ருத்ரன் வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் உருண்டோடிவிட்டன. அந்த வீட்டிலிருந்தவர்கள் நந்திதாவிடமும், யஷ்வியிடமும் காட்டிய அன்பு, நந்திதாவின் மனக்காயங்களுக்கு ஒரு மருந்தாக இருந்தது.
நந்திதாவின் வாழ்வில் நடந்த துயரங்கள் — திருமணம் நின்றது முதல் தந்தை மறைந்தது வரை — அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
ஆனால், யாரும் அறியாத ஒரு உண்மை… அவளது புடவைக்குள் மறைந்திருக்கும் அந்த மஞ்சள் கயிறு!
ருத்ரன் அதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. ஒருவேளை அண்ணன் வந்த பிறகு சொல்லலாம் என்று அவன் காத்திருக்கக்கூடும்.
அன்று மாலை, தோட்டத்தில் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, ருத்ரன் அங்கே வந்தான்.
“அப்பா… அண்ணா எப்போ வராரு?” என்று அவன் கேட்க,
“இன்னும் இரண்டு நாட்களில் வந்திடுவார்பா,” என்றார் கதிர்வேல்.
தன் நண்பனைப் பார்க்க ருத்ரனும் மித்ரனும் கிளம்ப, வழக்கம் போலத் தானும் வருவதாக அடம் பிடித்து யஷ்வியும் அவர்களுடன் ஒட்டிக்கொண்டாள்.
அதே நேரத்தில்…
மதுரையிலிருந்து சில மைல் தொலைவில் ஒரு சொகுசு காரில் பயணம் செய்து கொண்டிருந்தான் ஆரியன்.
அவனது அலைபேசி ஒலித்தது. அழைத்தது அவன் நண்பன் பிரவீன்.
“டேய் மச்சான்… இன்னைக்கு ரீனா வர்றதா இருந்தா இல்ல? அவ கார் பாதியிலேயே பிரேக் டவுன் ஆயிடுச்சாம். கொஞ்சம் அவளைப் பிக்-அப் பண்ணிட்டு வரியா?” என்றான்.
ஆரியனின் முகம் சுளித்தது.
“நானா? நான் ஏன் அவளைத் தேடிப் போகணும்?” என்றான் தனது வழக்கமான திமிருடன்.
“டேய்… அவ உன்னைத் தேடித்தான் வந்துட்டு இருக்கா. வர்ற வழியில்தான் பிரச்சனை. கொஞ்சம் போய்க் கூட்டிட்டு வாடா. நானும் மத்தவங்களும் ரிசார்ட்டுக்கு வந்துடுறோம்,” என்று நண்பன் கெஞ்ச,
வேறு வழியின்றி சம்மதித்தான் ஆரியன்.
யார் இந்த ரீனா?
ஆரியனின் பிசினஸ் பார்ட்னரான கரனின் தங்கை.
ஒரு பிசினஸ் பார்ட்டியில் ஆரியனைக் கண்ட அடுத்த நொடியே அவன் மீது ஒரு ஈர்ப்பு அவளுக்கு வந்துவிட்டது.
மற்ற பெண்களைப் போல மறைமுகமாக இல்லாமல், நேரடியாக ஆரியனிடமே சென்று,
“நான் உங்களை லவ் பண்றேன்,” என்று சொன்னவள்.
காதலில் நம்பிக்கையற்ற ஆரியன் அதை மறுத்தபோது,
“அப்படின்னா நாம டேட்டிங் பண்ணலாம்,” என்று மிகத் தெளிவாகப் பேசினாள் ரீனா.
அவளது அந்தத் துணிச்சலான பேச்சு ஆரியனுக்குப் பிடித்துப் போனது.
அந்த டேட்டிங்கிற்காகத்தான் இன்று ரீனா மதுரைக்கு வருகிறாள்.
யஷ்வி ருத்ரனை ஏறிட்டுப் பார்த்தாள்.
“ருத்ரா… நந்திதா அக்கா விஷயத்தை எப்பத்தான் சொல்லப் போற?”
“சொல்லணும் டி… ஆனா அண்ணா வந்த பிறகு சொன்னாத்தான் அது சரியா இருக்கும்,” என்றான் ருத்ரன் உறுதியான குரலில்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, சேர வேண்டிய இடமும் வந்தது.
மித்ரன் வண்டியை நிறுத்திவிட்டு யஷ்வியைப் பார்த்தான்.
“என்னடி… நீயும் உள்ள வர்றியா, இல்ல வெளியவே நிக்கிறியா?”
“நீங்க போயிட்டு வாங்க… நான் இங்கேயே இருக்கேன்,” என்றாள் யஷ்வி.
“சரி… கவனமா இரு,” என்று சொல்லிவிட்டு ருத்ரனும் மித்ரனும் உள்ளே சென்றார்கள்.
அவர்கள் சென்றதும், அங்கிருந்த பெரிய மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்றாள் யஷ்வி.
அவளுக்குச் சற்றுத் தள்ளி இன்னொரு பெண்ணும் நின்றுகொண்டிருந்தாள்.
இருவரும் எதேச்சையாக ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.
அந்தப் பெண் தன் அலைபேசியில் மும்முரமாக இருந்தாள்.
சிறிது நேரத்தில் அவளுக்கு ஒரு அழைப்பு வர, சற்றுத் தள்ளிச் சென்று பேசத் தொடங்கினாள்.
அப்போது, ஒரு கார் வந்து யஷ்வியின் அருகே நின்றது.
கார் கண்ணாடி மெதுவாகக் கீழே இறங்கியது. உள்ளே, ஓட்டுநர் இருக்கையில் இருந்தது ஆரியன்.
அவன் கண்கள் சிவந்து இருந்தன. போதை அவனது நிதானத்தைச் சிதைத்திருந்தது. யஷ்வியை ஏறிட்டுப் பார்த்தவன்,
“வா…” என்றான் அதிகாரமாக.
ஆரியனின் அந்தப் பார்வையும் அழைப்பும் யஷ்விக்கு அருவருப்பைத் தந்தது.
முகம் சுளித்தவள், பதில் எதுவும் சொல்லாமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.
அவள் தன்னை அலட்சியப்படுத்தியதும் ஆரியனின் கோபம் தலைக்கேறியது.
சட்டென்று காரிலிருந்து இறங்கியவன், அவளருகே வந்து கர்ஜித்தான்.
“ஏய்! காது கேக்கலையா? ஏறச் சொன்னா ஏறு!”
யஷ்வி அவனைப் பொறி பறக்கப் பார்த்தாள்.
“உனக்கென்ன பைத்தியமா?” என்று சீறிவிட்டு அங்கிருந்து நகர முயன்றாள்.
அவள் தப்பிச் செல்லும் முன், ஆரியன் பாய்ந்து வந்து அவள் மணிக்கட்டைப் பிடித்து இழுத்தான்.
“வாடி… உள்ள!”
அவன் தொட்ட இடமெல்லாம் நெருப்பாகச் சுட்டது யஷ்விக்கு.
“சீ… கையை விடுடா, பொறுக்கி!” என்று அருவருப்புடன் கத்தினாள்.
‘பொறுக்கி’ என்ற அந்த ஒற்றை வார்த்தை, அவன் போதை மூளைக்குள் அமிலமாக இறங்கியது.
கட்டுப்பாட்டை இழந்தவன், ஓங்கி அவள் கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டான்.
அந்த வேகத்தில் நிலைதடுமாறிய யஷ்வி கீழே விழுந்தாள்.
தரையில் விழுந்து கிடந்த அவளை கேவலமாகப் பார்த்தவன்,
“ஏய்… அலையுற நாயே! என்னைப் பார்த்துப் பொறுக்கின்னு சொல்றியா?” என்று தகாத வார்த்தைகளால் அவளை அவமதித்தான்.
அந்த வார்த்தைகள், அவள் கன்னத்தில் விழுந்த அறையைவிட அவளது சுயமரியாதையை அதிகமாகக் காயப்படுத்தின.
அவளது கண்கள் குளமாகின.
அப்போது, பின்னால் இருந்து ஓடி வந்த ஒரு பெண் ஆரியனின் கையைப் பற்றினாள்.
“என்ன பண்றீங்க நீங்க?” என்று பதறினாள்.
ஆரியன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.
“யார் நீ?” என்று கேட்டான்.
“ஆரியன்… நான் ரீனா!” என்றாள் அந்தப் பெண் படபடப்புடன்.
ஒரு கணம் அவளையும், கீழே விழுந்து கிடந்த யஷ்வியையும் மாறி மாறிப் பார்த்தான் ஆரியன்.
அளவுக்கு அதிகமான போதையில் இருந்ததால், ஒரே ஒரு முறை மட்டுமே பார்த்திருந்த ரீனாவின் முகம் அவனுக்கு தெளிவாக நினைவில் இல்லை.
மேலும், ரீனா அணிந்திருந்த அதே நிறத்திலும் வடிவத்திலும் இருந்த உடையை யஷ்வியும் அணிந்திருந்தாள்.
அந்தப் போதையிலும் குழப்பத்திலும், யஷ்வியை ரீனா என்று நினைத்தே இவ்வளவு ரகளையைச் செய்துவிட்டான்.
உண்மை புரிந்ததும் ஒரு கணம் திகைத்தவன், எதையும் வெளிக்காட்டாமல் ரீனாவைப் பார்த்து,
“சரி… வா, போகலாம்.” என்று மட்டும் சொல்லிவிட்டு காரில் ஏறினான்.
ரீனா மனமுடைந்து, யஷ்வியின் அருகில் வந்து அவளைத் தாங்கிப் பிடித்தாள்.
“சாரி… ரொம்ப சாரி…” என்று மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டாள்.
யஷ்வி எரியும் விழிகளுடன் ஆரியனைப் பார்த்தாள்.
காருக்குள் இருந்த ஆரியன் எரிச்சலுடன்,
“நீ வர்றியா இல்ல நான் கிளம்பவா?” என்று கத்தினான்.
வேறு வழியில்லாமல், ரீனா அவசரமாகக் காரில் ஏறிக்கொண்டாள்.
கார் ஆக்ரோஷமாகச் சீறிப்பாய்ந்து அங்கிருந்து புறப்பட்டது.
அந்தக் கார் மறைந்த திசையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த யஷ்விக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
அவளது வாழ்க்கையில் இதுவரை யாரும் அவளை இவ்வளவு கேவலமாகப் பேசியதுமில்லை; கை நீட்டி அடித்ததுமில்லை.
அந்த ஒரு கணத்தில், யஷ்வியின் மனம் சுக்குநூறாக உடைந்து சிதறியிருந்தது.
தொடரும்…