அவர்களின் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாகச் சென்று கொண்டிருந்தது. கதிர்–நிலா திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் கடந்திருந்தன. இருவரும் இணைந்து வாழத் தொடங்கி, அந்த இல்லத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருந்தது.
அந்த சமயத்தில் ஆதிரைக்கு ஏழு மாத கர்ப்பமாக இருந்தபோது, நிலாவும் கர்ப்பமானாள். அந்தச் செய்தி குடும்பத்தையே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தது. ஒரே வீட்டில் இரண்டு பெண்களும் கர்ப்பமாக இருப்பது அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
கௌதமின் தாய்தான் இருவரையும் தன் சொந்த மகள்களைப் போல கவனித்துக் கொண்டார். அவர்களுக்கு நேரம் தவறாமல் உணவு கொடுப்பது, ஓய்வெடுக்கச் சொல்வது, மருத்துவ பரிசோதனைகளுக்கு அழைத்துச் செல்வது என்று அனைத்தையும் பார்த்துக் கொண்டார். நாட்கள் மகிழ்ச்சியாக நகர்ந்தன.
இப்படி இரண்டு மாதங்கள் கடந்திருந்தபோது, ஒரு நாள் கௌதமின் பெற்றோர் கதிரிடம் வந்து,
கதிர், குலதெய்வக் கோயிலுக்கு போயிட்டு வரணும் பா. ரொம்ப நாளாச்சு,” என்றார்கள்.
சரி மாமா, என்று கதிரும் சம்மதித்தான்.
ஆனால் கோயில் மிகவும் தூரத்தில் இருந்ததால், கர்ப்பமாக இருக்கும் நிலாவையும் ஆதிரையையும் அழைத்துச் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தனர்.
“இப்போது நாங்க மட்டும் போரம் குழந்தைகள் பிறந்ததும் எல்லாரும் சேர்ந்து ஒரு தடவை போயிட்டு வரலாம்,” என்று கௌதமின் தந்தை கூறினார்.
அனைவரும் அதற்கு ஒத்துக்கொண்டனர்.
ஆனால் கிளம்பும் நேரத்தில் கௌதம் மட்டும் தயங்கினான்
அப்போது ஆதிரை அவனைப் பார்த்து,
கௌதம் நீங்க போயிட்டு வாங்க. ஒரு நாள் தானே? அத்தை, மாமா வயசான காலத்துல மித்ராவை மட்டும் கூட்டிட்டு இவ்வளவு தூரம் போறாங்க. நீங்க கூட போறதுதான் சரி. என்னையும் நிலாவையும் பார்த்துக்க அண்ணா இருக்கரே . நீங்க கவலைப்படாதீங்க,” என்றாள்.
ஆதிரை பலமுறை சொல்லிய பிறகுதான் கௌதமும் அவர்களுடன் செல்ல சம்மதித்தான்.
குலதெய்வக் கோயிலில் பூஜைகளை முடித்துவிட்டு, கௌதமின் குடும்பம் மீண்டும் சென்னை நோக்கிப் புறப்பட்டது.
அவர்கள் திரும்பி வந்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில்தான் அந்தக் கோர விபத்து நடந்தது.
எதிரே வந்த ஒரு கனரக லாரியின் பிரேக் திடீரென செயலிழந்தது. கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, அவர்கள் வந்த காரின் மீது நேராக மோதியது.
ஒரே நொடியிலே எல்லாம் முடிந்து விட்டது.
கௌதம், அவனது தாய், தந்தை—மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மித்ரா மட்டும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள்.
அதே நேரத்தில், கதிர் தனது நிறுவனத்தில் ஒரு முக்கியமான கூட்டத்தில் இருந்தான்.
அவனது கைபேசி ஒலித்தது.
சாதாரணமாக எடுத்துப் பேசினான்.
ஆனால் அடுத்த நொடியே அவனது முகம் வெளிறிப் போனது.
கையில் இருந்த போன் நழுவி விழப் போனது.
உடல் முழுவதும் நடுக்கம் பரவியது.
அவனது நிலையைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் அவனைச் சூழ்ந்தனர்.
ஆனால் அவனது நண்பன் சிவா மட்டும் அருகில் வந்து,
என்னாச்சு கதிர்?” என்று கேட்டான்.
கதிரால் பதில் சொல்ல முடியவில்லை.
அவன் கண்களில் கண்ணீர் மட்டும் வழிந்தது.
நிலைமையைப் புரிந்து கொண்ட பிரபு, மற்றவர்களை விலக்கிவிட்டு கதிரை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
வீட்டில் ஆதிரை சோபாவில் அமர்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவள் அருகில் வந்த நிலா,
“என்னடி யோசிச்சிட்டு இருக்க? இன்னும் சாப்பிடலையா? டைம் ஆச்சே,” என்று கேட்டாள்.
இல்லடி… கௌதம் கால் பண்ணினாரு. கிளம்பிட்டோம் சொன்னாரு. ஆனா இன்னும் வரலையே. போனும் ரீச் ஆகல,” என்றாள் ஆதிரை கவலையுடன்.
ஏய், கார் ஓட்டிட்டு வர்றாங்க இல்ல? வழியில எங்கயாவது இருப்பாங்க. நீ முதல்ல சாப்பிடு. நீ சாப்பிடாம இருந்தா வந்ததும் கௌதம் கத்துவான் ,” என்று சிரித்தபடி சமாதானப்படுத்தினாள் நிலா.
அவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் கதிர் வீட்டிற்குள் வந்தான்.
அவனைப் பார்த்ததும் நிலா,
என்னங்க? இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க? மீட்டிங் இருக்குன்னு சொல்லிட்டுப் போனீங்களே?” என்று கேட்டாள்.
ஆனால் கதிர் எதுவும் பேசவில்லை.
கலங்கிய கண்களுடன் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் அருகில் வந்த நிலா,
“என்னாச்சு? ஏதாவது சொல்லுங்க,” என்றாள்.
ஆதிரையும் அருகில் வந்து,
என்ன அண்ணா? ஒரு மாதிரி இருக்கீங்க. யாருக்கு என்னாச்சு?” என்று பதட்டமாகக் கேட்டாள்.
கதிரின் தொண்டை அடைத்துக் கொண்டது.
அம்மு… அது வந்து… கௌதம் வந்த காருக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு…” என்றான்.
அதை கேட்டதும் நிலாவும் ஆதிரையும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
என்ன அண்ணா சொல்றீங்க? கௌதமுக்கு ஒன்னும் இல்லையே?” என்று பயத்துடன் கேட்டாள் ஆதிரை.
வாங்க… ஹாஸ்பிடல் போகணும்,” என்று மட்டும் சொல்லி அவர்களை அழைத்துச் சென்றான்.
மருத்துவமனையில் நேராக ஐ.சி.யூ.விற்கு சென்றனர்.
அங்கு வெளியே நின்று உள்ளே பார்த்தபோது மித்ரா மட்டும் படுத்திருந்தாள்.
அதைப் பார்த்த ஆதிரை பதறி,
அண்ணா… மித்ரா மட்டும் தான் இருக்கா? கௌதம் எங்க? அத்தை… மாமா எங்க?” என்று கேட்டாள்.
கதிரால் பதில் சொல்ல முடியவில்லை.
அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.
அதைப் பார்த்த ஆதிரை பொறுமையை இழந்து அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.
சொல்லு அண்ணா! எங்க என் கௌதம்? என்ன ஆச்சு? சொல்லு!” என்று கதறினாள்.
நிலாவும் அழுதபடி,
என்னங்க… ஏதாவது சொல்லுங்க…” என்றாள்.
அவர்களை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் கதிர் நின்றான்.
அந்த நேரத்தில் அங்கு வந்த போலீஸ் அதிகாரி,
சார்… போஸ்ட் மார்ட்டம் எல்லாம் முடிஞ்சிடுச்சு. எப்ப பாடியை எடுத்துட்டு போறீங்க?” என்று கேட்டார்.
அந்த ஒரு வார்த்தை போதுமானது.
ஆதிரையின் உலகமே சிதறி விழுந்தது.
இல்ல… இல்லை…” என்று கதறியவள் மயங்கி கதிர் மீது சரிந்தாள்.
அதன்பிறகு நடந்த அனைத்தும் கனவு போல இருந்தது.
கௌதம், அவனது தாய், தந்தை ஆகியோரின் உடல்கள் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
ஆதிரை உயிரற்ற சிலை போல அமர்ந்து கௌதமின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
நிலாவும் அவள் அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.
வீடு முழுவதும் அழுகுரல்களால் நிறைந்திருந்தது.
சிறிது நேரம் கழித்து ஒரு பெரியவர் கதிரிடம் வந்து,
எவ்வளவு நேரம் வச்சிருக்கப் போறீங்கப்பா? எடுக்க வேண்டியதுதானே…” என்றார்.
கதிர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தலையசைத்தான்.
இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் தொடங்கின.
மூவரின் உடல்களையும் வெளியே எடுத்துச் செல்லும் நேரம் வந்தது.
அப்போது திடீரென ஆதிரை தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு,
அம்மா…” என்று அலறினாள்.
அங்கிருந்த பெண்கள் அனைவரும் அவளைச் சூழ்ந்து கொண்டனர்.
கதிர் அவளிடம் செல்ல முயன்றான்.
ஆனால் அருகில் இருந்த ஒரு பெரியவர்,
தம்பி, இப்ப நீ போகக்கூடாது. சாவு பெட்டியை தூக்கிட்டு சுடுகாட்டுக்கு போகணும். அங்க போயிட்டு தான் திரும்பணும். இங்க இருக்கிறவங்க பாத்துக்குவாங்க,” என்றார்.
கதிருக்கு மனமே இல்லை.
ஆனால் வேறு வழியில்லை.
அவனது நண்பன் வந்து,
கதிர், நாங்க பாத்துக்கறோம். நீ போ,” என்று கூறினான்.
கனத்த மனதுடன் கதிர் அங்கிருந்து கிளம்பினான்.
ஆதிரையை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
கதிர் கௌதமுக்கும், அவனது பெற்றோருக்கும் இறுதிக் காரியங்களை முடித்துவிட்டு நேராக மருத்துவமனைக்கு வந்தான்.
அங்கு வந்தபோது நிலா பிரசவ அறையின் முன் அமர்ந்திருந்தாள்.
அவள் அருகில் வந்த கதிரை பார்த்ததும் அவனை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தாள்.
பயமா இருக்கு கதிர்…” என்றாள்.
பயப்படாத. அம்முவுக்கு ஒன்னும் ஆகாது,” என்று ஆறுதல் கூறினான்.
அவன் சொல்லிக் கொண்டிருந்த நேரத்திலேயே…
பிரசவ அறைக்குள் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது.
அந்தச் சத்தம் அந்த இருண்ட நாளில் ஒரு சிறிய ஒளிக்கீற்றைப் போல இருந்தது.
அழுவதா, சிரிப்பதா என்று தெரியாமல் கதிரும் நிலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
சில நிமிடங்களில் ஒரு நர்ஸ் அழகான குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்.
அவர் நேராக கதிரிடம் வந்து,
உங்க தங்கச்சிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்குது,” என்றார்.
கதிரின் கைகள் நடுங்கின.
தன் தங்கையின் மகனை மெதுவாகக் கைகளில் வாங்கிக் கொண்டான்.
அந்தச் சிறிய முகத்தைப் பார்த்தவுடன் அவன் கண்களில் மீண்டும் கண்ணீர் பெருகியது.
என்ன உணர்வு என்று அவனுக்கே புரியவில்லை.
சிறிது நேரத்திற்கு முன்புதான் இதே கைகளால் கௌதமுக்கு தீ மூட்டியிருந்தான்.
அதே கைகளில் இப்போது கௌதமின் மகன் இருந்தான்.
ஒருபுறம் உயிரை பறித்த மரணம்.
மறுபுறம் புதிய உயிரின் வரவு.
ஒரே நாளில் வாழ்க்கை அவனுக்கு இழப்பின் வலியையும், புதிய நம்பிக்கையின் அர்த்தத்தையும் காட்டியிருந்தது.
கௌதம்… நீ போயிட்ட… ஆனா உன் அடையாளம் வந்துட்டுச்சு…” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டபடி, தன் கண்ணீரால் நனைந்த கண்களுடன் அந்தக் குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.