💓அத்தியாயம் 《28》

மருத்துவமனையில் இருந்து சர்வேஷை அழைத்துக்கொண்டு அனைவரும் வீட்டிற்கு திரும்பினர். காரில் இருந்து இறங்கியவுடன், ஆதிரன் எந்தத் தயக்கமும் இல்லாமல் சர்வேஷை தனது கரங்களில் தூக்கிக்கொண்டான். காய்ச்சல் குறைந்திருந்தாலும், இன்னும் சோர்வாக இருந்த மகனை அவன் மிகவும் கவனமாக அணைத்தபடி வீட்டிற்குள் நுழைந்தான்.

 

கதிர், அனைவரையும்  வரவேற்று, “வாங்க… எல்லாரும் உள்ளே வாங்க,” என்று கூறி ஹாலில் அமர வைத்தான். அனைவரின் முகத்திலும் மருத்துவமனையில் இருந்த பதற்றம் கொஞ்சம் குறைந்திருந்தாலும், சர்வேஷின் உடல்நிலை முழுமையாகச் சரியாகும் வரை கவலை மட்டும் குறையவில்லை.

அந்த நேரத்தில், வீட்டில் வேலை செய்யும் பெண் அனைவருக்கும் பழச்சாறு நிரப்பிய டம்ளர்களை ஒரு தட்டில் வைத்து கொண்டு வந்துதார்.

அதைப் பார்த்த நிலா ஆச்சரியமாக,

“உங்களுக்கு எப்படி அக்கா எல்லாரும் வீட்டுக்கு வரப்போறாங்கன்னு தெரியும்? ஜூஸ் எல்லாம் ரெடியா போட்டு வச்சிருக்கீங்களே!” என்று கேட்டாள்.

அதற்கு அந்தப் பெண் புன்னகையுடன்,

“ஆதிர பாப்பாதான் சொன்னுச்சும்மா. 

எல்லாரும் வந்ததும் குடிக்க ஜூஸ் ரெடியா வைக்கச் சொன்னாங்க,” என்றார்.

“ஓ… சரிங்க அக்கா. நீங்க போய் வேலையைப் பாருங்க. நான் எல்லாருக்கும் கொடுத்துக்கிறேன்,” என்று கூறிய நிலா, அவர் கையில் இருந்த தட்டை வாங்கிக்கொண்டு ஒவ்வொருவரிடமும் ஜூஸைக் கொடுக்க ஆரம்பித்தாள்.

ஆதிரன் இன்னும் சர்வேஷை மார்போடு அணைத்தபடியே சோபாவில் அமர்ந்திருந்தான். அவனைப் பார்த்த மித்ரா அருகில் வந்து,

“அண்ணா… சர்வேஷை என்கிட்ட கொடுங்க. நீங்க ஜூஸ் குடிங்க,” என்றாள்.

ஆனால் ஆதிரன் மெதுவாகத் தலையசைத்து,

“இல்லம்மா… பரவாயில்லை. நான் பாத்துக்கிறேன்,” என்றான்.

அவன் ஒரு கையால் சர்வேஷை இன்னும் நெருக்கமாக அணைத்துக்கொண்டு எழுந்து, கதிரைப் பார்த்து,

“கதிர்… சர்வேஷ் தூங்கிட்டான். ரூம் எங்க இருக்குன்னு சொல்லு,” என்று கேட்டான்.

“மேல மாடில்டா,” என்று கதிர் கூறினான்.

“சரி,” என்று கூறிய ஆதிரன், சர்வேஷை கவனமாகத் தூக்கிக்கொண்டு மாடிப்படிகளில் மெதுவாக ஏறிச் சென்றான்.

அந்த அறை… ஆதிரையின் அறை.

கதவின் முன் வந்து  யோசிக்காமல், கதவைத் தட்டாமல் உள்ளே நுழைந்தான்.

அப்போது அறைக்குள் இருந்த ஆதிரை, கட்டிலின் அருகே அமைதியாக அமர்ந்திருந்தாள். திடீரென்று ஆதிரன் உள்ளே வந்ததைப் பார்த்ததும், அவளது கண்களில் தேங்கி இருந்த கண்ணீரை அவசரமாகத் துடைத்துக் கொண்டாள். அவன் தன்னை அப்படி பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தில் எதுவும் பேசாமல் பால்கனிக்குச் சென்று நின்றுவிட்டாள்.

ஆதிரன் எதுவும் பேசவில்லை.

அவன் மெதுவாக சர்வேஷை கட்டிலில் படுக்க வைத்தான். அப்போது பாதி தூக்கத்தில் இருந்த சர்வேஷ் தன் சிறிய கைகளை ஆதிரனின் சட்டையைப் பிடித்துக்கொண்டு,

“அப்பா… எங்க போறீங்க?” என்று மழலைக் குரலில் கேட்டான்.

அந்த ஒரு வார்த்தை ஆதிரனின் இதயத்தை மென்மையாக்கியது.

“நான் எங்கேயும் போகலடா… இங்கதான் இருக்கேன். அப்பா உன்னைத் தட்டிக்கொடுத்து தூங்க வைக்கிறேன். நீ தூங்கு,” என்று அவன் மென்மையாகச் சொன்னான்.

அதன்பிறகு சர்வேஷின் தலைமுடியை வருடிக்கொண்டும், முதுகை மெதுவாகத் தட்டிக்கொடுத்துக்கொண்டும் அவனை உறங்க வைத்தான். சில நிமிடங்களில் சர்வேஷ் ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றுவிட்டான்.

அவன் நன்றாகத் தூங்குவதை உறுதி செய்த ஆதிரன், மெதுவாக ஒரு போர்வையை எடுத்து சர்வேஷின் மீது போர்த்திவிட்டான். அவன் முகத்தை ஒரு கணம் பாசமாகப் பார்த்து நின்றான்.

பிறகு அமைதியாக வெளியே செல்ல அவன் திரும்பினான்.

ஆனால்… இரண்டு அடிகள் நடந்தவுடன் ஏதோ ஒன்று அவனை நிறுத்தியது.

ஒரு நிமிடம் யோசித்தவன், தனது காலடிகளை மெதுவாக பால்கனியை நோக்கித் திருப்பினான்.

அங்கே… முதுகு காட்டியபடி அமைதியாக நின்று கொண்டிருந்தாள் ஆதிரை. வெளியில் வீசிய மெல்லிய காற்று அவளது தலைமுடியை அசைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவளது மனதில் வீசிய புயலை யாராலும் காண முடியவில்லை.

அவளை சில நொடிகள் அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்த ஆதிரன், மெதுவாக பால்கனிக்குள் அடியெடுத்து வைத்தான்…

 

ஆதிரன் பால்கனிக்குள் வந்து நின்றதை ஆதிரை உணர்ந்தாள். அவனது காலடிச் சத்தமே அவளுக்கு கேட்டது. இருந்தாலும், அவள் திரும்பிப் பார்க்கவில்லை. வெளியில் எங்கோ வெறித்துப் பார்த்தபடியே நின்றிருந்தாள். அவளது கண்களில் மீண்டும் கண்ணீர் எட்டிப் பார்த்தாலும், அதை வெளிக்காட்டாமல் தன்னை அடக்கிக் கொண்டாள்.

ஆதிரன் அவளுக்குப் பின்னால் வந்து சில நொடிகள் அமைதியாக நின்றான். அந்த அமைதியே இருவருக்கும் இடையே இருந்த தூரத்தை இன்னும் அதிகமாக உணர்த்தியது.

சிறிது நேரம் கழித்து மெதுவாக,

“ஆதிரை… நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.” என்றான்.

அவள் பதில் எதுவும் சொல்லவில்லை.

அவனும் அவள் பதிலுக்காக காத்திருக்காமல் தொடர்ந்தான்.

“சர்வேஷ் பத்திதான் பேசணும். தயவுசெய்து அவனை இனிமேலும் ரொம்ப கஷ்டப்படுத்தாதீங்க. அவனோட மனசு அப்பா பாசத்துக்காக ஏங்குது. அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குதுன்னு எனக்கு தெரியல.”

அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு தந்தையின் வலி வெளிப்பட்டது.

“உங்களுக்காக நீங்க இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வேண்டாம்… ஆனால் அவனுக்காக சம்மதிக்கலாமே. நான் ஓப்பனாவே சொல்றேன்… எனக்கு சர்வேஷோட அப்பாவா இருக்கணும். அதுல எனக்கும் சம்பந்தம் … எங்க வீட்டுல இருக்குற எல்லாருக்கும் அதுதான் விருப்பம்.”

ஒரு நிமிடம் இடைவெளி விட்டவன் ஆழமாக மூச்சை இழுத்துக் கொண்டு,

“இனி முடிவு உங்களோடது. ப்ளீஸ்… சர்வேஷ் பத்தி மட்டும் யோசிச்சு இந்த முடிவை எடுங்க.”

என்று அமைதியாகச் சொல்லிவிட்டு, அவளது பதிலுக்குக் கூட காத்திருக்காமல் பால்கனியில் இருந்து வெளியேறினான்.

ஆதிரை அப்படியே நின்றிருந்தாள். அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளது மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

கீழே வந்த ஆதிரன், அனைவரிடமும் எதுவும் நடக்காதது போல அமைதியாக அமர்ந்தான்.

அதன்பிறகு அவனது குடும்பத்தினர் அனைவரும் கிளம்பத் தயாரானார்கள்.

அப்போது கதிர் அவர்களைப் பார்த்து,

“எங்க போறீங்க? காலையிலிருந்து யாருமே ஒழுங்கா எதுவும் சாப்பிடல. எல்லாம் சமைச்சாச்சு. சாப்பிட்டுட்டு போகலாம்.” என்றான்.

அதற்கு அனைவரும் சம்மதித்தனர்.

அன்றைய மதிய உணவை அனைவரும் கதிரின் வீட்டிலேயே ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். மருத்துவமனையில் இருந்த பதற்றம் கொஞ்சம் குறைந்திருந்தாலும், ஒவ்வொருவரின் மனதிலும் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

சாப்பிட்டு முடித்த பிறகு, அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில்…

மாடிப்படிகளில் இருந்து மெதுவாக இறங்கி வந்தாள் ஆதிரை.

அவளைப் பார்த்ததும் அனைவரின் பார்வையும் அவள் மீதே நிலைத்தது.

அவள் நேராக வந்து கதிரின் முன் நின்றாள்.

சில நொடிகள் அமைதியாக நின்றவள், உறுதியான குரலில்,

“அண்ணா… எனக்கு கல்யாணத்துக்கு சம்மதம்.” என்றாள்.

அவள் கூறிய அந்த ஒரே ஒரு வார்த்தை அங்கிருந்த அனைவரின் மனதிலும் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

பல நாட்களாக மனதில் இருந்த பாரம் இறங்கியதுபோல் அனைவரின் முகத்திலும் சந்தோஷம் மலர்ந்தது.

கதிர் நம்ப முடியாமல் அவளைப் பார்த்து,

“அம்மு… நிஜமாவா சொல்ற?” என்று ஆர்வமாகக் கேட்டான்.

“ஆமா அண்ணா.” என்று அமைதியாகப் பதிலளித்தாள் ஆதிரை.

அந்த பதிலை கேட்டதும் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

ஆனால்…

அந்த மகிழ்ச்சி சில நொடிகள் மட்டுமே நீடித்தது.

அனைவரின் தலையிலும் இடி இறங்கியது போல, ஆதிரை அடுத்த வார்த்தையைச் சொன்னாள்.

“ஆனா… நீ எனக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு மாப்பிள்ளை பார்த்திருந்தியே… அவர நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். அவருக்கும் ஓகே  எனக்கும் ஓகே.”

அவள் சொன்னதை கேட்டவுடன் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

கதிர் அதிர்ச்சியுடன் எழுந்து,

“அம்மு… என்ன சொல்ற நீ?” என்று கேட்டான்.

ஆதிரை அமைதியாக,

“ஆமா அண்ணா. நீயே சொன்னியே… அவருக்கும் ஒரு குழந்தை இருக்கு. அவரோட வைஃப் அவரை டைவர்ஸ் பண்ணிட்டு போயிட்டாங்கன்னு.” என்றாள்.

“அம்மு… அது வந்து…” என்று கதிர் ஏதோ விளக்கம் சொல்ல முயன்றான்.

ஆனால் அவனது பேச்சை இடைமறித்த ஆதிரை,

“அண்ணா… சர்வேஷ்க்கு ஒரு அப்பா வேணும். அவன் அப்பா பாசத்துக்காக ஏங்குறான். அதுக்காகத்தான் இந்த முடிவு.”

ஒரு நொடி நின்றவள், தனது வார்த்தைகளை இன்னும் தெளிவாகச் சொன்னாள்.

“அப்படிப்பட்ட ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அவருக்கு என்கிட்ட எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. நானும் என் வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ முடியும். புரிஞ்சுக்கோ.”

என்று கூறினாள்.

அந்த வார்த்தைகளைச் சொல்லும்போது, அவள் ஓரக்கண்ணால் ஆதிரனைப் பார்த்தாள்.

அவளது அந்த ஒரு பார்வையிலேயே, அவள் சொல்ல வந்த “எதிர்பார்ப்பு” என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் அங்கிருந்த அனைவருக்கும் புரிந்துவிட்டது.

ஆதிரனின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி முற்றிலும் மறைந்து போனது. அவன் கண்களில் ஏமாற்றமும் வலியும் கலந்த ஒரு உணர்வு தெரிந்தது.

ஹாலில் மீண்டும் ஒரு கனமான அமைதி நிலவியது. யாராலும் உடனடியாக எதுவும் பேச முடியவில்லை. ஏனெனில், ஆதிரை எடுத்திருந்த முடிவு… அனைவரும் எதிர்பார்த்த முடிவாக இருந்தாலும், அதை அவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை 

 

ஆதிரை அனைவரையும் ஒரு முறை சுற்றிப் பார்த்தாள். பிறகு அமைதியான குரலில்,

“நான் அவர்கிட்ட ஏற்கனவே பேசிட்டேன் அண்ணா. இன்னைக்கு ஈவினிங் உன்னப்  பார்க்க வர்றேன்னு சொல்லியிருக்காங்க. நீங்க பேசிட்டு,  முடிவு பண்ணிக்கலாம்.” என்றாள்.

அவள் சொன்னதை கேட்டதும், அங்கிருந்த அனைவரும் மீண்டும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இந்த விஷயம் இவ்வளவு தூரம் போய்விட்டதா என்ற எண்ணம் ஒவ்வொருவரின் மனதிலும் தோன்றியது.

அடுத்த நொடியே ஆதிரை மெதுவாக ஆதிரன் பக்கம் திரும்பினாள்.

அவனை நேராகப் பார்த்தவள், இரு கைகளையும் கூப்பி கும்பிட்டாள்.

அவளது அந்த செயலைக் கண்ட ஆதிரன் அதிர்ச்சியில் உறைந்துபோனான்.

கண்கள் கலங்கியிருந்தாலும், குரலில் உறுதியைக் குறைக்காமல்,

“இவ்வளவு நாளா என் மகனுக்கு அப்பா பாசத்தை கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி.”

என்றாள்.

அந்த ஒரு நன்றி என்ற வார்த்தையே ஆதிரனின் இதயத்தை நொறுக்கிவிட்டது.

ஆனால் அதைவிட அவளது அடுத்த வார்த்தைகள் அவனை முற்றிலும் சிதறடித்தன.

“இதுக்கு பிறகு அது தேவைப்படாது… ப்ளீஸ்… இனிமேல் எங்களை விட்டு விலகியே இருங்க.”

என்று சொல்லிவிட்டு, யாருடைய பதிலுக்கும் காத்திருக்காமல் விறுவிறுவென மாடிப்படிகளில் ஏறிச் சென்று விட்டாள்.

அவள் மேலே செல்வதையே ஆதிரன் கோபத்துடனும் வேதனையுடனும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது முகத்தில் ஏமாற்றம், கோபம், வலி, இயலாமை—அனைத்தும் ஒன்றாகக் கலந்திருந்தது.

ஹாலில் சில நொடிகள் யாராலும் பேச முடியாத அளவுக்கு கனமான அமைதி நிலவியது.

கதிருக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

இறுதியாக அவன் மெதுவாக ஸ்ரீராமின் பக்கம் திரும்பி,

“அங்கிள்…” என்று மட்டும் அழைத்தான்.

அதற்குள் கதிரின் மனநிலையைப் புரிந்துகொண்ட ஸ்ரீராம் அமைதியாக புன்னகைத்து,

“புரியுது கதிர்… நீ எதுவும் சங்கடப்பட வேண்டாம்.”

என்று ஆரம்பித்தார்.

“இதுல நாம முடிவு பண்ணி எதுவும் நடக்கப் போறது இல்லை. இவ்வளவு நாள் கல்யாணமே வேண்டாம்னு பிடிவாதமா இருந்த ஆதிரை… இப்ப சர்வேஷுக்காக இவ்வளவு தூரம் இறங்கி வந்து கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியிருக்கா. அதுவே எங்களுக்கு பெரிய சந்தோஷம்.”

சிறிது நேரம் நின்றவர்,

“எங்களைப் பொறுத்தவரைக்கும் ஆதிரையும் சர்வேஷும் நல்லா இருந்தா மட்டும் போதும். அவங்க சந்தோஷம்தான் எங்களுக்கு முக்கியம்.”

என்று மனநிறைவுடன் கூறினார்.

அவரது பெருந்தன்மையான வார்த்தைகளைக் கேட்ட கதிரால் எதுவும் பேச முடியவில்லை. குற்றவுணர்ச்சியுடன் தலைகுனிந்து நின்றான்.

ஆனால்…

அதே நேரத்தில், ஸ்ரீராம் கூறிய அந்த வார்த்தைகள் ஆதிரனின் காதுகளில் வேறொரு விதமாக ஒலித்தன.

அவன் தன் தந்தையை ஒரு முறை திரும்பிப் பார்த்தான்.

அந்த பார்வையிலேயே அவனது கோபம் வெளிப்பட்டது.

ஒரு வார்த்தை கூட பேசாமல், வேகமாக அங்கிருந்து வெளியேறினான்.

அவனது காலடிச் சத்தமே அவனுள் கொந்தளித்துக் கொண்டிருந்த புயலை வெளிப்படுத்தியது.

வீட்டை விட்டு வெளியே வந்தவுடன், ஆழமாக மூச்சை இழுத்தான்.

ஆனால் மனதிற்குள் எரிந்துகொண்டிருந்த கோபம் மட்டும் தணியவில்லை.

‘சர்வேஷ்… இன்னொருத்தனை அப்பான்னு கூப்பிடுவானா?’

அந்த எண்ணமே அவனது நெஞ்சை பிளந்தது.

‘இல்ல… அது ஒருபோதும் நடக்கக் கூடாது. அவன் என் மகன்…  அவனுக்கு அப்பா நான்தான். வேற யாரையும் அந்த இடத்தில் என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியாது.’

என்ற எண்ணம் அவனது மனதில் கோபமாக உருமாறியது.

 

அவன் கண்களில் எரிந்துக் கொண்டிருந்த அந்த தீ… இனி நடக்கப் போகும் நிகழ்வுகளுக்கான முன்னோட்டமாக இருந்தது.

தொடரும் 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top