❤️அத்தியாயம் (15)

அனைவரின் சிரிப்புச் சத்தமும் அந்த இடத்தையே நிறைத்திருந்தது. அந்த ஆரவாரத்திற்கு நடுவே, மீனாட்சி சட்டென யஷ்வியைத் திரும்பிப் பார்த்தாள். அவள் கண்களில் ஒரு குறும்பு மின்னியது.

“நீங்களும் ரொம்ப சிரிக்காதீங்க யஷ்வி… உங்களைப் பற்றியும் எனக்கு ஒரு ரகசியம் தெரியும்,” என்றாள் மீனாட்சி.

யஷ்விக்கு இதயம் ஒரு கணம் திக் என்றது.

“என்னைப் பற்றி… உங்களுக்கு என்ன தெரியும்?” என்று மெல்லிய பதற்றத்துடன் கேட்டாள்.

“தெரியுமே… எல்லாத்தையும் இங்கேயே சொல்லவா?” என்று மீனாட்சி இழுக்க, யஷ்வி பதறிப்போய் ருத்ரனை ஒரு முறை முறைத்துவிட்டு, மீனாட்சியின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“ப்ளீஸ்… இப்போ எதுவும் சொல்லாதீங்க,” என்று கெஞ்சும் குரலில் வேண்டினாள்.

ஆனால் நந்திதாவின் ஆர்வம் தூண்டப்பட்டது.

“அப்படி என்ன விஷயம்? சொல்லுங்க மீனாட்சி!”

“இல்ல நந்திதாக்கா… நான் உங்களுக்கு அப்புறமா தனியா சொல்றேன்,” என்று யஷ்வி சொல்லியும், மீனாட்சி விடுவதாக இல்லை.

“என்னை எல்லாரும் சேர்ந்து கிண்டல் பண்ணீங்கள்ல… இப்போ இதையும் கேளுங்க. இவங்களுக்குக் காலேஜ் போகவே பயம். தனியா போகவே மாட்டாங்க. கூடவே இவங்களோட ‘பெரிய பாப்பா’ போயாகணும்.”

நந்திதா சிரிப்பை அடக்க முடியாமல் யஷ்வியைப் பார்க்க, யஷ்வி சங்கடத்தில் தலைகுனிந்தாள்.

அதுவரை வேறு எதிலோ கவனமாக இருந்த ஆரியன், முதல் முறையாக யஷ்வியைப் பற்றிய பேச்சைக் கேட்டு நிமிர்ந்து அமர்ந்தான். அவனது பார்வை இப்போது முழுவதுமாக அவள் மீதே நிலைத்திருந்தது.

மீனாட்சி தொடர்ந்தாள்.

“அது மட்டும் இல்ல… இவங்களுக்குக் காலேஜ்ல ஒரு ‘கிரஷ்’ இருந்தாராம். அவர் பேரு ரிச்சர்ட்!”

அந்தப் பெயரைக் கேட்ட அடுத்த நொடி, ஆரியனின் முகம் சட்டென இறுகியது.

“அவர்கிட்ட காதலைச் சொல்ல பயந்துக்கிட்டு, இவங்ககிட்ட லெட்டர் கொடுத்து அனுப்பியிருக்காங்க. இவங்க ரெண்டு பேரும் போய் அந்த லெட்டரைக் கொடுத்ததும், அவர், ‘சாரி… எனக்கு இதிலெல்லாம் இஷ்டம் இல்ல’ன்னு சொல்லிட்டு போயிட்டாராம். அப்புறம் என்ன… காலேஜ் முழுக்க இவங்க ரெண்டு பேரைப் பற்றிதான் கிசுகிசு!”

“இவங்களோட ‘Boyfriends’ எல்லாம் இவங்களைப் பார்த்தாலே ஓடுவாங்க!” என்று மீனாட்சி கிண்டலாகச் சிரித்தாள்.

“ஏன், எல்லாரும் இவங்களைப் பார்த்தா ஓடுவாங்க?” என்று நந்திதா இடையில் கேட்டாள்.

“பின்னே… இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து போய் லெட்டர் கொடுத்தா, அந்த ரிச்சர்ட் என்ன நினைப்பான்? இவங்க ரெண்டு பேரும் தன்னையே காதலிக்கிறதா நினைச்சு பயந்துட்டான்!”

அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். யஷ்வி மட்டும் சிலையாக உறைந்து நின்றாள்.

ஆனால் ஆரியன் சிரிக்கவில்லை. அவன் மனதிற்குள் ‘ரிச்சர்ட்… கிரஷ்…’ என்ற வார்த்தைகள் ஏதோ ஒரு பாரத்தைச் சுமத்தின.

மீனாட்சி மீண்டும் எதையோ சொல்லத் தொடங்கியபோது,

“போதும்!”

என்று இடி முழக்கம்போல் ஒலித்தது ஆரியனின் குரல்.

சிரிப்பலைகள் சட்டென அடங்கின. அந்த இடமே ஒரு கணம் நிசப்தமானது.

“இனிமே இதைப் பற்றி எதுவும் பேச வேண்டாம். எல்லாரும் உள்ளே போங்க.”

ஆரியனின் குரலில் இருந்த அதிகாரம் கலந்த கோபம் அங்கிருந்தவர்களை நடுங்கச் செய்தது.

யஷ்வி புரியாமல் அவனைப் பார்த்தாள்.

‘அவன் ஏன் இவ்வளவு கோபப்படுகிறான்?’

அவன் கண்களில் தெரிந்த அந்தத் தீவிரம் அவளுக்குள் புதிய பதற்றத்தை உண்டாக்கியது.

அனைவரும் மௌனமாக உள்ளே செல்லத் தொடங்கிய அந்தத் தருணத்தில், வாசலில் ஒரு கார் வந்து நின்றது.

அந்தக் காரிலிருந்து முதலில் ஜமுனா இறங்கினார். அவரைத் தொடர்ந்து அவரது கணவர் சங்கரும், மகள்கள் சுஜித்ரா மற்றும் தாரணியும் இறங்கினார்கள்.

அவர்களைக் கண்டதும் ஆரியன்,

“வாங்க அத்தை… வாங்க மாமா…”

என்று மரியாதையுடன் வரவேற்றான்.

“நல்லா இருக்கீங்களா மாப்பிள்ளை?” என்று சங்கர் நலம் விசாரிக்க,

“நல்லா இருக்கேன் மாமா,” என்று இயல்பாகப் பதிலளித்தான் ஆரியன்.

அப்போது ஜமுனா, ருத்ரனைப் பார்த்து,

“எப்ப மாப்பிள்ளை வந்தீங்க?”

என்று கேட்டார்.

“வந்து ரெண்டு மூணு நாள் ஆகுது அத்தை… சரி வாங்க, எல்லாரும் உள்ளே போலாம்,”

என்று ருத்ரன் அவர்களை மரியாதையுடன் உள்ளே அழைத்தான்.

அனைவரும் வீட்டிற்குள் சென்றனர். ஆரியன் மட்டும் அங்கேயே நின்றான்.

அவன் அருகே வந்த சுஜித்ரா,

“எப்படி மாமா இருக்கீங்க?”

என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

“நல்லா இருக்கேன் சுஜி… நீ எப்படி இருக்க?”

ஆரியனின் பதிலில் ஒருவித விலகல் தெரிந்தாலும், சுஜித்ராவிற்கு அந்தச் சில வார்த்தைகளே போதுமானதாக இருந்தது.

“நல்லா இருக்கேன் மாமா,” என்று இதழ் விரியச் சிரித்தாள்.

“சரி வா… உள்ளே போலாம்,” என்று கூறிக்கொண்டு ஆரியன் நடந்தான்.

அவர்களுக்கு சற்று முன்னால் சென்றுகொண்டிருந்த யஷ்வி, திடீரென நிலைதடுமாறி கீழே விழப் போனாள்.

அதைக் கண்ட ஆரியன், மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று அவளைத் தாங்கிப் பிடித்தான்.

அவனது கரங்களின் அணைப்பில் யஷ்வி நிலைகொண்டாள்.

“பார்த்துப் போக மாட்டியா?”

அவன் கேட்ட குரலில் அக்கறையைவிட கோபமே அதிகமாக இருந்தது.

யஷ்வி பேச்சற்று அவனைப் பார்த்தாள்.

அந்தத் திகைப்பிலிருந்து அவளை மீட்கும் விதமாக, அவள் கையை இறுகப் பற்றிய ஆரியன்,

“வா…”

என்று அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

இதையெல்லாம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த சுஜித்ராவின் முகம் கோபத்தில் சிவந்தது.

ஆரியனுடன் பேசிக்கொண்டே உள்ளே செல்ல வேண்டும் என்று அவள் போட்டிருந்த கணக்குகளை, யஷ்வியின் கையைப் பிடித்தபடி அவன் சென்ற காட்சி சிதைத்துவிட்டது.

உள்ளே சோபாவில் அனைவரும் அமர்ந்ததும், ஜமுனா மெல்லப் பேச்சைத் தொடங்கினார்.

“என்னப்பா மாப்பிள்ளை… ஊருக்கு வந்ததை ஏன் எங்ககிட்ட சொல்லல?”

அதற்கு வீரன் சக்கரவர்த்தி,

“இல்லம்மா… தம்பி வந்து இப்போதான் ரெண்டு நாள் ஆகுது. நிதானமா சொல்லலாம்னு இருந்தேன்,”

என்றார்.

“சரி… இப்போ வந்துட்டாரே… இனி கல்யாணத்தைப் பற்றிப் பேசலாம்தானே?”

என்று ஜமுனா நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

“இல்லம்மா… அவன் இப்போதைக்கு பிசினஸ்ல கவனம் செலுத்தணும்னு சொல்றான்,”

என்று சக்கரவர்த்தி இழுக்க, ஜமுனாவின் முகம் சட்டென மாறியது.

“என்னப்பா இது? முன்னாடி படிக்கணும்னு சொன்னீங்க… இப்போ பிசினஸ்னு சொல்றீங்க. உங்களுக்குப் பிரச்சனை இல்லை; ரெண்டு பசங்க இருக்காங்க. ஆனா எனக்கு ரெண்டு பொண்ணுங்க. வெளியே போனா எல்லாரும் கல்யாணத்தைப் பற்றிதான் கேக்குறாங்க. நான் என்ன பதில் சொல்றது? கல்யாணத்தை முடிச்சுட்டு அப்புறமா பிசினஸைக் கவனிக்கட்டுமே.”

என்று சற்றே அதிகாரத் தொனியில் பேசினார்.

ஜமுனாவின் பேச்சில் இருந்த அதட்டல் அங்கிருந்தவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அனைவரும் மௌனமாக இருந்தனர்.

சக்கரவர்த்தியின் குடும்பம் அன்பிற்கும் பண்பிற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ஆனால் ஜமுனாவின் குடும்பமோ பணத்தையும் அந்தஸ்தையும் மட்டுமே பிரதானமாகக் கருதுபவர்கள்.

இருப்பினும், சக்கரவர்த்திக்கு மகள் இல்லாததால், தன் தம்பியின் மகள்களைத் தன் சொந்தப் பிள்ளைகளாகவே பார்த்தார்.

அந்த ஒரே காரணத்திற்காக, தன் பேரன்களுக்கு அவர்களைத் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார்.

பெரியவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு மற்றவர்கள் சம்மதித்திருந்தாலும், ருத்ரனுக்கும் ஆரியனுக்கும் இதில் துளியும் விருப்பமில்லை என்பதே கசப்பான உண்மை.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top