💓அத்தியாயம் 《25》

அத்தியாயம் 25

 

ஆதிரன் தன்னைப் பார்த்ததை உணர்ந்த கோகுல், திருட்டு முழி முழித்து நின்றான்.

“ஐயோ… மாட்டிக்குவோமோ! இவரு பாக்குற பார்வையே சரியில்லையே. நம்பல சந்தேகப்பட்டுட்டாரோ?” என்று உள்ளுக்குள் பதறினான்.

ஆனால் வெளியே எதுவும் தெரியாதது போல சாதாரணமாகவே நின்றிருந்தான்.

உடனே நிலைமையை மாற்ற நினைத்த கோகுல்,

“சித்தப்பா, அவருக்கு அடிபட்டு இருக்கு. இப்போ போய் எப்படி விழுந்தாருன்னு விசாரிச்சிட்டு இருக்கீங்களே! முதல்ல டாக்டர் கிட்ட கூட்டிட்டு போவோம்,” என்றான்.

“ஆமாம்பா… சரிதான்,” என்று கூறிய செந்தில்,

“வாங்க மாப்பிள்ளை… உடனே ஹாஸ்பிட்டலுக்குப் போயிடலாம்,” என்று விக்ரமுக்கு துணையாக நின்றார்.

அப்போது ஆதிரன்,

“நான் போய் காரை ஸ்டார்ட் பண்றேன். நீங்க அவரை கூட்டிட்டு வாங்க,” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியே சென்றான்.

கோகுல் உடனே செந்திலைப் பார்த்து,

“சித்தப்பா… நீங்க வீட்டுலயே இருங்க. அஞ்சலி வரட்டும்,” என்றான்.

“ஏன்டா?” என்று குழப்பமாகக் கேட்டார் செந்தில்.

“அது… சரியா இருக்காது சித்தப்பா. வீட்டுலயும் யாராவது இருக்கணும். நாங்க கூட்டிட்டு போயிட்டு வந்துடுறோம்,” என்று சமாளித்தான்.

செந்திலும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் தலையசைத்தார்.

பிறகு கோகுல் அஞ்சலியைப் பார்த்து,

“என்ன இன்னும் நின்னுட்டு இருக்க? வா… நீயும் கூட ,” என்றான்.

விக்ரமின் நிலையைப் பார்த்து ஏற்கனவே பயந்து போயிருந்த அஞ்சலி, உடனே அவர்களுடன் வந்தாள்.

அதற்குள் ஆதிரன் காரை வீட்டின் முன் கொண்டு வந்து ஸ்டார்ட் செய்து தயாராக வைத்திருந்தான்.

கோகுலும் ஆதிரனும் சேர்ந்து விக்ரமை மெதுவாக அழைத்து வந்து காரின் பின்பக்க கதவைத் திறந்து அமர வைத்தனர்.

அவன் தனியாக அமர முடியாமல் வலியில் துடித்துக் கொண்டிருந்ததால், கோகுல் அஞ்சலியைப் பார்த்து,

“நீ விக்ரம் பக்கத்துல உட்காரு. ஏதாவது தேவைப்பட்டா பார்த்துக்கோ,” என்றான்.

அஞ்சலியும் உடனே விக்ரமின் அருகில் அமர்ந்தாள்.

அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்த கோகுல், காரின் முன்பக்க கதவைத் திறந்து ஆதிரனின் அருகில் வந்து அமர்ந்தான்.

அடுத்த நொடியே…

ஆதிரன் காரை வேகமாக இயக்கினான்.

அந்த கார், வலியால் அவதிப்பட்ட கொண்டிருந்த விக்ரமையும், பதற்றத்துடன் இருந்த அஞ்சலியையும் ஏற்றிக் கொண்டு மருத்துவமனையை நோக்கி விரைந்தது.

காருக்குள் அமைதி நிலவியது

 

மருத்துவமனையில் அனைத்து பரிசோதனைகளையும் முடித்துவிட்டு, டாக்டர் விக்ரமின் எக்ஸ்ரே மற்றும் மற்ற ரிப்போர்ட்களை ஒருமுறை பார்த்தார். பின்னர் அவர்களை நோக்கி அமைதியாகப் பேச ஆரம்பித்தார்.

“அவர் கீழே விழுந்ததில் இடுப்புப் பகுதியில் கொஞ்சம் பலமாக அடிபட்டிருக்கிறது. அதனால் தான் வலி அதிகமாக இருக்கிறது. ஆனால், மற்றபடி பெருசாக எந்தப் பிரச்சினையும் இல்லை. கவலைப்பட வேண்டாம். இதற்கான ஆயின்மெண்ட் எழுதித் தருகிறேன். வலி இருக்கும் இடத்தில் தினமும் தடவி விடுங்கள். ரொம்ப வலி தாங்க முடியலன்னா இந்த பெயின் கில்லர் மாத்திரையும் போட்டுக்கலாம். இரண்டு நாட்கள் முழுசா பெட் ரெஸ்ட்ல இருந்தா சரியாகிடும்.” என்றார் டாக்டர்.

அவருடைய வார்த்தைகளைக் கேட்டதும் அனைவருக்கும் இருந்த பதற்றம் சற்று குறைந்தது.

“ரொம்ப நன்றி, டாக்டர்,” என்று கூறிவிட்டு நால்வரும் அந்த அறையை விட்டு வெளியே வந்தார்கள்.

வெளியே வந்ததும் கோகுல் கையில் இருந்த மருந்துச் சீட்டைப் பார்த்துக் கொண்டு,

“மச்சான், நீங்க கொஞ்ச நேரம் இங்கயே இருங்க. நான் போய் டாக்டர் சொன்ன மருந்தெல்லாம் வாங்கிட்டு வந்துட்றேன்,” என்றான்.

அதை கேட்ட ஆதிரன்,

“நானும் உன் கூட வாரேன் டா,” என்று சொல்லிவிட்டு கோகுலுடன் மருந்தகம் இருக்கும் பக்கம் நடந்து சென்றான்.

அவர்கள் இருவரும் சென்றதும், விக்ரம் மெதுவாக தனது இடுப்பைப் பிடித்துக் கொண்டு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். இடுப்பில் ஏற்பட்ட வலி அவனால் தாங்க முடியவில்லை. ஒரு கையால் இடுப்பை அழுத்திப் பிடித்தபடியே முகத்தைச் சுளித்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் தெரிந்த வலியால் அவதிப்படுவது.  அஞ்சலியின் மனதை கலங்கச் செய்தது.

அவள் மெதுவாக அவன் அருகில் வந்து அமர்ந்தாள். அவனுடைய ஒரு கையை மெதுவாகப் பிடித்துக் கொண்டாள்.

“ரொம்ப வலிக்குதா…?” என்று கவலையுடன் கேட்டாள்.

விக்ரமால் பேசக்கூட முடியவில்லை. “ஆமாம்…” என்பதுபோல் மெதுவாக தலையை மட்டும் ஆட்டினான்.

அவனுடைய வேதனையைப் பார்த்த அஞ்சலி மென்மையான குரலில்,

“கொஞ்சம் பொறுத்துக்கோங்க. வீட்டுக்குப் போனதும் டாக்டர் கொடுத்த மருந்து சாப்பிட்டுட்டு, இந்த ஆயின்மெண்ட்டையும் போட்டா சீக்கிரமே சரியாகிடும். இரண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்தா வலி குறைஞ்சிடும்,” என்று ஆறுதல் கூறினாள்.

அவளுடைய வார்த்தைகளைக் கேட்ட விக்ரம் எதுவும் பேசவில்லை. ஆனால், அவள் கையை மட்டும் விடாமல் பிடித்தபடியே அமைதியாக அமர்ந்திருந்தான்.

இதற்கிடையில் மருந்தகம் சென்றிருந்த கோகுல், மருந்துச் சீட்டை அங்கிருந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு மருந்துகள் தயாராகும் வரை காத்துக் கொண்டிருந்தான்.

அப்போது அவன் அருகில் வந்த ஆதிரன், கோகுலின் தோளில் கை போட்டபடி,

“டேய்… கொஞ்சம் இங்க வாடா,” என்று கூறி, அங்கிருந்து சற்று தள்ளி அவனை அழைத்துச் சென்றான்.

கோகுலும் ஏன் என்று புரியாமல் ஆதிரனுடன் நடந்து சென்றான். அடுத்த நொடி ஆதிரன் என்ன பேசப் போகிறான் என்ற பதட்டம் கோகுலின் முகத்தில் தெரிந்தது.

 

“என்ன நடந்துச்சு கோகுல்? விக்ரம் எப்படி கீழே விழுந்தார்?” என்று ஆதிரன் சந்தேகத்துடன் கேட்டான்.

கோகுல் உடனே முகத்தைச் சுருக்கிக் கொண்டு,

“மச்சான்… என்ன மச்சான் இப்படிக் கேக்குறீங்க? நீங்க கேக்குறதைப் பார்த்தா, நான் வேணும்னே படியில் என்னைய கொட்டி, அவரை கீழே விழ வச்ச மாதிரி கேக்குறீங்களே!” என்று பாவமாகச் சொன்னான்.

அதைக் கேட்ட ஆதிரன் புருவத்தை உயர்த்தி,

“அப்போ நீதான் படியில் என்னைய ஊத்துனியா?” என்று நேரடியாகக் கேட்டான்.

“ஐயோ கடவுளே… இவரை மட்டும் ஏன் இவ்வளவு அறிவோட படைச்சீங்க?” என்று மனதிற்குள் புலம்பிய கோகுல், வெளியில் சிரிப்பை அடக்கிக்கொண்டு,

“அது இல்ல மச்சான்…” என்று இழுத்தான்.

“சுத்தி வளைக்காத. உண்மையைச் சொல்லு. ஏன் இப்படிப் பண்ண?” என்று ஆதிரன் சீரியஸாகக் கேட்டான்.

இனி மறைத்துப் பயனில்லை என்று நினைத்த கோகுல், மாலையில் வீட்டில் நடந்த அனைத்தையும் சொல்லத் தொடங்கினான்.

“இன்று மாலை வீட்டுக்கு வந்த விக்ரம், மும்பைக்குப் போக வேண்டிய விஷயத்தை அஞ்சலியிடம் சொன்னாரு. அதைக் கேட்டதும் அஞ்சலி எதுவும் பேசாமல் கண் கலங்கி நின்னாங்க. அவங்க முகத்தில இருந்த அந்த வேதனையைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.”

அவன் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ஆதிரன்,

“அப்போ… விக்ரம் மும்பைக்குப் போகக் கூடாதுன்னுதான் இப்படிப் பண்ணியா?” என்று கேட்டான்.

“ஆமா மச்சான்,” என்று தயக்கமின்றி ஒத்துக்கொண்டான் கோகுல்.

“நான் இதுக்கு முன்னாடியே உங்ககிட்ட சொல்லியிருக்கேன். அவங்க ரெண்டு பேருக்குள்ள இன்னும் அந்தளவுக்கு நெருக்கமே இல்லை. சட்டப்படி புருஷன்-பொண்டாட்டிதான்… ஆனா மனசளவுல இன்னும் அந்த உறவு உருவாகவே இல்லை. இப்படியிருக்கும்போது விக்ரம் மும்பை போயிட்டார்னா, ஏற்கனவே இருக்கிற தூரம் இன்னும் பெருசாயிடும். அந்த இடைவெளி அதிகமா வளர்ந்துடும்.”

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் மீண்டும் தொடர்ந்தான்.

“அதனால்தான் அவரை போக விடக்கூடாதுன்னு நினைச்சேன். அதுக்காகத்தான் இப்படிச் செஞ்சேன். அது மட்டும் இல்ல மச்சான்… இப்போ விக்ரமுக்கு அடிபட்டிருக்கே. அவரை எப்படியும் அஞ்சலிதான் பார்த்துக்கணும். அவருக்கு மருந்து போடுறது, சாப்பாடு கொடுக்குறது, கவனிக்குறது எல்லாமே அஞ்சலிதான் செய்யனும். அப்படி அவங்க இருவரும் கொஞ்ச நாள் ஒன்றாக இருந்தா, அவங்களுக்குள்ள ஒரு நெருக்கம் உருவாகும் இல்லையா? அதுதான் என் எண்ணம்.”

கோகுல் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் இருந்த அக்கறையும், இருவரின் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என்ற அவனுடைய எண்ணமும் ஆதிரனுக்குப் புரிந்தது.

சில நொடிகள் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதிரன், திடீரென்று புன்னகைத்தான்.

“பரவாயில்லடா கோகுல்…” என்று மெதுவாக ஆரம்பித்தான்.

“நீ இந்த அளவுக்கு யோசிப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. நீ எப்பவும் விளையாட்டுத்தனமா சுத்திட்டு, எல்லாரையும் கலாய்ச்சிட்டு இருப்பதைத்தான் பார்த்திருக்கேன். அதனால உன் மேல எனக்கு எப்பவுமே கோவம் வரும். ‘இந்த வயசுலயும் கொஞ்சமாவது வயசுக்கேத்த மாதிரி நடந்துக்க மாட்டானா? எப்பப் பார்த்தாலும் சின்ன பசங்க மாதிரி விளையாடிக்கிட்டே இருக்கனே!’ன்னு நினைச்சிருக்கேன்.”

சிறிது இடைவெளி விட்டவன், கோகுலின் தோளில் கை வைத்துக் கொண்டு,

“ஆனா இப்போ புரியுது… நீ வெளியில் எவ்வளவு விளையாட்டுத்தனமா இருந்தாலும், உள்ளுக்குள்ள எல்லாத்தையும் யோசிச்சுத்தான் செய்ற. அஞ்சலி விஷயத்துல மட்டும் இல்ல, சர்வேஷ் விஷயத்துல கூட நீ அவங்க இடத்துல இருந்து யோசிச்சு, அந்த நேரத்துக்கு எது சரின்னு பார்த்து முடிவு எடுக்கிற. அந்த குணம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, கோகுல்.”

என்று மனம் திறந்து பாராட்டினான்.

ஆதிரனின் அந்த வார்த்தைகளைக் கேட்ட கோகுலின் கண்களில் ஒரு நெகிழ்ச்சி தெரிந்தது. இதுவரை யாரும் புரிந்துகொள்ளாத தன்னுடைய எண்ணத்தை ஆதிரன் புரிந்துகொண்டதில் அவன் மனம் லேசானது.

அடுத்த நொடியே ஆதிரன், கோகுலை அன்போடு அணைத்துக் கொண்டான்.

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, விக்ரம், அஞ்சலி, ஆதிரன், கோகுல் ஆகிய நால்வரும் காரில் வீட்டை நோக்கிப் புறப்பட்டனர். காரை ஆதிரன் ஓட்டிக் கொண்டிருந்தான். முன் இருக்கையில் கோகுல் அமர்ந்திருந்தான். பின்புற இருக்கையில் விக்ரமும் அஞ்சலியும் அமர்ந்திருந்தனர்.

மருத்துவமனையில் மருத்துவர், விக்ரமின் இடுப்பில் பலமாக அடிபட்டிருப்பதாகவும், இரண்டு நாட்கள் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதனால் காரில் அமர்ந்திருந்த அனைவரின் மனதிலும் ஒரு சிறிய பதற்றம் இருந்தது.

சில நிமிடங்கள் யாரும் பேசாமல் அமைதியாகப் பயணித்துக் கொண்டிருந்தனர். காரின் வேகம் சற்று அதிகமாக இருந்ததால், ஒவ்வொரு வேகத்தடையையும் கடக்கும் போதும் விக்ரம் வலியால் முகத்தைச் சுளித்துக் கொண்டிருந்தான்.

அதை கவனித்த அஞ்சலியின் மனம் துடித்தது. அவள் மெதுவாக,

“ஆதி மாமா… கொஞ்சம் மெதுவா போங்க என்றால் அவளுடைய குரலில் இருந்த பதற்றத்தைக் கேட்டதும் ஆதிரனும், கோகுலும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்தனர்.

 

அப்போது அவர்கள் கண்ட காட்சி இருவரையும் சில நொடிகள் அமைதியாக வைத்தது.

அஞ்சலி, விக்ரமின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். காரின் ஒவ்வொரு அசைவிலும் அவனுக்கு வலி அதிகமாகிவிடக் கூடாது என்ற கவலையில், அவனருகே இன்னும் நெருங்கி அமர்ந்து அவனைத் தாங்கியபடி இருந்தாள். அவளது கண்களில் இருந்த அக்கறை வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு வெளிப்பட்டது.

அதைப் பார்த்த ஆதிரனின் உதட்டில் மெல்லிய புன்னகை மலர்ந்தது. கோகுலும் மனதிற்குள் மகிழ்ந்தான்.

‘நான் நினைச்சது கொஞ்சம் கொஞ்சமா நடக்க ஆரம்பிச்சிருக்கு…’ என்று அவன் மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

அதன்பிறகு ஆதிரன் காரின் வேகத்தைக் குறைத்து மிகவும் மெதுவாகவும் கவனமாகவும் ஓட்டினான்.

அஞ்சலியோ, விக்ரமின் கையை விடாமல் பிடித்துக் கொண்டே இருந்தாள். அவனுக்கு ஏதாவது அசௌகரியம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில், அவன் முகத்தையே அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

விக்ரமும் அவளது கையைப் பார்த்தான். வழக்கமாக அவனிடம் ஒதுங்கி இருப்பவள், இன்று இவ்வளவு அக்கறையுடன் தன் கையைப் பிடித்திருப்பது அவனுக்குள் ஏதோ ஒரு புதுவிதமான உணர்வை ஏற்படுத்தியது. ஆனால் அந்த உணர்வை வெளிக்காட்டாமல் அமைதியாகவே இருந்தான்.

 

சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு அவர்கள் வீட்டை வந்தடைந்தனர்.

கார் வீட்டின் முன் நின்றதும், முதலில் ஆதிரனும் கோகுலும் இறங்கினர். பின்னர் இருவரும் சேர்ந்து விக்ரமை மெதுவாக இறக்கினர்.

 

வலியால் விக்ரமால் நேராக நடக்க முடியவில்லை. அவன் இடுப்பைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடக்க முயன்றான்.

உடனே கோகுல் அவனைத் தாங்கிக் கொண்டான். மறுபுறம் அஞ்சலியும் அவன் கையைப் பிடித்துக் கொண்டு கவனமாக உள்ளே அழைத்துச் சென்றாள்.

 

அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடனே, அங்கே இருந்த ஸ்ரீராம், புஷ்பா, லட்சுமி ஆகிய மூவரும் பதற்றத்துடன் ஓடிவந்தனர்.

விக்ரமின் நடையைப் பார்த்தவுடன் அவர்களது முகத்தில் கவலை அதிகரித்தது.

“என்னப்பா ஆச்சு? செந்தில் மச்சான் போன் பண்ணி சொன்னாரு. கீழே விழுந்துட்டியாமே! ரொம்ப அடிபட்டுருச்சா?” என்று ஸ்ரீராம் பதற்றத்துடன் கேட்டார்.

 

புஷ்பாவும் அருகில் வந்து,

“எங்கெல்லாம் அடிபட்டிருக்கு விக்ரம்? டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று கவலையுடன் விசாரித்தார்.

 

லட்சுமியோ அஞ்சலியின் முகத்தைப் பார்த்தார். அவளது கலங்கிய கண்களையும், விக்ரமின் கையை இன்னும் விடாமல் பிடித்திருப்பதையும் பார்த்தவள், மனதிற்குள் ‘இந்தப் பொண்ணு எவ்வளவு பயந்திருக்கா…’ என்று நினைத்து வருத்தப்பட்டார்.

 

விக்ரம் வலியை மறைத்தபடி மெதுவாகச் சிரித்தான்.

“இல்லப்பா… பெருசா எதுவும் இல்லை. இடுப்புல கொஞ்சம் பலமா அடிபட்டிருக்கு. டாக்டர் ரெண்டு நாள் பெட் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்னு சொன்னாரு. 

அதுக்கான ஆயின்மென்ட்டும் கொடுத்திருக்காரு,” என்று அனைவரையும் சமாதானப்படுத்த முயன்றான்.

“சரி… சரி… முதல்ல அவனை நிற்க வச்சிக்கிட்டு பேசாதீங்க. வலி இருக்கும். அவன் ரூமுக்கு போகட்டும்,” என்று லட்சுமி கூறினார்.

பிறகு கோகுலைப் பார்த்து,

“கோகுல்… நீ விக்ரமைக் கூட்டிக்கிட்டு போய் அவன் ரூம்ல படுக்க வை.” என்றார்.

 

“சரிங்க அத்தை,” என்று சொல்லிவிட்டு கோகுல், விக்ரமை மெதுவாகத் தாங்கிக் கொண்டு அவனுடைய அறைக்குச் சென்றான்.

அவர்களுக்குப் பின்னால் அஞ்சலியும் அமைதியாக நடந்தாள்.

அறைக்குள் சென்றதும், கோகுல் விக்ரமை மெதுவாக கட்டிலில் அமர வைத்தான்.

“மச்சான்… நீங்க படுத்துக்கோங்க. அதிகமா அசையாதீங்க,” என்று கூறினான்.

பிறகு அஞ்சலியை நோக்கித் திரும்பி,

“அஞ்சலிம்மா… டாக்டர் கொடுத்த ஆயின்மென்ட் அந்தப் பையில இருக்கு. அதை எடுத்துட்டு மச்சான் இடுப்புல தேச்சு விடுங்க. வலி கொஞ்சம் குறையும்,” என்று சொல்லிவிட்டு, இருவருக்கும் தனிமை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குறும்பாக ஒரு புன்னகையுடன் அறையை விட்டு வெளியேறினான்.

கதவு மூடிய சத்தம் கேட்டதும் அறை முழுவதும் அமைதி நிலவியது.

அஞ்சலி மெதுவாக மருத்துவர் கொடுத்திருந்த பையை எடுத்தாள். அதிலிருந்து ஆயின்மென்டை எடுத்து கையில் வைத்துக் கொண்டாள்.

ஆனால்… அதை எப்படி போடுவது என்று அவளுக்குத் தெரியவில்லை.

விக்ரமின் இடுப்பில் மருந்து தடவ வேண்டுமென்றால், அவனுடைய சட்டையைத் தூக்க வேண்டியிருக்கும். அந்த எண்ணமே அவளை வெட்கத்தில் ஆழ்த்தியது.

கையில் ஆயின்மென்டுடன் நின்றபடியே என்ன செய்வது என்று தெரியாமல் தயங்கிக் கொண்டிருந்தாள் அஞ்சலி. அவளுடைய பதற்றமான முகத்தையும், தயக்கத்தையும் பார்த்த விக்ரம் அவளை அமைதியாகவே கவனித்துக் கொண்டிருந்தான். அறையில் நிலவிய அந்த அமைதி, இருவரின் இதயத் துடிப்பையும் தெளிவாக உணர வைக்கும் அளவுக்கு கனமாக இருந்தது.

தொடரும்

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top