❤️அத்தியாயம் (14)

அவர்கள் மூவரும் (மீனாட்சி, நந்திதா, யஷ்வி) தோட்டத்தில் அமர்ந்து கலகலப்பாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அந்தத் தருணத்தில், ஆரியனின் கார் வீட்டிற்குள் நுழைந்தது. காரிலிருந்து ஆரியன், ருத்ரன் மற்றும் மித்ரன் ஆகிய மூவரும் இறங்கினர்.

அவர்கள் வீட்டிற்குள் நுழைய முற்பட்டபோது, தோட்டத்திலிருந்து பலத்த சிரிப்புச் சத்தம் கேட்டது.

“யாருடா அது? இந்தச் சிரிப்புச் சத்தம் தெரு வரைக்கும் கேட்குதே!” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் மித்ரன்.

“தெரியலடா… வா, போய்ப் பார்ப்போம்.” என்றான் ருத்ரன்.

ஆர்வத்துடன் அவர்கள் இருவரும் தோட்டத்தை நோக்கி நடக்க, ஆரியனும் அவர்கள் பின்னால் சென்றான்.

தோட்டத்தில் அவர்களைக் கண்டதும் உற்சாகமான மீனாட்சி,

“அண்ணா!”

என்று ஓடி வந்து ஆரியனைக் கட்டியணைத்துக் கொண்டாள்.

அவனும் அவளை அன்புடன் அணைத்து,

“எப்போ வந்த மீனா?”

என்று வாஞ்சையுடன் கேட்டான்.

“நான் வந்து ஒரு மணி நேரம் ஆகுதுண்ணா.”

“சரி… எக்ஸாம் எல்லாம் எப்படிப் பண்ணிருக்க?”

என்று ஆரியன் கேட்டதும், அதுவரை உற்சாகமாக இருந்த மீனாட்சியின் முகம் சட்டென்று மாறியது.

திருதிருவென விழித்தவள், என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மெதுவாக நழுவி ருத்ரனிடம் சென்றாள்.

“அண்ணா! எனக்கு அமெரிக்காவிலிருந்து என்ன வாங்கிட்டு வந்தீங்க?”

என்று ஆவலுடன் கேட்டாள்.

“உனக்காக நிறைய வாங்கிட்டு வந்திருக்கேன். முதல்ல நீ எப்படி இருக்க?”

என்று ருத்ரன் கேட்க,

“ஏதோ இருக்கேன்… நீங்க இல்லாம இந்த வீட்ல இருக்கவே பிடிக்கல. அதான் ஹாஸ்டலுக்குப் போயிட்டேன்.”

என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள்.

அவளை மேலிருந்து கீழ்வரை ஒரு பார்வை பார்த்த ருத்ரன்,

“நீ சொல்றதெல்லாம் நம்புற மாதிரி இல்லையே! நீயாவா போன? இல்லை, உன்னோட அட்டகாசம் தாங்காம யாராவது அடிச்சு அனுப்புனாங்களா?”

என்று கிண்டலாகக் கேட்க, மீனாட்சி அதிர்ந்து போனாள்.

“ஐயோ அண்ணா! இந்த வீட்ல இருக்கவங்க சொல்ற கதையையெல்லாம் நம்பாதீங்க.”

என்று சமாளித்தாள்.

“சரி, அதை விடு… எதுக்காக மூணு பேரும் அப்படிச் சிரிச்சீங்க?”

என்று ருத்ரன் கேட்டான்.

நந்திதா மீனாட்சியைப் பார்த்துவிட்டு மீண்டும் சிரிக்கத் தொடங்கினாள்.

அங்கே நின்றிருந்த யஷ்வி, ஆரியன் வந்ததிலிருந்தே தலைகுனிந்தபடி நின்றிருந்தாள். அவள் நிமிர்ந்து பார்க்கவே இல்லை. ஆனால், ஆரியனின் கண்கள் மட்டும் அவளையே நிலைகுத்திப் பார்த்துக் கொண்டிருந்தன.

மித்ரன் விடாமல்,

“ஏன் சிரிச்சீங்கன்னு சொல்லவே இல்லையே?”

என்று நச்சரித்தான்.

“அது வந்து…”

என்று நந்திதா சொல்ல வர,

“அது நாங்க சும்மா ஒரு விஷயத்தைப் பேசி சிரிச்சிட்டு இருந்தோம். உங்களுக்கு இப்போ என்ன வேணும்?”

என்று மீனாட்சி இடையில் புகுந்தாள்.

“சும்மா சிரிக்கிறதுக்கு நீங்க என்ன பைத்தியமா?”

என்று ருத்ரன் வம்பிழுக்க,

“ஆமா… நாங்க பைத்தியம் தான்! உங்களுக்கு என்ன?”

என்று செல்லமாகக் கோபப்பட்டாள் மீனாட்சி.

“நீ பைத்தியம்னு எனக்குத் தெரியும்… ஆனா மத்த ரெண்டு பேரும் எதுக்குச் சிரிச்சாங்க?”

என்று ருத்ரன் மீண்டும் மடக்க,

மீனாட்சி அவனை முறைத்தாள்.

மித்ரன் விடாமல்,

“யாராவது உண்மையைச் சொல்லுங்களேன்…”

என்றான்.

பிறகு யஷ்வியைப் பார்த்து ருத்ரன்,

“ஏன்டி… நாங்க வந்ததுல இருந்து அந்த தரையில அப்படி என்னத்த தேடுற? ஏதாவது தங்கம், வைரம் கிடக்குதா?”

என்று வம்பிழுத்தான்.

உடனே மித்ரன்,

“ரொம்ப நேரமா குனிஞ்சே இருக்கா… ஒருவேளை கழுத்து சுளுக்கிடுச்சோ என்னவோ!”

என்று தன் பங்கிற்கு கொளுத்திப் போட்டான்.

அவள் மெதுவாகத் தலை தூக்கி இருவரையும் ஒரு பார்வை பார்த்தாள்.

“சரி சரி… கண்ணாலயே சுட்டுடாத… பயமா இருக்கு!”

என்று மித்ரன் சொல்லிச் சிரிக்க,

“இப்போ என்ன நடந்துச்சுன்னு யாராவது சொல்லப்போறீங்களா இல்லையா?”

என்று ருத்ரன் விடாமல் கேட்டான்.

“எனக்குத் தெரியாது…”

என்று முணுமுணுத்த யஷ்வி, தற்செயலாக ஆரியனைப் பார்த்தாள்.

ஆனால் அடுத்த நொடியே, சுடு தண்ணீர் பட்டது போல பார்வையைத் திருப்பிக் கொண்டு மீண்டும் தலை குனிந்தாள்.

அவள் தன்னைத் தவிர்ப்பது ஆரியனுக்குத் தெளிவாகப் புரிந்தது. வலித்தாலும், அவளது அந்தச் சின்னச் சின்ன முகபாவனைகள் அவனுக்குள் ஏதோ ஒரு இனிய சிலிர்ப்பை ஏற்படுத்தின.

“அக்கா ப்ளீஸ்… இவங்க சொல்ல மாட்டாங்க. நீயாவது சொல்லேன்…”

என்று மித்ரன் நந்திதாவிடம் கெஞ்சினான்.

நந்திதா சிரிப்பை அடக்க முடியாமல், நடந்த கதையை விலாவாரியாகச் சொல்லத் தொடங்கினாள்.

கதை முடியவும், அங்கே சிரிப்பு வெடித்தது.

மித்ரன் அப்படியே சாய்ந்து,

“அய்யய்யோ… முடியலடா!”

என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தான்.

“போதும்… நிறுத்துங்க! இதுல சிரிக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லை.”

என்று மீனாட்சி கடுகடுத்தாள்.

“டேய் மித்ரா… போதும்டா. அவள ரொம்ப வெறுப்பேத்தாத.”

என்று ருத்ரன் இழுத்தும், அவன் அடங்கவில்லை.

அப்போது மீனாட்சி கைகளைக் கட்டிக்கொண்டு,

“ரொம்பத் துள்ளாதீங்க மித்ரன் சார்… உங்களைப் பற்றின ‘அந்த’ பழைய ரகசியம் என்கிட்டயும் இருக்கு.”

என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தினாள்.

மித்ரனின் சிரிப்பு சட்டென்று நின்றது.

“என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?”

என்று கேட்டான்.

“ஏன் தெரியாது? காலேஜ் படிக்கிறப்போ உங்க ப்ரொஃபசருக்கே லவ் லெட்டர் கொடுத்ததும்… அதை அவங்க ஹஸ்பண்ட் பார்த்துட்டு காலேஜுக்கே வந்து உங்களை கவனிச்சதும்… ஊருக்கே தெரியுமே!”

என்று மீனாட்சி குறும்பாகச் சொன்னாள்.

அடுத்த நொடி…

மித்ரனின் முகம் பேயறைந்தது போல மாறியது.

அதிர்ச்சியில் உறைந்துபோய் மெதுவாக ருத்ரனைப் பார்த்தான்.

“டேய்… சத்தியமா நான் சொல்லலடா!”

என்று ருத்ரன் பதறிப்போய் கைகளை உயர்த்தினான்.

“நீ சொல்லாம வேற யாருக்குத் தெரியும்? எனக்குத் தெரிஞ்சு நீ ஒருத்தன் தான் அங்க இருந்த…”

என்று மித்ரன் புலம்பத் தொடங்க, அந்தச் சூழலே மீண்டும் கலகலப்பானது.

இத்தனை ரகளையையும் பார்த்துக்கொண்டிருந்த யஷ்வி, கடந்த இரண்டு நாட்களாக மனதில் இருந்த பாரத்தை மறந்துவிட்டு, முதன்முறையாக மனம் திறந்து வாய்விட்டுச் சிரித்தாள்.

அவள் சிரிக்கும் அந்த அழகை ஆரியன் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“இப்படிச் சிரிக்கும்போது அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள்…” என்று அவன் மனம் சொல்லியது.

ஆனால், அவள் கண்கள் ஆரியனின் கண்களைச் சந்தித்த அடுத்த நொடியே…

அந்தச் சிரிப்பு காணாமல் போனது.

சட்டென்று முகத்தை மாற்றிக்கொண்டு மீண்டும் மௌனமானாள்.

அவளது அந்தத் திடீர் மாற்றம், ஆரியனின் மனதில் ஒரு மெல்லிய வலியை விட்டுச் சென்றது.” 

அவள் சிரிப்பை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை, அந்த நொடியிலேயே ஆரியனின் மனதில் அமைதியாக வேரூன்றியது.”

தொடரும்…

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top