❤️அத்தியாயம் (16)

வீரன் சக்கரவர்த்தி ஜமுனாவைத் தீர்க்கமாகப் பார்த்து, “சரிம்மா… கோவில் திருவிழா வருது. அது முடிந்த கையோட நிச்சயதார்த்தத்தை வச்சுக்கலாம்,” என்றார்.

அவர் சொன்ன அந்த வார்த்தை, ஜமுனாவிற்கும் அவரது மகள்களுக்கும் வானத்தில் மிதப்பது போன்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது. சுஜித்ராவும் தாரணியும் ஆசையுடன் ஆரியனையும் ருத்ரனையும் திரும்பிப் பார்த்தனர்.

ஆனால், அந்தப் பார்வையில் இருந்த எதிர்பார்ப்பு இருவரிடமும் எடுபடவில்லை.

ருத்ரனும் ஆரியனும் அவர்களை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல், வேறு எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். இருவரின் மனதிலும் ஒரே எண்ணம்தான் ஓடிக்கொண்டிருந்தது.

‘இந்தக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும்!’

“சரி… நாளையிலிருந்து கோவில் வேலை ஆரம்பிச்சிடும். எல்லாரும் ஒண்ணா சேர்ந்து வேலையைப் பாருங்க,” என்று வீரன் தாத்தா உத்தரவிட, அனைவரும் “சரி” என்று தலையசைத்துவிட்டு, தத்தமது அறைகளுக்குக் கலைந்து சென்றனர்.

ருத்ரனின் அறையில்…

சிறிது நேரத்தில் கதவு தட்டப்பட, மித்ரன் உள்ளே வந்தான்.

“வாடா,” என்றான் ருத்ரன் சோர்வான குரலில்.

“என்னடா நடக்குது இங்கே? நான் வேணா அம்மாவுக்குப் போன் பண்ணி வரச் சொல்லவா? அவங்க வந்து பேசினாத்தான் சரியா வரும்,” என்று பதற்றத்துடன் கேட்டான் மித்ரன்.

ருத்ரன் தலையசைத்து மறுத்தான்.

“இப்ப வேண்டாம்டா… இப்போ அம்மா வந்து பேசினா, என் அத்தை இன்னும் அதிகமாப் பிடிவாதம் பிடிப்பாங்க. முதல்ல நானே வீட்டில் பேசிப் பார்க்கிறேன். அதுக்கப்புறம் அம்மாவை வரச்சொல்லலாம்.”

“இல்லடா… நீ சொல்றதைவிட பெரியவங்க சொன்னாத்தான் அதுக்கு ஒரு மதிப்பு இருக்கும்,” என்று மித்ரன் வற்புறுத்தினான்.

ருத்ரன் மெலிதாகச் சிரித்தான்.

“ஏய்… எனக்குத் தெரியும்டா என்ன பண்ணணும்னு. நீ கவலைப்படாத. நான் உன் அக்காவை விட்டுட்டு வேறொருத்தியைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு உனக்கே தெரியும். முதல்லயே எனக்கு இதுல விருப்பம் இல்லை. இப்போ எனக்குக் கல்யாணமே முடிஞ்சுடுச்சு! அப்புறம் எப்படி இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிப்பேன்?”

மித்ரன் ஒருவாறு சமாதானமடைந்து அங்கிருந்து சென்றான்.

அவன் சென்றதும், ருத்ரன் தனக்குள் நினைத்துக்கொண்டான்.

‘அத்தையைச் சமாளிக்கிறதைவிட நந்திதாவைச் சமாளிக்கிறதுதான் கஷ்டம் போல… அவ புருஷனுக்கே இன்னொரு கல்யாணம் பண்ணப் போறாங்க. ஆனா அவ எதுவுமே நடக்காத மாதிரி அமைதியா நிக்கிறாளே!’

 

மறுபுறம், ஆரியன் தன் அறையில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். அவனுக்கு ஆரம்பத்திலிருந்தே இந்தக் கல்யாணத்தில் துளியும் ஈடுபாடில்லை. ஆனால், இப்போது ‘கல்யாணம்’ என்றாலே அவன் கண்முன்னே வந்து நிற்பது யஷ்வியின் முகம்தான்.

“இது என்ன உணர்வு?”

அவனுக்கே அது புதிதாக இருந்தது.

ஒரு பெண்ணைப் பார்த்த உடனேயே காதல் வந்துவிடுமா?

முதல் முறை பார்த்தபோது அவளை அடித்தான். இரண்டாவது முறை, அவளே ஓடி வந்து அவனைக் கட்டிப்பிடித்தாள். அந்தத் தொடுதலின் ஈரம் இன்னும் அவன் மனதை விட்டு அகலவில்லை.

“இங்கே இருந்தா இதே நினைப்புதான் வரும்… பேசாம வெளியே போயிட்டு வரலாம்,” என்று கிளம்பினான்.

ஆரியனுக்குப் பெண்கள் ஒன்றும் புதிதல்ல. ஆனால், யஷ்வி மட்டும் அவன் இதயத்தில் ஏதோ ஒரு மாயத்தைச் செய்துவிட்டிருந்தாள்.

 

அடுத்த நாள் விடிந்ததும், “அர்ஜென்ட் வேலை” என்ற காரணத்தைக் கூறி, ஆரியன் ருத்ரனையும் மித்ரனையும் அழைத்துக்கொண்டு மும்பைக்குக் கிளம்பினான்.

“திருவிழா ஆரம்பிக்கிறதுக்குள்ள கண்டிப்பா வந்திடுவோம்,” என்று சொல்லிவிட்டு அவர்கள் விடைபெற்றனர்.

ருத்ரனுக்குப் போகும் முன் நந்திதாவிடம் பேசிவிட வேண்டும் என்ற துடிப்பு இருந்தது. ஆனால், ஆரியனின் அவசரமும் சூழ்நிலையும் அதற்கு இடம் தராததால், ‘சரி… வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்,’ என்று கனத்த மனதுடன் கிளம்பினான்.

ஆண்கள் மூவரும் சென்ற பிறகு, வீட்டில் திருவிழா களைகட்டத் தொடங்கியது.

வீரன் சக்கரவர்த்தி அந்த ஊரின் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஒவ்வொரு வேலையும் அவரது கண் அசைவிலேயே நடக்க வேண்டியிருந்தது. வீட்டின் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வேலையில் இறங்கினர்.

ஆனால், சுஜித்ராவும் தாரணியும் மட்டும் தங்கள் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.

அப்போது உள்ளே வந்த ஜமுனா, அவர்களைப் பார்த்ததும் பொரிந்து தள்ளினார்.

“என்னடி இது? ஊரே திருவிழா வேலைல கிடக்கு… நீங்க ரெண்டு பேரும் இப்படி ரூமுக்குள்ளேயே உட்கார்ந்திருக்கீங்க? போய் நாலு பேருக்கு முன்னாடி நின்னு ஏதாவது வேலை செய்யுங்கடி!”

சுஜித்ரா, நகத்தில் பூசியிருந்த சிவப்பு நெயிலைப் பார்த்தபடி அலட்சியமாகச் சொன்னாள்.

“வேலை செய்யத்தான் இந்த வீட்டில் வேலைக்காரங்கன்னு பட்டாளமே இருக்கே… அப்புறம் நாங்க எதுக்கு?”

ஜமுனா பற்களைக் கடித்தபடி அருகில் வந்தார்.

“அடி அறிவு கெட்டவங்களே! வேலைக்காரங்க எத்தனை பேர் இருந்தாலும், நீங்க முன்னாடி நின்னு நாலு வேலை செஞ்சாதான் இந்த வீட்டில் இருக்கிறவங்களுக்கு உங்க மேல நல்ல அபிப்பிராயம் வரும். அப்பதான் சீக்கிரம் உங்க கழுத்துல தாலி ஏறும்!”

அதற்கு தாரணி முகத்தைச் சுளித்துக்கொண்டு,

“யாரோ நாலு பேருக்காக எங்களால குனிஞ்சு நிமிந்து வேலை செய்ய முடியாதும்மா,” என்றாள் கறாராக.

ஜமுனாவுக்கு எரிச்சல் உச்சத்தை எட்டியது.

“சரிடி… உருப்படியா வேலை செய்யத் துப்பில்லனாலும் பரவாயில்லை. அட்லீஸ்ட் வேலை செய்யற மாதிரியாவது நடிங்கடி!”

சுஜித்ரா கிண்டலாகச் சிரித்தாள்.

“நடிக்கிறதுக்கு அங்க ஆரியனும் ருத்ரனும் இருந்தாலாவது ஒரு நியாயம் இருக்கு. அவங்களே மும்பைக்குப் போயிட்டாங்க. அப்புறம் நாங்க யாருக்காக மெனக்கெட்டு நடிக்கணும்? விடுங்கம்மா!”

“ஐயோ கடவுளே… உங்க ரெண்டு பேரையும் வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேனோ?” என்று தலையில் அடித்துக்கொண்ட ஜமுனா, மெல்லக் குரலைத் தாழ்த்தி,

“அந்தப் புதுசா வந்திருக்காங்களே… அவங்களைப் பாருங்க. எப்படி ஓடி ஓடி வேலை செய்றாங்க தெரியுமா? அவங்ககிட்ட இருக்கிற துறுதுறுப்புல பாதியாவது உங்களுக்கு இருக்கா?” என்று ஒப்பிட்டுப் பேசினார்.

அந்த ‘புது வரவு’ பற்றிய பேச்சு வந்ததும், சுஜித்ராவும் தாரணியும் முகம் சுளித்தனர்.

“அம்மா! அந்தப் பொண்ணுங்களைப் பத்தி எங்ககிட்ட பேசாதீங்க. அவங்களைப் பார்த்தாலே எங்களுக்குப் பிடிக்கல. இந்த வீட்டில் இருக்கிறவங்க என்னவோ, அவங்களுக்குத்தான் இந்த வீட்டுப் பட்டத்து மருமகள் பட்டம் கிடைக்கப் போற மாதிரி தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆடுறாங்க!”

சுஜித்ரா கோபத்தில் கண்கள் சிவக்கத் தொடர்ந்தாள்.

“அதுலயும் அந்த மீனாட்சி… அவளுக்கு என்னதான் ஆச்சோ? எங்களைக் கண்டுக்கிறதே இல்லை. எப்பப் பார்த்தாலும் அந்தப் புதுசா வந்தவங்களுக்குப் பின்னாடியே சுத்துறா. இந்தக் கல்யாணம் மட்டும் முடியட்டும். அதுக்கப்புறம் இந்த வீட்டில் இருக்கிறவங்களுக்கு ஒவ்வொருத்தருக்கும் இருக்கு கவனிப்பு!” என்று மூச்சிரைக்கக் கூறினாள்.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top