அத்தியாயம் : 12
ராஜகுமாரனின் ஆட்கள் அடிக்கடி அறைக்குள் வந்து, அவள் தண்ணீர் கேட்டால் அடித்தனர். சாப்பாடு கேட்டால் அடித்தனர். தன்னை மறந்து கண்ணயர்ந்தாலும் எழுப்பி அடித்தனர். அடுத்த நாளும் இவ்வாறாக தொடர்ந்தது. சாப்பிடாமல் தண்ணீர் குடிக்காமல், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட ஆரம்பித்தாள் தேவயானி.
ஒவ்வொரு நொடியும் அவளுக்கு சாதாரணமாக இல்லாமல் நரகமாக நகரவும், ‘இந்த வாழ்க்கையை ஏன் எனக்கு கொடுத்த இறைவா? நான் என்ன பாவம் செய்தேனு தெரியலை. என் பாவத்தை மன்னித்து இங்கிருந்து என்னை காப்பாத்துங்க’ என்று நொடிக்கு நொடி இறைவனிடம் மனமுடைந்து வேண்டி கொண்டே இருந்தாள்.
“உண்மைய சொல்லுடி! ஏன் அண்ணனை லவ் பண்ற மாதிரி ஏமாத்தி டார்ச்சர் பண்ண? பணத்துக்காக பண்ணியா? இல்லை யாராச்சும் உன்னை டார்ச்சர் பண்ண சொன்னாங்களா?” என்று தொடர்ந்து அவளை கேட்டுக்கொண்டே இருந்தனர்.
நான் ஸ்வேதா இல்லை என்றும், தனக்கு எதுவும் தெரியாது என்றும் மீண்டும் மீண்டும் பயத்துடனும், கண்ணீருடனும் பதில் கூறினாள். ஆனால், ராஜகுமாரனும் அவனது ஆட்களும் அவளை ஒரு துளி கூட நம்பவில்லை.
அவ்வப்போது வந்து உண்மையை சொல்லுமாறு அவளை மிரட்டி, பளார் பளார் என்று கன்னத்தில் அடித்துவிட்டு, அவள் உண்மையை கூறாது நடிக்கிறாள் என்ற கோபத்தில், கதவை பட்டென்று அவளை பயமுறுத்துவது போல சாற்றிவிட்டு சென்றான் ராஜகுமாரன்.
அவனது ஒவ்வொரு வார்த்தையும், அவனது ஒவ்வொரு அடாவடியான நடவடிக்கையும், தேவயானியின் உள்ளத்தில் நிறைந்திருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் உடைத்தன. அவன் சென்ற சில நிமிடங்களில், தன் நம்பிக்கையை பலப்படுத்த, இறைவனிடம் மன்றாடுவதை தவிர அவளுக்கு வேற ஒரு வழியும் தெரியவில்லை.
அன்றைய இரவு உடம்பில் வலுவில்லாமல் தரையில் சரிந்தவள், அப்படியே மயக்க நிலைக்கு சென்றாள்.
எதார்த்தமாய் அவளை பார்க்க வந்த குமார், அவளை தட்டி எழுப்பி பார்த்துவிட்டு, உடனே விஷயத்தை ராஜகுமாரனிடம் கூறினான்.
“செளந்தர்யாவை வந்து என்னென்னு பார்க்க சொல்லு. ஒருவேளை செத்துட்டான்னா… அனாதை பொணம்னு போய் சுடுகாட்டுல எரிச்சிருங்க” என்று கோபமாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டான்.
உண்மையை கூறாது எவ்வளவு பிடிவாதமாக இருக்கிறாள் என்று அவளை மனதிற்குள் திட்டிவிட்டு தன்னுடைய வேலைகளில் கவனத்தை செலுத்த முனைந்தான்.
தேவயானியின் நிலைமையை சங்கரிடம் சொல்லி, மருத்துவரான அவனது தங்கை செளந்தர்யாவை வீட்டிற்கு அழைத்துவரும்படி கூறிவிட்டு, அவளையே கண் இமைக்காமல் பார்த்தான் குமார்.
ராஜவர்மனுடன் ஸ்வேதாவை நேரில் பார்த்தது அவன் ஒருவன் மட்டும்தான். தேவயானி வந்த நாளில் இருந்து, அவளுக்கும் ஸ்வேதாவிற்கும் ஏதோ வித்தியாசம் இருப்பதை, மனதிற்குள் உணர்ந்து கொண்டே இருந்தவன், ‘ஒருவேளை இவள் தேவயானியாகத்தான் இருக்குமோ?’ என்று ஒரு சிறு சந்தேகம் அவனுள் எழுந்தது. ஸ்வேதாவிற்கு பதில் தவறாக இவள் தண்டிக்கப்படுகிறாளோ? என்று அவளது நிலையை பார்த்து பரிதாப்பட்டான்.
ராஜகுமாரனின் உத்தரவின்படி, அவளுக்கு சிகிச்சை அளிக்க வந்தாள் சங்கரின் தங்கையான செளந்தர்யா. அவள் ஒரு அனுபவமிக்க பெண்கள் நல மருத்துவர். அவளிடம், நடந்ததை பற்றி கூறிவிட்டு, தேவயானி இருக்கும் அறையை காட்டினான் குமார்.
“நீங்க போங்க நான் இந்த பொண்ணுகிட்ட பேசி பார்க்கிறேன். நீங்க இருந்தால் ஒருவேளை அவள் உண்மையை சொல்லமாட்டாள்” என்ற செளந்தர்யா, தேவயானியின் அருகில் சென்று, அவளது நாடித்துடிப்பை பரிசோதித்தாள். அவளின் நிலை மோசமாக இருப்பதை கண்டதும், சிகிச்சை அளித்தாள்.
சில மணி நேரத்தில் அறையில் இருந்து வெளியே வந்தவள், “அவங்க கண் முழிக்க நேரமாகும் போல. கண் முழிச்சதும் என்னை கூப்பிட்டுங்க நான் பேசி பார்க்கிறேன்” எனக் கூறிவிட்டு சென்றாள்.
சுமார் ஒரு இரண்டு மணி நேரத்தில் சிகிச்சையின் பலனாய் தேவயானிக்கு மெல்ல சுயநினைவு திரும்பியது தெரிந்து மீண்டும் வீட்டிற்கு வந்தாள். “பயப்படாதிங்க. உங்களுக்கு உடம்புக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. தைரியமா இருங்க. நான் உங்க கூட இருக்கேன்” என்று அன்பாக பேசினாள்.
எதிரில் இருந்த செளந்தர்யாவை ஒரு சக பெண் என்ற கண்ணோடத்திலும், தன்னிடம் அக்கறையாக பேசியதால் அவளை ஆதரவாய் பார்த்தவாறு, “உடம்பெல்லாம் ரொம்ப வலிக்கிது. பசி…க்கிது சாப்பிட்டு மூணு நாளாச்சி” என்றாள் தேவயானி பரிதாபமாக
உடனே, அவளுக்கு குடிக்க பழச்சாறு கொண்டு வந்து கொடுக்கும்படி குமாரிடம் உத்திரவிட்டாள்.
பெருமாள் கொண்டு வரவும், தானே அவளுக்கு உதவி புரிந்து, அவள் பழச்சாற்றை குடித்து முடிக்கும் வரை பொறுமையாய், தேவயானியை தாங்கி பிடித்தவாறு அருகில் அமர்ந்திருந்தாள்.
அவள் பழச்சாற்றை அருந்தியதும், சிறிது நேரம் கழித்து சாப்பாடு கொண்டு வரும்படி, பெருமாளிடம் கட்டளையிட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.
அவர் அறையை விட்டு நகர்ந்ததும், “நீங்க இனிமேல சாப்பிடலாம் நான் குமார் அண்ணன்கிட்ட சொல்றேன். அப்புறம், உங்களுக்கு தெரிஞ்ச எல்லா உண்மையையும் என்கிட்ட தைரியமா செல்லுங்க. இல்லைன்னா… குமார் அண்ணனால உங்க உயிருக்கு உத்திரவாதம் இல்லை” என்றாள் கவலையாக.
அவளின் அன்பான வார்த்தைகள் தேவயானிக்கு சற்று ஆறுதலாக இருக்க, அவளுக்குள் ஒரு சிறிய நம்பிக்கை அவளின் கனிவான பேச்சால் மனதிற்குள் துளிர்விட்டது. இங்குள்ள அத்தனை பேரும் அவளை தவறாக புரிந்துகொண்டு, தண்டிக்க துடிக்கும்போது, இந்த பெண் மட்டும் தனக்காக பரிதாபமாக பேசுகிறாள் என்றெண்ணி மெல்ல கண்கள் கலங்கினாள். அவளுள் இருந்த வலி, வேதனை அனைத்தையும் கண்ணீராய் அவள்முன்பு கொட்ட ஆரம்பித்தாள்.
“அழாதிங்க நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன். ஆனால் நீங்க உண்மையை சொன்னால் மட்டுமே என்னாலையும் உங்களுக்கு உதவி பண்ண முடியும்” என்று மெல்ல விஷயத்திற்கு வந்தாள்.
இப்பவாவது தன் பக்க நியாயத்தை பற்றி உரையாட ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே என்று மனதிற்குள் எண்ணி மகிழ்ந்த தேவயானி, “நான் ஸ்வேதா இல்லைங்க. என் பெயர் தேவயானி. சத்தியமாக எனக்கு உங்க அண்ணனை தெரியாது. நான் வேலை விஷயமாகத்தான் கன்னியாகுமரிக்கு வந்திருந்தேன். ஆனால், விதி என்னை இங்க கூட்டிட்டு வந்து ஒரு பொய்யான குற்றச்சாட்டில் சிக்க வைச்சிடுச்சு” என்று தேம்பி தேம்பி அழுதவாறு இடையே இடையே கூறினாள்.
அக்கணம் தேவயானியின் கையை மென்மையாக தொட்டு, அவளின் குரலிலும், கண்ணீரிலும் இருந்த உண்மையான துயரத்தை தான் உணர்வது போல, ஒரு அழுத்தம் கொடுத்துவிட்டு, “நீங்க ஸ்வேதா இல்லைன்னு நிருபிக்கணும். அப்போதுதான் இங்கிருந்து நீங்க போக முடியும். அதற்கு… எதாவது உங்ககிட்ட ப்ரூஃப் இருக்கா?” என்று தயங்கியவாறு கேட்டாள்.
“நான் ஸ்வேதா இல்லைன்னு, என் மனசாட்சிக்கு தெரியும். ஆனால், நான் ஸ்வேதா இல்லைனு இந்த இடத்திலே ஆணித்தரமாக உங்க முன்னாடி நிரூப்பிக்கணும்ன்னா, நான் ஸ்வேதாவாக இருந்திருந்தால், கற்போடு இருக்க மாட்டேன். நான் தேவயானி. நான் சுத்தமானவளாக கற்போடு இருக்கிறேன். என் வாழ்க்கையில் இதுவரை எந்த ஆணுடனும் பேசியதில்லை பழகியதில்லை. வேண்டுமானால், நீங்கள் என்னை பரிசோதிச்சிட்டு, உங்க அண்ணன்கிட்ட போய் சொல்லுங்க. நான் ஸ்வேதா இல்லை, தேவயானினு… என்னை நிருப்பிக்க இதை விட்டால் வேறு வழி எனக்கு தெரியலை” என்று, சிரமப்பட்டு பேசினாள். அவளால் அழுகையை அடக்க முடியவில்லை.
அவளது வார்த்தைகளில் இருந்த உறுதியும், அவளின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரும், அவள் சுத்தமானவள் குற்றமற்றவள் என்று செளந்தர்யாவின் மனதிற்குள் தோன்றியது.
கண்ணீர் வழிய அவள் வைத்த கோரிக்கை அவளின் மனதை உலுக்கியது, ‘ஒருவேளை இவங்க சொல்வது உண்மையாக இருக்குமோ? ராஜகுமாரன் அண்ணன் அவசரப்பட்டு தவறு செய்துவிட்டாரோ?’ என்ற சந்தேகம் அவளுள் எழுந்தது.
யாரும் தன்னை நிரூப்பிக்க இப்படி ஒரு முடிவை எடுக்க மாட்டார்கள். அப்படி முடிவெடுக்கிறார்கள் என்றால், நிச்சியமாக குற்றமற்றவராகத்தான் இருக்க வேண்டும். அவளுக்கு எதிராக இந்த வீட்டில் நடக்கும் அநியாயங்களை கண்டு கொள்ளாமல் கடந்து போக, ஒரு பெண்ணாய் அவளுக்கு மனம் வரவில்லை.
ஏனெனில், ஒரு பெண்ணின் கற்பு, அவளது வாழ்க்கையின் மிக பெரிய சொத்து. அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டால், பின்னாளில் அவளது வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்பட்டுவிடும். யாரோ செய்த பிழையை இவள் ஏன் தூக்கி சுமக்க வேண்டும். இந்த பெண் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற, ஒரு நியாய உணர்வு அவளிடம் மேலோங்கியது. “சரிங்க… நீங்க பயப்படாதிங்க. நான் உங்க பக்க நியாயத்தை அண்ணன்கிட்ட சொல்லிட்டு வர்றேன். உங்களுக்கு ஒரு நல்லது பண்ணி தராமல், நான் இங்கிருந்து போக மாட்டேன். என்னை நீங்க முழுசா நம்பலாம்!” என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு நகர்ந்தாள்.
தேவயானியின் உள்ளத்தில் ஒரு சிறு நம்பிக்கை வந்தது. விடாது இறைவனிடம் வேண்டுதல் வைத்ததற்கு பலனாய் இறைவன்தான் இந்த பெண் ரூபத்தில் வந்து என்னை இங்கிருந்து காப்பாற்ற போகிறார்.
செளந்தர்யாவை தன்னை காக்க வந்த இறைவன் போல நினைத்து மகிழ்ச்சியாக அவளிடமிருந்து வரும் பதிலுக்காக காத்திருந்தாள்.
வீட்டிற்குள் வந்த ராஜகுமாரனை, “அண்ணா…” என்று தயக்கத்துடன் அழைத்தான் குமார்.
“என்னடா போய்ட்டாளா?” என்று கட்டுக்கடங்காத கோபத்துடன் கேட்டான் ராஜகுமாரன்.
“இல்…லைண்ணா” என்றவன், சிறிது தயக்கத்துடன், “அந்த பொண்ணு… ஸ்வேதா இல்லைன்னு சொல்றா அது உண்மையா இருக்கும்னு, எனக்கு தோணுது. ஏன்னா… ஸ்வேதாவை நேருல பார்த்தவன் நான்தான். அவளை விட, இந்த பெண் கொஞ்சம் வித்தியாசமா இருக்கிறா…”
ராஜகுமாரன் அவனை மேற்கொண்டு பேசவிடாது இடைமறித்தான். “அவள் நாடகம் போடுறவ, அண்ணனை நாடகமாடியே சாகடிச்சிவ. நம்மளை ஏமாத்த பார்க்கிறா. நீ அவளை நம்பாத ஜாக்கிரதையா இருடா” என்று எச்சரிக்கை செய்வது போல கூறினான்.
“இல்லைண்ணா. ஸ்வேதா உங்க ஹயிட். அவளோட இடது கையில, பின் கழுத்துல டாட்டூ போட்டிருப்பாள். அவள் முகத்தில் மச்சம் இருக்காது. ஆனால், இந்த பொண்ணு உதட்டுக்கு மேல மச்சம் இருக்கு. இவள் குட்டையா இருக்கா. அவள் கையில கழுத்துல எந்த டாட்டூம் இல்லை. இந்த பெண்ணை பார்த்தால் நல்ல பெண்ணா தெரியுதுண்ணா” என்று அவளுக்காக பரிந்து பேசினான்.
குமாரின் குரலில் ஒருவித நியாயம் இருப்பதை போல உணர்ந்தவன், சற்று கோபத்தில் இருந்து இறங்கி யோசிக்க ஆரம்பித்தான். ‘குமார் சொல்வது போல, ஸ்வேதா ஒரு தைரியமான, துணிச்சலான பெண்தான். ஆனால், இவளின் முகத்தில் பயமும் அப்பாவித்தனமும்தான் தெரியுது’ என்று ஒரு கணம் நினைத்தவன், ‘இவளை ஸ்வேதானு நினைச்சி அவளை தப்பிக்க விட கூடாது’ என்று சாதுரியமாக எண்ணிவிட்டு, “அவளுக்கு சுயநினைவு வந்ததும் சாப்பாடு குடுங்க. அப்புறம் பொறுமையா பேசுவோம்” எனக் கூறி கொண்டிருந்தான். அவனது குரலில் இருந்த ஆத்திரம் சற்று குறைந்திருந்தது.
அச்சமயம், “அண்ணா” என்று அழைத்தவாறு அவனது அருகில் வந்து நின்ற செளந்தர்யா, தேவயானியிடம் பேசியதை கூறிவிட்டு, “பரிசோதிக்காமலே அவங்க நல்ல பெண் போல எனக்கு தெரியுறாங்க. உங்களுக்காக அவங்களை பரிசோதித்து பார்க்கவா?” என்று தயங்கியவண்ணம் கேட்டாள்.
ஸ்வேதா பலரோடு படுகையை பகிர்ந்தவள் என்று அறிந்திருந்தான். அப்படியிருக்க தேவயானி கூறிய வார்த்தைகள் அவனை யோசிக்க வைத்ததுடன், ஒரு பெண்ணை இவ்வாறாக பரிசோதிக்க வேண்டுமா? என்ற சிறு குற்ற உணர்ச்சி மேலோங்க, மனமில்லாமல் சரி என்பது போல தலையாட்டினான்.
நிழல் எது? நிஜம் எது? என்று அறிய முயற்சிக்கும் போராட்டத்தில் மனரீதியாக சிக்கி தவிக்க ஆரம்பித்தான்
இந்த அத்தியாயம் பற்றிய உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.
நன்றி
அன்புடன்
சாய்லஷ்மி.
அப்படியே கீழ் இருக்கும் லைக் பட்டனை ஒரு அழுத்து அழுத்தி விடுங்கள்.