அழகாக நாட்கள் ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்தன. ஆனால் அந்த நாட்கள் நகர்ந்தாலும், ஆதிரனும் ஆதிரையும் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இருவருக்கும் இடையே இருந்த அந்த அமைதி அப்படியே தொடர்ந்தன.
ஒவ்வொரு நாளும் காலையில் ஆதிரன் அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்று விடுவான். அவன் சென்ற பிறகு ஆதிரை வீட்டில் உள்ள வேலைகளை முடித்துவிட்டு, வீட்டுப் பெண்களுடன் பேசிக்கொண்டும், சர்வேஷை கவனித்துக்கொண்டும் தனது நேரத்தை கழிப்பாள். அவளுடைய நாள் முழுவதும் வீட்டைச் சுற்றியே நகர்ந்தது.
மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பும் ஆதிரன், முதலில் சர்வேஷைத் தான் தேடுவான். வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவனைத் தூக்கிக் கொண்டு விளையாடுவது, அவன் மழலைச் சிரிப்பில் தன் சோர்வை மறப்பது, பிறகு அனைவருடனும் சேர்ந்து இரவு உணவை சாப்பிடுவது, அதன் பிறகு உறங்கச் செல்வது இதுவே அவனுடைய அன்றாட வாழ்க்கையாக மாறியிருந்தது.
ஆதிரையைப் பொறுத்தவரை, அவளுக்கும் அதே வாழ்க்கைதான். ஆதிரன் அருகில் இருந்தாலும், இருவருக்கும் இடையே பெரிதாக எந்த உரையாடலும் இல்லை.
அதேபோல் விக்ரமும் அஞ்சலியின் வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிருந்தது. விக்ரம் எவ்வளவோ முறை அஞ்சலியிடம் பேச முயன்றான். அவளின் கோபம் குறைய வேண்டும், அவள் மனம் மாற வேண்டும் என்று பல விதமாக முயற்சி செய்தான். ஆனால் அஞ்சலி அவனை முழுவதுமாக புறக்கணித்தாள். அவன் பேச வந்தாலே வேறு வேலை இருப்பது போல விலகிச் சென்று விடுவாள். அவளுடைய அந்த அலட்சியம் விக்ரமின் மனதை மிகவும் காயப்படுத்தினாலும், அவன் அதை வெளிக்காட்டாமல் பொறுமையாகவே இருந்தான்.
ஒவ்வொரு நாளும் காலையில் தனது மாமனார் செந்திலின் அலுவலகத்திற்குச் சென்று, அங்குள்ள வேலைகளை கவனித்து முடித்துவிட்டு, மாலை நேரத்தில் வீடு திரும்புவது அவனுடைய வழக்கமாகிவிட்டது.
இப்படியே அனைவரின் வாழ்க்கையும் ஒரே மாதிரியான பாதையில் நகர்ந்து கொண்டிருக்க, கோகுலுக்குத்தான் பயங்கரமாகப் போர் அடித்தது.
“இப்படி தினமும் வீட்டிலேயே இருந்தா பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கே… ஏதாவது கலாட்டா பண்ணணும்!” என்று தனக்குத்தானே யோசித்தவன், அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைவரையும் ஒன்றாகச் சேர்க்க ஒரு திட்டம் போட்டான்.
உடனே கதிருக்கு அழைத்து, “அண்ணா நீயும் அண்ணியும் கண்டிப்பா வீட்டுக்கு வந்துடணும். என்று கூறினான்.
கதிரும் சரி என்று சொல்லி, நிலா, மித்ரா, யாழினி ஆகியோரையும் அழைத்துக் கொண்டு ஆதிரன் வீட்டிற்கு வந்தான்.
வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து சமையல் செய்தனர். சிரிப்பும், கலாட்டாவும், சிறிய கிண்டல்களும் கலந்து வீடே உற்சாகமாக இருந்தது. அனைவரும் ஒன்றாக அமர்ந்து வயிறு நிறைய சாப்பிட்டனர். அதன் பிறகு ஹாலில் வட்டமாக அமர்ந்து பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
கோகுல் முகத்தைச் சுளித்துக் கொண்டு,
“எனக்கு போர் அடிக்குதுன்னுதான் உங்களை எல்லாம் வரச் சொன்னேன். நீங்க என்னடான்னா பேசி பேசி ரொம்ப போர் அடிக்கிறீங்க. கொஞ்ச நேரம் ஏதாவது விளையாடலாமே!” என்று கேட்டான்.
அவன் சொன்னதும் அனைவரும் அவனைப் பார்த்தனர்.
உடனே ஸ்ரீராம் சிரித்துக் கொண்டு,
“என்னடா… மறுபடியும் கண்ணாமூச்சி, கண்ணைக் கட்டி விளையாடணுமா?” என்று கிண்டலாகக் கேட்டார்.
அதைக் கேட்ட கோகுல் உடனே,
“மாமா… ஒரே விளையாட்டை எத்தனை தடவை விளையாட முடியும்? புதுசு புதுசா ஏதாவது விளையாடணும். அப்போதான் ஜாலியா இருக்கும்,” என்றான்.
“சரி… அப்படி என்ன புதுசு விளையாட்டு?” என்று விக்ரம் ஆர்வமாகக் கேட்டான்.
அதற்கு கோகுல் கண்களில் குறும்பு மின்ன,
“நான் இப்போ இங்க இருக்க ஒவ்வொருத்தருக்கும் ஒரு சீட்டில் ஒரு டாஸ்க் எழுதப் போறேன். அந்த சீட்டுகளை எல்லாம் மடிச்சு ஒரு பாத்திரத்துல போடுறேன். அப்புறம் ஆளுக்கு ஒரு சீட்டு எடுக்கணும். யாருக்கு என்ன டாஸ்க் வருதோ, அதை எந்த காரணமும் சொல்லாம செஞ்சே ஆகணும். ஓகேவா?” என்றான்.
அவனுடைய திட்டத்தைக் கேட்டதும் அனைவரின் முகத்திலும் ஆர்வம் தெரிந்தது.
ஆனால் லட்சுமி உடனே முகத்தைச் சுருக்கிக் கொண்டு,
“டேய்… ஏதாவது ஆடச் சொல்லிடாதடா. இந்த வயசுல எனக்கு டான்ஸ் எல்லாம் ஆடத் தெரியாது,” என்று முன்கூட்டியே எச்சரித்தார்.
அதைக் கேட்ட கோகுல் சிரிப்பை அடக்க முடியாமல்,
“அத்தை… நான் எழுதுற சீட்டுல டான்ஸும் இருக்கும். அது உங்க கைக்கு வந்துடுச்சுன்னா… கண்டிப்பா நீங்க டான்ஸ் ஆடித்தான் ஆகணும். அதுல எந்த மாற்றமும் இல்லை!” என்று குறும்பாகச் சொல்ல,
“அய்யய்யோ… இவன் கிட்ட மாட்டிக்கிட்டோமே!” என்று லட்சுமி தலையில் கை வைத்துக் கொள்ள, அங்கே இருந்த அனைவரும் சிரித்தனர்.
கோகுல் அனைவரையும் தன் அருகில் அமரச் செய்து, தான் கையில் தயாரித்து வைத்திருந்த சீட்டுகளைச் ஒரு பாத்திரதுல போட்டான்.
அனைவரும் ஆவலோடு அவரவர் பங்குகளுக்கு ஒரு சீட்டைக் கையில் எடுத்தனர்.
அவர்களைப் பார்த்துக் கொண்டே கோகுல் கண்டிப்பான குரலில், “நான் சொல்லும்போதுதான் உங்க கையில் இருக்கிற சீட்டைப் பிரிச்சுப் பார்க்கணும். அதுவரைக்கும் யாரும் அதைத் திறக்கக் கூடாது” என்று எச்சரித்தான். அனைவரும் புன்னகையுடன் சரி என்று தலையாட்டினார்கள்.
பிறகு விக்ரமைப் பார்த்து உற்சாகமாக, “மச்சான், நீங்கதான் முதல்ல!” என்றான்.
விக்ரம் தன் கையில் இருந்த சீட்டைப் பிரித்துப் பார்த்தான். அதில் ‘பாடல் பாட வேண்டும்’ என்று எழுதியிருந்தது. அதைப் படித்ததும் அவன் ஒரு வினாடி தயங்க, உடனே கோகுல் குறும்புச் சிரிப்புடன், “சரி சரி… அப்புறம் என்ன, பாட்டைப் பாடுங்க!” என்று அவனைக் கட்டாயப்படுத்தினான்.
அனைவரும் ஆரவாரம் செய்து கைதட்டி அவனுக்கு உற்சாகக் குரல் எழுப்பினார்கள். அந்தச் சூழலே கலகலப்பாக மாற, விக்ரம் அங்கிருந்த அஞ்சலியைத் தன் பார்மையால் வருடியபடியே மெல்லப் பாடத் தொடங்கினான்:
💓”ஒருநாள் சிரித்தேன், மறுநாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா?, மன்னிப்பாயா?
மன்னிப்பாயா?,
கனவே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…
தொலைதூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை
ஈர்க்கிறாயே
மேலும்-மேலும் உருகி-உருகி
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்?
ஓ… உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்?
ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் நான் தவறிவிட்டேன்…
மன்னிப்பாயா?, அன்பே!”
விக்ரம் பாடலை முடித்தவுடன், அனைவரும் உற்சாகமாக கைதட்டி அவனைப் பாராட்டினர். சில நொடிகள் அந்த சந்தோஷமான சிரிப்பும், கைத்தட்டலின் சத்தமும் அந்த சூழலை இன்னும் கலகலப்பாக்கியது.
கோகுல் சிரிப்பை அடக்க முடியாமல் விக்ரமைப் பார்த்து, “நாட்களாக புரியுது… புரியுது மச்சான்!” என்று கிண்டலாகக் கூறினான்.
“சும்மா இருடா…” என்று வெட்கத்துடன் அவனை முறைத்தான் விக்ரம்.
அதைக் கவனித்த அஞ்சலி, விக்ரமைப் பார்த்து கண்களைச் சுருக்கி முறைத்தாள். அவள் கோபத்தை உணர்ந்த விக்ரம், எதுவும் பேசாமல் கண்களாலேயே “சாரி…” என்று மன்னிப்பு கேட்டான். அவனது அந்த குழந்தைத்தனமான முகபாவனையைப் பார்த்த அஞ்சலிக்கும் சிரிப்பு வந்தாலும், அதை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தாள்.
அவர்களின் அந்த அமைதியான கண்பாஷை பார்த்த அனைவரும் சிரித்துக் கொண்டிருக்க, கோகுல் உடனே,
“சரி… சரி… போதும். நீங்க ரெண்டு பேரும் கண்ணாலே பேசிக்கிட்டது . இப்ப அடுத்த ஆளு…” என்று கூறி,
“மாமா… இப்ப நீங்கதான்.”
அனைவரின் பார்வையும் ஸ்ரீராமின் மீது திரும்பியது. அவர் புன்னகையுடன் சீட்டை பிரித்துப் பார்த்தார்.
அதில்,
“உங்களின் வாழ்க்கைத்துணையைப் பற்றி சொல்லவும்.”
என்று எழுதப்பட்டிருந்தது.
அதைப் படித்ததும், அங்கிருந்த அனைவரின் முகத்திலும் ஆர்வம் பரவியது. ஸ்ரீராம் என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய அனைவரும் அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஸ்ரீராம் மெதுவாக தன் அருகில் அமர்ந்திருந்த லட்சுமியின் தோளை அன்பாக அணைத்துக் கொண்டார். அந்த ஒரு அணைப்பிலேயே அவரின் காதலும், பாசமும் வெளிப்பட்டது.
பிறகு லட்சுமியைப் பார்த்து புன்னகைத்தபடி பேசத் தொடங்கினார்.
“இவ… என் வாழ்க்கையில எனக்குக் கிடைச்ச மிகப் பெரிய வரம். இவ இல்லனா, நான் இந்த அளவுக்கு சந்தோஷமா வாழ்ந்திருப்பேனா என்றே தெரியல. என் வாழ்க்கையை முழுமையாக்குனது இவதான்.”
சிறிது நேரம் நினைவுகளை மீட்டவர் மீண்டும் தொடர்ந்தார்.
“நான் காலேஜ் படிச்சிட்டு இருந்தப்ப, என்னோட ஒரு நண்பன் அவனோட ஊர்ல கோவில் திருவிழா நடக்குதுன்னு சொல்லி என்னையும் கூட்டிக்கிட்டுப் போனான். நானும் அவனோட போனேன். அங்கதான்… முதல் தடவையா இவளை பார்த்தேன்.”
அவர் லட்சுமியை ஒரு கணம் ரசித்துப் பார்த்தார்.
“பார்த்த அந்த நிமிஷமே என் மனசு இவ காலடியில் விழுந்துடுச்சு. எப்படியாவது என் காதலை சொல்லணும்னு தைரியம் வரவழைச்சிக்கிட்டு இவகிட்ட போனேன். ஆனா… நான் காதலை சொல்ல வாயைத் திறக்கிறதுக்கு முன்னாடியே, விளக்கமாத்தை எடுத்துக்கிட்டு என்னைத் துரத்த ஆரம்பிச்சுட்டா.”
அவர் சொல்லி முடிக்க, அங்கிருந்த அனைவரும் வயிறு குலுங்கச் சிரித்தனர். லட்சுமி வெட்கத்தில் தலை குனிந்து, “அதையெல்லாம் இப்ப சொல்லணுமா…” என்பது போல அவரை மெதுவாக முறைத்தார்.
ஸ்ரீராமும் சிரித்தபடி,
“அன்னைக்கே புரிஞ்சிடுச்சு… இவள லவ் பண்ண வைக்கிறது அவ்வளவு சுலபம் இல்லன்னு. ஆனாலும் மனசு விடல. அதுக்கப்புறம் நேரா இவங்க வீட்டுக்கே போயிட்டேன்.”
என்றார்.
“ஆனா அவங்க வீட்டுல, ‘பட்டணத்துக்காரனுக்குப் பொண்ணு தர முடியாது’ன்னு ஒரே அடியா மறுத்துட்டாங்க. என்ன பண்றதுன்னே தெரியல. இவளை இழக்கக் கூடாதுன்னு மட்டும் தோணிச்சு.”
இவ்வளவு சொல்லிவிட்டு, எதிரே அமர்ந்திருந்த கோகுலை ஒரு கணம் பார்த்தார். பிறகு மீண்டும் தொடர்ந்தார்.
“கடைசில… வேற வழியே இல்லாம, அவங்க வீட்டுல இருந்த எல்லாரோட கால்லயும் விழுந்தேன். ‘எப்படியாவது இவளை எனக்குக் கட்டி வைச்சிருங்க. இவ இல்லாம என்னால வாழ முடியாது’ன்னு கெஞ்சினேன். அதுக்கப்புறம்தான் அவங்களோட மனசு இறங்கி, எனக்கே இவளைத் திருமணம் செய்து வைத்தாங்க.”
அவர் சொல்லி முடித்ததும், சில நொடிகள் அந்த இடமே அமைதியாக இருந்தது.
அங்கிருந்த அனைவரின் முகத்திலும் ஆச்சரியம் தென்பட்டது. தனக்குப் பிடித்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, எந்தவிதமான ஈகோவும் பார்க்காமல், அவளது குடும்பத்தினரின் காலில் கூட விழத் தயங்காத ஸ்ரீராமின் காதல் அனைவரின் மனதையும் நெகிழச் செய்தது.
லட்சுமியின் கண்களிலும் கண்ணீர் மின்னியது. இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும், தன் மீது கணவன் வைத்திருக்கும் அதே அன்பும் மரியாதையும் அவளது இதயத்தை மீண்டும் ஒருமுறை நெகிழ வைத்தது. அந்த தருணத்தைப் பார்த்திருந்த மற்றவர்களும், “உண்மையான காதல் என்றால் இதுதான்…” என்று மனதிற்குள் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அவர், புன்னகையுடன் அனைவரையும் சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினார்.
“உங்க எல்லார்கிட்டயும் நான் ஒரு விஷயம் சொல்லணும்…”
அவர் சொன்ன அந்த ஒரு வரியிலேயே, அங்கிருந்த அனைவரின் கவனமும் முழுவதுமாக அவரின் மீது திரும்பியது.
“நமக்குப் பிடிச்சவங்களுக்காக எதையும் விட்டுக் கொடுக்கலாம். அதுல எந்தத் தப்பும் இல்ல. அது நம்ம சுயமரியாதையா இருந்தாலும் சரி, நம்ம ஈகோவா இருந்தாலும் சரி… உண்மையான அன்பு இருக்கிற இடத்துல, அவையெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.”
என்று கூறியவர், ஒரு கணம் இடைவெளி விட்டார்.
“இப்ப நான், இவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு அவங்க வீட்டுல இருந்தவங்க கால்ல விழுந்தேன்னு சொன்னேன் அதை கேட்ட உங்க யாருக்காவது அது அவமானமா தெரியுதா?”
என்று கேட்டபடியே ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்தார்.
அனைவரும் ஒரே நேரத்தில் தலையசைத்து, “இல்லை…” என்றனர்.
அவர் புன்னகைத்தபடி ஆதிரனைப் பார்த்தார்.
“ஆதி… உனக்கு அது அவமானமா தோணுதா?”
என்று கேட்டார்.
ஆதிரனும் சிறிதும் யோசிக்காமல்,
“இல்ல அப்பா…”
என்று பதிலளித்தான்.
“அதுதான்…” என்று மெதுவாகச் சிரித்த ஸ்ரீராம் மீண்டும் தொடர்ந்தார்.
“இப்ப புரியுதா? நம்ம இப்போ எதை அவமானம், அசிங்கம், சுயமரியாதை குறைஞ்சது என்று நினைக்கிறோமோ… அதையே கொஞ்சம் வருஷம் கழிச்சு திரும்பிப் பார்த்தா, ‘அப்பவே செஞ்சிருக்கலாமே… தேவையில்லாம இவ்வளவு யோசிச்சோமே…’ன்னு தான் தோணும். வாழ்க்கை நமக்கு அதைத்தான் கற்றுக்கொடுக்குது.”
அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அங்கிருந்தவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்தது.
“ஏன்… எங்க வீட்டுல இருந்தவங்களுக்கே, நான் இவ வீட்டில் உள்ளவர்கள் கால்ல விழுந்தேன்னு தெரிஞ்சதும் அவ்வளவு திட்டுனாங்க. குறிப்பா எங்க அம்மாவும் அப்பாவும் ரொம்ப வருத்தப்பட்டாங்க.”
“ஏன்னா, அந்த நேரத்துல அது அவங்களுக்கு பெரிய அவமானமா தெரிஞ்சது. ‘இவ்வளவு வசதியான வீட்டுப் பையன், ஒரு கிராமத்து வீட்டுக்குப் போய் அவங்களோட கால்ல விழுந்துட்டானே…’ன்னு அவங்களுக்கு ரொம்ப ஆதங்கம். என்னை திட்டினாங்க.”
என்று கூறியவர், அஞ்சலியைப் பார்த்தார்.
“அஞ்சலிம்மா… உன் அம்மா இதுவரைக்கும் இந்த விஷயத்தைப் பற்றி உன்கிட்ட சொல்லியிருக்காளா?”
என்று கேட்டார்.
அஞ்சலி உடனே,
“இல்ல மாமா…”
என்று தலையசைத்தாள்.
“பாத்தியா…?” என்று சிரித்தார் ஸ்ரீராம்.
“ஏன்னா, அவங்களுக்கும் அது ஒரு சங்கடமான விஷயமா இருந்திருக்கும். ‘தன்னோட அண்ணன் ஒரு பொண்ணுக்காக அடுத்தவங்க கால்ல விழுந்தாரு’ன்னு வெளியில சொல்லவே அவங்களுக்கு தயக்கமா இருந்திருக்கும்.”
“உண்மையைச் சொல்லணும்னா, இப்ப வரைக்கும் என் தங்கச்சி உன் அப்பாகிட்ட கூட இதைப் பற்றி சொல்லியிருக்க மாட்டா. அவங்களோட பார்வையில அது அவமானம்.
ஆனா…”
“எல்லாரும் எதை அவமானம்னு நினைக்கிறாங்களோ, அந்த விஷயத்தை நான் ஒரு நாள்கூட அவமானம்னு நினைச்சதே இல்ல. எனக்குப் பிடிச்ச பொண்ணு என் வாழ்க்கைக்குள்ள வரப்போறாள்னு சந்தோஷம்தான் என் மனசுல இருந்தது. அந்த சந்தோஷத்துக்கு முன்னாடி என் ஈகோவும், சுயமரியாதையும், பெருமையும் எல்லாமே சின்னதுதான்.”
அவரது குரலில் இருந்த உறுதியும், கண்களில் தெரிந்த காதலும் அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது.
“இப்ப வரைக்கும் அந்த சம்பவத்தை நினைச்சு நான் ஒரு நாள்கூட சங்கடப்பட்டதே இல்ல. மாறாக, அதைப் பெருமையாத்தான் நினைக்கிறேன். இதோ… உங்க முன்னாடி எந்த தயக்கமும் இல்லாம சொல்றேன். ஏன்னா, அது என் காதலுக்காக நான் செய்த ஒரு விஷயம். அதுல எனக்கு வெட்கப்படுறதுக்கு எதுவுமே இல்ல.”
அவர் சிரித்தபடியே லட்சுமியின் கையைப் பிடித்துக் கொண்டார்.
“இன்னும் சொல்லப்போனா, நாளைக்கு என் பேரன், பேத்தி அவங்ககிட்ட கூட இதை பெருமையாத்தான் சொல்லுவேன். ‘உங்க பாட்டியை கல்யாணம் பண்ணிக்கணும்னு, தாத்தா அவங்க வீட்டுப் பெரியவங்க கால்ல விழுந்தான்னு நானே சிரிச்சுக்கிட்டே சொல்லுவேன்.
அந்த ஒரு முடிவுதான் என் வாழ்க்கையை இவ்வளவு அழகாக்குச்சு. அந்த நாளை நான் ஒருபோதும் மறக்கவும் மாட்டேன்… மறைக்கவும் மாட்டேன்.”
அவர் பேசி முடித்ததும், அந்த இடத்தில் சில நொடிகள் ஆழ்ந்த அமைதி நிலவியது. யாராலும் உடனடியாக எதுவும் பேச முடியவில்லை. காதலுக்காக தனது அகந்தையைக் கூட துறக்கத் தயங்காத அந்த மனிதரின் மனப்பக்குவமும், அன்பின் ஆழமும் அங்கிருந்த ஒவ்வொருவரின் இதயத்தையும் தொட்டிருந்தது. லட்சுமியின் கண்கள் கலங்க, பெருமை கலந்த புன்னகையுடன் தனது கணவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
தொடரும்