💓அத்தியாயம் 《15》

குழந்தை பிறந்த பிறகு, ஆதிரை தனது வாழ்க்கையைப் பற்றிய எல்லா கனவுகளையும், ஆசைகளையும் மனதின் ஆழத்தில் புதைத்து வைத்துவிட்டாள். இனிமேல் தனது வாழ்க்கை, தனது மகிழ்ச்சி, தனது எதிர்காலம் அனைத்தும் தனது குழந்தையைச் சுற்றித்தான் சுழல வேண்டும் என்று உறுதியாக முடிவு செய்திருந்தாள்.

“இனி என் உலகம் என் குழந்தை மட்டும்தான்…” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவள், தனது வாழ்வின் மீதமுள்ள நாட்களை குழந்தைக்காக அர்ப்பணித்துவிட்டாள்.

அதன் பிறகு அந்த வீட்டில் பழைய சிரிப்புகளும் கலகலப்புகளும் குறைந்து போயின. ஒருகாலத்தில் மகிழ்ச்சியால் நிறைந்திருந்த அந்த வீடு, இப்போது அமைதியின் பிடியில் சிக்கியிருந்தது.

ஒவ்வொருவரும் தங்களது வேதனைகளை வெளியில் காட்டாமல் உள்ளுக்குள் சுமந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தனர்.

மித்ரா மருத்துவமனையில் உயிருக்கும் மரணத்திற்கும் இடையில் போராடிக் கொண்டிருந்தாள். தினமும் அவளது அறைக்கு சென்று, அவளது கைகளைப் பிடித்துக்கொண்டு, “இன்று கண் விழிப்பாளா?” என்ற நம்பிக்கையோடு காத்திருப்பதே அனைவரின் தினசரி வேலையாக மாறியிருந்தது.

கதிர் ஒரு நாள்கூட அவளைப் பார்க்காமல் இருந்ததில்லை. அவள் அருகில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசுவான்.

“மித்தும்மா… சீக்கிரம் கண் திறந்து வா டா… எல்லாரும் உனக்காக காத்திருக்காங்க…” என்று தினமும் சொல்லிக் கொண்டிருப்பான்.

ஆனால் மித்ராவிடம் இருந்து எந்த பதிலும் வராது.

இப்படியே நாட்கள் நகர்ந்தன.

ஒரு நாள்… இரண்டு நாள்… ஒரு வாரம்…

அப்படியே பதினைந்து நாட்கள் கடந்து போயின.

பதினைந்தாவது நாள் காலை, அனைவரும் எதிர்பார்த்த அந்த அதிசயம் நிகழ்ந்தது.

மித்ராவின் விரல்கள் லேசாக அசைந்தன.

அதை கவனித்த நர்ஸ் உடனே டாக்டரை அழைத்தார்.

சில நொடிகளில் மித்ரா மெதுவாக தனது கண்களைத் திறந்தாள்.

அவளது கண்கள் சுற்றிலும் தேடின.

ஆனால் அவள் தேடிய முகங்கள் எதுவும் அங்கே இல்லை.

அடுத்த நொடியே நடந்த அனைத்தும் அவளது நினைவுக்கு வர ஆரம்பித்தது.

தனது பெற்றோர்…

தனது குடும்பம்…

தான் இழந்த உறவுகள்…

அனைத்தும் ஒரே நேரத்தில் அவளது மனதை தாக்கின.

“அம்மா…!”

“அப்பா…!”

என்று கதறியவள் துடித்துத் துடித்து அழ ஆரம்பித்தாள்.

அவளது கதறல் அங்கிருந்த அனைவரின் இதயத்தையும் கிழித்தது.

கதிர் எவ்வளவோ முயன்று அவளை சமாதானப்படுத்தினான்.

“மித்து… அழாதடா… நான் இருக்கேன்… எல்லாரும் இருக்கோம்…” என்று கூறினான்.

ஆனால் ஒரே நாளில் ஒரு முழு குடும்பத்தையே இழந்திருந்த அவளது வேதனையை எந்த வார்த்தைகளாலும் ஆற்ற முடியவில்லை.

அவள் அழுதுகொண்டே இருந்தாள்.

அங்கிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

மித்ரா கண்விழித்திருந்தாலும், அவளால் எழுந்து நடக்க முடியவில்லை.

அவளது உடல் முழுவதும் இருந்த காயங்கள் இன்னும் ஆறவில்லை.

நீண்ட நாட்கள் படுக்கையிலேயே இருந்ததால் உடல் பலமும் குறைந்திருந்தது.

டாக்டர்கள் பல பரிசோதனைகள் செய்த பிறகு,

“அவங்களுக்கு இன்னும் நீண்டகால சிகிச்சை தேவைப்படும். பொறுமையா இருக்கணும்,” என்று கூறினர்.

அந்த ஒரு வார்த்தையையே நம்பிக்கையாக பிடித்துக் கொண்டனர் அனைவரும்.

நாட்கள் மாதங்களாக மாறின.

மாதங்கள் வருடங்களாக மாறின.

மித்ராவின் உடல்நிலையில் மெதுவாக முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.

இன்னும் இரண்டு வருடங்கள் படுக்கையிலேயே இருந்தால் உடம்பு முழுமையாக குணமாகிவிடும் என்று டாக்டர்கள் கூறியதால், கதிரின் குடும்பத்தினர் அந்த நாளுக்காக காத்திருந்தனர்.

ஆனால் விதி வேறு ஒன்றை முடிவு செய்து வைத்திருந்தது.

இரண்டு வருடங்கள் முடிந்தபோது, அனைவரும் எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சியான செய்தியை டாக்டர்கள் கூறினர்.

“மித்ரா மீண்டும் கோமா நிலைக்குச் சென்றுவிட்டாங்க…”

அந்த வார்த்தை கேட்ட நொடியே அனைவரின் உலகமும் மீண்டும் சிதறிப் போனது.

ஏற்கனவே பல துயரங்களை சந்தித்திருந்த கதிரின் குடும்பத்தினர் மீண்டும் ஒருமுறை உடைந்து போயினர்.

நிலா கண்ணீரை துடைத்துக்கொண்டு,

“இன்னும் எவ்வளவு கஷ்டத்தைத்தான் இந்தக் கடவுள் நமக்கு தரப்போறாரோ…” என்று கதறி அழுதாள்.

கதிர்  அமைதியாக நின்றிருந்தாலும், அவனது கண்கள் சிவந்து போயிருந்தன.

ஆதிரை தனது குழந்தையை அணைத்தபடி அமைதியாக அழுதாள்.

அனைவரும் மனம் உடைந்துபோனார்கள்.

ஆனால் அவர்கள் நம்பிக்கையை மட்டும் விடவில்லை.

ஒவ்வொரு நாளும் கடவுளிடம் மித்ராவுக்காக வேண்டிக் கொண்டனர்.

அவர்களது பிரார்த்தனை வீணாகவில்லை.

மீண்டும் இரண்டு வருடங்கள் கழித்து, மித்ரா கண்விழித்தாள்.

இந்த முறை அவள் உயிரோடு இருப்பதே ஒரு அதிசயமாக அனைவருக்கும் தோன்றியது.

இந்த நான்கு வருடங்களாக நடந்த அனைத்து சம்பவங்களையும் கதிர், ஆதிரனிடம் விரிவாகச் சொல்லி முடித்தான்.

அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த ஆதிரனின் கண்கள் கலங்கியிருந்தன.

“இவ்வளவு நடந்திருக்குதா டா…?” என்று குரல் தழுதழுக்க கேட்டான்.

கதிர் அமைதியாக தலையசைத்தான்.

அவன் கண்களில் இருந்த வேதனையை பார்த்த ஆதிரன், அவனை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

கதிரும் அவனது தோளில் சாய்ந்து சில நிமிடங்கள் அழுதான்.

நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த வேதனையை அந்த நிமிடத்தில் கொஞ்சம் இறக்கி வைத்தது போல இருந்தது.

சில நிமிடங்கள் கழித்து இருவரும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள் வந்தனர்.

நிலா அவர்களுக்கு டீ கொண்டு வந்து கொடுத்தாள்.

இருவரும் அமைதியாக டீ குடித்தனர்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த ஆதிரன்,

“சரி டா… நீங்களும் கோவில் திருவிழாவுக்கு வர்றீங்க தானே?” என்று கேட்டான்.

கதிர் சிறிது நேரம் யோசித்துவிட்டு,

“மித்ராவை கூட்டிட்டு போக முடியுமோ தெரியல டா. அவளால வர முடியுமா என்று டாக்டர்கிட்ட கேக்கணும்,” என்றான்.

“கண்டிப்பா வருவா டா. பெருசா எதுவும் பிரச்சனை வராது. நான் வேன் புக் பண்ணி இருக்கேன். எல்லாரும் அதுலதான் போகணும். நீ டாக்டர்கிட்ட கேட்டுட்டு சொல்லு,” என்றான் ஆதிரன்.

“சரி டா,” என்றான் கதிர்.

சிறிது நேரம் கழித்து ஆதிரன் தயக்கத்துடன்,

“அவங்களை பார்க்கலாமா?” என்று கேட்டான்.

“யாரை டா?” என்று கதிர் கேட்டான்.

“மித்ராவை…” என்றான் ஆதிரன்.

“சரி வா,” என்று கூறிய கதிர் அவனை மித்ராவின் அறைக்கு அழைத்துச் சென்றான்.

அங்கே மித்ராவின் அருகில் ஆதிரை அமர்ந்திருந்தாள்.

இவர்களை கண்டதும் ஆதிரை எழுந்து நின்றாள்.

கதிர் மித்ராவின் அருகில் சென்று,

“மித்தும்மா… இவன் என் நண்பன் ஆதிரன். உன்னை பார்க்க வந்திருக்கான்,” என்றான்.

மித்ரா மெதுவாக தலைநிமிர்ந்து ஆதிரனைப் பார்த்தாள்.

அவளது முகத்தில் இன்னும் சோர்வும் வேதனையும் தெரிந்தது.

ஆதிரன் அவள் அருகில் வந்து,

“இப்போ எப்படி இருக்கும்மா உடம்பு?” என்று அக்கறையுடன் கேட்டான்.

“பரவாயில்ல அண்ணா… நல்லா இருக்கு,” என்று மெதுவாகப் பதிலளித்தாள் மித்ரா.

“சரி… உடம்பை நல்லா பாத்துக்கோங்க. சீக்கிரம் குணமாயிடுவீங்க,” என்றவன் புன்னகைத்தான்.

அதற்கு மித்ரா மெதுவாக தலையசைத்தாள்.

அதற்கு மேல் எதுவும் பேசாமல் ஆதிரன் வெளியே வந்துவிட்டான்.

வீட்டின் வாசலுக்கு வந்ததும்,

“சரி டா… நான் கிளம்புறேன். நீ நைட் டாக்டர்கிட்ட பேசிட்டு எனக்கு கால் பண்ணு,” என்றான்.

அந்த நேரம் நிலா அங்கே வந்து,

“அண்ணா, சாப்பிட்டுட்டு போங்க,” என்றாள்.

“இல்லம்மா… பரவாயில்ல. வீட்டுக்கு கிளம்பணும். டைம் ஆகிடுச்சு,” என்று புன்னகையுடன் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

 

சிறிது நேரத்தில் ஆதிரன் தனது வீட்டை அடைந்தான்.

அவனை கண்டதும் அவனது அம்மா லட்சுமி,

“என்னப்பா அவசரமா போன? யாருக்காவது ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டார்.

“ஒன்னும் இல்லம்மா,” என்றான்.

ஆனால் அவனது முகம் வாடியிருப்பதை பார்த்த லட்சுமி,

“என்ன நடந்துச்சு? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என்று மீண்டும் கேட்டார்.

அப்போது வீட்டில் இருந்த அனைவரும் அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தனர்.

ஆதிரன் தனது அம்மாவின் அருகில் சென்று அமர்ந்தான்.

“கதிர் வீட்டுக்குத்தான் போயிருந்தேன்,” என்றான்.

“அதுக்கு ஏன் இப்படி இருக்க?” என்று லட்சுமி கேட்டார்.

“அங்க ஆதிரையோட ஹஸ்பண்ட் கௌதமோட தங்கச்சி மித்ராவை பார்க்க போனேன் அம்மா,” என்றான்.

“என்னப்பா சொல்ற?  கௌதமோட தங்கச்சியா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார்.

“ஆமாம்மா,” என்றவன், கதிர் கூறிய அனைத்து சம்பவங்களையும் ஒன்றுவிடாமல் தனது குடும்பத்தினரிடம் கூறினான்.

அவன் சொல்லி முடிக்கும்போது, அங்கிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

“என்னப்பா சொல்ற? இவ்வளவு கஷ்டப்பட்டாங்களா? பாவம் அந்த பொண்ணு…” என்று அனைவரும் மனம் உருகினர்.

ஆதிரனின் குடும்பத்தினருக்கும் மித்ராவின் ,ஆதிரையின்  நிலை மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.

அப்போது லட்சுமி,

“ஆதி… நான் உடனே அந்த பொண்ணை பார்க்கணும் பா. என்னை ஆதிரை வீட்டுக்கு கூட்டிட்டு போ,” என்றார்.

உடனே ஆதிரன்,

“அம்மா, இப்போதான் அந்த பொண்ணு கொஞ்சம் கொஞ்சமா சரியாகிட்டு வரா. நீங்க எல்லாம் போயிட்டு மறுபடியும் பழைய விஷயங்களை பேசினா அவளுக்கு மீண்டும் கஷ்டமா இருக்கும்.”

“கோவில் திருவிழாவுக்கு வர்றாங்க தானே. அப்போ நாம எல்லாரும் பார்த்துக்கலாம். இப்போதைக்கு அவளை அமைதியா இருக்க விடுங்க,” என்றான்.

அப்போது ஸ்ரீராம்,

“ஆதி சொல்றது சரிதான். ஆனா அந்த பொண்ணுக்கு இந்த உடல்நிலையில அவ்வளவு தூரம் வர முடியுமா?” என்று கேட்டார்.

“தெரியலப்பா. நான் கதிர்கிட்ட சொல்லி இருக்கேன். டாக்டர்கிட்ட கேட்டுட்டு, அதுக்கப்புறம் முடிவு பண்ணலாம். நைட் எனக்கு கால் பண்றேன்னு சொன்னான்,” என்றான் ஆதிரன்.

“சரிப்பா,” என்று ஸ்ரீராம் கூறினார்.

அதன்பிறகு அந்த வீட்டிலும் ஒரு கனமான அமைதி நிலவியது.

ஆதிரையின் வாழ்க்கை இனி எந்த திசையில் செல்லப் போகிறது?

மித்ராவின் உடல்நிலை முழுமையாக குணமாகுமா?

பல ஆண்டுகளாக ஆதிரையை வாட்டி வதைத்த துயரங்களுக்கு முடிவு வருமா?

என்ற எண்ணங்கள் அனைவரின் மனதிலும் சுழன்றுகொண்டிருந்தன.

ஆனால் அந்தக் கேள்விகளுக்கான பதிலை யாராலும் சொல்ல முடியவில்லை.

அதை சொல்லப் போவது காலம் மட்டும்தான்…

தொடரும்…

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top