ஆதிரை தன் அறையில் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தபடி, எதையோ ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தாள். அவளது முகத்தில் இருந்த சோர்வும், கண்களில் தேங்கியிருந்த கவலையும், அவளது மனம் எவ்வளவு குழப்பத்தில் இருக்கிறது என்பதை வெளிப்படையாகக் காட்டின.
அந்த நேரத்தில், அறைக்கதவு மெதுவாக திறக்கப்பட்டது.
கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் ஆதிரன். அவன் கைகளில் சர்வேஷ் இருந்தான். ஆதிரனின் தோளில் சாய்ந்தபடி அமைதியாக இருந்த சர்வேஷைக் கண்டதும், ஆதிரையின் இதயம் வேகமாகத் துடித்தது.
“சர்வேஷ்…”
என்று அவசரமாக எழுந்தவள், ஆதிரன் அருகே வந்து, தன் மகனைத் தூக்கிக் கொள்ள இரு கைகளையும் ஏக்கத்துடன் நீட்டினாள்.
ஆனால், சர்வேஷ் உடனே அவளிடம் வரவில்லை. அவன் ஆதிரனைத் திரும்பிப் பார்த்தான்.
ஆதிரன் மெதுவாக புன்னகைத்து,
“ அம்மா கிட்ட போ…”
என்று சொன்னான்.
அதன்பிறகே சர்வேஷ் ஆதிரையிடம் தாவி வந்தான்.
அந்த ஒரு சிறிய செயல் ஆதிரையின் மனதை ஒரு தாயாக ரொம்பவே தாக்கியது. தன் மகன் தன்னிடம் வருவதற்கு அனுமதி கேட்பது போல நடந்துகொண்டது, அவளது உள்ளத்தைக் கத்தியால் கீறியது போல இருந்தது.
ஆனால், அந்த வேதனையை வெளியே காட்டாமல் தன்னுள் மறைத்துக் கொண்டாள்.
சர்வேஷை இறுக அணைத்துக் கொண்டு அவன் உச்சியில் முத்தமிட்டவள், கண்கள் கலங்கியபடி,
“சாரிடா கண்ணா… அம்மாவை மன்னிச்சிடு. இனிமேல் அம்மா உன்னை அடிக்க மாட்டேன். கோபப்படவும் மாட்டேன்…”
என்று தழுதழுத்த குரலில் கூறினாள்.
அவளது கண்ணீரைத் தன் பிஞ்சு விரல்களால் துடைத்த சர்வேஷ், அவள் கன்னத்தில் அழகாக ஒரு முத்தம் பதித்துவிட்டு,
“பரவாயில்ல அம்மா…”
என்று புன்னகையுடன் சொன்னான்.
அந்த ஒரு வார்த்தையே ஆதிரையின் மனதில் இருந்த பாரத்தை சற்றே குறைத்தது.
அம்மாவுக்கும் மகனுக்கும் இடையே நடந்த அந்த பாசப் போராட்டத்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் ஆதிரன். அந்த காட்சியைப் பார்த்தபோது, அவன் மனதிலும் ஒரு நிம்மதி பிறந்தது.
அப்போது ஆதிரை அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“அதுதான்… சர்வேஷ் என் கிட்ட வந்துட்டானே. இனி உனக்கு இங்க என்ன வேலை? வெளியே போ…”
என்று சொல்லாமல் சொல்லும் விதமாக அவள் பார்வை இருந்தது.
ஆனால், அந்தப் பார்வையை ஆதிரன் சற்றும் பொருட்படுத்தவில்லை. அவன் அங்கேயே அமைதியாக நின்றிருந்தான்.
அப்போது சர்வேஷ் தன் இரு கைகளாலும் ஆதிரையின் கன்னத்தைப் பிடித்து,
“அம்மா… அப்பா ரொம்ப நல்லவரும்மா. அவர் கூட சண்டை போடாதீங்க. அப்பா என்ன ரொம்ப நல்லா பாத்துக்குவாரு. அவர நம்மளோட கூட்டிட்டு போயிடலாம்மா…”
என்று குழந்தைத்தனமான குரலில் கூறினான்.
அந்த வார்த்தைகளைக் கேட்ட ஆதிரையின் மூச்சே ஒரு நொடி நின்றுவிட்டது.
“இதையே இவன் விடமாட்டானா?”
என்று மனதிற்குள் வேதனையுடன் நினைத்தாள்.
பிறகு, தன்னைச் சமாளித்துக் கொண்டு சர்வேஷின் தலையை வருடியவள்,
“சர்வேஷ் கண்ணா… அப்படி சொல்லக்கூடாது. அவர் உன்னோட டாடி இல்லை. உன்னோட அப்பா சாமி கிட்ட இருக்காரு. இவரை அப்பான்னு சொல்லக்கூடாது…”
என்று மிகுந்த பொறுமையுடன் எடுத்துச் சொன்னாள்.
அவள் கூறிய அந்த வார்த்தைகள் ஆதிரனின் காதில் விழுந்ததும், அவனது முகம் இறுகிப் போனது. கண்களில் கோபம் மின்னியது.
“இவகிட்ட சர்வேஷை கொண்டு வந்து கொடுத்திருக்கவே கூடாது…”
என்று மனதிற்குள் கடுப்புடன் நினைத்தான்.
ஆனால், அதற்குள் சர்வேஷ் அவசரமாக,
“இல்லம்மா… அப்பாவே சொல்லிட்டாரு. இனிமேல் அவர் எனக்கு அப்பாவா இருப்பார்னு. நான் அவரை அப்பான்னுதான் கூப்பிடுவேன்…”
என்று உறுதியாகச் சொன்னான்.
அந்த பதிலைக் கேட்ட ஆதிரை, ஆதிரனை எரித்துவிடுவது போல ஒரு பார்வை பார்த்தாள்.
அவளது அந்தக் கடும் பார்வையைப் பார்த்த ஆதிரன், மனதிற்குள்,
“இதுக்கு மேல இங்க இருந்தா மறுபடியும் பிரச்சனைதான் வரும். அதுவும் சர்வேஷ் முன்னாடி எதுவும் நடக்கக் கூடாது…”
என்று நினைத்தான்.
உடனே சர்வேஷை பார்த்து மெதுவாக,
“சர்வேஷ்… நீ அம்மா கூட இருடா. நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்.”
என்று கூறிவிட்டு, மேலும் எதுவும் பேசாமல் அமைதியாக அறையை விட்டு வெளியேறினான்.
ஆதிரன் வெளியேறியதும், அறை முழுவதும் ஒரு கனமான அமைதி சூழ்ந்தது. அந்த அமைதிக்குள், ஆதிரையின் மனமும், ஆதிரனின் மனமும், சர்வேஷின் பிஞ்சு ஆசையும் மூன்றும் மூன்று திசைகளில் போராடிக் கொண்டிருந்தன. அந்தப் போராட்டத்திற்கு முடிவு எப்போது கிடைக்கும் என்பது காலத்தின் கையில் மட்டுமே இருந்தது.
சர்வேஷ் மீண்டும் தன்னிடம் வந்து சேர்ந்த பிறகுதான் ஆதிரை மனநிம்மதியுடன் உணவருந்தினாள். அதுவரை அவளுக்கு பசியே இல்லை. மகனைத் தன்னருகில் அமர வைத்து, அவன் சாப்பிடுவதை ரசித்தபடியே தானும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டாள்.
அதன்பிறகு வந்த அடுத்தடுத்த நாட்கள் அனைத்தும் எந்தவித சலசலப்பும் இல்லாமல் அமைதியாகவே நகர்ந்தன. வெளிப்படையாக எல்லோரும் இயல்பாக இருந்தாலும், ஒவ்வொருவரின் மனதிலும் அவரவருக்கான போராட்டங்கள் ஓடிக்கொண்டே இருந்தன.
சர்வேஷ் மட்டும் ஒரு விஷயத்தில் மாறவே இல்லை.
அவன் ஆதிரனை எப்போதும் “அப்பா” என்றே அழைத்துக் கொண்டிருந்தான்.
முதலில் அந்த அழைப்பு ஆதிரையின் மனதை வலிக்கச் செய்தாலும், நாளடைவில் அதைத் தடுக்க அவள் முயற்சிக்கவே இல்லை. காரணம், “அப்படி சொல்லக்கூடாது” என்று அவனைத் தடுத்தால், குழந்தையின் மனதில் தன்மீது வெறுப்பு வந்துவிடுமோ என்ற பயம் அவளுக்குள் ஆழமாக இருந்தது.
அதனால், தன் மனவேதனையை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு, அதை அப்படியே விட்டுவிட்டாள்.
சர்வேஷும் ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருந்தான். ஆதிரன் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் அவனுடனேயே ஒட்டிக்கொண்டு இருப்பான். விளையாடுவதும், பேசுவதும், சாப்பிடுவதும், தூங்குவதற்குக் கூட ஆதிரன்தான் வேண்டும்.
ஆதிரன் வேலை காரணமாக வெளியே சென்றிருக்கும் நேரங்களில் மட்டுமே, அவன் ஆதிரையிடம் வந்து ஒட்டிக்கொள்வான்.
இதைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஆதிரையின் மனம் கலங்கினாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தாள்.
அவளுக்கு இப்போது ஒரே ஒரு எண்ணம்தான்.
“எப்போதுதான் இந்த திருவிழா முடியும்? எப்போது நம்ம ஊருக்குக் கிளம்புவோம்?”
ஊருக்குச் சென்றுவிட்டால், சர்வேஷ் மீண்டும் ஆதிரனோடு இவ்வளவு நெருக்கமாக இருக்க மாட்டான் என்று நினைத்ததே அவளுக்கு சிறிய ஆறுதலாக இருந்தது.
அதே நேரத்தில், அஞ்சலியும் ஏதோ ஒரு யோசனையில் மூழ்கியபடி சுற்றிக் கொண்டிருந்தாள்.
“விக்ரமுக்கு என்ன ஆச்சு? ஏன் திடீர்னு என்கிட்ட பேசவே மாட்டாரு? முன்னாடி சிரிச்சுப் பேசலன்னாலும், நான் கேட்குற கேள்விக்காவது பதில் சொல்லுவாரு. இப்போ என்னைக் கண்டாலே முகத்தைத் திருப்பிட்டு போறாரு. நான் என்ன தப்பு பண்ணேன்?”
என்று மனதிற்குள் குழம்பிக் கொண்டிருந்தாள்.
அதோடு, அவளது அம்மாவும் விடாமல்,
“உனக்கும் விக்ரமுக்கும் என்ன பிரச்சனை? ஏதாவது சண்டையா?”
என்று தினமும் கேட்டுக் கொண்டே இருந்தார்.
“நான் என்ன பதில் சொல்வது? எனக்கே என்ன நடந்ததுன்னு தெரியலையே…”
என்று நினைத்தவள், குழப்பத்தோடும் வருத்தத்தோடும் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள்.
இப்படியே ஒரு வாரம் கடந்துவிட்டது.
அனைவரும் அவரவர் வீடுகளுக்குப் புறப்பட வேண்டிய நாளும் வந்தது.
மற்றவர்களுக்கு எப்படி இருந்ததோ தெரியாது. ஆனால் ஆதிரையின் மனதில் மட்டும் ஒரு வித சந்தோஷம் இருந்தது.
“நாளையிலிருந்து சர்வேஷ் ஆதிரன் பின்னாடி சுத்த மாட்டான்… அவனும் கொஞ்சம் கொஞ்சமா பழைய மாதிரி ஆகிடுவான்…”
என்ற நம்பிக்கை அவளுக்குள் தோன்றியது.
அன்று இரவு, தன் அறையில் இருந்த ஆதிரை, அலமாரியில் இருந்த உடைகளை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து டிராலி பேக்கில் ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தாள்.
அந்த நேரத்தில், சர்வேஷைத் தூக்கிக் கொண்டு மித்ரா உள்ளே வந்தாள்.
“அண்ணி… ஏன் இப்பவே எல்லாம் எடுத்து வைக்கிறீங்க? நாளைக்கு மதியம் மாதிரிதானே கிளம்புறோம்?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.
அதற்கு ஆதிரை மெதுவாகப் புன்னகைத்து,
“இப்பவே எடுத்து வச்சுட்டா நல்லதுதானே மித்ரா… நாளைக்கு அவசரப்பட வேண்டாம்.”
என்று கூறினாள்.
பிறகு சர்வேஷை பார்த்து,
“சர்வேஷ் கண்ணா… நீ அத்தை கூட தூங்கு. அம்மா இதெல்லாம் அடுக்கி வச்சுட்டு வந்துடுறேன்.”
என்று மென்மையாகச் சொன்னாள்.
ஆனால் சர்வேஷ், மித்ராவின் கைகளிலிருந்து கீழே இறங்கியவன்,
“அம்மா… நான் ஆதி அப்பாவோட தூங்கப் போறேன்!”
என்று சந்தோஷமாகச் சொல்லிவிட்டு, பதிலைக்கூட எதிர்பார்க்காமல் ஓடிவிட்டான்.
அவன் ஓடிச் செல்வதைப் பார்த்த ஆதிரையின் இதயம் ஒரு கணம் கனத்தது.
ஆனால் அவள் எதுவும் சொல்லவில்லை.
“இன்னைக்கு ஒரு நாள் தானே… நாளைக்குப் பிறகு எல்லாம் மாறிடும்…”
என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டு, அமைதியாக தன் வேலையைத் தொடர்ந்தாள்.
அடுத்த நாள் மதியம்…
அனைவரும் ஊருக்குப் புறப்படுவதற்காக தயாராகிக் கொண்டிருந்தனர். வீட்டில் ஒருபுறம் சிரிப்பும், மறுபுறம் பிரிவின் சோகமும் கலந்த ஒரு விசித்திரமான சூழல் நிலவியது.
அவர்களுடைய பயணத்திற்காக முன்பே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேனும் வீட்டின் வாசலில் வந்து நின்றது.
ஒவ்வொருவரும் தங்களது சாமான்களை எடுத்துக் கொண்டு வெளியே வர ஆரம்பித்தனர்.
அனைவரும் தங்களது சாமான்களை வேனில் ஏற்றிவிட்டு, ஒருவரன்பின் ஒருவர் உள்ளே ஏறினர். அனைவரும் அமர்ந்ததும், வேன் மெதுவாக அந்த வீட்டை விட்டு புறப்பட்டு சென்னையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது.
பயணம் முழுவதும் ஒவ்வொருவரும் அவரவர் எண்ணங்களில் மூழ்கியிருந்தனர். சிலர் சோர்வால் கண்களை மூடி அமர்ந்திருந்தனர். சிலர் அவ்வப்போது பேசிக் கொண்டாலும், அந்தப் பேச்சிலும் ஒரு அமைதி கலந்திருந்தது.
சர்வேஷ் மட்டும் வழக்கம்போல ஆதிரனின் அருகிலேயே அமர்ந்திருந்தான். அவன் சிறிய சிறிய விஷயங்களைக் கேட்டுக் கொண்டும், ஆதிரனோ அவனுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டும் வந்தான். அந்தக் காட்சியைப் பார்த்த ஆதிரை, அமைதியாக ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது மனம் மட்டும் எதையோ இழக்கப் போகும் உணர்வில் தவித்துக் கொண்டிருந்தது.
இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, வேன் சென்னையை வந்தடைந்தது.
நேராக கதிரின் வீட்டின் முன்பு வந்து நின்றது.
வேன் நின்றதும், அனைவரும் ஒவ்வொருவராக கீழே இறங்கினர். கதிரின் குடும்பத்தினர் முதலில் இறங்கினர். வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஆட்கள் விரைந்து வந்து, வேனில் இருந்த பைகளையும் டிராலிகளையும் எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் கொண்டு செல்ல ஆரம்பித்தனர்.
அப்போது கதிர், ஸ்ரீராமையும் மற்றவர்களையும் பார்த்து,
“உள்ள வாங்க… எல்லாரும் ஒரு டீ குடிச்சிட்டு அப்புறம் கிளம்பலாமே.”
என்று அன்போடு அழைத்தான்.
அதற்கு ஸ்ரீராம் மெதுவாகச் சிரித்தபடி,
“இல்ல கதிர்… வேணாம். நாங்க கிளம்புறோம். இன்னொரு நாள் நிதானமா வர்றோம்.”
என்று கூறினான்.
அவர்கள் கிளம்பத் தயாரான அந்த நொடியில்தான், ஆதிரையின் இடுப்பில் அமர்ந்திருந்த சர்வேஷ் திடீரென்று ஆதிரனைப் பார்த்தான்.
அவன் முகத்தில் இருந்த புன்னகை மெல்ல மறைந்து, ஏதோ புரிந்தது போல கண்கள் கலங்கின.
“அப்பா… நீங்க எங்க போறீங்க?”
என்று சிறிய குரலில் கேட்டவன், அடுத்த நொடியே,
“நீங்க என்னோட அப்பாதானே… என்கூடதான் இருக்கணும். போகாதீங்க…”
என்று ஏக்கத்துடன் கூறினான்.
அந்தப் பிஞ்சு மனதின் வார்த்தைகளைக் கேட்டதும், அங்கே நின்றிருந்த அனைவருக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை.
ஒரு கனமான அமைதி அங்கே நிலவியது.
ஆதிரனின் இதயமும் அந்தக் குழந்தையின் அழைப்பில் உடைந்து போனது. அவன் எதுவும் பேச முடியாமல் சர்வேஷையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆதிரை உடனே தன்னைச் சமாளித்துக் கொண்டு,
“சர்வேஷ்… சும்மா இரு
என்று மெதுவாகச் சொன்னாள்.
ஆனால் சர்வேஷ் கேட்கவே இல்லை.
“இல்லம்மா… அப்பாவை போக வேண்டாம்னு சொல்லுங்க… அப்பா போகக்கூடாது…”
என்று உதட்டைப் பிதுக்கிக் கொண்டு அழ ஆரம்பித்தான்.
அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.
அந்த அழுகையைப் பார்த்த ஆதிரனின் மனம் நொறுங்கியது. அங்கே இருந்த அனைவரின் முகமும் சோகத்தில் வாடியது.
அதற்கு மேல் சர்வேஷை அங்கே நிற்க வைத்திருக்க ஆதிரையால் முடியவில்லை.
கண்களில் தெரிந்த வலியை மறைத்தபடி, அவனை இறுகத் தூக்கிக் கொண்டவள்,
“வா கண்ணா…”
என்று மெதுவாகச் சொல்லி வீட்டிற்குள் நடக்கத் தொடங்கினாள்.
ஆனால் சர்வேஷ் தொடர்ந்து ஆதிரனைப் பார்த்தபடியே,
“அப்பா… அப்பா… போகாதீங்கப்பா…!”
என்று சொல்லிக் கொண்டே அழுதான்.
அவனது ஒவ்வொரு அழைப்பும் ஆதிரனின் இதயத்தில் ஆழமாகப் பதிந்தது. அங்கேயே நின்றிருந்த அவனால் ஒரு அடிகூட முன்னோக்கி எடுத்து வைக்க முடியவில்லை. சர்வேஷின் கண்ணீர், அவனது மனதை முழுவதுமாகக் கட்டிப்போட்டிருந்தது.
தொடரும்