💓அத்தியாயம் 《24》

ஆதிரன் வீட்டிற்கு வந்த பிறகும் அவனுடைய மனம் அமைதியாக இல்லை. உடல் வீட்டில் இருந்தாலும், எண்ணங்கள் முழுவதும் சர்வேஷைச் சுற்றியே சுழன்றன. அவன் கண்முன்னே சர்வேஷ் கதறி அழுத காட்சி மீண்டும் மீண்டும் வந்து போனது. அந்த வேதனை கலந்த முகமும், கண்ணீரும் ஆதிரனின் மனதை நிம்மதியாக இருக்க விடவில்லை.

“சர்வேஷை இப்படியே விட்டுவிட முடியாது… அவன் மீண்டும் பழைய மாதிரி சிரிக்க வேண்டும்… அதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டும்…” என்று தனக்குள் பலமுறை சொல்லிக் கொண்டான்.

என்ன செய்யலாம் என்று நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தவன், இறுதியில் ஒரு உறுதியான முடிவுக்கு வந்தான். அந்த முடிவை எடுத்த பிறகுதான் அவன் மனம் சற்று லேசானது. அதன்பிறகு அமைதியாகத் தூங்கச் சென்றான்.

மறுநாள் காலை…

எப்போதும் போல அலுவலகத்திற்குச் செல்லாமல், ஆதிரன் நேராக தன் அம்மா லட்சுமியிடம் சென்றான்.

“அம்மா… உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்,” என்று சற்றுத் தயக்கத்துடன் கூறினான்.

மகனின் குரலில் இருந்த தீவிரத்தை உணர்ந்த லட்சுமி, “என்ன ஆதி? ஏதாவது முக்கியமான விஷயமா?” என்று கேட்டார்.

“வாங்கம்மா… தோட்டத்துக்கு போய்ப் பேசலாம்,” என்றவன், அவரை வீட்டின் பின்புறத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான்.

அங்கு இருந்த கல் பெஞ்சில் லட்சுமியை அமர வைத்துவிட்டு, தானும் அவருக்கு அருகில் அமர்ந்தான். சில நொடிகள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். அவன் முகத்தில் தெரிந்த குழப்பத்தையும், உறுதியையும் பார்த்த லட்சுமி, மகன் என்ன சொல்லப் போகிறான் என்று அமைதியாக காத்திருந்தார்.

சிறிது நேரம் கழித்து ஆழமாக மூச்சை இழுத்த ஆதிரன்,

“அம்மா… நான் ஆதிரையை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்,” என்று உறுதியான குரலில் கூறினான்.

அதை கேட்ட லட்சுமி பெரிதாக அதிர்ச்சி அடையவில்லை. ஏனென்றால், ஆதிரை சர்வேஷை அடித்த நாள் அன்றே ஆதிரன் மறைமுகமாக இதைப் பற்றிச் சொல்லியிருந்தான். அதனால் அவன் மனதில் இப்படிப்பட்ட ஒரு முடிவு உருவாகிக் கொண்டிருப்பதை அவர் ஏற்கனவே உணர்ந்திருந்தார்.

அமைதியாக அவனைப் பார்த்தவர்,

“சரிப்பா… இதுக்கு ஆதிரை சம்மதிப்பாளா?” என்று மெதுவாகக் கேட்டார்.

ஆதிரன் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு,

“கண்டிப்பா ஒத்துக்க மாட்டா. ஆனா… எனக்கு சர்வேஷ் வேணும் அம்மா. அவன் என் கூடவே இருக்கணும். அவன் இனிமேல் தனிமைலே இருக்கக் கூடாது. அதுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன். ஆதிரையையும் சம்மதிக்க வைக்க நான் முயற்சி பண்ணுவேன்,” என்றான்.

அவன் பேசும்போது அவன் குரலில் இருந்த உறுதியையும், சர்வேஷ் மீது வைத்திருந்த பாசத்தையும் லட்சுமி தெளிவாக உணர்ந்தார்.

“நீங்க அப்பா கிட்ட பேசுங்கம்மா. நான் கதிர் கிட்ட பேசுறேன். எல்லாரும் சம்மதிச்சா அடுத்தது எப்படி செய்யணும்னு பார்த்துக்கலாம்,” என்றான் ஆதிரன்.

மகனின் முகத்தை சில நொடிகள் அமைதியாக பார்த்த லட்சுமி, மெதுவாக அவன் கையைப் பிடித்தார்.

“ஆதி… உன் சந்தோஷத்துக்கு நானும், உன் அப்பாவும் எப்போதும் குறுக்கே நிற்க மாட்டோம். நீ என்ன முடிவு எடுத்தாலும், அது நல்லதுக்காகத்தான் இருக்கும் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. உன் அப்பாக்கிட்ட நான் பேசுறேன். ஆனா, ஆதிரையின் மனசும் முக்கியம். அவளோட முழு சம்மதத்தோட தான் இந்தக் கல்யாணம் நடக்கணும்.”

லட்சுமியின் வார்த்தைகளைக் கேட்ட ஆதிரனின் மனம் சற்று நிம்மதியடைந்தது. இனி அடுத்த கட்டமாக கதிரிடம் பேச வேண்டும் என்ற எண்ணத்துடன், தன் முடிவை நிறைவேற்றுவதற்கான முதல் அடியை அவன் எடுத்து வைத்தான்.

அன்று மாலை, வீட்டின் ஹாலில் அஞ்சலியும் கோகுலும் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்கள். வீடு முழுவதும் அமைதியாக இருந்தது. அவ்வப்போது தொலைக்காட்சியின் சத்தம் மட்டுமே அந்த அமைதியைக் கலைத்துக் கொண்டிருந்தது.

அப்போது வீட்டின் முன் ஒரு கார் வந்து நின்ற சத்தம் கேட்டது.

“யாரா வந்திருக்காங்க?” என்று கோகுல் எழுந்து பார்க்க நினைத்தபோது, கதவைத் திறந்து உள்ளே வந்தான் விக்ரம்.

அவனைப் பார்த்ததும் அஞ்சலி எழுந்து நின்றாள்.

விக்ரம் நேராக அவளருகில் வந்து,

“அஞ்சலி… மாமா எங்க?” என்று கேட்டான்.

“அப்பா வெளியே போயிருக்காரு,” என்று அமைதியாகப் பதிலளித்தாள் அஞ்சலி.

“சரி…” என்று தலையசைத்தவன், சிறிது நேரம் அமைதியாக நின்றுவிட்டு,

“நான் இன்னைக்கு நைட்டு மும்பை கிளம்புறேன்,” என்றான்.

அந்த ஒரு வார்த்தை அஞ்சலிக்கு மின்னல் தாக்கியது போல இருந்தது.

“என்ன…? திடீர்னு?” என்று பதற்றத்துடன் கேட்டாள்.

“திடீர்னு இல்ல. இதை நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன். என்னோட பிரெண்டு ஒருத்தன் மும்பையில இருக்கான். அவன் கம்பெனியில இப்ப வேக்கன்சி இருக்கு. ரொம்ப நாளாவே என்னை வரச் சொல்லிக்கிட்டே இருந்தான். இப்ப நான் அங்க  போறேன்,” என்றான் விக்ரம்.

“வேலைக்கா…?” என்று அதிர்ச்சியடைந்தாள் அஞ்சலி.

“நீங்க அப்பாவோட பிசினஸ்தானே பார்த்துட்டு இருக்கீங்க. இப்போ திடீர்னு வேலைக்கு போறேன்னு சொல்றீங்க?”

 

அமைதியாக அவளைப் பார்த்தவன்,

“ஏன்… நீ இருக்க இல்ல? நீ பார்த்துக்கோ உங்க அப்பாவோட பிசினஸை…” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டான்.

அந்த வார்த்தை அஞ்சலியின் இதயத்தில் கூர்மையான கத்தி பாய்ந்தது போல இருந்தது.

“உங்க அப்பாவோட பிசினஸ்…”

அந்த ஒரு சொல்லிலேயே அவளைத் தன்னுடைய மனைவியாக அல்ல, வேறு ஒருவராகப் பிரித்துக் காட்டிவிட்டான் விக்ரம்.

அவளது கண்கள் உடனே கலங்கின.

ஆனால் அவன் முன் அழ வேண்டும் என்று நினைக்கவில்லை.

எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.

விக்ரமும் அவளிடமிருந்து எந்தப் பதிலும் எதிர்பார்க்காமல், நேராக மாடிக்குச் சென்று தனது அறைக்குள் நுழைந்து விட்டான்.

அவன் மேலே சென்றதும், ஹாலில் சில நொடிகள் கனமான அமைதி நிலவியது.

அஞ்சலி அப்படியே நின்று கொண்டிருந்தாள். அவளது முகத்தில் இருந்த சோகத்தை மறைக்க எவ்வளவோ முயன்றாலும், அவளது கண்கள் அவளை காட்டிக் கொடுத்துவிட்டன.

அதை கவனித்த கோகுல் மெதுவாக அவளருகில் வந்து,

“அஞ்சலி… என்னம்மா? உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா?” என்று அக்கறையுடன் கேட்டான்.

அஞ்சலி உடனே தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“பிரச்சனை எல்லாம் ஒண்ணும் இல்ல அண்ணா…” என்று சொல்லிவிட்டு, கோகுல் கவனிப்பதற்குள் கண்களில் திரண்டிருந்த கண்ணீரை விரைவாகத் துடைத்துக் கொண்டாள்.

அவள் மறைக்க முயன்றாலும், கோகுலின் பார்வையில் அது தப்பவில்லை.

மேலும் எதுவும் கேட்டு அவளை சங்கடப்படுத்த விரும்பவில்லை.

ஆனால் அவனுடைய மனதில் ஒரு எண்ணம் மட்டும் உறுதியாகப் பதிந்தது.

‘இவங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ பெரிய பிரச்சனை இருக்கு…’

 

‘இப்போ விக்ரம் மும்பைக்குப் போயிட்டார்னா, ஏற்கனவே இவங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற தூரம் இன்னும் அதிகமாயிடும். இந்த இடைவெளி நாளடைவில் நிரப்ப முடியாத அளவுக்கு பெருசாயிடும்…’ என்று மனதிற்குள் நினைத்தான்.

திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆனால் அந்த நான்கு ஆண்டுகளில், அவர்கள் உண்மையான கணவன்-மனைவியாக மனதார வாழ்ந்ததாக கோகுலுக்குத் தோன்றவில்லை.

ஒரே வீட்டில் இருந்தாலும், இரண்டு மனங்களுக்கிடையே ஒரு பெரிய சுவர் எழுந்து நின்றது போலவே இருந்தது.

அந்த சுவரை உடைக்காமல் விட்டால், அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் தனித்தனியாகவே போய்விடும் என்பதை கோகுல் நன்றாக உணர்ந்தான்.

‘எப்படியாவது இவங்க வாழ்க்கையை சரி பண்ணணும்… அஞ்சலி சந்தோஷமா வாழணும்… விக்ரமும் அவளோட மனசை புரிஞ்சுக்கணும்…’ என்று உறுதியாக முடிவு செய்தான்.

கோகுலுக்கு அஞ்சலி உடன்பிறந்த தங்கை அல்ல.

ஆனால் அந்த உறவைக் காட்டிலும் அதிகமான பாசத்தோடு அவளைத் தனது சொந்தத் தங்கையாகவே பார்க்கும் அவனால். அவளுடைய கண்ணீரைப் பார்க்க  முடியவில்லை.

அந்த நொடியிலேயே, இந்த இருவரையும் மீண்டும் ஒரு மனமாக சேர்க்க வேண்டும் என்ற உறுதி அவனுடைய மனதில் வேரூன்றியது. 

“என்ன கோகுல்… ரொம்ப தீவிரமா ஏதோ யோசிச்சிட்டு இருக்க போல?” என்று கேட்டுக் கொண்டே, தனது லேப்டாப்பை எடுத்துகொண்டு  கோகுலின் எதிரே இருந்த சோபாவில் வந்து அமர்ந்தான் ஆதிரன்.

“ஒன்னும் இல்ல மச்சான்… சும்மாதான்,” என்று கூறிய கோகுல், அதன்பிறகு ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

எப்போதும் கலகலப்பாகப் பேசி, வீட்டையே சிரிப்பால் நிரப்பும் கோகுல் இன்று இப்படி அமைதியாக இருப்பது ஆதிரனுக்கு புதிதாக இருந்தது.

“இவனுக்கு என்ன ஆச்சு? எப்போதும் வளவளன்னு பேசிட்டே இருப்பான். இன்று ஏன் இப்படி அமைதியா இருக்கான்?” என்று மனதிற்குள் யோசித்தான்.

ஆனால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், தனது லேப்டாப்பைத் திறந்து வேலை பார்க்கத் தொடங்கினான்.

அரை மணி நேரம் கடந்தது.

திடீரென்று சோபாவில் இருந்து எழுந்த கோகுல், வீட்டுக்குள் அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்தான். ஒரு இடத்தில் நின்று கொள்ளவே முடியாதது போல அவனின் நடத்தை இருந்தது.

“என்ன ஆச்சு கோகுல்?” என்று மீண்டும் கேட்டான் ஆதிரன்.

“ஒன்னும் இல்ல மச்சான்… நீ உன் வேலையைப் பாரு,” என்று மட்டும் சொல்லிவிட்டு மீண்டும் வீட்டைச் சுற்றி நடந்தான்.

ஆதிரனுக்கு அவனுடைய நடவடிக்கைகள் வித்தியாசமாகத் தோன்றினாலும், எதுவும் பேசாமல் அவனை கவனித்துக் கொண்டே தனது வேலையைத் தொடர்ந்தான்.

அந்த நேரத்தில், அஞ்சலி மாடிப்படியின் அருகே வந்து நின்றாள்.

அவளைப் பார்த்ததும் கோகுல் அவசரமாக அவள் அருகே சென்றான்.

“அஞ்சலி… எங்க போற?” என்று கேட்டான்.

“அண்ணா… மாடிக்குப் போறேன். துணி காயப் போட்டிருந்தேன். அதை எடுத்துட்டு வரணும்,” என்றாள்.

“இப்ப சரியான வெயில் இருக்கு. நீ மாடிக்கெல்லாம் போக வேண்டாம்,” என்று அவசரமாகத் தடுத்தான்.

“அண்ணா… வெயில் கொறஞ்சிடுச்சு. சீக்கிரமா எடுத்துட்டு வந்துடுறேன்.”

“நான் சொல்றதைக் கேளு அஞ்சலிம்மா. கிச்சன்ல ஏதாவது வேலை இருந்தா போய் பாரு,” என்று சற்றுக் கண்டிப்புடன் கூறினான்.

கோகுல் இப்படி பேசுவது அஞ்சலிக்கு ஆச்சரியமாக இருந்தாலும், அவள் எதுவும் கேட்காமல் அமைதியாக சமையலறைக்குள் சென்றுவிட்டாள்.

அதைப் பார்த்த ஆதிரன், “இவன் ஏன் அஞ்சலியை மாடிக்குப் போக விடல?” என்று மனதிற்குள் கேள்வி எழுந்தாலும், இன்னும் எதுவும் புரியாமல் அமைதியாக இருந்தான்.

சிறிது நேரத்தில் வீட்டின் வாசல் திறக்கும் சத்தம் கேட்டது.

உள்ளே வந்தவர் செந்தில்.

அவரைப் பார்த்ததும் கோகுல் வேகமாக அவரிடம் சென்றான்.

“சித்தப்பா… வாங்க வாங்க… வந்து உட்காருங்க. ரொம்ப களைப்பா வந்து இருக்கீங்க. இருங்க… டீ எடுத்துட்டு வரச் சொல்றேன்,” என்று மிகுந்த அக்கறையுடன் பேசினான்.

செந்தில் சிரித்தபடி,

“என்னாச்சு கோகுல்? என்னமோ புதுசா பாக்குற மாதிரி கேக்குற. இங்கதான் இருந்தேன். மதியம்தான் வெளியே போனே,  என்றார்.

“ஐயோ சித்தப்பா… நீங்க களைப்பா வந்து இருக்கீங்க. அதான் அப்படி கேட்டேன்,” என்று சமாளித்துக் கொண்ட கோகுல்,

“அஞ்சலி… சித்தப்பாவுக்கு டீ கொண்டு வா,” என்று குரல் கொடுத்தான்.

சில நிமிடங்களில் அஞ்சலி டீயை எடுத்துக் கொண்டு வந்து செந்திலிடம் கொடுத்தாள்.

இவையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆதிரன், “இவனுக்கு என்னாச்சு? பைத்தியம் பிடிச்ச மாதிரி நடந்து கிறானே…” என்று மனதிற்குள் நினைத்தான்.

அந்த நேரத்தில் கோகுல் மீண்டும் அஞ்சலியை நோக்கித் திரும்பினான்.

“அஞ்சலி… விக்ரம் மாப்பிள்ளை உன்கிட்ட ஏதோ  சொன்னாரே… சித்தப்பா கிட்ட சொல்லச் சொல்லி,” என்றான்.

“என்ன சொன்னாரு மாப்பிள்ளை?” என்று செந்தில் ஆர்வமாகக் கேட்டார்.

சற்று தடுமாறிய அஞ்சலி,

“அப்பா… அது வந்து… அவர் உங்ககிட்ட பேசணும்னு சொன்னாரு,” என்று மட்டும் கூறினாள்.

“சரிம்மா… நான் போய்ப் பார்க்கிறேன் மாப்பிள்ளையை,” என்று எழுந்தார் செந்தில்.

உடனே கோகுல் பதறியபடி,

“ஐயோ சித்தப்பா… நீங்க எங்க போறீங்க? நீங்க இங்கயே இருங்க. மாப்பிள்ளை கீழே வருவாரு,” என்றான்.

செந்திலும் மீண்டும் சோபாவில் அமர்ந்து கொண்டார்.

அப்போது அஞ்சலி,

“சரிப்பா… நான் மேல போய் அவரைக் கூட்டிட்டு வர்றேன்,” என்று மாடிப்படியை நோக்கி நடந்தாள்.

“அஞ்சலி… நீ எங்க போற? நீ இங்கேயே இரு. நான் மாப்பிள்ளையை வரச் சொல்றேன்,” என்று அவளையும் தடுத்தான் கோகுல்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஆதிரனுக்கு இப்போது உறுதியாகப் புரிந்தது.

“இவன் ஏதோ பிளான் பண்ணி இருக்கான்… ஆனா என்னன்னு மட்டும் புரியல.”

அவன் அமைதியாகவே இருந்தான்.

கோகுல் மாடிப்படிகளின் கீழே நின்று கொண்டு,

“மாப்பிள்ளை…!” என்று சத்தமாக அழைத்தான்.

மேலிருந்து எட்டிப் பார்த்த விக்ரம்,

“என்ன கோகுல்?” என்று கேட்டான்.

“சித்தப்பா வந்துட்டாரு. வாங்க… உங்களைப் பார்க்கணுமாம்,” என்றான்.

“இதோ வர்றேன்,” என்று கூறிய விக்ரம் கீழே இறங்கத் தொடங்கினான்.

அனைவரின் பார்வையும் அவன் மீதே இருந்தது.

மாடிப்படிகளில் கவனமாக இறங்கி வந்த விக்ரம், திடீரென்று எதிலோ காலை வைத்தான்.

“அஹ்…!” என்று வலியில் அலறியவனின் கால் நிலை தடுமாறியது.

அடுத்த நொடியே…

தடதடதட…!

என்று மாடிப்படிகளில் உருண்டு கீழே விழுந்தான்.

“ஐயோ… விக்ரம்…!” என்று அலறியபடி அஞ்சலி அவனை நோக்கி ஓடினாள்.

கீழே கிடந்த விக்ரமைத் தூக்க முயன்று பதறியபடி அழைத்தாள்.

அஞ்சலியின் அலறல் சத்தம் கேட்ட பிறகுதான் செந்தில், ஆதிரன், கோகுல் ஆகிய மூவரும் அதிர்ச்சியுடன் விக்ரமை நோக்கி வேகமாக ஓடிவந்தனர்.

ஒரே நொடியிலேயே அந்த வீடு முழுவதும் பதற்றமும் பரபரப்பும் 

கோகுலும் அஞ்சலியும் இருபுறமும் தாங்கிப் பிடித்து விக்ரமை மெதுவாக எழுப்பினர்.

மிகுந்த சிரமத்துடன் எழுந்து நின்ற விக்ரம், தனது இடுப்பைப் பிடித்துக் கொண்டு வலியில் முகத்தைச் சுளித்தான். அவன் முகத்தில் தெரிந்த வேதனையைப் பார்த்த அனைவரும் பதறிப் போனார்கள்.

“ரொம்ப அடிபட்டுருச்சா விக்ரம்?” என்று கவலையுடன் கேட்டான் ஆதிரன்.

“ஆமா ஆதி… இடுப்பு ரொம்ப வலிக்குது. நிற்கவே கஷ்டமா இருக்கு,” என்று வலியை அடக்கிக் கொண்டே கூறினான் விக்ரம்.

அப்போது செந்தில் பதற்றமாக,

“எப்படி மாப்பிள்ளை இப்படி விழுந்தீங்க?” என்று கேட்டார்.

“தெரியல மாமா… யாரோ படிக்கட்டுல எண்ணெய் ஊத்தி வச்சிருக்காங்க போல. கால் வச்சதும் அப்படியே வழுக்கி விழுந்துட்டேன்,” என்றான் விக்ரம்.

விக்ரம் “எண்ணெய் ஊத்தி வச்சிருக்காங்க” என்று சொன்னவுடன், ஆதிரனின் பார்வை சட்டென்று கோகுலின் மீது திரும்பியது.

அந்தப் பார்வையில் ஏதோ ஒரு சந்தேகம் இருந்தது.

தொடரும் 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top