💓அத்தியாயம்《22》

ஆதிரன் ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் தெரிந்த குழப்பமும் சிந்தனையும் பார்த்த கோகுல், மெதுவாக அவன் அருகில் வந்து,

“என்ன மச்சான்… என்ன இவ்வளவு யோசிக்கிறீங்க?” என்று கேட்டான்.

சில நொடிகள் அமைதியாக இருந்த ஆதிரனைப் பார்த்துவிட்டு, மீண்டும் அவனே பேசத் தொடங்கினான்.

“நேத்து நடந்தது எல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டேன். வேற எதுவும் இல்ல. பாவம் மச்சான்… சர்வேஷ்…” என்றான் வருத்தத்துடன்.

ஆதிரன் மெதுவாகத் தலையசைத்தான்.

“எனக்குப் புரியுது கோகுல். ஆனா அதுக்காக நீ இப்படிப் பண்ணியிருக்க வேண்டாம். அவன் இன்னும் சின்ன குழந்தை. அவன் மனசுல என்ன பதியுதோ, அதுதான் அவனுக்கு உண்மையா தோணும்,” என்றான் அமைதியான குரலில்.

உடனே கோகுல் அவசரமாக,

“மச்சான்… நான் எதுவும் தப்பா நினைச்சு சொல்லல. அவன்தான் ஆசைப்படுறான். ‘ஆதிரன் அங்கிள் மாதிரி எனக்கும் ஒரு அப்பா கிடைக்கணும்’ன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கான் தெரியுமா? அதனால்தான் நான், ‘இனிமே நீங்கதான் அவனோட அப்பா’ன்னு சொன்னேன்,” என்றான்.

கோகுலின் வார்த்தைகளைக் கேட்ட ஆதிரன் ஒரு பெருமூச்சு விட்டான்.

“சரி… இனிமே அவனை நான் பாத்துக்கறேன்,” என்றான் உறுதியுடன்.

அந்த பதிலைக் கேட்ட கோகுலுக்கு கொஞ்சம் நிம்மதி வந்தாலும், இன்னொரு சந்தேகம் அவனை விட்டு போகவில்லை.

“மச்சான்… சர்வேஷ் உங்ககிட்ட சொன்ன மாதிரி எல்லார்கிட்டயும் சொல்லிடுவானோ?” என்று தயக்கத்துடன் கேட்டான்.

ஆதிரன் புருவத்தைச் சுருக்கி,

“என்ன சொல்லிடுவான்?” என்று கேள்வியோடு பார்த்தான்.

“அதான்… நான் தான் உங்களை ‘அப்பா’ன்னு கூப்பிடச் சொன்னேன்னு…” என்றான் கோகுல்.

அதற்கு ஆதிரன் அமைதியாக,

“அவன் எதுவும் சொல்லல,” என்றான்.

அந்த ஒரு பதிலே கோகுலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“என்னது? சர்வேஷ் சொல்லலையா? அப்போ உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று வியப்புடன் கேட்டான்.

ஆதிரன் சிரிப்பை அடக்கிக் கொண்டு,

“நானாதான் கெஸ் பண்ணேன்,” என்றான் சாதாரணமாக.

“ஐயையோ… நம்மளாலதான் வந்து மாட்டிக்கிட்டோமோ!” என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டான் கோகுல்.

கோகுலின் முகத்தில் தெரிந்த பதற்றத்தைப் பார்த்த ஆதிரனுக்கு சிரிப்பு வந்தாலும், அதை வெளிக்காட்டாமல்,

“சரி… நீ கிளம்பு,” என்றான்.

“சரி மச்சான்,” என்று சொல்லிவிட்டு கிளம்பத் திரும்பிய கோகுல், திடீரென்று ஒரு நிமிடம் நின்றான்.

மீண்டும் ஆதிரனைத் திரும்பிப் பார்த்து,

“மச்சான்…” என்று ஏதோ சொல்லத் தொடங்கினான். 

 

“மச்சான்… ஆதிரை பாவம். காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் அழுதுகிட்டே இருக்கா. சர்வேஷை ஆதிரை கிட்ட அனுப்பி வைங்க…” என்று தயக்கத்துடன் கூறினான் கோகுல்.

கோகுலை முறைத்தபடி பார்த்த ஆதிரன்,

“அவன் போக மாட்டேன்னு சொல்றான்…” என்றான்.

“மச்சான், அவன் சின்ன பையன். ஆதிரை அடிச்சதால தான் அப்படி சொல்றான். நீங்க சொன்னா கண்டிப்பா கேட்பான்…” என்று கோகுல் மீண்டும் எடுத்துரைத்தான்.

சில நொடிகள் அமைதியாக யோசித்த ஆதிரன்,

“சரி… நான் அவன்கிட்ட பேசுறேன். போகச் சொல்றேன்…” என்றான்.

“சரி மச்சான்…” என்று கூறிவிட்டு கோகுல் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

அதே நேரம்…

கீழே, தனது அறையில் அமைதியாக அமர்ந்து ஏதோ ஆழ்ந்த யோசனையில் மூழ்கியிருந்தாள் அஞ்சலி.

அப்போது கதவைத் திறந்து உள்ளே வந்தான் விக்ரம். அவளை ஒரு பார்வை பார்த்தவன், எதுவும் பேசாமல் நேராக குளியலறைக்குள் சென்றுவிட்டான்.

சுமார் பதினைந்து நிமிடங்கள் கழித்து குளித்துவிட்டு வெளியே வந்தபோதும், அஞ்சலி அதே இடத்தில், அதே நிலையில் அமர்ந்திருந்தாள்.

“இவ ஏன் இப்படி இருக்கா? ஏதாவது பிரச்சனையா? போய்க் கேட்போமா?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

அவன் கட்டிலின் மறுபுறம் சென்று அமர்ந்து கைப்பேசியை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால், அவன் அறைக்குள் வந்ததே தெரியாதவள் போல அஞ்சலி இன்னும் யோசனையிலேயே மூழ்கியிருந்தாள்.

விக்ரமும் அவளை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவளது மனம் இந்த அறையில் இல்லை என்பதைக் மட்டும் அவனால் தெளிவாக உணர முடிந்தது.

சில நிமிடங்கள் கழித்து கைப்பேசியை அணைத்துவிட்டு,

“அஞ்சலி…” என்று மெதுவாக அழைத்தான்.

திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தவள்,

“என்ன…?” என்று கேட்டாள்.

“என்ன ஆச்சு? ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க? என்ன பிரச்சனை?” என்று மென்மையாகக் கேட்டான் விக்ரம்.

“ஒண்ணும் இல்ல… சும்மாதான்…” என்றாள் அவள்.

விக்ரம் லேசாக சிரித்துவிட்டு,

“இங்க பாரு அஞ்சலி… எனக்கு உன்னைப் பற்றி நல்லாவே தெரியும். நான் ரூமுக்குள்ள வந்தது கூட தெரியாம நீ ஏதோ யோசிச்சிட்டு இருந்த. என்னன்னு சொல்லு…” என்றான்.

சில நொடிகள் தயங்கிய அஞ்சலி,

“இன்னைக்கு… சர்வேஷ் ஆதிரனை ‘அப்பா’ன்னு கூப்பிட்டானே… அதைத்தான் யோசிச்சிட்டு இருக்கேன்…” என்றாள்.

அவள் அந்த வார்த்தையைச் சொன்ன மறுநொடியே, விக்ரம் சட்டென்று கட்டிலிலிருந்து எழுந்து நின்றான்.

அவன் முகத்தில் தோன்றிய திடீர் மாற்றத்தைப் பார்த்த அஞ்சலி,

“என்ன ஆச்சு?” என்று குழப்பத்துடன் கேட்டாள்.

தன்னுடைய உணர்வுகளை மறைத்துக் கொண்ட விக்ரம்,

“ஒண்ணும் இல்ல… நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்…” என்று மட்டும் சொல்லிவிட்டு வேகமாக அறையை விட்டு வெளியேறிவிட்டான்.

அவன் சென்ற பிறகும் அங்கேயே அமர்ந்திருந்த அஞ்சலி,

“இவர்தானே கேட்டாரு… நான் பதில் சொன்னதும் ஒண்ணுமே சொல்லாம போயிட்டாரே…” என்று மனதிற்குள் குழப்பத்துடன் நினைத்துக் கொண்டாள்.

 

வெளியே வந்த விக்ரம் நேராக தோட்டத்திற்குச் சென்று அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தான்.

குளிர்ந்த காற்று வீசியும் அவன் மனம் மட்டும் கொதித்துக் கொண்டே இருந்தது.

“அவ இன்னும் ஆதிரனை மறக்கல போல… அதான் சர்வேஷ் அவனை ‘அப்பா’ன்னு கூப்பிட்டதும் அவளுக்கு இவ்வளவு யோசனை. நான் மட்டும் தான் என் மனசை மாற்றிக்கிட்டு, அவளுக்காக இத்தனை நாள் காத்துக்கிட்டு இருக்கேன். ஆனா அவளுக்கு மனசை மாற்றணும்னு எண்ணமே இல்ல போல…”

என்று வேதனையுடன் நினைத்தான்.

“நாலு வருஷம் இப்படியே போயிடுச்சு. இதுக்கு மேலயும் இது தொடரக் கூடாது. இதுக்கு ஒரு முடிவு எடுத்தே ஆகணும். வீட்டில இருக்குறவங்களோட பேசி ஒரு தீர்மானம் எடுக்கணும்…” என்று உறுதியாக முடிவு செய்தான்.

அப்போது திடீரென்று அவனுக்கு ஏதோ ஞாபகம் வந்தது.

உடனே தனது கைப்பேசியை எடுத்து ஒரு எண்ணை அழைத்தான்.

சில ரிங் சென்றதும் எதிர்முனையில் அவனது நண்பன் போனை எடுத்தான்.

“டேய்… நான் மும்பை வர்றேன். எனக்கு வேலைக்கு அரேஞ்ச் பண்ணு…” என்றான் விக்ரம்.

எதிர்முனையில் இருந்த நண்பன் ஆச்சரியத்துடன்,

“என்னடா? திடீர்னு சொல்ற. நான் எவ்வளவோ தடவை மும்பை வா என்று கூப்பிட்டப்போ எல்லாம் ‘வேணாம்’ன்னு சொன்ன. இப்போ நீயே வர்றேன்னு சொல்ற?” என்று கேட்டான்.

“நான் சொன்னதை மட்டும் செய். எல்லாம் ரெடி பண்ணிட்டு எனக்கு சொல்லு…” என்று உறுதியான குரலில் கூறினான் விக்ரம்.

“சரி… சரி… எங்க கம்பெனில இப்பவே வேகன்சி இருக்கு. நீ எப்ப வேண்டுமானாலும் வந்து ஜாயின் பண்ணிக்கலாம்…” என்றான் அவனது நண்பன்.

“சரி… இன்னும் ஒரு வாரத்துக்குள்ள அங்க வர்ற மாதிரி பார்க்கிறேன்…” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் விக்ரம்.

அழைப்பு முடிந்த பிறகும், அவன் பார்வை வெறுமையை நோக்கியே இருந்தது. மும்பைக்குச் செல்லும் முடிவு அவனுக்கு புதிய வாழ்க்கையைத் தருமா, இல்லையெனில் இன்னொரு பிரிவின் வலியை மட்டும் தருமா என்பது அவனுக்கே தெரியவில்லை. ஆனால், இனி ஒரே இடத்தில் நின்று காத்திருக்க அவன் மனம் தயாராக இல்லை. அதனால், தனது வாழ்க்கைக்கு ஒரு புதிய திருப்பத்தைக் கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் அங்கிருந்து மெதுவாக எழுந்தான். 

கோகுல் அங்கிருந்து சென்றதும், ஆதிரன் மெதுவாக சர்வேஷின் அருகில் வந்து அமர்ந்தான்.

“சர்வேஷ்…” என்று மெதுவாக அழைத்தான்.

அந்தக் குரல் கேட்டவுடன் சட்டென்று திரும்பிப் பார்த்த சிறுவன், முகம் முழுவதும் மலர்ந்த புன்னகையுடன்,

“அப்பா…” என்று அழைத்தான்.

அந்த ஒரு அழைப்பு ஆதிரனின் இதயத்தை நெகிழச் செய்தது. இருந்தாலும், தனது உணர்வுகளை வெளிக்காட்டாமல் அவனைப் பார்த்து மெதுவாக சிரித்தான்.

“அப்பா சொன்னா கேப்ப தானே?” என்று கேட்டான்.

“ஓ… கேப்பேன்!” என்று தலையாட்டினான் சர்வேஷ்.

“அப்போ  நீ அம்மா கிட்ட போய் ‘சாரி’ சொல்லணும். அதோட அம்மா கூட நல்லா பேசணும்… சரியா?” என்றான் ஆதிரன்.

உடனே சர்வேஷின் முகம் சுருங்கியது.

“வேணாம்ப்பா… அம்மா கிட்ட போனா, அம்மா உங்க கிட்ட வர விட மாட்டாங்க. என்ன அடிப்பாங்க… உங்களை ‘அப்பா’ன்னு கூப்பிடவும் விட மாட்டாங்க…” என்று பயத்துடன் கூறினான்.

அவனுடைய வார்த்தைகளைக் கேட்ட ஆதிரனின் மனம் ஒரு நொடி கனத்தது.

அவன் சர்வேஷின் தலையை மெதுவாக வருடியபடி,

“இல்லடா… அம்மா உன்னை அடிக்க மாட்டாங்க. நான் அம்மா கிட்ட பேசுறேன். நீ என்னோட குட் பாய் தானே? அப்பா சொன்னா கேப்பேன்னு சொன்னியே… வாங்க…” என்று அன்பாகக் கூறினான்.

அவ்வாறு கூறிக்கொண்டே சர்வேஷைத் தூக்கிக் கொண்டான்.

சர்வேஷும், “அப்பா சொல்றதுக்காக…” என்ற மனநிலையுடன் அமைதியாக அவன் தோளில் சாய்ந்து கொண்டான்.

சர்வேஷைத் தூக்கிக்கொண்டு மாடிப்படிகளில் இறங்கி வந்த ஆதிரனை, ஹாலில் இருந்த அனைவரும் அமைதியாகப் பார்த்தனர்.

யாரும் எதுவும் பேசவில்லை.

ஆதிரன் நேராக கதிரின் அருகில் வந்து நின்று,

“கதிர்… உன் தங்கச்சி எங்க இருக்கா?” என்று கேட்டான்.

“அவ ரூம்ல இருக்கா…” என்றான் கதிர்.

“சரி…” என்று மட்டும் சொல்லிவிட்டு ஆதிரை இருந்த அறையை நோக்கி நடக்கத் தொடங்கினான் ஆதிரன்.

அவன் ஆதிரையின் அறைக்குச் செல்வதைப் பார்த்த கதிர், உடனே அவன் முன்னால் வந்து வழியை மறித்தான்.

“டேய்… நானே சர்வேஷை கொண்டு போய்க் கொடுக்கிறேன். சர்வேஷை என் கிட்ட கொடு…” என்றான் பதற்றமாக.

ஆதிரன் புருவத்தைச் சுருக்கி,

“ஏன்? நானே கொண்டு போய்க் கொடுக்கிறேன். நீ உன் வேலையைப் பாரு…” என்றான்.

கதிர் இன்னும் தயக்கத்துடன்,

“டேய்… சொன்னா கேளுடா. அவ கோவத்துல இருக்கா. ப்ளீஸ்டா…” என்று கெஞ்சினான்.

ஆனால் ஆதிரன் அமைதியாக,

“நான் உன் தங்கச்சியை எதுவும் பண்ண மாட்டேன். பயப்படாத…” என்று கூறிவிட்டு கதிரைத் தாண்டி ஆதிரையின் அறையை நோக்கி நடந்தான்.

ஆதிரன் சென்றதைப் பார்த்துக் கொண்டிருந்த கதிர், ஆழமாக மூச்சை இழுத்தான்.

“அவளை நினைச்சு நான் பயப்படலடா… உன்னை நினைச்சுத்தான் பயப்படுறேன்…” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

ஆதிரனின் கோபம் எவ்வளவு ஆழமானது என்பதையும், ஆதிரையின் பிடிவாதம் எவ்வளவு அதிகம் என்பதையும் அவன் நன்றாகவே அறிந்திருந்தான். இந்த இருவரும் நேருக்கு நேர் சந்திக்கப் போகும் அந்த சில நிமிடங்கள், என்ன மாதிரியான திருப்பத்தை உருவாக்கப் போகின்றன என்ற பதற்றத்திலேயே கதிர் அங்கே நின்று கொண்டிருந்தான்.

தொடரும் 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top