💓அத்தியாயம் 《34》

அவ்வளவு நேரமாக தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டு, கண்ணீரை வெளிக்காட்டாமல் உறுதியாக நின்றிருந்த ஆதிரைக்கு, கதிர் சொன்ன அந்த ஒரு வார்த்தை—

“போயிட்டு வரேன்… அம்மு…”

அவளின் மனதை முற்றிலும் உடைத்துவிட்டது.

அதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர்  அவளால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

அடுத்த நொடியே வேகமாக கதிரின் அருகே சென்று, அவன் மார்பில் சாய்ந்து கதறி அழத் தொடங்கினாள்.

அந்த காட்சி அங்கிருந்த அனைவரின் கண்களையும் கலங்கச் செய்தது.

கதிரும் தன் தங்கையை இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.

அவள் முதுகை மெதுவாகத் தடவியபடி, அவளை சமாதானப்படுத்த முயன்றான்.

ஆதிரைக்கு என்று இருக்கும் ஒரே ஒரு இரத்த உறவு கதிர் மட்டும்தான்.

தாய், தந்தையை இழந்த பிறகு, அவளுக்கு அண்ணனாக மட்டுமல்ல…

தந்தையாகவும்…

தாயாகவும்…

நண்பனாகவும்…

ஆறுதலாகவும்…

எல்லாமாகவும் இருந்தவன் அவன்தான்.

அவளின் ஒவ்வொரு கண்ணீருக்கும் காரணம் என்ன என்று கேட்காமலேயே புரிந்துகொள்ளும் ஒரே மனிதன் கதிர்.

 

நிலாவுடன் இல்லற வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும், அவன் மனம் முழுவதும் ஆதிரையின் வாழ்க்கையைப் பற்றிய கவலைதான் நிறைந்திருந்தது. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஒரே எண்ணமே அவனை ஒவ்வொரு நாளும் துரத்தியது. 

அவள் வெளியில் சிரித்தாலும், உள்ளுக்குள் எவ்வளவு வேதனையோடு வாழ்கிறாள் என்பதை அவன் மட்டுமே நன்றாக அறிந்திருந்தான்.

அதனால் அவளுக்கு மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காக எத்தனையோ இரவுகள் தூங்காமல் கவலைப்பட்டிருக்கிறான்.

ஆனால் இன்று…

தன் தங்கைக்கு மீண்டும் ஒரு வாழ்க்கை கிடைத்திருக்கிறது.

அதுவும் தன் உயிர் நண்பனான ஆதிரனின் வாழ்க்கைத் துணையாக.

ஆதிரன் எந்தச் சூழ்நிலையிலும் ஆதிரையை விட்டுக் கொடுக்க மாட்டான்… அவளையும் சர்வேஷையும் தன் உயிராகப் பார்த்துக்கொள்வான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கதிருக்கு இருந்தது.

அந்த நம்பிக்கையே இன்று அவன் மனதிற்கு சிறிய நிம்மதியைக் கொடுத்தது.

உண்மையில், இந்தத் திருமணத்திற்கு ஆதிரை சம்மதிக்க முக்கியமான காரணங்களில் ஒருவன் கதிர்தான்.

தன்னால் தன் அண்ணன் நிம்மதியில்லாமல் வாழ்வதை அவளால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.

தன் வாழ்க்கையை நினைத்து அவன் ஒவ்வொரு நாளும் மனவேதனையுடன் இருப்பதைப் பார்க்கும் போதெல்லாம், அவளது மனமே உடைந்து போய்விடும்.

“என்னால என் அண்ணன் இப்படி கஷ்டப்படக் கூடாது…”

என்ற எண்ணம்தான் இறுதியில் அவளை இந்தத் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தது.

தன் மனம் இன்னும் தயாராக இல்லாவிட்டாலும், கதிரின் நிம்மதிக்காகவும், சர்வேஷின் எதிர்காலத்திற்காகவும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டிருந்தாள்.

கதிர் அவளது தலையை மெதுவாகக் கோதினான்.

“அம்மு… அழாதடா. நீ சந்தோஷமா இருக்கணும்… அதுதான் எனக்கு வேணும். ஆதி உன்னை நல்லாப் பாத்துப்பான். எந்தக் கவலையும் இல்லாம நிம்மதியா இரு…” என்று அவளுக்கு ஆறுதல் கூறினான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு ஆதிரை மெதுவாக அவனிடமிருந்து விலகினாள்.

கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அமைதியாக நின்றாள்.

கதிரும் அவளது நெற்றியில் பாசமாக முத்தமிட்டான்.

பிறகு ஆதிரனை நோக்கி,

“என் தங்கையை…” என்று தொடங்கியவன், அதற்கு மேல் பேச முடியாமல் நின்றான்.

ஆதிரன் அவன் தோளில் கை வைத்து,

“எதுவும் சொல்ல வேண்டாம் கதிர்… அவள் இனிமேலும் உன் தங்கை மட்டுமல்ல, என்னோட  மனைவி அவளையும் சர்வேஷையும் நான் நல்லாப் பாத்துப்பேன்.”

என்று உறுதியுடன் கூறினான்.

அந்த வார்த்தைகள் கதிரின் மனதில் இருந்த கடைசி பயத்தையும் நீக்கின.

மனநிறைவுடன் தலையசைத்தவன், நிலா, மித்ரா, யாழினி ஆகியோருடன் அங்கிருந்து கிளம்பினான்.

அவர்கள் சென்ற பிறகு, வீட்டில் ஒரு விதமான அமைதி நிலவியது.

வாசலை நோக்கி அவர்கள் சென்ற திசையையே சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்த ஆதிரையின் மனம் மீண்டும் கனத்தது.

அதே நேரத்தில், கதிரின் மனத்தில் மட்டும் ஒரு சிறிய நிம்மதி பிறந்திருந்தது.

“என் தங்கை இனி தனியாக இல்லை… அவளுக்கென்று ஒரு பாதுகாப்பான வாழ்க்கை கிடைத்துவிட்டது…”

என்ற பெருமிதம் அவன் உள்ளம் முழுவதும் நிறைந்திருந்தது.

அந்த நிம்மதியுடனேயே, தனது குடும்பத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

அவர்கள் அனைவரும் கிளம்பிச் சென்ற பிறகு, வீடு மீண்டும் அமைதியாக மாறியது. அந்த அமைதிக்குள் ஆதிரை, அஞ்சலியுடன் சேர்ந்து வீட்டிலிருந்த சிறு சிறு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். பாத்திரங்களை ஒழுங்குபடுத்துவது, சமையலறையை சுத்தம் செய்வது, வீட்டில் இருந்த பொருட்களை அடுக்கி வைப்பது என்று இருவரும் பேசிக் கொண்டே வேலையை முடித்தனர்.

சிறிது நேரம் கழித்து அஞ்சலி, ஆதிரையைப் பார்த்து,

“ஆதிரை, நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு. நான் பார்த்துக்கிறேன்,” என்று அக்கறையுடன் கூறினாள்.

அதற்கு மெதுவாக புன்னகைத்த ஆதிரை,

“பரவாயில்ல அஞ்சலி… எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. வேலை எல்லாம் முடிச்சுட்டு அப்புறம் போய் ஓய்வெடுக்கிறேன்,” என்றாள்.

அஞ்சலியும் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் அவளுடன் சேர்ந்து வேலையை முடித்தாள்.

சிறிது நேரத்தில் வீட்டிலிருந்த வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டன. அதன் பிறகு வீட்டிலிருந்த பெண்கள் அனைவரும் ஹாலில் ஒரு இடத்தில் வட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிரிப்பும், கலகலப்புமாக பேச்சு நீண்டு கொண்டிருந்தது.

அப்போது புஷ்பா திடீரென்று,

“அண்ணி… நாங்க நாளைக்கு கிளம்புறோம்,” என்று கூறினார்.

அவர் சொன்னதை கேட்ட லக்ஷ்மி சற்று அதிர்ச்சியடைந்து,

“என்ன புஷ்பா, என்ன சொல்ற? திடீர்னு கிளம்புறேன்னு சொல்ற. இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டுப் போகலாமே?” என்று கேட்டார்.

அதற்கு புஷ்பா சிரித்தபடியே,

“அண்ணி, இங்க வந்து ரெண்டு மாசம் ஆயிடுச்சு. விக்ரமுக்கும் உங்க அண்ணாவுக்கும் இங்கிருந்து தினமும் ஆபீஸ் போயிட்டு வர ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால்தான் நாளைக்கு கிளம்பலாம்னு முடிவு பண்ணிருக்கோம்,” என்றார்.

அதைக் கேட்ட  ஆதிரை  உடனே,

“நீயும் போறியா அஞ்சலி ?” என்று கேட்டாள்.

அஞ்சலி  மெதுவாக,

“ஆமா ஆதிர…” என்றாள்.

உடனே ஆதிரை முகத்தை சுளித்தபடி,

“நீ கொஞ்ச நாளைக்கு இருந்துட்டுப் போயேன். என்று ஆசையுடன் சொன்னாள்.

அதற்கு புஷ்பா,

“அப்போ சரி… நீயும் விக்ரமும் கொஞ்ச நாள் இருந்துட்டு வாங்க. நான் அப்பாவைக் கூட்டிக்கிட்டு போறேன்,” என்றார்.

அந்த நேரத்தில் அஞ்சலி உடனே,

“நான் இருக்கேன்ம்மா. விக்ரமைக் கூட்டிட்டு போங்க. அங்க அப்பாவுக்கு துணையா அவரு இருப்பாரு. நான் இங்கேயே கொஞ்ச நாள் இருந்துட்டு வர்றேன்,” என்றாள்.

அவள் சொன்னதை கேட்ட புஷ்பாவும்,

“சரி… அப்ப நாங்க நாளைக்கு கிளம்புறோம்,” என்று சம்மதமாக கூறினார்.

அஞ்சலி  இங்கேயே இருப்பதாக சொன்ன அந்த ஒரு வார்த்தை ஆதிரைக்கு  ஒரு வித நிம்மதியைத் தந்தது.

அஞ்சலியும் ஆதிரையும் ஒரே வயதைச் சேர்ந்தவர்கள். அதனால் இருவருக்கும் இடையே எந்தத் தயக்கமோ, சங்கடமோ இல்லை. சில நாட்களிலேயே நல்ல தோழிகளைப் போல பழகிவிட்டனர். மனதில் இருப்பதை மறைக்காமல் ஒருவரிடம் ஒருவர் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு அவர்களுக்குள் நெருக்கம் உருவாகி இருந்தது. 

 

அதனால்தான், அஞ்சலி இன்னும் சில நாட்கள் தன்னுடன் இங்கேயே இருக்க வேண்டும் என்று ஆதிரை ஆசையுடன் கேட்டாள். அஞ்சலிக்கும் அந்த வீட்டில் ஆதிரை இருப்பதால் தனிமை என்ற உணர்வே வரவில்லை. அவளுடன் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தால் மனதில் இருந்த பாரமும் சற்று குறைவது போலவே அவளுக்குத் தோன்றியது. 

அன்று இரவு அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் வீட்டிற்குள் ஆதிரன் வந்தான்.

அவனைப் பார்த்த ஸ்ரீராம்,

“என்னப்பா, இவ்வளவு நேரம்? எங்க போயிருந்த?” என்று கேட்டார்.

அதற்கு ஆதிரன் அமைதியாக,

“ஒன்னும் இல்லப்பா… கொஞ்சம் வேலை இருந்துச்சு. அதான் லேட் ஆயிடுச்சு,” என்றவன், அதற்கு மேல் எதுவும் பேசாமல் நேராக மாடிக்குச் சென்று விட்டான்.

சிறிது நேரத்தில் உடை மாற்றிக் கொண்டு கீழே வந்தவன், அனைவருடனும் சேர்ந்து உணவருந்த அமர்ந்தான். அவன் அமர்ந்ததும் லக்ஷ்மி அவனுக்கும் உணவு பரிமாறினார்.

அந்த நேரம் வரை விளையாடிக் கொண்டிருந்த சர்வேஷ், ஆதிரனைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக ஓடி வந்து,

“அப்பா…” என்று அழைத்தபடி அவன் மடியில் ஏறி அமர்ந்து கொண்டான்.

அதைப் பார்த்த ஆதிரை  ஒரு பெருமூச்சு விட்டாள். பிறகு ஆதிரனின் அருகில் வந்து அமர்ந்து, சர்வேஷுக்கு உணவு ஊட்டத் தொடங்கினாள். சர்வேஷும் ஆதிரனின் மடியில் வசதியாக அமர்ந்தபடி, ஆதிரை ஊட்டிய உணவை அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, புஷ்பா பேசத் தொடங்கினார்.

“நாங்க நாளைக்கு கிளம்புறோம்,” என்றார்.

அதைக் கேட்ட ஸ்ரீராம்,

“ஏன்மா… இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டுப் போகலாமே?” என்று கேட்டார்.

அதற்கு செந்தில்,

“இல்ல மச்சான்… இங்கிருந்து ஆபீசுக்கு போயிட்டு வர கொஞ்சம் கஷ்டமா இருக்கு. அதனால கிளம்புறது நல்லது. அடிக்கடி வந்துட்டுத்தானே இருப்போம்,” என்றார்.

உடனே புஷ்பா,

“அஞ்சலி இங்கதான் இருப்பா அண்ணா,” என்றார்.

அதைக் கேட்ட ஸ்ரீராம்,

“அப்படியா அம்மா?” என்று ஆச்சரியமாகக் கேட்டார்.

அஞ்சலி புன்னகையுடன்,

“ஆமாம் மாமா… ஆதிரைதான் கொஞ்ச நாள் இங்க இருக்க சொன்னாங்க. அதனால நானும் இருந்துட்டு போறேன்,” என்றாள்.

“சரிம்மா,” என்று ஸ்ரீராமும் சம்மதமாகத் தலையசைத்தார்.

அப்போது கோகுல், விக்ரமைப் பார்த்து,

“மச்சான், நீங்க கிளம்புறீங்களா… இல்ல இங்கேயே இருக்கீங்களா?” என்று கேட்டான்.

அந்தக் கேள்வியைக் கேட்டதும் விக்ரமின் மனதில் வேறு எண்ணமே ஓடியது.

அவன் நினைத்திருந்தது என்னவென்றால், வீட்டிற்குத் திரும்பிய பிறகு அஞ்சலியிடம் தனியாகப் பேசி அவளை சமாதானப்படுத்த வேண்டும் என்பதுதான். இங்கே இருந்தால் அவள் எப்போதும் யாராவது ஒருவருடன் பேசிக்கொண்டோ, சுற்றிக்கொண்டோ இருப்பாள். ஆனால் வீட்டில் அவள் தனியாக இருப்பாள்; அப்போது அமைதியாக அவளிடம் பேச முடியும் என்று நினைத்திருந்தான்.

ஆனால், அஞ்சலி இங்கேயே தங்கப் போகிறாள் என்று கேட்டவுடன் அவனுக்கு உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தது.

 

“அஞ்சலி, நீ எங்க இருந்தாலும் விக்ரம் இங்கேதான் இருக்கணும்,” என்று ஆதிரன் கூறினான்.

உடனே அஞ்சலி,

“இல்ல மாமா… அவர் கிளம்புறாரு. நான் மட்டும் தான் இங்க இருக்கேன்,” என்றாள்.

அவள் அப்படிச் சொன்னதும் விக்ரம் அவளை முறைத்துப் பார்த்தான்.

அதைப் பார்த்த ஆதிரன் சிரிப்பை அடக்கிக் கொண்டு,

“மாமா…  எனக்கு இடுப்பு வலி இன்னும் சரியாகல. அதனால நான் இருக்கேன். நீங்க அத்தையைக் கூட்டிட்டு கிளம்புங்க,” என்றான் விக்ரம் 

அவன் அப்படிச் சொன்னதும் அங்கே இருந்த அனைவருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஏன் விக்ரம்  அப்படி சொல்கிறான் என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

அஞ்சலி மட்டும் வெட்கமும் கோபமும் கலந்த பார்வையுடன் விக்ரமை ஒரு முறை முறைத்தாள். ஆனால் விக்ரமோ அவளுடைய பார்வையை கவனிக்காதது போல அமைதியாக அமர்ந்திருந்தான்.

அப்போது செந்தில் சிரித்தபடியே,

“சரி சரி… ரெண்டு பேரும் இருந்துட்டு வாங்க. நாங்க நாளைக்கு கிளம்புறோம்,” என்று கூறியதும், அந்தப் பேச்சு அங்கேயே முடிவுக்கு வந்தது.

 

அனைவரும் இரவு உணவை முடித்துவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் நேரம் ஆகிவிட்டதால், ஒவ்வொருவராக தங்களது அறைகளுக்குச் சென்று உறங்கத் தயாரானார்கள்.

ஆதிரையும் அஞ்சலியும் சமையலறையில் இருந்த சிறுசிறு வேலைகளை முடித்துவிட்டு, எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி வைத்த பிறகே தங்களது அறைக்குச் சென்றனர்.

அறையின் கதவை மெதுவாகத் திறந்து ஆதிரை உள்ளே நுழைந்தாள். அப்போது ஆதிரன், சர்வேஷை தனது மார்பின் மீது படுக்க வைத்து, மெதுவாகத் தட்டிக் கொடுத்து உறங்க வைத்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்த அமைதியும், சர்வேஷின் மீது அவன் காட்டிய பாசமும் ஆதிரையின் கவனத்தை ஈர்த்தது.

ஆதிரை கட்டிலின்  அருகில் வந்து  ஒரு பெட்ஷீட்டையும் தலைகாணியையும் எடுத்து தரையில் விரித்தாள். எந்தவித தயக்கமும் காட்டாமல் அதிலேயே படுத்துக் கொண்டாள்.

அவளை கட்டிலில் படுத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஆதிரன் மனதில் எழாமல் இல்லை. ஆனால், ‘நான் அப்படிச் சொன்னால் அவள் அதைத் தவறாக எடுத்துக் கொள்வாளோ… அல்லது சங்கடப்படுவாளோ…’ என்ற எண்ணம் அடுத்த நொடியே அவனை அமைதியாக்கிவிட்டது. 

 

தொடரும் 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top