❤️அத்தியாயம் (7)

மூர்த்தி மறைந்து எட்டு நாட்கள் கடந்திருந்தன.

அந்த வீட்டின் தூணே சாய்ந்துவிட்ட துக்கத்தில் இருந்த அந்தக் குடும்பத்திற்கு, எட்டாம் நாள் காரியத்திற்காக வந்தவர்களின் பேச்சு ஆறுதலாக இல்லை.

வந்தவர்கள், காரியத்தைப் பற்றிப் பேசுவதைவிட, ஐசியூவில் நடந்த அந்தத் திருமணத்தைப் பற்றித்தான் கிசுகிசுத்துக்கொண்டிருந்தார்கள்.

அந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவி, பாண்டியனின் காதுகளையும் எட்டியது.

ரகுராம் ஆத்திரத்தில் கொதித்தபடி வீட்டிற்குள் நுழைந்தான்.

“என்னமோ பெரிய மயிறு மாதிரி அன்னைக்குச் சவால் விட்டீங்களேப்பா… இப்போ என்ன ஆச்சு? அவன் தாலி கட்டிட்டுப் போயிட்டான்!”

என்று தன் தந்தையையே சாடினான்.

பாண்டியன் தளர்ந்து போயிருந்தார்.

அவர் போட்டிருந்த எல்லாக் கணக்குகளும், மித்ரன் எடுத்த அந்த ஒரு முடிவால் தலைகீழாக மாறிவிட்டன.

ஆனால், அந்தத் தளர்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

அது சிறிது சிறிதாகக் கொடூரமான பழிவாங்கும் எண்ணமாக மாறியது.

தன் மகன் தன்னை இழிவாகப் பேசியதற்குக் காரணமான மூர்த்தியின் குடும்பத்தை அழிக்க வேண்டும் என்ற வெறி அவரது மனதில் வேரூன்றியது.

இங்கே…

மித்ரனின் வீட்டில் காரியங்கள் அனைத்தும் முடிந்து, உறவினர்கள் ஒவ்வொருவராகக் கிளம்பிவிட்டனர்.

ஹால் முழுவதும் ஒரு கனத்த அமைதி நிலவியது.

அந்த அமைதியைக் கலைத்தபடி ருத்ரன் மெதுவாகப் பேச ஆரம்பித்தான்.

“டேய் மித்ரன்… நாம இங்க வந்து ரெண்டு வாரம் ஆச்சு. அண்ணாகிட்ட இருந்து போன் வந்துகிட்டே இருக்கு. நான் மதுரைக்குப் போகணும்.”

காயத்ரி வருத்தத்துடன்,

“எங்களால உங்களுக்கு வீண் சிரமம் தம்பி…”

என்றார்.

உடனே ருத்ரன் தலையசைத்தான்.

“அப்படியெல்லாம் சொல்லாதீங்க ஆன்ட்டி.”

மித்ரன்,

“சரிடா… நீ கிளம்பு.”

என்று சொல்ல, அவனை இடைமறித்த ருத்ரன்,

“நான் மட்டும் கிளம்பறதாச் சொல்லல மித்ரன்… நாம எல்லாரும் மதுரைக்குப் போகலாம்னுதான் சொல்றேன்.”

என்றான்.

அதைக் கேட்ட காயத்ரி மெதுவாக மறுத்தார்.

“இல்ல தம்பி… இப்போதைக்கு நான் எங்கேயும் வர்ற சூழ்நிலையில இல்லை. இன்னும் ஒரு மாசம் போகட்டும். நானே உங்க வீட்டுக்கு வந்து மத்த விஷயங்களைப் பேசுறேன்.”

என்றார் உறுதியாக.

ருத்ரன் சில நொடிகள் அமைதியாக யோசித்துவிட்டு,

“சரி ஆன்ட்டி… ஆனா, நந்திதாவை இப்போ நான் என்கூட கூட்டிட்டுப் போறேன்.”

என்றான்.

அந்த வார்த்தை அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ருத்ரன் தொடர்ந்து,

“இந்தக் கல்யாண விஷயம் ஊருக்கே தெரிஞ்சுடுச்சு. பாண்டியன் சும்மா இருக்க மாட்டான். நந்திதா இங்க இருந்தா அவங்க வந்து ஏதாவது பிரச்சினை பண்ணுவாங்க. அதுக்கு முன்னாடி அவ எங்க வீட்டுக்கு வந்து கொஞ்ச நாள் இருக்கட்டும். அதுக்கப்புறம், முறைப்படி எங்க வீட்டுல எல்லார்கிட்டயும் பேசி, சம்மதம் வாங்குறேன்.”

என்றான்.

ருத்ரனின் பேச்சில் இருந்த நியாயம் காயத்ரிக்குப் புரிந்தது.

“சரி தம்பி… அவ வர்றதுதான் நல்லது.”

என்று சம்மதித்தார்.

ஆனால், நந்திதா உறுதியாக மறுத்தாள்.

“நான் வரமாட்டேன்… அம்மாவைத் தனியா விட்டுட்டு எப்படி வருவேன்?”

என்று கேட்டாள்.

அதைக் கேட்ட காயத்ரிக்குக் கோபம் வந்தது.

“இப்போ என்னடி வேணும் உனக்கு? உங்க அப்பா போன மாதிரி நானும் போய்ச் சேர்ந்துரவா? அப்போதான் உனக்கு நிம்மதியா?”

என்று ஆவேசமாகக் கேட்டார்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட நந்திதா அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

“அம்மா… ஏன்மா இப்படிப் பேசுறீங்க?”

என்று அழுதாள்.

“பின்ன என்னடி? அந்தப் பாண்டியன் குடும்பம் வந்து இங்க வம்பு பண்ணா, நான் ஒருத்தி எப்படிச் சமாளிப்பேன்? நீ ருத்ரன் கூடப் போறதுதான் எல்லாருக்கும் பாதுகாப்பு.”

என்று உறுதியாகக் கூறினார்.

தன்னால் மீண்டும் தன் தாய்க்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று நினைத்த நந்திதா, வேறு வழியின்றி அமைதியாகச் சம்மதித்தாள்.

மித்ரன் இல்லாமல் நந்திதா மட்டும் மதுரைக்குச் செல்வது சரியாக இருக்காது என்று கருதிய காயத்ரி, தன் மகனையும் அவர்களுடன் அனுப்பி வைத்தார்.

மதுரையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினார்கள்.

கார் சீரான வேகத்தில் மதுரையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.

ஸ்டீயரிங்கைப் பிடித்தபடி சாலையில் பார்வையைப் பதித்திருந்த ருத்ரனின் முகம் ஏதோ ஆழமான சிந்தனையில் மூழ்கியிருந்தது.

அவனருகே அமர்ந்திருந்த மித்ரனும் அமைதியாக இருந்தான்.

பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த யஷ்வி, அருகில் இருந்த நந்திதாவை அவ்வப்போது கவலையுடன் பார்த்துக்கொண்டே வந்தாள்.

ஆனால், நந்திதாவின் பார்வை முழுவதும் கார் ஜன்னலுக்கு வெளியே ஓடிக்கொண்டிருந்த மரங்களின் மீதே இருந்தது.

வாழ்க்கை இப்படி ஒரே நொடியில் தலைகீழாக மாறிவிடும் என்று அவள் ஒருநாளும் நினைத்ததில்லை.

தந்தையை இழந்த துயரம் இன்னும் நெஞ்சைவிட்டு அகலவில்லை.

அதற்குள் யாருடைய விருப்பமும் இல்லாமல் நடந்த அந்தத் திருமணம்…

எதிர்காலம் என்னவாகப் போகிறது என்ற பயம்…

அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து அவள் மனதை அழுத்திக்கொண்டே இருந்தன.

 

சில மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, அவர்கள் மதுரையை அடைந்தனர்.

ருத்ரனின் குடும்பமான சக்கரவர்த்தி குடும்பம், அவர்களின் வருகைக்காக வாசலிலேயே காத்திருந்தது.

ருத்ரன் வருகிறான்…

அவனுடன் அவனுடைய நண்பர்களும் வருகிறார்கள்…

என்ற உற்சாகம் அந்தப் பெரிய வீட்டையே நிறைத்திருந்தது.

கார் வாசலில் வந்து நின்றதும், ருத்ரன், மித்ரன், யஷ்வி, நந்திதா என நால்வரும் கீழே இறங்கினார்கள்.

ருத்ரனைக் கண்டதும், வீரன் தாத்தாவும் காமாட்சி பாட்டியும் பாசத்துடன் அவர்களை நோக்கி வந்தனர்.

“வாங்கப்பா… வாங்க… எல்லாரும் நல்லா இருக்கீங்களா?”

என்று வீரன் தாத்தா புன்னகையுடன் கேட்டார்.

அவரது குரலில் பேரன்பும், பேரானந்தமும் கலந்திருந்தது.

அப்போது, வீட்டின் மூத்த மருமகளான வள்ளியம்மை ஆரத்தித் தட்டுடன் முன்னே வந்தார்.

“முதல்ல எல்லாரும் சேர்ந்து நில்லுங்கப்பா…”

என்று கூறி, நால்வரையும் வரிசையாக நிற்க வைத்தார்.

தீபத்தைச் சுற்றி ஆரத்தி எடுத்து, திருஷ்டி கழித்தார்.

அந்த மங்கலமான தருணத்தில், ருத்ரனின் மனதில் ஒரு எண்ணம் மின்னல் போல தோன்றி மறைந்தது.

யாரும் கவனிக்காத நேரத்தில், தன் அருகில் நின்றிருந்த நந்திதாவின் மென்மையான கரத்தை மெதுவாகப் பற்றிக்கொண்டான்.

அந்தத் திடீர் தீண்டலில், நந்திதாவின் உடல் ஒரு கணம் சிலிர்த்தது.

அடுத்த நொடியே, அவள் பயத்தில் நடுங்கினாள்.

‘இவர் இங்கே எதற்காக இப்படிச் செய்கிறார்?’

என்ற அதிர்ச்சி அவள் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.

சட்டென்று தன் கையை இழுத்துக்கொள்ள முயன்றாள்.

ஆனால்…

ருத்ரனின் பிடி இரும்பைப் போல உறுதியாக இருந்தது.

அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.

ஆனால், எதுவுமே நடக்காதது போல ருத்ரன் அமைதியாக நின்று, ஆரத்தி எடுத்துக்கொண்டிருந்த வள்ளியம்மையைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்துக்கொண்டிருந்தான்.

அவளால் கையை விடுவித்துக்கொள்ளவும் முடியவில்லை.

வேறு வழியின்றி, சிலைபோல் அப்படியே நின்றாள்.

அவளது தவிப்பும் பதற்றமும் ருத்ரனுக்கு மட்டுமே புரிந்தது.

ஆரத்தி முடிந்து,

“உள்ளே வாங்கப்பா…”

என்று அனைவரையும் அழைத்தபோதுதான், ருத்ரன் மெதுவாக அவளது கையை விட்டான்.

விடுபட்ட கையை உடனே தன் புடவைக்குள் மறைத்துக்கொண்ட நந்திதா, கோபம் பொங்க ருத்ரனை முறைத்துப் பார்த்தாள்.

அந்தப் பார்வையில் ஆயிரம் கேள்விகள் இருந்தன.

“ஏன் இப்படிச் செய்தீர்கள்?”

என்ற கேள்வி அவளது கண்களில் தெளிவாகத் தெரிந்தது.

ஆனால்…

அதற்கு பதில் சொல்லாமல், எதுவும் நடக்காதது போல முன்னே நடக்க ஆரம்பித்தான் ருத்ரன்.

வேறு வழியின்றி, மனம் முழுவதும் குழப்பத்துடன், அவளும் அந்தப் பிரம்மாண்டமான சக்கரவர்த்தி இல்லத்திற்குள் முதல் அடியை எடுத்து வைத்தாள்.

தொடரும்…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top