❤️அத்தியாயம் (6)

கிஷான் குடும்பம் வெளியேறிய அடுத்த நொடியே, அந்தச் சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்த வேட்டையாடும் கழுகைப் போல பாண்டியன் தனது குடும்பத்துடன் உள்ளே நுழைந்தார். முகத்தில் விகாரமான புன்னகையுடன் மூர்த்தியின் அருகில் வந்தவர்,

“ஏன் மச்சான்… கவலைப்படுறீங்க? இதோ என் மகன் ரகுராம் இருக்கான். இவனே உன் பொண்ணு கழுத்துல தாலி கட்டுவான்!”

என்று ஏளனமாகக் கூறினார்.

பாண்டியனின் நயவஞ்சகம் மூர்த்திக்கு நன்றாகவே தெரியும். அவரது கண்கள் கோபத்தில் சிவந்தன.

“என் பொண்ணு கல்யாணமே ஆகாமல் வீட்டிலேயே இருந்தாலும் பரவாயில்லை. ஆனா, உன் பையனுக்கு மட்டும் அவளைக் கட்டிக்கொடுக்க மாட்டேன்!”

என்று உறுதியாகக் கூறினார்.

தந்தைக்காகப் பரிந்து வந்த ரகுராம், மூர்த்தியை மிரட்டும் தோரணையில் பார்த்து,

“பார்க்கலாம்… என்னைத் தவிர வேற எவன் உன் பொண்ணைக் கட்டிக்கிறான்னு நானும் பார்க்கிறேன்!”

என்றான்.

அந்தச் சவால் மித்ரனின் ரத்தத்தைக் கொதிக்க வைத்தது. அவன் அடிக்கப் பாய, மூர்த்தி அவனைத் தடுத்து,

“வா… நாம வீட்டுக்குப் போவோம்!”

என்று அனைவரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.

 

வீட்டிற்கு வந்ததும் அந்த வீடு முழுவதும் மௌனம் சூழ்ந்திருந்தது.

ருத்ரன் யஷ்வியைப் பார்த்து,

“நந்திதாவை ரூமுக்கு அழைச்சிட்டுப் போ.”

என்றான்.

சிதைந்து போயிருந்த நந்திதாவை யஷ்வி அழைத்துச் செல்ல, மூர்த்தி சோபாவில் உயிரற்ற சிலையைப் போல சரிந்தார்.

அவரது பார்வை காயத்ரியை நோக்கிச் சென்றது.

காதலுக்காக வீட்டை எதிர்த்து வந்து, தாய் தந்தை இல்லாத தனக்கு வாழ்க்கை கொடுத்தவள் அவள்.

காயத்ரியின் அண்ணன்தான் பாண்டியன். அவருடைய மகன்தான் ரகுராம்.

காயத்ரி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, மூர்த்தியை காதலித்தார். மூர்த்திக்குத் தாய், தந்தை யாரும் இல்லை. அவருடைய பாட்டிதான் அவரை வளர்த்தார்.

இவர்களின் காதல் வீட்டில் தெரிந்ததும், காயத்ரியின் அப்பாவும் அண்ணன் பாண்டியனும் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.

அதனால், காயத்ரி வீட்டை விட்டு வெளியேறி, மூர்த்தியைத் திருமணம் செய்து கொண்டார்.

அதன்பிறகும், காயத்ரியின் அப்பாவும் அண்ணனும் அவளை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால், காயத்ரி அதற்காக ஒருநாளும் வருந்தவில்லை.

ஏனென்றால், தன் குடும்பத்தினரை விட பல மடங்கு அன்புடனும் அக்கறையுடனும் மூர்த்தி அவளைப் பார்த்துக்கொண்டார்.

காலம் நகர்ந்தது.

அவர்களின் அன்புக்குச் சாட்சியாக நந்திதா , மித்ரன் என்று இரு பிள்ளைகள் பிறந்தார்கள்.

நந்திதா லண்டனில் தனது படிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பியதும், அவளுக்குத் திருமணம் செய்ய வரன் பார்க்க ஆரம்பித்தனர்.

அப்போதுதான், ரகுராம் தற்செயலாக நந்திதாவைப் பார்த்துவிட்டு, அவளையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான்.

தன் விருப்பத்தைத் தந்தை பாண்டியனிடம் கூற, அவரும் சம்மதித்து மூர்த்தியின் வீட்டுக்குப் பெண் கேட்டு வந்தார்.

ஆனால், அந்தத் திருமணத்திற்கு மூர்த்தி உறுதியாக மறுப்பு தெரிவித்தார்.

அதற்குக் காரணம் ஒன்றே ஒன்று.

ரகுராம் நல்லவன் இல்லை.

குடிப்பழக்கம்…

பெண் சகவாசம்…

பொறுப்பில்லாத வாழ்க்கை…

எல்லாக் கெட்ட பழக்கங்களும் அவனிடம் இருந்தன.

அப்படிப்பட்ட ஒருவனிடம் தன் மகளின் வாழ்க்கையை ஒப்படைக்க மூர்த்தியின் மனம் சம்மதிக்கவில்லை.

அந்த ஒரு மறுப்பே பாண்டியனுக்கும் ரகுராமுக்கும் அவமானமாக மாறியது.

அதன் பிறகு, நந்திதாவின் வாழ்க்கையைச் சீரழிக்க அவர்கள் செய்த ஒவ்வொரு சதியும் மூர்த்தியின் நினைவில் ஒன்றன்பின் ஒன்றாக வந்து சென்றது.

கடைசியாக, தனது பிசினஸ் பார்ட்னர் வேலாயுதத்தின் மகன் கிஷானையும் தாமரையை வைத்து பிரித்து விட்டனர் 

அந்தத் துரோகம்… அந்த அவமானம்… மகளின் எதிர்காலம் குறித்த பயம்… என அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து அவரது இதயத்தை நெரித்தன.

திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு, மூச்சுவிட முடியாமல் தவித்த மூர்த்தி, அப்படியே தரையில் சரிந்தார்.

வாசலில் பேசிக்கொண்டிருந்த ருத்ரனும் மித்ரனும், காயத்ரியின் கதறல் சத்தம் கேட்டு பதறியடித்தபடி உள்ளே ஓடி வந்தார்கள்.

தரையில் உயிரற்றுப் படுத்திருந்த மூர்த்தியைப் பார்த்ததும், இருவரின் முகமும் வெளிறிப் போனது.

“அப்பா!” என்று மித்ரன் கதறியபடியே அவரைத் தூக்கிக்கொண்டான்.

ஒரு நொடியும் தாமதிக்காமல், இருவரும் சேர்ந்து மூர்த்தியை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார்கள்.

 

இரண்டு மணி நேரப் போராட்டம்…

வெளியே நின்றிருந்த காயத்ரிக்கும் நந்திதாவுக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாக நகர்ந்தது.

யாரும் யாரிடம் பேசவில்லை.

அங்கிருந்த அமைதியைக் கலைத்தது, அவர்களின் கண்ணீரும் கடவுளிடம் வைத்திருந்த நம்பிக்கையும் மட்டுமே.

இறுதியாக, ஐசியூவின் கதவு திறந்தது.

மருத்துவர் வெளியே வந்தார்.

அவரது முகம் இறுகியிருந்தது.

அவரைப் பார்த்ததும், அனைவரும் பதற்றத்துடன் எழுந்து நின்றனர்.

“டாக்டர்… அப்பாவுக்கு இப்போ எப்படி இருக்கு?” என்று மித்ரன் பதற்றமாகக் கேட்டான்.

மருத்துவர் ஒரு பெருமூச்சை விட்டார்.

“மன்னிக்கவும்… எங்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவருக்கு மல்டிபிள் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டிருக்கிறது. நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.”

சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், மீண்டும் மெதுவாகப் பேசினார்.

“கடைசி நேரத்தில் அவர் யாரையாவது பார்க்க விரும்பினால்… உள்ளே சென்று பேசுங்கள்.”

அந்த ஒரு வார்த்தை காயத்ரியையும் நந்திதாவையும் நிலைகுலைய வைத்தது.

“ஐயோ…” என்று கதறியபடி காயத்ரி தரையில் அமர்ந்துவிட்டார்.

நந்திதாவின் உடலே நடுங்கியது.

“அப்பாவுக்கு எதுவும் ஆகக் கூடாது…” என்று அழுதபடியே சுவரில் சாய்ந்தாள்.

அவர்களைத் தேற்ற முயன்ற மித்ரனும் ருத்ரனும், தங்களது கண்ணீரை அடக்க முடியாமல் தவித்தனர்.

இருவரும் காயத்ரியையும் நந்திதாவையும் தாங்கிக்கொண்டு ஐசியூவிற்குள் அழைத்துச் சென்றனர்.

அங்கே…

தன் வாழ்நாள் முழுவதும் குடும்பத்திற்காக மட்டுமே வாழ்ந்த ஒரு மனிதன், மரணத்தின் விளிம்பில் தனது அன்புக்குரியவர்களுக்காகக் காத்திருந்தார்.

 

மருத்துவமனையின் அந்த ஐசியூ அறையில் மரணத்தின் நிசப்தம் நிலவியது.

காயத்ரி ஓடிச்சென்று மூர்த்தியின் கைகளைப் பற்றிக்கொண்டு கதறி அழுதார்.

மரணத்தின் விளிம்பிலும், தன் மனைவியின் கண்ணீரைத் தாங்க முடியாமல், ஆக்சிஜன் மாஸ்க்கை மெதுவாக விலக்கிய மூர்த்தி, நடுங்கிய குரலில் பேசத் தொடங்கினார்.

“என்னை மன்னிச்சிடு காயத்ரி… கடைசி வரைக்கும் உன்னோட இருப்பேன்னு சத்தியம் பண்ணினேன். ஆனா… இப்போ பாதியிலேயே உன்னைத் தவிக்க விட்டுட்டுப் போறேன்…”

அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அங்கிருந்தவர்களின் இதயத்தைக் கிழிப்பது போல இருந்தது.

“அப்படி எல்லாம் பேசாதீங்க… உங்களுக்கு எதுவும் ஆகாது… நீங்க என்னைவிட்டு எங்கயும் போக மாட்டீங்க…”

என்று காயத்ரி கதறியபடி அவரது கரங்களை இறுகப் பற்றிக்கொண்டார்.

மூர்த்தி மெதுவாகத் தலையசைத்தார்.

பிறகு, நந்திதாவை அருகில் வருமாறு சைகை செய்தார்.

அவள் கண்களில் கண்ணீர் பெருக, தந்தையின் அருகில் வந்து அமர்ந்தாள்.

அவளது கரங்களைத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்ட மூர்த்தி,

“உன் கல்யாணத்தைப் பார்க்காமப் போறேனேன்னுதான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கும்மா…”

என்று விம்மினார்.

“அப்பா… உங்களுக்கு எதுவும் ஆகாது… நீங்க நல்லா ஆயிடுவீங்கப்பா…”

என்று நந்திதா அவரது மார்பில் சாய்ந்து குழந்தையைப் போலக் கதறினாள்.

அந்தக் காட்சியைக் கண்ட யாராலும் கண்ணீரை அடக்க முடியவில்லை.

பிறகு, மூர்த்தி மித்ரனை அருகில் அழைத்தார்.

காயத்ரியையும் நந்திதாவையும் பார்த்தவர், அவர்களது கைகளை மித்ரனின் கைகளில் வைத்து,

“இனி இவங்க ரெண்டு பேரையும் நீதான் பார்த்துக்கணும்… உன் அக்காவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடு…”

என்று தழுதழுத்த குரலில் கூறினார்.

மித்ரன் ஒரு கணம் சிலையாக நின்றான்.

தந்தையின் ஏக்கமும், மகளின் எதிர்காலம் குறித்த அவரது பயமும், அவன் மனதை உலுக்கியது.

எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறியவன், சில நிமிடங்களிலேயே மீண்டும் உள்ளே வந்தான்.

அவன் கையில் ஒரு மஞ்சள் கயிற்றுத் தாலி இருந்தது.

நேராகத் தந்தையின் அருகில் சென்றவன்,

“அப்பா… உங்களுக்கு அக்கா கல்யாணத்தைப் பார்க்கணும்… அவ்வளவுதானே?”

என்று கேட்டான்.

மூர்த்தி மெதுவாகத் தலையசைத்தார்.

அடுத்த நொடியே, மித்ரன் ருத்ரனின் கையைப் பிடித்து தன் அருகில் இழுத்தான்.

“என்னடா பண்ற மித்ரன்?”

என்று ருத்ரன் அதிர்ச்சியுடன் கேட்டான்.

பதில் பேசாமல், அந்த மஞ்சள் கயிற்றை அவன் கையில் திணித்த மித்ரன்,

“இதை… அக்கா கழுத்துல கட்டு!”

என்றான்.

அந்த ஒற்றை வாக்கியம், அங்கிருந்த அனைவரையும் இடி தாக்கியது போல அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

“மித்ரன்… என்னடா இது? உனக்கு என்ன பைத்தியமா?”

என்று நந்திதா அதிர்ச்சியுடன் கத்தினாள்.

“இப்போ எதுவும் பேசாத அக்கா… ப்ளீஸ்…”

என்று மித்ரன் கெஞ்சினான்.

அதற்குள் மூர்த்தியின் மூச்சுத்திணறல் அதிகரிக்க, இதயத் துடிப்பைக் கண்காணித்துக் கொண்டிருந்த இயந்திரங்கள் அபாய ஒலியை எழுப்பத் தொடங்கின.

“என்னடா நிக்கிற…? கட்டுடா!”

என்று மித்ரன் கண்ணீருடன் கத்தினான்.

யஷ்வியின் கண்களிலும் கண்ணீர் வழியா 

“ப்ளீஸ் ருத்ரன்… பாவம் அப்பா… கட்டுடா..”

என்று அழுகையுடன் சொன்னாள்.

ருத்ரன் ஒரு கணம் நந்திதாவைப் பார்த்தான்.

அவளது கண்கள் “வேண்டாம்…” என்று கெஞ்சின.

மறுபக்கம், மூர்த்தியின் கண்கள்…

“என் மகளுக்கு ஒரு வாழ்க்கை கிடைக்கணும்…”

என்ற ஏக்கத்துடன் அவனை நோக்கின.

ஒரு பெருமூச்சை வெளியிட்ட ருத்ரன், மெதுவாக நந்திதாவின் அருகில் சென்றான்.

நந்திதா அதிர்ச்சியில் உறைந்து நிற்க, அவள் கழுத்தில் அந்த மஞ்சள் கயிற்றை அணிவித்து, நடுங்கிய கரங்களால் மூன்று முடிச்சுகளைப் போட்டான்.

ஐசியூவின் மங்கலான வெளிச்சத்தில், மரணத்தின் வாசலில் நின்றிருந்த ஒரு தந்தையின் முன்னால், அந்தப் புனிதமான பந்தம் அரங்கேறியது.

தன் மகளின் கழுத்தில் தாலி ஏறியதைக் கண்ட மூர்த்தியின் கண்களில் இருந்த கவலை மெதுவாக மறைந்தது.

அதற்குப் பதிலாக, ஒரு தந்தையின் நிம்மதி மலர்ந்தது.

உதட்டில் மெல்லிய புன்னகை விரிந்தது.

காயத்ரியின் கரத்தை இறுதியாக ஒருமுறை அழுத்திப் பிடித்தவர், மெதுவாகக் கண்களை மூடினார்.

அடுத்த கணமே, இதயத் துடிப்பைக் காட்டிய இயந்திரம் நீண்ட ஒற்றை ஒலியை எழுப்பியது.

“டீஇஇஇ…”

அந்த ஒலி, அங்கிருந்த அனைவரின் இதயத்தையும் சுக்குநூறாக நொறுக்கியது.

“அப்பா…!”

என்று நந்திதாவின் கதறல், மருத்துவமனையே அதிரச் செய்தது.

காயத்ரி கணவரின் மார்பில் சாய்ந்து கதறி அழுதார்.

மித்ரனும் ருத்ரனும் கண்ணீரை அடக்க முடியாமல் நின்றனர்.

யஷ்வி அமைதியாக நின்றபடியே கண்ணீரில் கரைந்தாள்.

ஒரு உயிர் பிரிந்தது…

ஒரு தந்தையின் கடைசி ஆசை நிறைவேறியது…

ஒரு புதிய உறவு பிறந்தது…

ஆனால், அந்த உறவு யாருடைய விருப்பத்தாலும் அல்ல… ஒரு தந்தையின் இறுதி மூச்சின் சாட்சியாக உருவானது.

தொடரும்…

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top