“நிலா… டைம் ஆயிடுச்சு. இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க? மித்ரா எங்க?” என்று கேட்டான் கதிர்.
ஆதிரை ரூம்ல இருக்கா…” என்று சொல்லிக்கொண்டே மாடிப்படியை நோக்கிப் பார்த்தாள்.
அந்த நேரத்தில் மேலிருந்து மித்ராவுடன், சர்வேஷைத் தூக்கிக்கொண்டு மணமகள் கோலத்தில் மெதுவாக படிக்கட்டில் இறங்கி வந்தாள் ஆதிரை.
அவளைப் பார்த்த நொடியே நிலாவும் கதிரும் சில நொடிகள் அப்படியே நின்றுவிட்டார்கள். மணமகள் அலங்காரத்தில் இருந்தாலும், அவளின் முகத்தில் எந்த மகிழ்ச்சியும் இல்லை. புன்னகை இல்லாத அந்த முகமும், கண்களில் தெரிந்த சோகமும் அவர்களின் மனதை நொறுக்கியது.
அவர்களின் கண்கள் தன்னையும் அறியாமல் கலங்கின.
ஆதிரை அருகில் வந்ததும், தன் கண்ணீரை அவளுக்குத் தெரியாமல் அவசரமாகத் துடைத்துக்கொண்ட கதிர்,
“சரி… கிளம்பலாம். அவங்க எல்லாரும் கோவிலுக்கு வந்துட்டாங்களா?” என்று இயல்பாகப் பேச முயன்றபடியே வெளியே நடந்தான்.
அவன் பின்னால் மற்றவர்களும் அமைதியாகச் சென்றனர்.
சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு அனைவரும் கோவிலை வந்தடைந்தனர்.
அவர்களுக்கு முன்னதாகவே ஆதிரனின் குடும்பத்தினர் கோவிலுக்கு வந்திருந்தனர்.
அவர்களைக் கண்டதும் அஞ்சலி, புஷ்பா, லட்சுமி ஆகியோர் புன்னகையுடன் அவர்களிடம் வந்து, அன்பாக ஆதிரையின் கையைப் பிடித்துக்கொண்டு கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
அன்றைய நாள் அங்கு இருந்த அனைவரின் மனதிலும் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஒருசேர இருந்தது. பல நாட்களாக இருந்த கவலைகள் இன்று ஒரு முடிவுக்கு வரப்போகின்றன என்ற எண்ணம் அனைவருக்கும் ஆறுதலாக இருந்தது.
ஆனால்…
ஆதிரனின் மனதில் மட்டும் ஏதோ ஒரு பெரிய பாரம் ஏறி அமர்ந்தது போல ஒரு உணர்வு. இந்தத் திருமணம் சரியானதா? ஆதிரையின் மனம் என்ன நினைக்கிறது? அவள் உண்மையாகவே இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்வாளா? என்ற எண்ணங்கள் அவன் மனதை விட்டு அகலவில்லை.
அதற்குள் ஐயரும் வந்துவிட, திருமணச் சடங்குகள் தொடங்கின.
ஐயரின் அறிவுறுத்தலின்படி ஆதிரனையும் ஆதிரையையும் மணமேடைக்கு அழைத்துச் சென்று அருகருகே அமர வைத்தனர்.
ஆதிரனின் அருகில் கோகுல், விக்ரம், கதிர் ஆகியோர் நின்றிருந்தனர்.
அந்தக் கோவிலில் இரண்டு குடும்பத்தினரைத் தவிர, மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர்.
ஆதிரனின் பெற்றோருக்கும் தங்கள் மகனின் திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்ற ஆசை இருந்தது. உறவினர்கள் அனைவரையும் அழைத்து, விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்று எத்தனையோ கனவுகள் கண்டிருந்தார்கள்.
ஆனால் ஆதிரையின் சூழ்நிலையை நினைத்து அந்த ஆசையை மனதிற்குள்ளேயே புதைத்துவிட்டனர்.
இது அவளின் இரண்டாவது வாழ்க்கை. தேவையில்லாமல் பெரிய அளவில் திருமணம் நடத்தினால், அது ஆதிரைக்கு சங்கடத்தையும் மனவேதனையையும் தரும் என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள்.
அதனால், இரு குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன், எளிமையாகவும் அமைதியாகவும் இந்தத் திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்தனர்.
ஐயரின் மந்திரங்கள் கோவில் முழுவதும் ஒலித்தன.
மேளதாளத்தின் சத்தமும், கெட்டிமேளத்தின் முழக்கமும் எழுந்தது.
“கெட்டிமேளம்… கெட்டிமேளம்…” என்று ஐயர் கூறியவுடன், பெரியவர்களின் ஆசீர்வாதத்தோடு ஆதிரன் தங்கத் தாலியை எடுத்து ஆதிரையின் கழுத்தில் கட்டினான்.
பின்னர் மூன்று முடிச்சுகளையும் போட்டான்.
அந்த நொடி அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி மலர்ந்தது.
ஆனால்…
இந்தத் திருமணத்தின் நாயகியான ஆதிரை மட்டும் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல், தலைகுனிந்தபடியே அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அவளின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.
தன் தங்கையின் திருமணத்தைப் பார்த்துக்கொண்டிருந்த கதிரின் கண்கள் மீண்டும் கலங்கின.
ஒரு அண்ணனாக அவளின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டான்.
அவனுடைய மனநிலையைப் புரிந்துகொண்ட நிலா, எதுவும் பேசாமல் அவனருகே நின்று அவன் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.
அந்த ஒரு தொடுதலே, “எல்லாம் நல்லபடியாக நடக்கும்…” என்று அவனுக்கு அமைதியாக நம்பிக்கை சொல்லியது போல இருந்தது.
ஆதிரன் ஆதிரையின் கழுத்தில் தாலி கட்டியதும், கோவிலில் நடைபெற வேண்டிய மற்ற சம்பிரதாயங்களையும் பெரியவர்களின் முன்னிலையில் ஒவ்வொன்றாக முடித்தனர். அனைவரும் புதுமணத் தம்பதிகளை மனதார ஆசீர்வதித்தனர்.
அதன் பிறகு வழக்கப்படி முதலில் ஆதிரனின் வீட்டிற்கே அனைவரும் சென்றனர்.
வீட்டு வாசலுக்கு வந்ததும், அஞ்சலி ஆரத்தித் தட்டை எடுத்துக்கொண்டு நின்றிருந்தாள். அவளுடன் லட்சுமியும் புன்னகையுடன் நின்றார்.
“வாங்க…” என்று அன்போடு அழைத்த அஞ்சலி, ஆதிரனுக்கும் ஆதிரைக்கும் ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.
உள்ளே சென்றவுடன், லட்சுமி மெதுவாக,
“ஆதிரை… முதல்ல சாமி கும்பிட்டு விளக்கு ஏத்தும்மா…” என்று கூறினார்.
அவளும் எதுவும் பேசாமல் பூஜையறைக்குச் சென்று, இறைவனை மனதார வணங்கினாள். பிறகு குத்துவிளக்கில் தீபம் ஏற்றி கைகளை கூப்பி சில நொடிகள் அமைதியாக நின்றாள்.
அவள் என்ன வேண்டிக்கொண்டாள் என்பது அவளுக்கே தெரியும்.
அதன் பிறகு லட்சுமியும் அஞ்சலியும் அவளை மெதுவாக அழைத்துக்கொண்டு ஆதிரனின் அறைக்குச் சென்றனர்.
“ஆதிரை… நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடும்மா. ” என்று அன்பாகச் சொல்லிவிட்டு இருவரும் வெளியே வந்தனர்.
ஆதிரையின் மனநிலை அவர்களுக்கு நன்றாகவே புரிந்திருந்தது. அவளுக்கு இந்த நேரத்தில் தனிமைதான் தேவை என்பதை உணர்ந்ததால், அவளை எதுவும் தொந்தரவு செய்யாமல் தனியாக இருக்க விட்டனர்.
அதன்பிறகு வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களை கவனிப்பது, அவர்களுக்கு சாப்பாடு பரிமாறுவது, மற்ற வேலைகளைப் பார்ப்பது என்று அனைவரும் தங்களது வேலைகளில் மூழ்கிவிட்டனர்.
அறைக்குள் வந்த ஆதிரை, சுற்றிலும் ஒரு முறை பார்வையை ஓடவிட்டாள்.
அந்த அறை முழுவதும் ஆதிரனின் ரசனையை பிரதிபலிப்பது போல சுத்தமாகவும் அழகாகவும் இருந்தது. ஆனால் அவளுக்கு அந்த அறை புதிதாகவும், அந்நியமாகவும் தோன்றியது.
மெதுவாக நடந்து சென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.
மனதில் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களால் அவளால் எதையும் சிந்திக்க முடியவில்லை. திருமணம், புதிய வாழ்க்கை, கௌதமின் நினைவுகள், சர்வேஷின் எதிர்காலம் என்று எல்லாமே ஒன்றாக அவள் மனதை அழுத்தின.
அப்படியே சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தவள், உடல் சோர்வும் மனக் களைப்பும் சேர்ந்து கண்களை மூடச் செய்தது.
சில நிமிடங்களிலேயே அவள் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிவிட்டாள்.
கீழே, வீட்டிற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் சாப்பிட்டு, புதுமணத் தம்பதிகளை வாழ்த்திவிட்டு ஒவ்வொருவராக கிளம்பிச் சென்றனர்.
வீட்டில் இருந்த நெருங்கிய குடும்பத்தினர் மட்டும் சாப்பிட அமர்ந்தனர்.
அப்போது லட்சுமி, ஆதிரனைப் பார்த்து,
“ஆதி… ஆதிரையையும் கூட்டிட்டு வா. காலையிலிருந்து எதுவும் சரியா சாப்பிடல. பாவம், பசிச்சிருக்கும்…” என்றார்.
“சரிம்மா…” என்று கூறிய ஆதிரன், அருகில் விளையாடிக்கொண்டிருந்த சர்வேஷைத் தூக்கிக்கொண்டான்.
“வாடா குட்டி… அம்மாவைக் கூப்பிடலாம்…” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டபடி மாடிப்படிகளை ஏறினான்.
அறைக்குள் நுழைந்ததும் முதலில் ஆதிரையைத் தேடினான்.
கட்டிலில் இருப்பாள் என்று நினைத்தவன், அவள் அங்கே இல்லாததால் ஒரு நொடி சுற்றிப் பார்த்தான்.
பிறகு அவனது பார்வை அறையின் ஓரத்தில் இருந்த சோபாவை நோக்கிச் சென்றது.
அங்கே, சோபாவில் சுருண்டபடி, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் ஆதிரை.
அவளின் முகத்தில் இருந்த சோர்வும், கண்களுக்குக் கீழே தெரிந்த கருவளையமும், கடந்த சில நாட்களில் அவள் எவ்வளவு மனவேதனையை அனுபவித்திருக்கிறாள் என்பதைச் சொல்லாமல் சொல்லியது.
அவளை சில நொடிகள் அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்த ஆதிரன்,
அவளை உடனே எழுப்ப மனம் வரவில்லை.
ஆதிரன் மெதுவாக ஆதிரையின் அருகே வந்து நின்றான். அவளை எழுப்பலாமா வேண்டாமா என்று ஒரு கணம் தயங்கியவன், தன் கைகளில் இருந்த சர்வேஷை பார்த்தான்.
அடுத்த நொடியே,
“அம்மா…” என்று மழலைக் குரலில் அழைத்தான் சர்வேஷ்.
தன் மகனின் குரலைக் கேட்டதும் சட்டென்று கண் விழித்தாள் ஆதிரை. சில நொடிகள் எங்கு இருக்கிறோம் என்பதையே புரியாமல் சுற்றிப் பார்த்தவள், பிறகு சர்வேஷை கண்டதும் எழுந்து அமர்ந்தாள்.
ஆதிரன் அவளைப் பார்த்து மெதுவாக,
“அம்மா… உன்னை சாப்பிட வரச் சொன்னாங்க. வா…” என்றான்.
அதற்கு ஆதிரை சோர்வான குரலில்,
“எனக்குப் பசியில்லை… நீங்க போய்ச் சாப்பிடுங்க…” என்றாள்.
அவள் முகத்தை ஒரு நொடி அமைதியாகப் பார்த்த ஆதிரன்,
“ஆதிரை… காலையிலிருந்து நீ எதுவும் சரியா சாப்பிடல. ப்ளீஸ்… வா. நீ இப்ப வரலன்னா, கீழே இருக்கிறவங்க எல்லாரும் வருத்தப்படுவாங்க…” என்று மென்மையாகக் கூறினான்.
அவன் பேசிய விதத்தில் கட்டாயம் இல்லை. அக்கறை மட்டுமே இருந்தது.
அவன் சொன்னதைக் கேட்ட ஆதிரை சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
பிறகு,
“நீங்க போங்க… நான் வந்திடுறேன்…” என்றாள்.
ஆனால் ஆதிரன் விடவில்லை.
“உன்னைக் கூட்டிட்டு வரச் சொல்லித்தான் அம்மா என்னை அனுப்பினாங்க. அதனால வா…” என்றான்.
அதற்கு ஆதிரை,
“நான் டிரஸ் சேஞ்ச் பண்ணணும்… நீங்க போங்க. நான் வந்துடுறேன்…” என்று மீண்டும் கூறினாள்.
அப்போதுதான் ஆதிரன் அவளை முழுவதுமாக கவனித்தான்.
காலையில் திருமணத்திற்காக அணிந்திருந்த அதே பட்டுப் புடவையிலேயே இன்னும் இருந்தாள். கழுத்து நிறைய நகைகள், கனமான அலங்காரம்—அவற்றோடு பல மணி நேரமாக இருந்ததால் அவளுக்கே அசௌகரியமாக இருந்தது.
அதை உணர்ந்தவன் வேறு எதுவும் சொல்லாமல்,
“சரி…” என்று மட்டும் கூறினான்.
பிறகு சர்வேஷைத் தூக்கிக்கொண்டு அமைதியாக கீழே இறங்கிச் சென்றான்.
ஆதிரன் சென்றதும், ஆதிரை மெதுவாக எழுந்தாள்.
கண்ணாடி முன் நின்றவள், கழுத்தில் இருந்த நகைகள், காதணிகள், வளையல்கள் என அணிந்திருந்த ஒவ்வொரு ஆபரணத்தையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கழற்றி, டிரஸ்ஸிங் டேபிளின் மேல் பத்திரமாக வைத்தாள்.
பிறகு அலமாரியில் இருந்த ஒரு எளிமையான மெரூன் நிறப் புடவையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றாள்.
கீழே, ஆதிரன் மட்டும் தனியாக வருவதைக் கண்ட லட்சுமி,
“என்னப்பா ஆச்சு? ஆதிரை வரலையா?” என்று கவலையுடன் கேட்டார்.
ஆதிரன் உடனே,
“இல்லம்மா… கொஞ்சம் ஃப்ரெஷ் ஆயிட்டு வரேன்னு சொன்னா. இப்ப வந்துடுவா…” என்றான்.
அவன் சொன்னதும் அனைவரும் அமைதியாகத் தலையசைத்தனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, மெரூன் நிறப் புடவையில், எந்த ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக கீழே இறங்கி வந்தாள் ஆதிரை.
அவளைப் பார்த்ததும் வீட்டிலிருந்த அனைவரின் முகத்திலும் நிம்மதியான புன்னகை மலர்ந்தது.
அவள் கீழே வந்து சாப்பிட வந்ததே அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
ஆதிரன் தன் அருகிலிருந்த இருக்கையைச் சுட்டிக்காட்ட,
அவளும் எதுவும் பேசாமல் வந்து அமைதியாக அமர்ந்தாள்.
லட்சுமி அன்புடன் அவளது தட்டில் உணவைப் பரிமாறினார்.
” நல்லா சாப்பிடும்மா…” என்று பாசமாகச் சொல்ல,
ஆதிரை எதுவும் பேசாமல் அமைதியாகச் சாப்பிடத் தொடங்கினாள்.
அவள் சாப்பிடுவதைப் பார்த்த பிறகுதான் அங்கிருந்த அனைவருக்கும் மனநிறைவு ஏற்பட்டது.
யாரும் அவளை எதுவும் பேசிக் கட்டாயப்படுத்தவில்லை.
அவளுக்கு இப்போது தேவை அமைதிதான் என்பதை அனைவரும் புரிந்துகொண்டிருந்தனர்.
சாப்பிட்டு முடித்த பிறகு, கதிர், நிலா, மித்ரா, யாழினி ஆகிய நால்வரும் கிளம்பத் தயாரானார்கள்.
புறப்படுவதற்கு முன், நிலாவும் மித்ராவும் ஆதிரையின் அருகே வந்தனர்.
இருவரும் அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டு அழத் தொடங்கினர்.
“பாத்துக்கோ…” என்று நிலா கண்ணீரோடு சொல்ல,
மித்ராவும்,
“எதுவா இருந்தாலும் எங்களுக்கு போன் பண்ணுங்க அண்ணி…” என்று அழுதபடியே கூறினாள்.
அவர்களை ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல், ஆதிரையும் அவர்களை அமைதியாக அணைத்துக்கொண்டாள்.
அவளது கண்களும் கலங்கியிருந்தன.
அதன் பிறகு, யாழினியைத் தூக்கிக்கொண்டாள் ஆதிரை.
அவளது கன்னத்தில் முத்தமிட்டு, பாசமாகக் கொஞ்சினாள்.
யாழினியும் தன் சிறிய கைகளால் ஆதிரையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு சில நொடிகள் அவளை விட்டுப் பிரியாமல் இருந்தாள்.
பிறகு மனமில்லாமல் அவளை கீழே இறக்கினாள்.
அனைவரும் அமைதியாக நின்றிருக்க,
கதிர் மெதுவாக ஆதிரையின் அருகே வந்தான்.
அவளது முகத்தை ஒரு நொடி ஆழமாகப் பார்த்தவன், தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு மெதுவாக,
“போயிட்டு வரேன்… அம்மு… கவனமா இரு என்றான்
அந்த ஒரு வார்த்தையிலேயே ஒரு அண்ணனின் பாசம், கவலை, பிரிவின் வேதனை அனைத்தும் நிறைந்திருந்தது.
தொடரும்