💓அத்தியாயம் 《30》

கோபத்தோடு அவள் அருகே வேகமாக நெருங்கி வந்தான் ஆதிரன். அவன் முகம் முழுவதும் எரிச்சலும், ஏமாற்றமும் கலந்திருந்தது.

“உனக்கு என்ன பிரச்சனை? நான் என்ன, என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு என் கூட வாழணும்னு கட்டாயப்படுத்தினேனா? சர்வேஷுக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கோன்னுதானே சொன்னேன். அதுக்கு ஏன் இவ்வளவு சீன் போடுற?” என்று கடுமையாகக் கேட்டான்.

அவனுடைய வார்த்தைகளைக் கேட்ட ஆதிரையின் முகம் கோபத்தில் சிவந்தது.

“சீன் போடுறேன்னு பார்த்து பேசுங்க, ஆதிரன்!” என்று அவளும் கோபத்தோடு பதிலளித்தாள்.

“உன்கிட்ட அப்படித்தான் பேசுவேன். எனக்கு சர்வேஷ் வேணும். நான் சொல்றது உனக்குப் புரியலையா?” என்று அழுத்தமாகக் கூறினான்.

அவன் பேச்சைக் கேட்ட ஆதிரை, ஒரு நிமிடம் அவன் கண்களை நேராகப் பார்த்தாள்.

“எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பமே இல்லை.” என்று ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாக உச்சரித்தாள்.

அந்த வார்த்தைகள் ஆதிரனின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தின. இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் தன்னைக் கட்டுப்படுத்த முயன்றான். ஆழமாக மூச்சை இழுத்து, தனது தலைமுடியை அழுத்தமாகக் கோதியபடி சில நொடிகள் அமைதியாக நின்றான்.

பிறகு சற்று அமைதியான குரலில்,

“சரி… அதுக்குக் காரணம் என்ன? உனக்கு என்ன பிரச்சனை? அதை தெளிவா சொல்லு.” என்று கேட்டான்.

ஆதிரை சலிப்புடன் அவனைப் பார்த்தாள்.

“அதைத்தான் காலையிலேயே எல்லாருக்கும் முன்னாடி உங்களுக்கே சொன்னேனே.” என்றாள்.

“என்ன சொன்ன? அப்போ எனக்குப் புரியல. இப்போ தெளிவா சொல்லு.” என்றான் ஆதிரன், அவளிடமிருந்து முழு பதிலையும் தெரிந்துகொள்ளும் உறுதியுடன்.

சிறிது நேரம் அமைதியாக நின்ற ஆதிரை, தனது மனதில் பல நாட்களாக அழுத்திக் கொண்டிருந்த பயத்தையும் வேதனையையும் மெதுவாக வெளிப்படுத்த ஆரம்பித்தாள்.

“நான் கரிகாலனைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட எங்க ரெண்டு பேருக்குள்ளயும் எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. அவருக்கு அவர் பொண்ணுக்கு ஒரு அம்மா வேணும்… எனக்கு என் பையனுக்கு ஒரு அப்பா வேணும்… இதுதான் எங்களோட எதிர்பார்ப்பு. அதனால எங்க வாழ்க்கை, எங்க குழந்தைகளோட சந்தோஷமாவே இருக்கும்.

 

“ஆனா… நீங்க அப்படி இல்ல.” என்று மெதுவாகச் சொன்னவள், அடுத்த வார்த்தைகளைச் சொல்லத் தயங்கினாள்.

அவளது தயக்கத்தை கவனித்த ஆதிரன் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“இப்போ உங்க அம்மாவும் அப்பாவும் என் மேலயும், என் பையன் மேலயும் இரக்கப்பட்டுதான் இந்தக் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கிறாங்க. ஆனா… கொஞ்ச வருஷம் போனதுக்கப்புறம் அவங்க யோசிப்பாங்க… ‘நம்ம குடும்பத்துக்கு ஒரு வாரிசு இல்லையே’ன்னு.”

அவளது குரல் மெல்ல உடையத் தொடங்கியது.

“அப்போ என்னையும்… என் பிள்ளையையும் பார்த்தா அவங்களுக்கு வெறுப்பு வரலாம். அதனாலதான் சொல்றேன்… அவங்களுக்கு மட்டும் இல்ல… உங்களுக்குமே ஒரு நாள் அப்படி தோணலாம்.”

ஆதிரன் அமைதியாக நின்று அவள் பேசுவதை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தான்.

“எத்தனை நாளைக்குத்தான் சர்வேஷை உங்க பிள்ளைன்னு மனசார சொல்ல முடியும்? ஒரு கட்டத்துல உங்களுக்கும் உங்க சொந்த ரத்தம்… உங்க  பிள்ளையாக வேணும்னு ஆசை வராதா? அது இயற்கைதானே? அந்த ஆசை வந்த பிறகு… நான்? என் பையன்? எங்க நிலை என்ன ஆகும்?” என்று கேட்டாள்.

அவள் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் ஆதிரனின் மனதை நேராகத் தாக்கியது. அவளது மறுப்புக்குப் பின்னால் இருந்தது வெறுப்போ பிடிவாதமோ அல்ல… எதிர்காலத்தை நினைத்து ஒரு தாயாக அவள் கொண்டிருந்த பயம்தான் என்பதை அந்த நொடியில் அவன் உணர ஆரம்பித்தான். 

அவள் பேசி முடித்ததும், ஆதிரன் முற்றிலும் சோர்ந்து போனவன் போல அங்கேயே இருந்த கட்டிலில் அமர்ந்து விட்டான். அவனது முகத்தில் இருந்த வலி, ஏமாற்றம், இயலாமை—மூன்றும் ஒன்றாக கலந்து தெரிந்தது.

“இவளுக்கு நான் என்ன விளக்கம் கொடுத்தாலும் அதை அவள் ஏற்றுக்கொள்ள மாட்டாள்…” என்று அவனுக்கு நன்றாகவே புரிந்திருந்தது.

மெல்ல நிமிர்ந்து ஆதிரையைப் பார்த்தவன், குரல் கரகரக்க,

“இதுக்கு நான்  என்ன பதில் சொல்றதுன்னு எனக்கே தெரியல, ஆதிரை… ஆனா எனக்கு சர்வேஷ் வேணும்… ப்ளீஸ்…” என்றான்.

அவன் பேசியபோது அவனது கண்கள் கூட கலங்கியிருந்தன. அந்த வார்த்தைகளில் ஒரு தந்தையின் தவிப்பும், மகனை இழந்துவிடுவோமோ என்ற பயமும் வெளிப்படையாக தெரிந்தது.

ஆனால் ஆதிரையின் மனம் இளகவில்லை.

அவள் உறுதியான குரலில்,

“நான் இவ்வளவு தூரம் சொல்லியும் நீங்க இப்படி பேசுறது சரியில்லை. நல்லா யோசிச்சு பாருங்க… நான் சொன்னதுதான் சரின்னு உங்களுக்கே தெரியும்.” என்றாள்.

அவளது குரலில் எந்தத் தடுமாற்றமும் இல்லை. அவள் எடுத்த முடிவில் அவள் உறுதியாகவே இருந்தாள்.

ஆதிரன் அவளை சில நொடிகள் சலிப்பும் வேதனையும் கலந்த பார்வையுடன் பார்த்தான். மேலும் எதுவும் பேச மனம் வரவில்லை. ஒரு பெருமூச்சு விட்டவன், அப்படியே சர்வேஷ்  அருகில் சென்று அவனும்  படுத்துக் கொண்டான்.

அவன் அப்படிச் செய்ததை ஆச்சரியமாக பார்த்த ஆதிரை, “இவருக்கு என்ன ஆச்சு?” என்ற எண்ணத்துடன் ஒரு சலிப்பான முகபாவனையோடு அறையை விட்டு வெளியே வந்தாள்.

ஹாலில் வந்து சோபாவில் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

அப்போது அவளைப் பார்த்த கதிர், அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

“என்ன அம்மு… இங்க வந்து உட்கார்ந்திருக்க? சர்வேஷ் இப்ப எப்படி இருக்கான்?” என்று  கேட்டான்.

“இப்ப பரவாயில்லை அண்ணா… தூங்கிட்டு இருக்கான்.” என்றாள் ஆதிரை.

அதே நேரத்தில் அங்கு வந்த நிலாவைப் பார்த்த ஆதிரை,

“நிலா… எனக்கு ரொம்ப தலை வலிக்குது. ஒரு டீ போட்டுத் தரியா?” என்று கேட்டாள்.

“சரிடி… இப்பவே போட்டுட்டு வரேன்.” என்ற நிலா, தன் கைகளில் இருந்த யாழினியை கதிரிடம் கொடுத்துவிட்டு சமையலறைக்குள் சென்றாள்.

சில நிமிடங்கள் அமைதியாகக் கடந்தன.

அப்போது மேல்மாடியில் இருந்து ஆதிரன்,  சர்வேஷை தனது கரங்களில் கவனமாகத் தூக்கிக்கொண்டு மாடிப்படிகளில் இறங்கி வந்தான்.

அவனைப் பார்த்த கதிரின் மனதில்,

“இவன் இன்னும் வீட்டுக்கு போகலையா?” என்ற எண்ணம் தோன்றியது.

ஆதிரன் நேராக வந்து, ஆதிரை அமர்ந்திருந்த சோபாவுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தான். முதலில் சர்வேஷை மிகவும் கவனமாக தன் அருகில் படுக்க வைத்துவிட்டு, பிறகே சோர்வாக சாய்ந்து அமர்ந்தான்.

 

சில நொடிகள் அமைதியாக இருந்தவன், பின்னர் கதிரைப் பார்த்து,

“கதிர்… ரொம்ப தலை வலிக்குதுடா. நிலாவை ஒரு டீ போடச் சொல்லு.” என்றான்.

கதிர் ஒரு கணம் அவனைப் பார்த்துவிட்டு சமையலறையை நோக்கி அழைத்தான்.

“நிலா…”

“என்னங்க?” என்று சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள் நிலா.

“ஆதிரனும் இங்கதான் இருக்கான். அவனுக்கும் சேர்த்து டீ போடு. சர்வேஷ் இங்கதான் இருக்கான்… அவனுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வா.” என்றான்.

“சரிங்க… இதோ எடுத்துட்டு வரேன்.” என்று கூறியவள், இருவருக்கும் டீயையும், சர்வேஷுக்குக் குடிக்க தேவையான பானத்தையும் தயாரிக்கத் தொடங்கினாள்.   

சிறிது நேரத்தில் நிலா, சூடாக இருந்த டீயையும் குழந்தைகளுக்கான ஜூஸையும் தட்டில் எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

முதலில் ஆதிரை, ஆதிரன், கதிர் ஆகிய மூவரிடமும் டீயைக் கொடுத்தாள். பிறகு சர்வேஷ் மற்றும் யாழினி இருவருக்கும் ஜூஸ்  நீட்டினாள்.

ஆதிரன் தனது டீயை வாங்கியவுடன் உடனே குடிக்காமல் அருகில் இருந்த டீபாயின் மீது வைத்தான். பிறகு ஜூஸ் எடுத்து சர்வேஷ்.

மெதுவாகத் தனது மடியில் அமர வைத்துக் கொண்டு,

“கொஞ்சம் கொஞ்சமா குடிடா…” என்று மென்மையாகக் கூறியபடி ஜூஸைக் குடிக்க வைத்தான்.

சர்வேஷும் எந்த அடம்பிடிப்பும் இல்லாமல், ஆதிரனின் மடியில் சாய்ந்தபடி கொஞ்சம் கொஞ்சமாக ஜூஸைக் குடித்தான்.

அவன் நன்றாகக் குடித்து முடித்த பிறகுதான், ஆதிரன் தனது டீயை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தான்.

அடுத்த சில நொடிகளிலேயே எதிர்பாராத சம்பவம் நடந்தது.

சர்வேஷுக்கு திடீரென்று இருமல் வந்தது.

“கக்… கக்…” என்று தொடர்ந்து இருமியவன், அடுத்த நொடியில் ஆதிரன் மீது வாந்தி எடுத்து விட்டான்.

அவன் குடித்திருந்த ஜூஸ் அனைத்தும் வெளியே வந்து ஆதிரனின் சட்டை முழுவதும் நனைந்து போனது.

“ஐயோ!” என்று பதறியபடி ஒரே நேரத்தில் கத்தினார்கள் ஆதிரையும் நிலாவும்.

ஆனால் ஆதிரன் பதறவில்லை.

சட்டென்று எழுந்து நின்றவன், சர்வேஷை இறுக்கமாகத் தாங்கிக் கொண்டான்.

இன்னும் அவனுக்கு வாந்தி வருவது போல இருந்ததால், குழந்தையைத் தனது தோளில் சாய்த்துக் கொண்டு மெதுவாக அவன் நெஞ்சையும் முதுகையும் தடவிக் கொடுத்தான்.

“ஒண்ணும் இல்லடா… சரியாகிடும்…” என்று அவனை அமைதிப்படுத்த முயன்றான்.

சில நிமிடங்களில் சர்வேஷின் வாந்தி நின்றது.

அதன் பிறகுதான் ஆதிரன், சர்வேஷை ஆதிரையிடம் கொடுத்தான்.

ஆதிரையும் உடனே அவனை வாங்கிக் கொண்டு, அவன் நெஞ்சையும் முதுகையும் மெதுவாகத் தேய்த்துவிட்டாள்.

பிறகு ஆதிரன் நிலாவைப் பார்த்து,

“நிலா… சர்வேஷ்க்கு குடிக்க கொஞ்சம் சுடு தண்ணி கொண்டு வா.” என்றான்.

“சரிங்க அண்ணா.” என்று கூறிய நிலா, உடனே சமையலறைக்குள்  சுடுதண்ணீர் எடுத்து வரச் சென்றாள்.

பிறகு ஆதிரன் கதிரை நோக்கித் திரும்பி,

“கதிர்… என்னோட டிரஸ் கார்ல இருக்கு. கொஞ்சம் எடுத்துட்டு வந்து தரியா?” என்று கேட்டான்.

“சரிடா… நீ போய் வாஷ் பண்ணிக்கோ. நான் எடுத்துட்டு வரேன்.” என்று கூறிய கதிர், காரின் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

ஆதிரனும் தனது சட்டை முழுவதும் வாந்தி படிந்திருந்ததால், மேல்மாடியில் இருந்த அறைக்குச் சென்று சுத்தம் செய்து கொள்ள மாடிப்படிகளில் ஏறிச் சென்றான்.

அந்த நேரத்தில் நிலா சுடுதண்ணீருடன் ஹாலுக்கு வந்தாள்.

அவள் சர்வேஷுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சுடுதண்ணீர் குடிக்கக் கொடுத்தாள்.

பிறகு ஆதிரையைப் பார்த்து,

“ஆதிரை… சர்வேஷ் என்கிட்ட தாடி. இவன் டிரஸ்லயும் வாந்தி பட்டு இருக்கு. நான் இவனுக்கு டிரஸ் மாத்திவிட்டு கூட்டிட்டு வரேன்.” என்றாள்.

ஆனால் ஆதிரை மறுத்தாள்.

விடு. நானே மாத்தி கூட்டிட்டு வரேன்.” என்றாள்.

“சரி… அப்போ சுடு தண்ணில உடம்பை கொஞ்சம் துடைச்சி விட்டுட்டு டிரஸ் மாத்தி விடு.” என்று அக்கறையுடன் கூறினாள் நிலா.

“சரிடி.” என்று கூறிவிட்டு, சர்வேஷைத் தூக்கிக் கொண்டு ஆதிரை மாடிப்படிகளை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

அந்த நேரத்தில் வெளியே சென்று வந்த கதிர், ஆதிரனின் மாற்று உடைகளை கையில் வைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.

நிலாவைப் பார்த்து,

“நிலா… இந்த டிரஸ்ஸை ஆதிரன் கிட்ட கொடுத்துட்டு வா.” என்று அவளது கையில் கொடுத்தான்.

அதை வாங்கிய நிலா, மாடிப்படிகளில் ஏறிக் கொண்டிருந்த ஆதிரையிடம் சென்று,

“ஏய்… இதை அண்ணா கிட்ட குடுத்துருடி.” என்று ஆதிரனின் உடைகளை அவளது கையில் கொடுத்தாள்.

ஆதிரையும் எந்த மறுப்பும் சொல்லாமல் அந்த உடைகளை வாங்கிக் கொண்டாள்.

ஒரு கையில் சர்வேஷையும், மற்றொரு கையில் ஆதிரனின் மாற்று உடைகளையும் எடுத்துக் கொண்டு மெதுவாக மேல்மாடியை நோக்கி நடந்தாள். அவளது முகத்தில் இன்னும் கோபம் இருந்தாலும், சூழ்நிலை காரணமாக அதை வெளிக்காட்டாமல் அமைதியாக அறையை நோக்கிச் சென்றாள்.

 

தொடரும்

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top