💓அத்தியாயம் 《19》

சர்வேஷ் தன்னைப் பார்த்து “அப்பா…” என்று அழைத்த அந்த ஒரு வார்த்தை, ஆதிரனின் இதயத்தையே உலுக்கிப் போட்டது. அந்த அழைப்பைக் கேட்டவனோ சில நொடிகள் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றான். என்ன நடந்தது என்று புரியாமல் அவன் விழிகள் சர்வேஷின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தன.

ஆதிரன் கால்களைக் கட்டிக்கொண்டு கதறி அழுத சர்வேஷின் அழுகை, அவனை மீண்டும் உணர்வுக்குக் கொண்டு வந்தது. உடனே கீழே குனிந்து, அவனை மெதுவாகத் தூக்கிக் கொண்டான். அவன் கரங்களில் பாதுகாப்பாக இருப்பது போல் உணர்ந்த சர்வேஷ், ஆதிரனின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு அழுதபடியே இருந்தான்.

அந்தக் காட்சியைப் பார்த்த ஆதிரையின் கோபம் எல்லை மீறியது. வேகமாக அவர்கள் அருகே வந்தவள், ஆதிரனின் கைகளிலிருந்து சர்வேஷை வாங்க முயன்றாள்.

“சர்வேஷ்… இங்க வா… அம்மா சொல்றதைக் கேளு…” என்று கூறியபடியே அவனைப் பிடித்து இழுத்தாள்.

ஆனால், ஏற்கனவே ஆதிரையிடம் வாங்கிய அடியால் பயந்திருந்த சர்வேஷ், அவளிடம் வர மறுத்தான். இன்னும் இறுக்கமாக ஆதிரனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அழுதபடியே முகத்தை அவன் தோளில் புதைத்துக் கொண்டான்.

அதைக் கண்ட கதிர் உடனே ஆதிரையின் அருகில் வந்து,

“அம்மு… என்ன பண்ற நீ? அவனை விடு…” என்று அதட்டினான்.

கதிரை முறைத்துப் பார்த்த ஆதிரை,

“அண்ணா… சர்வேஷ் என் கிட்ட கொடுக்க சொல்லு. நானும் சர்வேஷும் இப்பவே கிளம்புறோம்…” என்றாள் கோபமாக.

“அம்மு… பொறுமையா இரு…” என்று அமைதியாகச் சொன்னான் கதிர்.

“அண்ணா, நான் சொல்றது உனக்கு விளங்கலையா? சர்வேஷ  என் கிட்டக் கொடுக்க சொல்லு!” என்று மீண்டும் கத்தினாள்.

கதிரும் சர்வேஷைத் தூக்க முயன்றான். ஆனால், சர்வேஷ் ஆதிரனிடமிருந்து வரவே மறுத்தான். அவன் அழுகை மட்டும் மேலும் அதிகரித்தது.

அதனால், மீண்டும் ஆதிரையை நோக்கித் திரும்பிய கதிர்,

“அம்மு… கொஞ்ச நேரம் அமைதியா இரு. அவன் பயந்து இருக்கான். கொஞ்ச நேரத்துல நானே அவனை சமாதானப்படுத்தி தூக்கிட்டு வரேன்…” என்று பொறுமையாகக் கூறினான்.

ஆனால், அந்த நேரத்தில் ஆதிரை எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை. அவளது மனம் முழுவதும் கோபமும் குழப்பமும் மட்டுமே நிரம்பியிருந்தது.

மீண்டும் வேகமாக ஆதிரனின் அருகில் வந்தவள், சர்வேஷை அவனிடமிருந்து பிடித்து இழுக்க முயன்றாள்.

இதுவரை பொறுமையாக இருந்த ஆதிரனுக்கும் கோபம் வந்துவிட்டது.

ஆதிரையை நேராகப் பார்த்து,

“உங்களுக்கு என்ன பைத்தியமா? இந்தப் பச்சைக் குழந்தையைப் போய் இப்படி இழுத்து கஷ்டப்படுத்துறீங்க. அவன் ஏற்கனவே பயந்து இருக்கான். என்று கோபமாகக் சொன்னான்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட ஆதிரையின் கோபம் இன்னும் பல மடங்கு அதிகரித்தது.

“அவன் என் புள்ள! அவனை நான் என்ன வேணாலும் செய்வேன். அதைக் கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை…!” என்று ஆவேசமாகக் கத்தினாள்.

“அம்மு… என்ன பேசுற நீ? கொஞ்சம் பொறுமையா இரு…” என்று கதிர் கெஞ்சினான்.

ஆனால் ஆதிரை யாருடைய பேச்சையும் கேட்கவில்லை.

“என்ன…  பொறுமையா இருக்கணும்? அவன் இவரைப் பார்த்து ‘அப்பா’ன்னு சொல்றான். யார் சொல்லிக் கொடுத்தது? எப்படி அவன் அப்படி கூப்பிட்டான்?” என்று கண்ணீருடன் கேட்டாள்.

“அம்மு… அவன் ஏதோ தெரியாம சொல்லியிருப்பான். இதை இவ்வளவு பெருசா எடுத்துக்காதே…” என்று கதிர் சமாதானப்படுத்த முயன்றான்.

“இல்ல அண்ணா… தெரியாம சொல்லல. இவ்வளவு நாளா அவன் யாரையும் இப்படி கூப்பிட்டதே இல்லை. உனக்கே தெரியும் தானே? அவன் இப்படிக் கூப்பிட மாட்டான். இப்போ மட்டும் திடீர்னு இவரைப் பார்த்து ‘அப்பா’ன்னு சொல்றான்னா… கண்டிப்பா யாரோ அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்காங்க…” என்றவள், கூர்மையான பார்வையுடன் ஆதிரனை முறைத்துப் பார்த்தாள்.

அந்தப் பார்வையில் சந்தேகமும், கோபமும், ஏமாற்றமும் கலந்திருந்தது. மறுபுறம், ஆதிரனோ எதுவும் பேச முடியாமல், தன் கரங்களில் அழுதுகொண்டிருந்த சர்வேஷை அணைத்தபடியே அமைதியாக நின்றான். அவனது மனதிலும் பல கேள்விகள் எழுந்திருந்தன. அந்த நிமிடத்தில் அந்த இடமே பதற்றமான அமைதியில் மூழ்கிப் போனது. 

அந்த இடத்தில் நிலவிய பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று நினைத்த நிலா, மெதுவாக ஆதிரையின் அருகில் வந்து அவள் தோளைத் தொட்டாள்.

“ஆதிரை… கொஞ்சம் அமைதியா இருடி…” என்று மென்மையாகக் கூறினாள்.

ஒரு பெருமூச்சு விட்ட ஆதிரை, நிலாவை வெறுமையாகப் பார்த்தாள்.

“நான் எதுவும் பேசல… சர்வேஷை மட்டும் என் கிட்டக் கொடுக்க சொல்லு. நான் போகணும்…” என்றாள் அழுத்தமான குரலில்.

நிலாவும் சர்வேஷை சமாதானப்படுத்த முயன்றாள். அவனிடம் கைகளை நீட்டி,

“சர்வேஷ்… வா கண்ணா… அத்தை கிட்ட வா…” என்று அழைத்தாள்.

ஆனால், சர்வேஷ் யாரிடமும் வர மறுத்தான். ஆதிரனின் கழுத்தை இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு, அவன் தோளிலேயே முகத்தைப் புதைத்துக் கொண்டான்.

அதைக் கண்ட ஆதிரையின் கோபம் மீண்டும் தலைதூக்கியது.

உடனே அவள் ஆதிரனின் அருகில் சென்று, குரலை மென்மையாக்கி,

“சர்வேஷ் கண்ணா… அம்மா இனிமேல் அடிக்க மாட்டேன். அம்மா கிட்ட வா…” என்று பொறுமையாக அழைத்தாள்.

அவளது குரலைக் கேட்டு மெதுவாகத் திரும்பிப் பார்த்த சர்வேஷ், அழுகையால் விம்மிய குரலில்,

“நான் வரமாட்டேன்… ஆதி அப்பா கிட்டதான் இருப்பேன்…” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஆதிரனின் தோளில் சாய்ந்து கொண்டான்.

அந்த வார்த்தை ஆதிரையின் காதுகளில் விழுந்த அடுத்த நொடியே, கோபம் அவளது புத்தியை மறைத்தது.

யாரும் எதிர்பார்க்காத வகையில், ஆத்திரத்தில் சர்வேஷின் முதுகில் ஓங்கி அடித்தாள்.

அவள் மீண்டும் அடிப்பாள் என்று அங்கிருந்த யாருமே நினைக்கவில்லை.

இதுவரை பொறுமையைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்த ஆதிரனின் கோபமும் அந்த நொடியே வெடித்தது.

சர்வேஷை ஒரு கையால் இறுக்கமாக அணைத்தபடியே, மற்றொரு கையால் ஆதிரையைத் தள்ளிவிட்டான்.

“உனக்கு என்ன பைத்தியமா? இந்தப் சின்ன  பையனைப் போட்டு இப்படியா அடிக்கிற? ராட்சசி மாதிரி நடந்துக்கற! ஆமாடி… நான் தான் சொன்னேன் அவனை ‘அப்பா’ன்னு கூப்பிட சொல்லி. இப்போ என்ன பண்ணப் போற?” என்று ஆவேசமாகக் கத்தினான்.

அவன் அந்த வார்த்தையைச் சொல்லி முடித்த அடுத்த நொடியே, அந்த அறை முழுவதும் மரண அமைதி நிலவியது.

ஆதிரை கீழே விழுவதற்கு முன்பே கதிர் அவளைத் தாங்கிப் பிடித்திருந்தான்.

ஆதிரன் கூறிய “நான் தான் சொல்லிக் கொடுத்தேன்…” என்ற ஒப்புதல் அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. அனைவரும் பேச மறந்து, அதிர்ச்சியுடன் ஆதிரனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்த அமைதியைக் கலைத்தது ஸ்ரீராமின் குரல்.

ஆதிரனைப் பார்த்து,

“என்ன ஆதி… பழக்கம் இது? அந்தப் பொண்ணை ஏன் இப்படி தள்ளிவிட்ட?” என்று கோபமாக கேட்டார்.

உடனே ஆதிரன் அவரை நோக்கித் திரும்பினான்.

“நீங்களும் பார்த்துட்டுத்தானே இருந்தீங்க அப்பா! அவங்க பண்ணது மட்டும் சரியா? இவன் சின்ன பையன். அவனுக்கு என்ன தெரியும்? ‘அப்பா’ன்னு கூப்பிட்டதுக்காக இப்படி அடிச்சு பயமுறுத்துறாங்க. அவன் எவ்வளவு பயந்து போயிருக்கான்னு யாருக்காவது புரியுதா?” என்று கோபம் தணியாமல் பதிலளித்தான்.

அவன் பேசும்போதும் சர்வேஷ் இன்னும் அவனை விட்டுப் பிரியாமல், அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதபடியே இருந்தான்.

அப்போது கதிர் மெதுவாக ஆதிரனின் அருகில் வந்து,

“ஆதி… சர்வேஷை தா…” என்று தயக்கத்துடன் கேட்டான்.

உடனே ஆதிரன் அவனை நேராகப் பார்த்தான்.

“எதுக்கு? மறுபடியும் உன் தங்கச்சி கிட்டக் கொடுத்து அடி வாங்க வைக்கவா?” என்று கோபமாகக் கேட்டான்.

அந்தக் கேள்விக்குக் கதிரால் பதில் சொல்ல முடியவில்லை. 

யாருடைய பேச்சையும் இனி கேட்க விரும்பாத ஆதிரன், சர்வேஷை இன்னும் பாதுகாப்பாகத் தன் மார்போடு அணைத்தபடி, யாரையும் திரும்பிப் பார்க்காமல் நேராக தனது அறையை நோக்கி நடந்தான்.

அவன் செல்லும் பாதையையே அனைவரும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த அறையில் இருந்த பதற்றமும், அதிர்ச்சியும் இன்னும் யாருடைய மனதையும் விட்டு அகலவில்லை. குறிப்பாக ஆதிரை… ஆதிரன் கூறிய அந்த ஒரு வார்த்தை அவளது மனதில் ஆயிரம் கேள்விகளை எழுப்பியிருந்தது. அவள் அப்படியே  நின்றபடி, அதிர்ச்சியும் கோபமும் கலந்த பார்வையுடன் ஆதிரன் சென்ற திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தால்

கோபம் இன்னும் தணியாமல் இருந்த ஆதிரன், சர்வேஷை மார்போடு அணைத்தபடியே தனது அறைக்குள் வந்தான். உள்ளே நுழைந்தவுடன் கதவை முழுவதுமாக மூடாமல், பாதியாக மட்டும் சாத்திவிட்டு, மெதுவாக சர்வேஷை கட்டிலில் அமர வைத்தான்.

ஆனால் சர்வேஷின் அழுகை இன்னும் நிற்கவில்லை. அவன் சிறிய தோள்கள் விம்மலால் குலுங்கிக் கொண்டே இருந்தன. அந்தக் காட்சியைப் பார்த்த ஆதிரனின் மனம் கனத்துப் போனது.

உடனே அறையில் இருந்த First Aid Box-ஐ எடுத்தான். அதைத் திறந்து, அதிலிருந்த காயத்திற்கான களிம்பை எடுத்து சர்வேஷின் சிவந்து போயிருந்த கன்னத்தில் மிகவும் மெதுவாகத் தடவ ஆரம்பித்தான்.

களிம்பு  பட்டவுடன் எரிச்சல் ஏற்பட்டதால், சர்வேஷ் முகத்தைச் சுளித்தபடி,

“வலிக்குது… அப்பா…” என்று விம்மலுடன் கூறினான்.

மீண்டும் அந்த “அப்பா…” என்ற அழைப்பு ஆதிரனின் காதுகளில் விழுந்தது.

ஒவ்வொரு முறையும் சர்வேஷ் தன்னை அப்படி அழைக்கும் போதும், அவனது மனதில் சொல்ல முடியாத ஒரு உணர்வு எழுந்தது. இதுவரை அனுபவிக்காத பாசமும், பொறுப்பும், உரிமையும் ஒன்றாக வந்து அவன் இதயத்தை நிறைத்தன. அந்த ஒரு வார்த்தை அவனுள் ஏதோ மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

சர்வேஷின் தலையை மெதுவாக வருடியபடி,

“கொஞ்சம் பொறுத்துக்கோ கண்ணா… இதைப் போட்டா கொஞ்ச நேரத்துல சரியாயிடும்…” என்று மென்மையாகச் சமாதானப்படுத்தினான்.

அதன்பிறகு, சர்வேஷின் சட்டையை மெதுவாகக் கழற்றிப் பார்த்தான்.

அவனது முதுகில் ஆதிரையின் கைத்தடம் பெரிதாகப் பதியவில்லை. இருந்தாலும், அந்த மென்மையான குழந்தையின் தோலில் சிறிய சிவப்பு கூட ஆதிரனுக்கு வேதனையாகத் தோன்றியது.

“சின்ன பையனை இப்படியா அடிப்பாங்க…” என்று மனதிற்குள் வருந்தியவன், அந்த இடத்திலும் மெதுவாகக் களிம்பைத் தடவி விட்டான்.

சர்வேஷ் அமைதியாக அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சில நொடிகள் கழித்து, சிறிய குரலில்,

“அப்பா… பசிக்குது…” என்றான்.

அந்த வார்த்தையைக் கேட்டவுடன்  ஆதிரை மீது இருந்த கோபம் இன்னும் அதிகரித்தது. 

“சரி கண்ணா… கொஞ்சம் இரு. உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரச் சொல்றேன்.  என்று புன்னகையுடன் கூறினான்.

சர்வேஷும் மெதுவாகத் தலையசைத்தான்.

உடனே ஆதிரன் தனது கைப்பேசியை எடுத்துத் தனது அம்மாவிற்கு அழைத்தான்.

அழைப்பு இணைந்ததும்,

“அம்மா… சர்வேஷ்க்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு என் ரூமுக்கு வாங்க…” என்று மட்டும் கூறிவிட்டு, அதற்கு மேல் எதுவும் பேசாமல் அழைப்பைத் துண்டித்தான்.

போனை வைத்துவிட்டு மீண்டும் சர்வேஷின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான் 

தொடரும் 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top