ஆதிரனின் குடும்பத்தினர் அனைவரும் சோகமான முகத்துடனே வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் ஏதோ பெரிய இழப்பைச் சந்தித்தவர்கள் போன்ற வேதனை தெரிந்தது. வீட்டின் ஹாலில் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்த அஞ்சலி, அவர்கள் வந்த சத்தம் கேட்டு அவசரமாக எழுந்து அவர்களிடம் வந்தாள்.
“சர்வேஷ்க்கு இப்போ எப்படி இருக்கு?” என்று பதட்டத்துடன் கேட்டாள்.
“சர்வேஷ் இப்போ நல்லா இருக்கான், அஞ்சலி. அவனை வீட்டில் விட்டுட்டுத்தான் நாங்க இங்க வந்தோம்,” என்றார் லட்சுமி.
“அப்போ ஏன் எல்லாரும் இப்படி ஒரு மாதிரி முகம் வச்சிருக்கீங்க?” என்று குழப்பத்துடன் கேட்டாள் அஞ்சலி.
அவள் கேட்ட கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை. அனைவரும் அமைதியாக வந்து சோபாவில் அமர்ந்துகொண்டனர். அந்த அமைதியே ஏதோ பெரிய விஷயம் நடந்திருக்கிறது என்பதை அஞ்சலிக்கு உணர்த்தியது.
பதற்றமடைந்த அவள் கோகுலின் அருகில் சென்று,
“அண்ணா… என்னாச்சு? ஏன் எல்லாரும் இப்படி இருக்காங்க? சர்வேஷ்க்கு எதுவும் இல்ல தானே?” என்று அவசரமாகக் கேட்டாள்.
“சர்வேஷ்க்கு எதுவும் இல்லை, அஞ்சலி. அவன் நல்லாத்தான் இருக்கான்,” என்றான் கோகுல்.
“அப்புறம் ஏன் எல்லாரும் இப்படி இருக்கீங்க?” என்று மீண்டும் கேட்டாள்.
ஒரு பெருமூச்சை விட்ட கோகுல், கதிர் வீட்டில் நடந்த அனைத்தையும் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒன்றும் விடாமல் அவளிடம் கூறினான்.
அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் கேட்ட அஞ்சலியின் முகம் மாறிப்போனது.
“அண்ணா… என்ன சொல்றீங்க? ஆதிரையை என்ன… பைத்தியமா?” என்று கோபத்துடன் கேட்டாள்.
“அப்படி சொல்லாத அஞ்சலிமா…” என்று லட்சுமி மெதுவாகக் கூறினார்.
“இல்ல அத்தை… சர்வேஷ்க்கு ஆதி மாமாவைத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு. அவர்தான் அவனக்கு அப்பாவா வரணும்னு அந்தக் குழந்தை ஆசைப்படுறான். அவ்வளவு பாசமா இருக்கிறவரை ஆதிரை ஏன் இப்படி நடந்துக்குறாங்கன்னு எனக்கு புரியவே மாட்டேங்குது…” என்று ஆதங்கத்துடன் கூறினாள்.
சில நொடிகள் அமைதியாக இருந்தவள்,
“சரி… ஆதி மாமா எங்கே?” என்று சுற்றிலும் பார்வையைச் செலுத்தியபடி கேட்டாள்.
“ஆதி மச்சான் எங்களோட வரல. காரை எடுத்துக்கிட்டு தனியா எங்கயோ போயிட்டாரு,” என்றான் கோகுல்.
“பாவம் ஆதி மாமா… அவருக்கும் சர்வேஷ் மேல எவ்வளவு பாசம்! அது ஏன் அந்த ஆதிரைக்கு புரிய மாட்டேங்குதோ…” என்று சலிப்புடன் கூறியவள், தன்னைச் சமாளித்துக்கொண்டு,
“சரி… உங்களுக்கெல்லாம் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்,” என்று கூறிவிட்டு சமையலறையை நோக்கி நடந்தாள்.
அப்போதுதான் அவளது பார்வை ஹாலின் ஒரு மூலையில் அமைதியாக நின்றுகொண்டிருந்த விக்ரமின் மீது விழுந்தது.
அவனைப் பார்த்ததும் அவளது முகம் இறுகியது. ஒரு கடுமையான பார்வையை அவன் மீது வீசியவள், எதுவும் பேசாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு சமையலறைக்குள் சென்றுவிட்டாள்.
அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் விக்ரமின் மனதை ஆழமாகத் தாக்கியது.
“ஆதிக்காகவும்… சர்வேஷ்க்காகவும் இவ்வளவு யோசிக்கிறாளே… ஆனால் நானோ அவளை முற்றிலும் தவறாகப் புரிந்துகிட்டேன். அவளைப் பற்றி தேவையில்லாத எண்ணங்களைத்தான் மனசுக்குள் வளர்த்துக்கிட்டேன்…” என்று குற்ற உணர்ச்சியில் தலைகுனிந்தான்.
அன்று முழு நாளும் ஆதிரனுக்கு மனநிம்மதியே இல்லை.
மருத்துவமனையில் நடந்த சம்பவமும், ஆதிரை பேசிய வார்த்தைகளும் மீண்டும் மீண்டும் அவன் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தன. காரை ஓட்டிக்கொண்டே நகரின் பல சாலைகளில் எங்கெங்கோ சுற்றிக்கொண்டிருந்தான். வெளியே அவன் பார்வை சாலையில் இருந்தாலும், அவன் மனம் முழுவதும் சர்வேஷையும் ஆதிரையையும் பற்றிய சிந்தனைகளிலேயே மூழ்கியிருந்தது.
“எப்படி… எப்படி இருவரையும் என்னோட வாழ்க்கைக்குள் கொண்டு வருவது? சர்வேஷை என்னைவிட்டு பிரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்… அதே நேரத்தில் ஆதிரையையும் சம்மதிக்க வைக்க வேண்டும்…” என்ற எண்ணமே அவனை வாட்டியது.
எவ்வளவு நேரம் அப்படியே சுற்றினான் என்பதே அவனுக்குத் தெரியவில்லை.
ஒரு கட்டத்தில் காரை சாலையோரம் ஓரிடத்தில் நிறுத்தினான். இன்ஜினை அணைத்துவிட்டு, ஸ்டீரிங் வீலில் தலையை சாய்த்தபடி கண்களை மூடிக் கொண்டான். சில நிமிடங்கள் எந்தச் சத்தமும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.
அந்த அமைதிக்குள் பல சிந்தனைகள் போராடின.
சிறிது நேர யோசனைக்குப் பிறகு, அவன் மனதில் ஒரு முடிவு உறுதியானது.
மெல்ல நிமிர்ந்து அமர்ந்தவன், ஆழமாக ஒரு மூச்சை இழுத்து விட்டான்.
“என்ன நடந்தாலும் இன்று ஒரு முடிவுக்கு வரணும்…” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன், மீண்டும் காரை ஸ்டார்ட் செய்து நேராக கதிரின் வீடு நோக்கிப் புறப்பட்டான்.
சில நிமிடங்களில் கதிரின் வீட்டின் முன் ஆதிரனின் கார் வந்து நின்றது.
காரிலிருந்து இறங்கியவன் வீட்டிற்குள் செல்ல முற்பட்டபோது, வாசலின் அருகே நிறுத்தப்பட்டிருந்த புதிய காரை கவனித்தான்.
“இந்தக் கார் யாருடையது?” என்று ஒரு நொடி யோசித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்.
ஹாலுக்குள் சென்றதும், அங்கு அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து அவன் பார்வை சற்று நின்றது.
ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி அமைதியாக சோபாவில் அமர்ந்திருந்தார். அவர் தேவி அவருக்கு அருகில் ஆதிரனின் வயதை ஒத்த ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான். அவன் கரிகாலன் அவன் மடியில் மூன்று, நான்கு வயது மதிக்கத்தக்க ஒரு அழகான பெண் குழந்தை அமர்ந்து, சிரித்தபடி ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.
அவர்களை ஒரு கணம் பார்த்துக்கொண்டே உள்ளே வந்தான் ஆதிரன்.
அந்த நேரத்தில் ஆதிரனைப் பார்த்த கதிரின் மனம் பதறியது.
“ஐயோ… இவன் ஏன் இந்த நேரத்துல வந்துட்டான்?” என்று உள்ளுக்குள் தவித்தான். ஆனால் வெளியில் அதை காட்டிக்கொள்ளாமல் முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு,
“வா ஆதி…” என்று அழைத்தான்.
கதிரின் அருகில் வந்த ஆதிரன், அங்கிருந்த மற்றவர்களைப் பற்றி எந்தக் கேள்வியும் கேட்காமல் நேராக,
“சர்வேஷ் எங்க?” என்று கேட்டான்.
“அவன் இன்னும் எழும்பலடா… ரூம்லதான் இருக்கான்,” என்றான் கதிர்.
“சரி… நான் பார்த்துக்கிறேன்,” என்று மட்டும் சொல்லிவிட்டு, வேறு எதையும் பேசாமல் மாடிப்படிகளை நோக்கி நடந்தான் ஆதிரன்.
அவன் இப்படி எந்தத் தயக்கமும் இல்லாமல் மேலே சென்றதைப் பார்த்த கதிருக்குத்தான் மிகவும் சங்கடமாக இருந்தது.
“இவங்க முன்னாடி இப்படி சொல்லிட்டு போயிட்டானே…” என்று மனதில் நினைத்துக்கொண்டவன், மெதுவாகத் திரும்பி அங்கு அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தான்.
அப்போது அந்தப் தேவி புன்னகையுடன்,
“யாரு தம்பி இது?” என்று கேட்டார்.
சிறிது தயக்கத்துடன் இருந்த கதிர், உடனே தன்னைச் சமாளித்துக்கொண்டு,
“அது… என்னோட பிரெண்ட்மா,” என்றான்.
“ஓ… அப்படியா? சரிங்க தம்பி,” என்று அவர் இயல்பாகத் தலையசைத்தார்.
அவர்கள் அமைதியாகப் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், நிலா அனைவருக்கும் குடிக்க பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தாள், பின்னர் நிலாவும் அமைதியாக வந்து கதிரின் அருகில் அமர்ந்தாள்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த தேவி, புன்னகையுடன் பேச்சைத் தொடங்கினார்.
“தம்பி… ரெண்டு மாசத்துக்கு முன்னாடி பேசின விஷயம், இப்போதான் நல்லபடியா ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.”
சற்று நெகிழ்ந்த குரலில் அவர் தொடர்ந்தார்.
“என் பேத்திக்கு ஒரு அம்மா வேணும் தம்பி. உங்களைப் பற்றியும், உங்க தங்கச்சியைப் பற்றியும் எனக்கு நல்லாவே தெரியும். அதனால்தான் என் பேத்திக்கு உங்க தங்கச்சி அம்மாவா வந்தா, என் பேத்தியை நல்லா பார்த்துக்குவாங்கன்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.”
அவரது வார்த்தைகளில் இருந்த பாசமும், நம்பிக்கையும் அனைவரையும் ஒரு நிமிடம் அமைதியாக்கியது.
அதற்கு கதிர் மெதுவாகப் புன்னகைத்து,
“என் தங்கச்சி உங்க பேத்தியை நல்லா பார்த்துக்குவா அம்மா. அதுல எந்த சந்தேகமும் வேண்டாம்,” என்றான் உறுதியுடன்.
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த அந்த நேரத்தில், நிலாவின் பார்வை மெதுவாக கரிகாலன் பக்கம் திரும்பியது.
அவன் மட்டும் அந்தப் பேச்சுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாதது போல, அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையுடன் முழு கவனத்தையும் செலுத்தி விளையாடிக் கொண்டிருந்தான். குழந்தை சிரிக்க அவனும் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தான்.
அந்தக் காட்சியைப் பார்த்த நிலாவின் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.
“இவருக்கும் இந்தக் கல்யாணத்தில் பெருசா விருப்பம் இருக்கிற மாதிரி தெரியல… குழந்தைக்காக மட்டும்தான் இந்தத் திருமணத்துக்கு சம்மதிச்சிருப்பாரோ?” என்று அவள் மனதிற்குள் யோசித்தாள்.
கரிகாலனின் முகத்தில் எந்தவித உற்சாகமும் தெரியவில்லை. அவனுடைய கவனம் முழுவதும் குழந்தையின் மீதே இருந்தது. அதைப் பார்த்த நிலாவுக்கு, அவன் மனதிலும் ஏதோ ஒரு தயக்கம் இருப்பது போலவே தோன்றியது.
சில நிமிடங்கள் கழித்து, இரு குடும்பத்தினரும் பேச்சை முடித்துக் கொண்டு விடைபெற்றுச் சென்றனர்.
அவர்கள் சென்றவுடன், நிலா மெதுவாக கதிரின் அருகில் வந்து நின்றாள்.
“கதிர்… அந்த மாப்பிள்ளையை பார்த்தீங்களா? அவரு ஒரு வார்த்தை கூட பேசலையே,” என்று தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினாள்.
கதிரும் சற்று யோசித்துவிட்டு,
“நானும் அதைத்தான் கவனிச்சேன் நிலா. ஒருவேளை அவருக்கும் இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லாம இருக்கலாம். குழந்தைக்காகத்தான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பாருன்னு தோணுது,” என்றான்.
நிலாவும் உடனே தலையசைத்தாள்.
“நானும் அதைத்தான் யோசிச்சேன் கதிர். இப்படியிருக்க இந்தக் கல்யாணம் சரியா வருமா?” என்று கவலையுடன் கேட்டாள்.
அதற்கு கதிர் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு,
“என்ன நடக்கும்னு இப்பவே சொல்ல முடியாது நிலா… எல்லாம் காலம்தான் பதில் சொல்லும். பாப்போம்,” என்றான்.
சில நொடிகள் அமைதி நிலவியது.
பிறகு கதிர் சுற்றிப் பார்த்து,
“ஆதிரன் மேலே போனானே… இன்னும் என்ன ஆச்சு?” என்று கேட்டான்.
அதற்கு நிலா,
“அவங்க இருவரும் பேசிட்டு ஒரு முடிவுக்கு வரட்டும். இப்ப நாம போய் எதுவும் குறுக்கிட வேண்டாம்,” என்றாள்.
அவள் சொன்னதில் இருந்த நியாயத்தை உணர்ந்த கதிர், அமைதியாகத் தலையசைத்தான்.
இருவரும் அங்கிருந்து மெதுவாக எழுந்து சென்றனர்.
ஆதிரை தனது அறையில், சர்வேஷை மடியில் படுக்க வைத்தபடி, அவன் தலைமுடியை மெதுவாகக் கோதிக் கொண்டிருந்தாள். ஆனால் அவளது மனம் மட்டும் வேறெங்கோ அலைந்து கொண்டிருந்தது. இன்று நடந்த அனைத்தும் அவளது மனதை மிகவும் குழப்பியிருந்தது.
சர்வேஷ், மருந்தின் வீரியத்தால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவனது சிறிய முகத்தைப் பார்த்தவளுக்கு மனம் வலித்தது. “இவனுடைய வாழ்க்கை இனிமேல் எப்படி இருக்கும்?” என்ற கேள்வியே அவளது மனதில் மீண்டும் மீண்டும் எழுந்தது.
அந்த நேரத்தில், கதவு மெதுவாகத் திறக்கப்பட்டது.
திரும்பிப் பார்த்த ஆதிரையின் முகம் உடனே இறுகியது.
அறைக்குள் நுழைந்தது ஆதிரன்தான்.
அவனைப் பார்த்தவுடன், “இவன் என்ன சொன்னாலும் கேட்கவே மாட்டானா?” என்ற எரிச்சல் அவளது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
எதுவும் பேசாமல், மடியில் இருந்த சர்வேஷை மிகவும் கவனமாகத் தூக்கி கட்டிலில் படுக்க வைத்தாள். தலையணையைச் சரிசெய்து, அவனுக்கு போர்வையையும் போர்த்திவிட்டு மெதுவாக எழுந்து நின்றாள்.
ஆதிரன் ஒரு நொடி அவளையே பார்த்தான். அவளது கோபமும், முகத்தில் தெரிந்த எரிச்சலும் அவனுக்குப் புரிந்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல், தனது பார்வையை சர்வேஷின் மீது திருப்பினான்.
அதைக் கண்ட ஆதிரை தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“உங்களுக்கு நான் தெளிவாத்தானே சொன்னேன்… அப்புறம் ஏன் இப்படி பண்றீங்க? நீங்க சர்வேஷை விட்டுக் கொஞ்சம் விலகி இருக்க முடியாதா? ப்ளீஸ்…” என்றாள், கிட்டத்தட்ட கெஞ்சும் குரலில்.
ஆதிரன் அமைதியாக அவளைப் பார்த்துவிட்டு,
“அவன் இப்போ எழுந்த உடனே என்னைத்தான் கேப்பான். அதுக்காகத்தான் நான் வந்தேன்,” என்றான்.
அவன் மிகவும் சாதாரணமாகச் சொன்ன அந்த வார்த்தைகள், ஆதிரைக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தின.
“இவனுக்கு நான் சொல்றது எதுவுமே புரியலையா?” என்று மனதிற்குள் புலம்பியவள், ஒரு பெருமூச்சை விட்டாள்.
பிறகு அவனை நேராகப் பார்த்து,
“இங்க பாருங்க… நான் காலையிலேயே உங்ககிட்ட எல்லாத்தையும் தெளிவா சொல்லிட்டேன். இப்போ நீங்களும் கீழே பார்த்திருப்பீங்க. அவரைத்தானே நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அவர்தான் சர்வேஷோட அப்பாவா இருக்கப் போறார்,” என்றாள் அழுத்தமாக.
அவள் கூறிய அந்த வார்த்தைகள், ஆதிரனின் கோபத்தை ஒரு நொடியில் தூண்டின.
அவனது முகம் சிவந்து இறுகியது. தாடை இறுக, கண்களில் கோபம் மின்னியது.
“நான் மட்டும் தான் அவனுக்கு அப்பா!” என்று அழுத்தமாகக் கூறினான்.
அவனது குரலில் இருந்த உரிமையும், கோபமும் அறை முழுவதும் எதிரொலித்தது.
ஆதிரை வெளியில் அமைதியாக இருந்தாலும், உள்ளுக்குள் சற்றுத் திடுக்கிட்டாள். ஆனால் அதை முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை.
உடனே அவள் எரிச்சலுடன்,
“லூசு மாதிரி பேசாதீங்க,” என்றாள்.
அந்த வார்த்தை ஆதிரனின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது.
“யாரடி லூசு மாதிரி பேசுறது? நானா… நீயா?” என்று கோபமாகக் கேட்டான்.
கோபத்தின் உச்சத்தில் இருந்ததால், அவளை “டி” என்று ஒருமையில் அழைத்துவிட்டான். அந்தக் கணத்தில் அவனுக்கே அது உரைக்கவில்லை.
ஆதிரைக்கும் அது பெரிதாக உறைக்கவில்லை.
தொடரும்