மருத்துவமனையில் இருந்து இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பினார்கள். அந்த இரண்டு நாட்களும் ஆதிரையும் கதிரும் மித்ராவுடனேயே தங்கியிருந்தனர். வீட்டிற்கு வந்த பின்னரும் நிலாவும் ஆதிரையும் மித்ராவை நல்லபடியாகப் பார்த்துக்கொண்டனர்.
ஆதிரனின் வீட்டில் அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஆதிரன், “அம்மா, நான் கதிர் வீட்டுக்கு போயிட்டு வரேன்” என்று கூற, லக்ஷ்மி, “என்னப்பா, திடீர்னு?” என்று கேட்டார்.
அதற்கு ஆதிரன், “இல்லம்மா, நான் போயிட்டு வந்து சொல்றேன்” என்று கூறிவிட்டு, விறுவிறுவென்று வெளியே சென்றுவிட்டான்.
கதிர் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
ஆதிரன் வீட்டினுள் நுழைந்ததும் நிலாதான் அவனை முதலில் கண்டாள். “வாங்க அண்ணா” என்றாள். “கதிர் இல்லையாமா?” என்று கேட்டான் ஆதிரன். “அவரு தோட்டத்துல இருக்காரு” என்றாள் நிலா. “சரி” என்று கூறிவிட்டு ஆதிரன் தோட்டத்திற்குச் சென்றான்.
அங்கு கதிர் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தான்.
ஆதிரனைக் கண்டதும் கதிர் போனை வைத்துவிட்டு, அவனிடம் திரும்பி, “என்னடா, காலையிலேயே வந்திருக்க?” என்று கேட்டான். அவனை முறைத்த ஆதிரன்,
“ஏன் வந்திருக்கேன்னு உனக்கு தெரியாதா? ரெண்டு நாளைக்கு முன்னாடி கால் பண்ணப்போ, ‘ஹாஸ்பிடல்ல இருக்கேன், வீட்டுக்கு போயிட்டு பேசுறேன்’னு சொன்ன. வீட்டுக்கு வந்து எனக்கு ஒரு கால் கூட பண்ணல.
யாருக்கு என்ன ஆச்சுன்னு ஒழுங்கா சொல்லல” என்று கோபமாகக் கேட்டான்.
“கோபப்படாதடா, எந்தப் பிரச்சினையும் இல்லை. பெருசா ஏதாவது பிரச்சனைன்னா உன்கிட்ட கண்டிப்பா சொல்லியிருப்பேன்,” என்றவன்,
ஆதிரனின் கையைப் பிடித்து அங்கிருந்த கல் பெஞ்சில் அமர வைத்தான். தானும் அவன் அருகில் அமர்ந்து கொண்டான்.
“யாருக்காக ஹாஸ்பிடல் போனீங்க?” என்று ஆதிரன் கேட்டான்.
“சொல்றேன் டா” என்று தொடங்கிய கதிர், “ஆதிரையோட ஹஸ்பண்ட் கௌதமோட தங்கச்சி மித்ரா. ரெண்டு வருஷமா கோமாவுல இருந்தா டா. ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் கண் விழிச்சா. அவளைப் பாக்கதான் போயிருந்தேன்.
இப்ப வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டோம், நல்லா இருக்கா. ஆனா, நடக்கச் சிரமப்படுறா, அவ்வளவுதான்” என்றான்.
“என்னடா சொல்ற? உன் தங்கச்சியோட ஹஸ்பண்டுக்கு தங்கச்சி இருக்காங்களா?” என்று ஆதிரன் வியப்புடன் கேட்டான்.
கதிர் ஒரு பெருமூச்சு விட்டு, “உனக்கு என் தங்கச்சி லைஃப்ல நடந்தது பத்தி நான் எதுவும் தெளிவா சொல்லல இல்ல? இப்ப சொல்றேன்,” என்று சொல்லத் தொடங்கினான்
கதிரின் வயது பதினைந்து, ஆதிரைக்கு பத்து. அந்தச் சிறிய வயதிலேயே ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்தில் அவர்களின் பெற்றோர் இருவரையும் இழந்து தவித்தனர். அதன் பிறகு, அவர்களின் தாய்வழிப் பாட்டிதான் இருவரையும் அரவணைத்து வளர்த்தார்.
சென்னை கல்லூரியில் தன் படிப்பை முடித்த கதிரின் கனவு, அமெரிக்கா சென்று மேலாண்மை (Management) படிக்க வேண்டும் என்பதுதான். ஆனால், ஆதிரையைத் தனியாக விட்டுச் செல்ல அவனது மனம் வரவில்லை. அவனது தயக்கத்தைப் புரிந்துகொண்ட ஆதிரை, மிகுந்த முதிர்ச்சியுடன், “அண்ணா, என்னைப் பற்றி கவலைப்படாதீங்க.
பாட்டிதான் இருக்காளோ! நீங்கள் தாராளமாகப் போங்கள்” என்று கூறினாள். ஆதிரை சிறுவயதிலிருந்தே மிகுந்த தைரியசாலியாகவும், பொறுப்புள்ளவளாகவும் வளர்ந்திருந்தாள். அவள் மீது கொண்ட நம்பிக்கையில்தான் கதிரும் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டான்.
கதிர் சென்ற பிறகுதான் ஆதிரை கல்லூரிப் படிப்பைத் தொடங்கினாள். அமெரிக்காவில் கதிரின் தனிமையை நீக்கத் துணையாக அமைந்தவன் ஆதிரன். ஊரில் இருந்தபோது பெரிய நட்பு வட்டம் இல்லாத கதிரிற்கு, அந்த அந்நிய நாட்டில் தன்னைப்போலவே ஒருவனைச் சந்தித்து பழகியது பெரிய ஆறுதலாக இருந்தது.
சில மாதங்களிலேயே அவர்களின் நட்பு, உயிர் நட்பாக மாறியது.
இரண்டு வருடங்கள் கழித்து கதிர் இந்தியா திரும்பினான். வீடு திரும்பிய அவனுக்குக் கிடைத்த முதல் அதிர்ச்சிச் செய்தி, ஆதிரை யாரையோ காதலிப்பதாகக் கேள்விப்பட்டதுதான். இதைக் கேட்டதும் கதிருக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது.
ஆதிரையை அழைத்து விசாரித்தபோது, அவன் தனது கல்லூரித் தோழன் என்றும், அவர்கள் பள்ளிக் காலத்திலிருந்தே ஒன்றாகப் படித்து வருவதாகவும் கூறினாள்.
ஆதிரை விஷயத்தைச் சொன்னதும், “சரி, அவனை இங்கே கூட்டிட்டு வா, நான் பேசணும் என்றான் கதிர். ஆதிரையும் கௌதமை கூட்டிக்கிட்டு கதிர் முன்னாடி வந்து நின்னான். கௌதமை பார்த்ததும் அவனோட தோற்றம் கதிருக்கு பிடிச்சிருந்தது.
இருந்தாலும், அதை வெளியில காட்டிக்காம ரொம்ப இறுக்கமான முகத்தோட, “என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”னு கேட்டான் கதிர்.
கௌதம் தயங்காம, “எனக்கு படிப்பு முடிய இன்னும் ஆறு மாசம் இருக்கு. கேம்பஸ் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி செலக்ட் ஆகிட்டேன். படிப்பு முடிஞ்சதும் வேலையில சேர்ந்துடுவேன்.
உங்க தங்கச்சியை உங்க அளவுக்கு வசதியா வைக்க முடியலன்னாலும், என்னால முடிஞ்ச வரைக்கும் ரொம்ப சந்தோஷமா பார்த்துப்பேன் என்று தெளிவா சொன்னான்.
அவனைப் பார்த்து கதிர், “உங்க அம்மா, அப்பா என்ன பண்றாங்க?” என்று கேட்டான்.
அதுக்கு கௌதம், “என் அப்பா ஸ்கூல் டீச்சர், அம்மா ஹவுஸ் வைஃப். எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. நாங்க இருக்குறது சொந்த வீடுதான். இதையும் தாண்டி என் பத்தி உங்களுக்கு வேற ஏதும் தெரியணும்னா, நீங்க யாரையாவது கேட்டு தெரிஞ்சுக்கோங்க.
நான் சொல்றதை மட்டும் வச்சு உங்களுக்கு என் மேல நம்பிக்கை வராதுன்னு எனக்குத் தெரியும். எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா, சோ நீங்க யோசிக்கிறது எனக்கு புரியுது”என்று மெச்சூரா பேசினான்.
கௌதம் பேசுறதுல எந்தப் பொய்யோ, நடிப்போ இருக்கிற மாதிரி கதிருக்கு தெரியல.
நேர்மையான பையனாத்தான் பட்டான். கதிர் அவனைப் பார்த்து, “நான் உங்க வீட்டுக்கு வந்து உங்க அம்மா, அப்பா கிட்ட பேசணும். அவங்ககிட்ட பேசிட்டுதான் என்னால ஒரு முடிவுக்கு வர முடியும். நீங்க நல்லவரா இருந்தா மட்டும் பத்தாது, உங்க குடும்பம் எப்படி இருக்குன்னு நான் தெரிஞ்சுக்கணும்” என்று சொன்னான்.
கௌதமும், “கண்டிப்பா நீங்க எங்க வீட்டுக்கு வாங்க. எப்ப வரீங்கன்னு சொல்லுங்க, நான் வீட்ல சொல்லிடுறேன்” என்று சொல்லிட்டு கிளம்பிட்டான்.
அடுத்த நாளே கதிர், கௌதம் வீட்டுக்கு போனான். கௌதமோட அப்பா மனோகர் கதிரை வரவேற்றார்.
கௌதமோட அம்மா சுசிலா அவனுக்கு டீ கொண்டு வந்து கொடுத்தார் கதிர் பேச ஆரம்பிச்சான். அந்தப் பேச்சிலேயே அவங்க ரொம்ப நல்லவங்கன்னு கதிருக்கு புரிஞ்சுடுச்சு. கிளம்புறப்ப கதிர், “எனக்கு உங்க எல்லாரையும் ரொம்ப பிடிச்சிருக்கு.
என் தங்கச்சி இந்த வீட்டுக்கு வந்தா கண்டிப்பா சந்தோஷமா இருப்பான்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு. அம்மா, அப்பா இல்லாம வளர்ந்தவ அவ, ஒரு நல்ல குடும்பத்துல இருக்கணும்னு நான் ஆசைப்பட்டேன். உங்க எல்லாரையும் பார்த்து அந்த நம்பிக்கை எனக்கு கிடைச்சிருக்கு.
என் தங்கச்சி நான் ஆசைப்பட்ட வாழ்க்கை வாழ்வா. எப்ப கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொல்லுங்க?” என்று கேட்டான்.
உடனே கௌதம், “இப்போதைக்கு வேண்டாம்”னு சொல்லிட்டான். எல்லாரும் அவனை ஆச்சரியமா பார்க்க, “எனக்கு படிப்பு முடிஞ்சு, வேலைக்கு போய் ஒரு வருஷம் ஆன பிறகு கல்யாணம்
பண்ணிக்கிறேன். எனக்கு ஒரு நிலையான வேலை வேணும்” என்று சொன்னான். அதைக் கேட்டதும் எல்லாருக்கும் சரியா பட்டது , எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க.
சொன்னபடியே, ஒரு வருஷம் கழிச்சு ஆதிரைக்கும் கௌதமுக்கும் எல்லோரையும் கூப்பிட்டு ரொம்ப விமரிசையா கல்யாணத்தை நடத்தி வச்சான் கதிர்.