❤️அத்தியாயம்(5)

மண்டபமே மங்கல நாதஸ்வர இசையிலும், உறவினர்களின் கலகலப்பான பேச்சிலும் களைகட்டியிருந்தது. முகூர்த்த நேரம் நெருங்க, ஐயர் உரத்த குரலில் சொன்னார், “பொண்ணை மேடைக்கு அழைத்து வாங்க!”

யஷ்வியும் நந்திதாவின் தோழிகளும் பட்டுச்சேலையில் தேவதையாய் மின்னிய நந்திதாவை அழைத்து வந்தனர். மணமேடையில் கிஷான் அருகினில் அமர்ந்த நந்திதாவின் முகம் நாணத்தில் சிவந்திருந்தது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அந்தச் சிவப்பை மறைக்கும் விதமாக ஒரு கருமேகம் அங்கே சூழ்ந்தது.

கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆவேசமாக மணமேடையை நோக்கி ஓடி வந்தாள் தாமரை.

“கிஷான்…!” – அவளது அந்த அலறலில் ஒட்டுமொத்த மண்டபமே அமைதியானது. இசையும் நின்றது.

“டேய், இந்த கல்யாணம் உனக்கு வேண்டாம்… எழுந்திரு!” என அவள் கத்தியபோது, அங்கே ஒருவிதமான மரண அமைதி நிலவியது.

“என்னம்மா இது? உனக்கு என்ன பைத்தியமா? மங்கலகாரமான நேரத்துல வந்து இப்படிப் பேசுற?” என கிஷானின் அப்பா கோபத்துடன் எகிறினார்.

தாமரை நக்கலாகச் சிரித்தாள்.

“எனக்கா பைத்தியம்? உங்களுக்குத்தான் பைத்தியம்! இப்படி ஒரு பொண்ணையா தம்பிக்குக் கட்டி வைக்கப் போறீங்க?” என அவள் நந்திதாவை நோக்கிக் கை நீட்ட,

மித்ரன் முன்னே வந்தான்.

“என்ன பேசுறீங்க? என் அக்காவைப் பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசினா அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்!” – மித்ரன் ஆத்திரத்தில் துடித்தான்.

“உன் அக்காவைப் பத்தி நான் என்ன சொல்ல? ஊரே சொல்லுது!” எனத் தாமரை முகம் சுளிக்க,

மூர்த்தி குறுக்கிட்டார்.

“என்னம்மா பிரச்சனை? எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லுங்க,” என்றார் கவலையுடன்.

தாமரை நேராக மூர்த்தியின் கண்களைப் பார்த்து விஷத்தைக் கக்கினாள்.

“இப்படி ஒரு ஒழுக்கம் கெட்ட பொண்ணை என் தம்பிக்குக் கட்டி வைக்கிறீங்களா?”

அந்த வார்த்தை மண்டபத்தில் இருந்தவர்களின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது. நந்திதா அப்படியே சிலையென உறைந்து போனாள்; அவள் கண்களில் இருந்து கண்ணீர் மடைதிறந்த வெள்ளமெனப் பாயத் தொடங்கியது.

அமைதியாக இருந்த ருத்ரன் இப்போது முன்னே வந்தான். அவனது கண்கள் சிவந்திருந்தன.

“இங்க பாருங்க… ஆதாரமில்லாம பேசாதீங்க. உங்களுக்கு என்னதான் பிரச்சனை?” என்றான் அழுத்தமான குரலில்.

தாமரை எதற்கும் அஞ்சாமல் தன் கையில் இருந்த செல்போனைத் திரையில் காட்டினாள்.

அதில்… நந்திதா ஒரு அந்நிய ஆணுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம்.

“இது பொய்! மார்ஃபிங் பண்ணியிருக்காங்க! நம்பாதீங்க!” என மித்ரன் கத்தினான்.

“என்ன பொய்? உன் அக்கா லண்டன்ல தானே படிச்சா?” எனத் தாமரை கேட்க,

“ஆமா,” என்றான் மித்ரன்.

“அப்போ இந்தப் போட்டோ… லண்டன்ல இருக்கிற என் பிரண்டு தான் அனுப்புனா. அவளுக்கு உன் அக்கா மேல என்ன கோபம்? அவ எதுக்காகப் பொய் சொல்லப்போறா?” எனத் தாமரை ஆணித்தரமாகக் கேட்க,

மண்டபத்தில் இருந்த ஆயிரக்கணக்கான கண்களும் சந்தேகத்துடன் நந்திதாவின் பக்கம் திரும்பின.

அந்த அமைதி கொடூரமானது. நந்திதாவின் வாழ்க்கை ஒரு புகைப்படத்தால் அந்தத் திருமண மேடையிலேயே சிதையத் தொடங்கியது.

மூர்த்தி உடல் நடுங்க மாப்பிள்ளையின் அப்பாவிடம் சென்றார்.

“நான் உங்ககிட்ட ஏற்கனவே இதைப் பத்திப் பேசியிருக்கேன்… என் மச்சான் வீட்டுக்காரங்க ஏதோ வம்பு பண்ணுவாங்கன்னு சொன்னேனே…”

என்று அவர் இழுக்க,

மாப்பிள்ளையின் அப்பா அவரை இடைமறித்தார்.

“நீங்க சொன்னது உங்க மச்சான் பண்ணுற உள்ளூர் பிரச்சனை! ஆனா இது கடல் தாண்டி லண்டன்ல இருந்து வந்திருக்கு!”

அவர் குரலில் ஏளனமும் கோபமும் கலந்திருந்தது.

பின் தன் மகன் கிஷானைத் திரும்பிப் பார்த்தார்.

“நீ என்ன சொல்ற கிஷான்?”

கிஷான் ஒரு கணம் நந்திதாவைப் பார்த்தான். அவள் கண்கள் “நான் குற்றமற்றவள்” என மௌனமாகப் பேசின.

ஆனால் கிஷான் தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டான்.

“இது பொய்யுன்னு இவங்க தரப்புல சொல்றாங்க இல்ல? அப்படின்னா அதை அவங்க நிரூபிக்கட்டும். அதுக்கப்புறம் தான் இந்தக் கல்யாணம் நடக்கும்!”

கிஷானின் இந்தத் தீர்ப்பு, நந்திதாவின் இதயத்தை ஆயிரம் துண்டுகளாக உடைத்தது.

அவள் கலங்கிய விழிகளுடன் அவனைப் பார்த்தாள். ஒரு சிறு நம்பிக்கை… தன் வருங்காலக் கணவன் தன் கையைப் பிடித்து “நான் உன்னை நம்புறேன்” என்று சொல்லமாட்டானா என்கிற ஏக்கம்!

ஆனால் கிஷான் அவளை ஏறிட்டும் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

அவன் காட்டிய அந்த அவநம்பிக்கை மித்ரனைச் சுட்டெரித்தது.

அக்காவின் அருகில் ஓடி வந்தவன்,

“அக்கா! உன்னை நம்பாத இந்த வீட்டுல நீ போய் வாழணுமா? பதில் சொல்லு அக்கா!” என்று குமுறினான்.

நந்திதா உதடுகளைக் கடித்துக்கொண்டு,

“வேண்டாம்…” எனத் தலையசைத்தாள்.

“என்னடா பேசுற?”

என மூர்த்தி மகனை அதட்ட,

அதற்குள் தாமரை மீண்டும் விஷத்தைக் கக்கினாள்.

“உன் குடும்பமே ஒரு ஒழுக்கம் கெட்ட குடும்பம்… நீங்க எங்களைப் பார்த்துப் பேச வந்துட்டீங்களா?”

அந்தத் தரம் தாழ்ந்த பேச்சு மித்ரன் பொறுமையைக் காற்றோடு பறக்கவிட்டது.

மின்னல் வேகத்தில் பாய்ந்தவன், மாப்பிள்ளை கிஷானின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறையை வைத்தான்.

“பளார்!”

அந்தச் சத்தம் மண்டபம் எங்கும் எதிரொலித்தது.

“டேய்!” எனக் கத்திக்கொண்டு மாப்பிள்ளை வீட்டார் மித்ரனை நோக்கிப் பாய,

ருத்ரன் மின்னல் வேகத்தில் குறுக்கே வந்து சாணக்கியனை இறுகப் பற்றிக் கொண்டான்.

“சாணக்கியா! அமைதியா இருடா!” என அவனைத் தடுத்தான்.

கிஷானின் அப்பா ஆத்திரத்தில் முகம் சிவக்க,

“நல்ல குடும்பம்னு பார்த்தா… இப்படி ரவுடித்தனம் பண்றீங்களா? இனி இவங்க கூடப் பேச்சே கிடையாது!” என முழக்கமிட்டார்.

தன் மகன், மனைவி மற்றும் உறவினர்களை அழைத்துக்கொண்டு, அந்த நிமிடமே திருமணத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினார்கள்.

மண்டபத்தில் இப்போது ஆட்கள் இல்லை… வெறும் நிசப்தம் மட்டுமே மிஞ்சியது.

அந்தப் பிரம்மாண்டமான அலங்காரங்களும், முகூர்த்தப் பந்தலும் இப்போது ஏளனமாக அவர்களைப் பார்த்துச் சிரிப்பது போல இருந்தது. ஒரு நொடியில் ஒரு பெண்ணின் வாழ்க்கையும், ஒரு குடும்பத்தின் கௌரவமும் சுக்குநூறாகச் சிதறிப் போனது.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top