப்படைத்துவிட்டு அவர்கள் திரும்பிப் பார்க்க, மித்ரனும் மீனாவும் ஒருவரை ஒருவர் தழுவியபடி அப்படியே நின்றுகொண்டிருந்தார்கள்.
அதைக் கண்ட ருத்ரனுக்கும் ஆரியனுக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை.
‘என்னடா இது?’ என்பது போல இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
யஷ்வியும் நந்திதாவும் தூணிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
காயங்களுடன் இருந்த யஷ்வி மெதுவாக வந்து மித்ரனின் தோளில் கை வைத்தாள்.
அந்த ஸ்பரிசத்தில்தான் மித்ரனுக்குச் சுற்றியிருந்தவர்கள் நினைவுக்கு வந்தது.
சட்டென்று மீனாவை விட்டு விலகித் தள்ளி நின்றான்.
தொடரும்…