ஆதிரன், “அம்மா… சர்வேஷ்க்கு சாப்பாடு எடுத்துட்டு வாங்க,” என்று கூறியதும், லக்ஷ்மி எதுவும் பேசாமல் சமையலறைக்குச் சென்றார்.
அங்கே இருந்த இட்லியில் இரண்டு எடுத்து, சிறிது சாம்பாருடன் ஒரு தட்டில் வைத்து, ஆதிரனின் அறையை நோக்கி நடந்தார்.
அவர் படிக்கட்டில் ஏறிச் செல்வதை பார்த்த ஸ்ரீராம், “எங்க போற லக்ஷ்மி?” என்று கேட்டார்.
“ஆதி, சர்வேஷ்க்கு சாப்பாடு எடுத்துட்டு வரச் சொன்னான். அதுதான் எடுத்துட்டுப் போறேன்,” என்று அமைதியாகப் பதிலளித்தார்.
“சரி…” என்று மட்டும் கூறிவிட்டு ஸ்ரீராம் அங்கிருந்து நகர்ந்தார்.
லக்ஷ்மி ஆதிரனின் அறைக்குச் சென்று கதவை மெதுவாகத் தட்டினார்.
“உள்ள வாங்கம்மா…” என்று உள்ளிருந்து ஆதிரனின் குரல் கேட்டது.
அவர் உள்ளே சென்றதும், கையில் இருந்த தட்டை ஆதிரன் வாங்கிக் கொண்டான். கட்டிலில் அமைதியாக அமர்ந்திருந்த சர்வேஷின் கண்கள் இன்னும் அழுத சிவப்பிலேயே இருந்தன. கன்னத்தில் இருந்த அடியின் தடம் லக்ஷ்மியின் மனதையே வலிக்கச் செய்தது.
ஆதிரன் ஒரு இட்லியைப் பிய்த்து, சாம்பாரில் தொட்டு, சிறுசிறு துண்டுகளாக சர்வேஷின் வாயில் வைத்து ஊட்ட ஆரம்பித்தான்.
“வாய் திறடா… நல்ல பையனா சாப்பிடணும்…” என்று மென்மையாகச் சொல்ல, சர்வேஷும் எந்த மறுப்பும் சொல்லாமல் அமைதியாக சாப்பிட்டான்.
அந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த லக்ஷ்மியின் மனதில் பல கேள்விகள் எழுந்தன. குழந்தையிடம் இவ்வளவு பாசமாக நடந்து கொள்பவன், சில நிமிடங்களுக்கு முன் ஏன் ஆதிரையை அப்படித் தள்ளினான் என்ற குழப்பம் அவரை வாட்டியது.
“ஆதி…” என்று மெதுவாக அழைத்தார்.
“சொல்லுங்கம்மா…” என்று சர்வேஷுக்கு இன்னொரு வாய் ஊட்டியபடியே கேட்டான்.
“ஏன் டா இப்படி பண்ணுன? ஏன் ஆதிரையை கீழே தள்ளிவிட்ட?”
ஆதிரன் ஒரு நொடி அமைதியாக இருந்தான். பிறகு தன் தாயை நேராகப் பார்த்து,
“நான் என்ன பண்ணுனேம்மா?” என்று கேட்டான்.
“ஆதிரையை கீழே தள்ளியது தப்பில்லையா?”
“அம்மா… நான் வேணும்னு பண்ணல. உங்களுக்கே தெரியும் தானே… இவன் இன்னும் பச்ச குழந்தை. நாலு வயசுதான் ஆகுது. அவனுக்கு என்னம்மா தெரியும்?”
என்று சொல்லிவிட்டு, சர்வேஷின் முகத்தைத் தன் பக்கம் திருப்பினான்.
“எப்படி அடிச்சிருக்கா பாருங்க… நீங்களும் பார்த்துட்டுத்தானே இருந்தீங்க?”
என்று கூறி, சர்வேஷின் கன்னத்தை லக்ஷ்மிக்குக் காட்டினான்.
குழந்தையின் சிவந்த கன்னத்தை பார்த்த லக்ஷ்மியின் மனம் கனத்தது.
“சரிப்பா… ஆதிரா அடிச்சது தப்புதான். அதுக்காக நீ பண்ணதும் தப்புதான். எவ்வளவு கோபம் இருந்தாலும் இப்படிச் செய்யக் கூடாதே…” என்று பொறுமையாக எடுத்துச் சொன்னார்.
ஆனால் ஆதிரனின் முகத்தில் இருந்த கோபம் இன்னும் குறையவில்லை.
“அம்மா… போதும். இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க.”
அவனின் குரல் முன்பைவிட கடினமாக இருந்தது.
“உங்களுக்கு இவன் ‘அப்பா’ன்னு கூப்பிட்டது பிடிக்கல. அதனாலதான் ஆதிரைக்குச் சப்போர்ட் பண்றீங்க…” என்றான் நேராக தன் தாயின் கண்களைப் பார்த்தபடி.
அந்த வார்த்தைகளைக் கேட்ட லக்ஷ்மி அதிர்ந்து போனார்.
“ஏன் டா ஆதி… இப்படி எல்லாம் பேசுற? நான் அப்படி நினைக்கவே இல்ல…” என்று பதற்றத்துடன் கூறினார்.
அவரின் குரலில் இருந்த வேதனை ஆதிரனுக்கும் புரிந்தது. இருந்தாலும் அவன் மனதில் இருந்த கேள்வி அடங்கவில்லை.
“அம்மா…” என்று மெதுவாக ஆரம்பித்தவன்,
“அப்போ… நான் இவனுக்கு அப்பாவா இருக்கிறதுல உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லதானே?” என்று நேராகக் கேட்டான்.
“ஆதி…!”
என்று அதிர்ச்சியுடன் அழைத்தார் லக்ஷ்மி.
அவன் கேட்ட அந்த ஒரு கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், சில நொடிகள் அப்படியே உறைந்து நின்றார். அந்த அறையே கனமான அமைதியில் மூழ்கியது. ஆதிரனின் பார்வை மட்டும் தன் தாயின் பதிலுக்காக காத்துக் கொண்டிருந்தது.
ஆதிரன் கூறிய விஷயத்தைக் கேட்ட லக்ஷ்மி ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்துபோனார். அவர் அதை சற்றே எதிர்பார்க்காததால், முகத்தில் ஆச்சரியம் தெளிவாகத் தெரிந்தது. சில நொடிகள் அமைதியாக நின்றவர், தன்னை நிலைப்படுத்திக் கொண்டு மெதுவாக ஆதிரன் அருகில் வந்து நின்றார்.
அவரையே ஆதிரனும் எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஆதி… இந்த விஷயம் எல்லாம் அவசரப்பட்டு, கோபத்தில் எடுக்குற முடிவு இல்ல. நல்லா யோசிச்சுப் பேசு. சர்வேஷ் உன்னை ‘அப்பா’ன்னு கூப்பிட்டதுக்கே ஆதிரா என்ன பண்ணான்னு பார்த்த தனே. இப்ப நீ சொன்ன விஷயம் மட்டும் அவளுக்குத் தெரிஞ்சா… அவ்வளவுதான்…” என்று கவலையுடன் கூறினார்.
அதைக் கேட்ட ஆதிரன் சற்றும் தடுமாறாமல்,
“அம்மா… நான் அவளைப் பத்தி கேட்கல. உங்க முடிவு என்னன்னுதான் கேட்டேன்,” என்றான் உறுதியான குரலில்.
லக்ஷ்மி பெருமூச்சு விட்டார்.
“ஏன் டா… நான் சொல்றதைப் புரிஞ்சுக்காம பேசுற? இது சரியா வரும்னு எனக்குத் தோணல. உங்க அப்பா இதுக்கு ஒத்துக்குவாரா?” என்று தயக்கத்துடன் கேட்டார்.
“ஐயோ அம்மா… நான் சொல்றது உங்களுக்கு புரியலையா? உங்களுக்கு விருப்பமா இல்லையா அதை மட்டும் சொல்லுங்க. மத்தவங்களையெல்லாம் நான் பாத்துக்கிறேன்,” என்றான் ஆதிரன் உறுதியுடன்.
அவர் உடனே பதில் சொல்லவில்லை. அருகில் அமைதியாக நின்றிருந்த சர்வேஷை பார்த்தார்.
அந்தச் சிறுவனும் அவரைப் பார்த்து சிரித்தான். அந்தக் குழந்தைத்தனமான சிரிப்பு லக்ஷ்மியின் மனதை மெதுவாகக் கரைத்தது.
அவனது தலையை பாசமாக வருடியபடி,
“இப்படி ஒரு பேரன் எனக்குக் கிடைச்சா… வேணாம்னு நான் சொல்லப் போறேனா?” என்று மெதுவாகக் கூறினார்.
அந்த வார்த்தையைக் கேட்ட ஆதிரன் நம்ப முடியாமல் அவரைப் பார்த்தான்.
“அம்மா…” என்று அதிர்ச்சியுடன் அழைத்தவன்,
“உண்மையாவே சொல்றீங்களா?” என்று கேட்டான்.
லக்ஷ்மி சிரித்தார்.
“ஏன்? நான் பொய் சொல்ற மாதிரி இருக்கா? இவன் உன்னை ‘அப்பா’ன்னு கூப்பிட்டதுமே… என் மனசுலயும் அந்த எண்ணம் ஒரு நிமிஷம் வந்துச்சு. ஆனா அது சரியா வராதுன்னு அடுத்த நிமிஷமே அந்த எண்ணத்தை மாத்திக்கிட்டேன். இப்ப நீயே அதைப் பற்றி பேசும்போது… எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனா ஆதி… இது நீ நினைக்கிற மாதிரி ஈஸியான விஷயம் கிடையாது. இதுக்காக நீ ரொம்ப கஷ்டப்பட வேண்டி வரும். எல்லாரும் இதுக்கு ஒத்துப்பாங்களான்னு தெரியல. யாரோட மனசையும் கஷ்டப்படுத்தாம, எல்லாமே நல்லபடியா நடக்கணும்னுதான் நான் நினைக்கிறேன்,” என்றார் அக்கறையுடன்.
ஆதிரனின் முகத்தில் மெதுவாக நிம்மதி பரவியது.
“அம்மா… அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீங்களே எனக்கு ஓகே சொல்லிட்டீங்க. அது போதும்,” என்றான் மகிழ்ச்சியுடன்.
அந்த நேரம் லக்ஷ்மி மீண்டும் சர்வேஷை நோக்கித் திரும்பினார். அவனது கன்னத்தை மெதுவாக வருடியபடி,
“சர்வேஷ் கண்ணா… நீ ஏன் ஆதி அப்பான்னு கூப்பிடுற? யாராவது உன்னை அப்படிக் கூப்பிடச் சொன்னாங்களா?” என்று மென்மையாகக் கேட்டார்.
சர்வேஷ் உடனே தலையசைத்தான்.
“இல்ல பாட்டி… எனக்குத் தோணுச்சு… அதான் கூப்பிட்டேன்,” என்று குழந்தைத்தனமான சிரிப்புடன் கூறினான்.
அந்தப் பதிலைக் கேட்ட லக்ஷ்மியின் கண்களில் பாசம் நிரம்பியது.
“சரி கண்ணா… உன் அம்மா பாவம். அழுதுட்டு இருக்கா. அம்மா கிட்ட போறியா?” என்று கேட்டார்.
சர்வேஷ் உடனே முகத்தைச் சுளித்துக் கொண்டு,
“வேணாம்… அம்மா அடிப்பாங்க…” என்று பயத்துடன் கூறினான்.
அதைக் கேட்ட ஆதிரன்,
“அம்மா… அவன் இங்கேயே இருக்கட்டும்,” என்றான்.
லக்ஷ்மி உடனே அவனைப் பார்த்து,
“சும்மா இரு ஆதி. நீ இப்ப பண்றது பெரிய தப்பு. ஒரு அம்மாகிட்ட இருந்து பிள்ளையைப் பிரிக்கப் பார்க்குற மாதிரி இருக்கு,” என்று கண்டிப்புடன் கூறினார்.
“அம்மா, என்ன சொல்றீங்க? அவ அடிக்கிறாள்னுதான் நான் அவனை இங்கே தூக்கிட்டு வந்தேன்,” என்றான் ஆதிரன்.
“புரிஞ்சுக்கோ ஆதி. அவ பாவம்… அழுதுட்டு இருக்கா. இவனைக் கொண்டு போய் அவ கிட்ட விட்டுட்டு வா,” என்றார் லக்ஷ்மி.
“அவன் தானே போக மாட்டேன்னு சொல்றான்…” என்றான் ஆதிரன்.
“நீ சமாதானம் பண்ணி கூட்டிட்டு போ. நீ சொன்னா உன் புள்ள கேப்பான்,” என்று இயல்பாகச் சொல்லிவிட்டார் லக்ஷ்மி.
‘உன் புள்ள…’
அந்த இரண்டு வார்த்தைகள் ஆதிரனின் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தன. அந்த ஒரு அழைப்பிலேயே அவன் மனம் அளவிட முடியாத மகிழ்ச்சியில் திளைத்தது. இதுவரை மனதுக்குள் மட்டும் வைத்திருந்த ஆசைக்கு, தன் தாயின் வாயிலிருந்து கிடைத்த அந்தச் சிறிய அங்கீகாரம், அவனுக்கு உலகமே கிடைத்தது போன்ற உணர்வைக் கொடுத்தது.
அந்த மகிழ்ச்சியை வெளிக்காட்டாமல் இருக்க முயன்றாலும், அவன் உதட்டில் மலர்ந்த புன்னகையை மட்டும் மறைக்க முடியவில்லை.
இங்கு கோகுல் தனது அறையில் அமைதியாக இருக்க முடியாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். வழக்கமாக எப்போதும் கலகலப்பாக இருப்பவன், இன்று மட்டும் ஏதோ பெரிய தவறு செய்துவிட்டவன் போல பதற்றத்துடன் காணப்பட்டான். மனதில் ஒரே விஷயம் ஓடிக் கொண்டே இருந்ததால், அவனால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
அந்த நேரம் கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே வந்தான் விக்ரம்.
“என்ன மச்சான்… ரூம்ல இருக்க? அதிசயமா இருக்கே!” என்று குறும்பாகக் கேட்டான்.
அவனைப் பார்த்த கோகுல்,
“என்ன மச்சான்… கிண்டல் பண்றீங்களா?” என்றான்.
“ஆமாடா! எப்ப பார்த்தாலும் ஸ்ரீராம் அப்பா கிட்ட வம்பு இழுத்துக்கிட்டே சுத்துவியே. இப்ப அமைதியா ரூம்ல உட்கார்ந்து ஏதோ ஆழமா யோசிச்சிட்டு இருக்க… அதான் கேட்டேன்,” என்று விக்ரம் சிரித்தபடி கூறினான்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல மச்சான்… சும்மாதான்,” என்று எதையும் வெளிக்காட்டாமல் பதிலளித்தான் கோகுல்.
“சரி வா… எங்கயாவது வெளிய போயிட்டு வரலாம். வீட்டுலயே இருந்தா இன்னும் போர் அடிக்கும்,” என்றான் விக்ரம்.
உடனே கோகுல் புருவத்தை உயர்த்தி,
“ஏன்? உங்க பொண்டாட்டிய கூட்டிட்டு போக வேண்டியது தானே?” என்று கேலி செய்தான்.
“அஞ்சலி இப்ப ஆதிரா கூட இருக்கா. ஆதிரா இன்னும் அழுதுகிட்டே இருக்கா. அவளை சமாதானப்படுத்திக்கிட்டு இருக்காங்க நிலாவும் அஞ்சலியும்,” என்றான்.
“ஓ… அப்படியா…” என்று தலையசைத்த கோகுல், சிறிது நேரம் யோசித்துவிட்டு,
“சரி மச்சான்… எனக்கு ஒரு டவுட்,” என்றான்.
“என்னடா?” என்று இயல்பாகக் கேட்டான் விக்ரம்.
“இல்ல… உங்களுக்கும் அஞ்சலிக்கும் ஏதாவது பிரச்சனையா?” என்று நேராகக் கேட்டுவிட்டான் கோகுல்.
அந்தக் கேள்வியைக் கேட்டதும் விக்ரமின் முகத்தில் ஒரு கணம் அதிர்ச்சி தோன்றி மறைந்தது. அதை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்த கோகுலின் பார்வையிலிருந்து அது தப்பவில்லை.
தன்னை உடனே சமாளித்துக் கொண்ட விக்ரம்,
“அதெல்லாம் ஒண்ணும் இல்லடா. நாங்க பேசிட்டுத்தான் இருக்கோம். உனக்குத்தான் தெரியல,” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு,
“சரி… நான் கிளம்புறேன். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு,” என்று கூறி அவசரமாக அறையை விட்டு வெளியேறிவிட்டான்.
விக்ரம் வெளியே சென்றதும், கோகுல் மீண்டும் அறை முழுவதும் அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்தான்.
“ஐயோ கடவுளே…! சர்வேஷ்கிட்ட ‘ஆதி மச்சானா.‘அப்பா’ன்னு கூப்பிடச் சொன்னதே நான்தான்னு. அந்த குட்டிப் பையன் யார்கிட்டயாவது உண்மையை உளறிட்டான்னா… அவ்வளவுதான்! என் கதை முடிஞ்சு போயிடும். ஆதி மச்சான் என்னை உயிரோட விட மாட்டாரே…!” என்று தலையில் கை வைத்தபடி புலம்பிக் கொண்டான்.
அவன் முகத்தில் பதற்றமும், பயமும் மாறி மாறி வந்து சென்றன. “சர்வேஷ் சின்ன பையன்… என்ன கேட்டாலும் பளிச்சுன்னு உண்மைய சொல்லிடுவானே! இப்ப யாராவது அவன்கிட்ட ‘யாரு அப்படிக் கூப்பிடச் சொன்னா?’ன்னு கேட்டிருந்தா… கண்டிப்பா என் பேரைத்தான் சொல்லிருப்பான். ஐயோ… இனிமே என்ன ஆகப்போகுதோ!” என்று மனதிற்குள் புலம்பினான்.
தொடரும்