💓அத்தியாயம் 《9》

காரில் போய்க்கொண்டிருக்கும் போது நிலா பொறுமை இழந்து, “கதிர், சொல்லுங்க எங்க போறோம்னு? சொல்லாம கொள்ளாம இப்படி கூட்டிக்கிட்டு போறீங்க?” என்று கேட்க, “நிலா, மித்ரா கண் விழிச்சிட்டா!” என்றான் கதிர். அதைக் கேட்டு ஆதிரை, நிலா இருவருமே இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர்.

 

“அண்ணா, என்ன சொல்றீங்க? உண்மையாலுமா? மித்ரா கண் விழிச்சிட்டாளா? அவளுக்கு ஏதும் பிரச்சனை இல்லையே? நல்லா இருக்கா தானே?” என்று பதட்டத்துடன் கேட்டாள் ஆதிரை.

“அவளுக்கு ஒன்னும் இல்ல அம்மு, நல்லாத்தான் இருக்கான்னு டாக்டர் சொன்னாங்க.

நாம போய் பார்ப்போம்,” என்றான் கதிர். சிறிது நேரத்திற்குப் பின், கதிரின் கார் மருத்துவமனை வாசலில் வந்து நின்றது. மூவரும் காரில் இருந்து இறங்கி வேகமாக உள்ளே சென்றனர். முதலில் மித்ராவைப் பார்த்துவிட்டு, அதன் பிறகு டாக்டரைச் சந்திக்கலாம் என்று மித்ராவின் அறைக்குள் நுழைந்தனர்.

அங்கு மித்ரா எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள். அவள் கைகளில் மருத்துவ உபகரணங்களுக்கான குழாய்கள் இணைக்கப்பட்டிருந்தன. ஆதிரை அவள் அருகில் சென்று அவளை அணைத்துக்கொண்டு கதறி அழுதாள்.

மித்ராவும் அவர்களைக் கண்டதும் துக்கம் தொண்டையை அடைக்க, ஆதிரையை கட்டியணைத்து “அண்ணி!” என்று கதறி அழுதாள். அவர்கள் அழுதுகொண்டிருக்க, நிலா அருகில் சென்று இருவரையும் அணைத்து ஆறுதல் படுத்தினாள்.

கதிர் மித்ரா அருகில் வரவும், ஆதிரையும் நிலாவும் விலகி நின்றனர். கதிர் அவள் தலையைக் கோதியவாறு, “மித்து!” என்றான். அவள் கதிரைப் பார்த்து “மாமா” என்று அவன் இடையோடு கட்டிக்கொண்டு அழுதாள். “அழாத மித்து, உனக்கு ஒன்னும் இல்ல. நீ நல்லா இருக்க, உன் கூட நாங்க எல்லாருமே இருக்கோம்,” என்றான் கதிர்.

பின் ஆதிரையைப் பார்த்து, “நீ இவளைப் பார்த்துக்கோ, நான் டாக்டரைப் பார்த்துட்டு வரேன்,” என்று வெளியே சென்றான்.

அவன் நேராக டாக்டர் அறைக்குச் சென்றான். கதிரைக் கண்டதும், “வாங்க கதிர்,” என்றார் டாக்டர். கதிர் அவர் முன்னால் அமர்ந்தான்.

“டாக்டர், மித்ராவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே?” என்று கதிர் கேட்க, டாக்டர் நிதானமாக விளக்கத் தொடங்கினார்:

“கதிர், அவங்களுக்கு உடல் ரீதியாகப் பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை. ஆனா, ரெண்டு வருஷம் அவங்க படுக்கையிலேயே இருந்ததால, தசைகள் சற்று பலவீனமடைந்திருக்கும். அதனால் எழுந்து நடக்க ஆரம்பிக்கும்போது கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும், பொறுமையா கையப் பிடிச்சு நடக்க வைங்க.

முக்கியமானது உணவுதான். இப்போதைக்கு திட உணவுகளைத் தவிர்த்து, திரவ உணவுகளை (Liquid diet) மட்டுமே கொடுங்க. கஞ்சி, பழச்சாறு, சூப் அந்த மாதிரியான உணவுகள் சீக்கிரம் செரிமானமாகும். அதுபோக, இப்போதைக்கு அவங்க மனநிலை ரொம்ப முக்கியம். ரெண்டு வருஷம் கோமா-ல இருந்து வந்திருக்காங்க, அதனால அவங்களுக்குப் பல குழப்பங்களும், மன அழுத்தமும் (Depression) இருக்க வாய்ப்பிருக்கு. 

அவங்க மனசைக் கஷ்டப்படுத்துற மாதிரி எதையும் பேசாதீங்க. எப்பவும் பாசிட்டிவான விஷயங்களைப் பேசுங்க. சின்னச் சின்ன சந்தோஷமான விஷயங்களை அவங்க கூட பகிர்ந்துகோங்க. முக்கியமா, உங்க குழந்தைகளை அவங்க கூட நிறைய விளையாட விடுங்க. குழந்தைங்க கூட இருக்கும்போது அவங்களுக்குத் தெரியாமலே அவங்க மனசு மாறி, 

சீக்கிரம் பழையபடி இயல்பு நிலைக்குத் திரும்பிடுவாங்க. இது கொஞ்சம் காலம் எடுக்கும், ஆனா சரியாகிடுவாங்க. வேற எந்தப் பெரிய பிரச்சனையும் இல்லை,” என்றார் டாக்டர்.

“ரொம்ப நன்றி டாக்டர். மித்ராவை இப்ப நாங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகலாமா?” என்று கதிர் கேட்க, “இன்னும் ரெண்டு நாள் அப்சர்வேஷன்ல இருக்கட்டும், அதுக்கப்புறம் கூட்டிட்டு போங்க,” என்றார் டாக்டர்.

சரி என்று கூறி வெளியே வந்தான் கதிர். நிலா அவனிடம், வந்து “கதிர், மித்ராவை வேற ரூமுக்கு மாத்திட்டாங்க. டாக்டர் என்ன சொன்னாங்க? சாப்பிடுறதுக்கு ஏதாவது கொடுக்கணுமா?” என்று கேட்க, டாக்டர் சொன்ன மருத்துவ ஆலோசனைகளை நிலாவிடம் விரிவாக எடுத்துரைத்தான் கதிர். நிலா உடனே உணவுக்கு ஏற்பாடு செய்யச் சென்றாள்.

நிலா, மருத்துவமனை கேன்டீனில் வாங்கிய கஞ்சியுடன் உள்ளே நுழைந்தாள். ஆதிரை அதை வாங்கிச் சிறிது சிறிதாக மித்ராவுக்கு ஊட்டி விட்டாள். நிலா அங்கிருந்தபடி மித்ராவின் உடல்நிலையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அப்போது கதிர், நிலாவின் அருகில் வந்து மென்மையாக, “நிலா, நீ வீட்டுக்குக் கிளம்பு. 

நானும் ஆதிரையும் இங்கேயே தங்கிக்குறோம். இப்ப மணி ஆகிடுச்சு, நாளைக்குக் காலையில குழந்தைங்க கண்ணு முழிக்கும்போது உன்னையும் ஆதிரையையும் தேடுவாங்க. நீங்க ரெண்டு பேரும் இல்லாட்டி, வேலையாள் ஒருத்தியால் மட்டும் அவங்களைச் சமாளிக்க முடியாது, ரொம்ப அடம் பிடிப்பாங்க,” என்றான்.

நிலா தயங்கியபடியே, “சரி கதிர், நான் கிளம்புறேன்,” என்றாள்.

“சரி, நான் டிரைவருக்கு கால் பண்ணி வரச் சொல்றேன், அவரோடு நீ கிளம்பு. ஒரு விஷயம் நிலா, நாளைக்குக் காலையில வீட்டிலிருந்தே மித்ராவுக்குப் பிடிச்ச மாதிரி ஏதாவது மென்மையான உணவைச் சமைச்சு எடுத்துட்டு வந்துரு. இங்க கேன்டீன் சாப்பாடு எப்படி இருக்கும்னு தெரியல, அவளுக்கு இப்போ ஆரோக்கியமான உணவு ரொம்ப முக்கியம். 

டாக்டர் இன்னும் ரெண்டு நாளைக்கு மித்ரா இங்க தான் இருக்கணும்னு சொல்லியிருக்காங்க, அதனால ரெண்டு நாளைக்குச் சமையல் பொறுப்பு உன் கையில தான். வரும்போது எனக்கும் ஆதிரைக்கும் தேவையான மாற்று உடைகளையும் எடுத்து வந்துரு,” என்று கதிர் பொறுப்புடன் கூறினான்.

“சரி கதிர், நான் பார்த்துக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு நிலா அங்கிருந்து கிளம்பினாள்.

அன்று இரவு, ஆதிரை மித்ராவின் கட்டில் அருகில் நாற்காலியைப் போட்டு அமர்ந்து, தலை சாய்த்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். கதிர் அறையின் ஓரத்தில் இருந்த சோபாவில் படுத்திருந்தான். மித்ரா மட்டும் தூக்கம் வராமல், விழித்த கண்களுடன் மேற்கூரையை வெறித்தபடி ஏதோ பழைய நினைவுகளில் மூழ்கிக் கிடந்தாள்.

சிறிது நேரத்தில் அவளுக்கு இயற்கை உபாதை கழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட, தயங்கியபடியே மெல்லிய குரலில், “அண்ணி… அண்ணி…” என்று ஆதிரையின் தோளைத் தட்டினாள்.

திடுக்கிட்டு எழுந்த ஆதிரை, “என்ன மிது? என்னாச்சு? வலிக்குதா?” என்று பதறினாள்.

“இல்ல அண்ணி… பாத்ரூம் போகணும்…” என்று மித்ரா திக்கித் திணறிச் சொல்ல, ஆதிரை உடனே அவளைத் தாங்கிப் பிடித்து மெதுவாக எழுப்ப முயற்சி செய்தாள். 

ஆனால், நீண்ட நாட்களாகப் படுக்கையிலேயே இருந்ததால், மித்ராவின் கால்கள் ஒத்துழைக்காமல் நடுங்கின. அவள் தடுமாறுவதைக் கண்டு கதிர் பதறியபடி எழுந்தான்.

“என்ன அம்மு? என்னாச்சு?” என்று கேட்டுக்கொண்டே அருகில் வந்த கதிர், நிலைமையைப் புரிந்துகொண்டான். ஆதிரை அவளைத் தாங்கிப் பிடிக்க முயல்வதைப் பார்த்துவிட்டு, “இரு அம்மு, நான் பாத்துக்கிறேன்,” என்றவன், 

மித்ராவின் அருகே சென்றான்.

மித்ரா அவனைக் கண்டதும் கூச்சத்திலும் தயக்கத்திலும் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள். அவளது தயக்கத்தைப் புரிந்துகொண்ட கதிர், அவளைக் குழந்தை போலத் தன் இரு கைகளாலும் லாவகமாகத் தூக்கிக்கொண்டான். மித்ரா அதிர்ச்சியில் அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டாள்.

அவள் கண்களைப் பார்த்து கதிர் மென்மையாகச் சிரித்தான். “உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியுது மித்து. ஒரு மாமாவா நான் உனக்குக் கடமைப்பட்டவன். ஆனா அதைத் தாண்டி, என் பொண்ணு கஷ்டப்படும்போது தூக்கி விடுற உரிமையை எனக்குக் கொடு. இதுல தயக்கம் எதற்கு?” 

என்று அவன் உரிமையோடு சொன்ன விதம், அவளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவள் கண்களில் கண்ணீர் முட்டியது.

கதிர் அவளைக் கவனமாக பாத்ரூமிற்குள் அழைத்துச் சென்று விட்டு, வெளியே வந்ததும் ஆதிரை உள்ளே போனல் சிறிது நேரம் கழித்து ஆதிரை அண்ணா, என்று அழைத்தாள்  உள்ளே சென்று மீண்டும் அவளைத் தூக்கிக்கொண்டு வந்து கட்டிலில் கிடத்தினான்.

அவள் களைப்பாய் இருப்பதைப் பார்த்த கதிர், “அம்மு, அவளுக்குப் பசிக்கும். ஜூஸ் குடு,” என்று சொல்லிவிட்டு, அவளுக்குத் தேவையானதைச் செய்து கொடுத்தான். மித்ரா அதை அருந்திவிட்டு, கதிரையும் ஆதிரையையும் நன்றியுடன் பார்த்துவிட்டு மீண்டும் உறக்கத்திற்குச் சென்றாள்.

விடியற்காலை 6:00 மணிக்கு நிலா குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்தாள். குழந்தைகளைக் கண்டதும் மித்ரா சிரிக்க, அவர்களும் அவளைப் பார்த்து மகிழ்ந்தனர். சர்வேஷை கண்டதும் அவளுக்கு அண்ணனின் நினைவு வர, அவனைக்கட்டி அழுதுவிட்டாள். இதைப் பார்த்த ஆதிரை, அவளுக்கு முன்னால் அழக்கூடாது என எண்ணி அறைக்கு வெளியே வந்துவிட்டாள்.

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top