11 – விதி விளையாடிய விநாடி!

அத்தியாயம் 11

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து கிளம்பிய  வாகனம், சென்னையை நோக்கி அதி வேகத்தில் விரைந்தது. ‘அண்ணன் தற்கொலை செய்து கொண்டதற்கு இவள்தான காரணம். இவளால்தான அண்ணன் மிரட்டப்பட்டு, ஒரு கட்டத்தில் மன அழுத்தத்தால் உயிரை மாய்த்துக்கொண்டான். இவளை எப்படி எல்லாம்  தண்டிக்கலாம்?’ என்று யோசிக்க ஆரம்பித்த ராஜகுமாரன், ‘அவளை  கொன்றுவிட வேண்டும் இல்லை… சீக்கிரம் அவள் மரணம் நிகழ்ந்துவிட  கூடாது. மரணத்திற்கு ஒப்பான தண்டனையைத்தான் கொடுக்க வேண்டும். அவளுக்கு மட்டுமில்லை, அவளை பெற்றவர்களுக்கும் உடன்பிறந்தவர்களுக்கும் சேர்த்து கொடுக்க வேண்டும்’ என்று ஆத்திரத்துடனும், கொடூரமாகவும் எண்ணி கொண்டிருந்தான். 

‘ஒருவேளை அவள் யாருடைய தூண்டுதலின் பெயரில் அண்ணனை தற்கொலை செய்ய வைத்திருப்பாளோ? அப்படியாக கூட இருக்கலாம். எதுவாக இருந்தாலும் இவளை மட்டும் சும்மாவே விட கூடாது’ என்று யோசித்து கொண்டே வந்தவன்,  இடையில் சாப்பாட்டை வாங்கி, வாகனத்தினுள்ளே அனைவரையும் சாப்பிட்டும்படி உத்தரவிட்டான். 

ஏனெனில், ‘என் அண்ணனை ஏன் தற்கொலை செய்ய தூண்டினாய்?’ என்ற விசாரணையை, சீக்கிரம் வீட்டிற்கு சென்று முதலில் இவளிடம்  விசாரிக்க வேண்டு்ம். அதனால் எங்கும் வாகனத்தை நிறுத்த வேண்டாம். விரைவாக வீடு செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டான்.

கோபத்தின் உச்சியில் அமர்ந்திருப்பவன் போல அமர்ந்திருப்பவனை பார்க்க, அவனது உதவியாளர்களான குமார், சிவா மற்றும் சங்கருக்கே சற்று பயமாக இருக்க,   யுவதிக்கோ சொல்லவே தேவையில்லை. மரண பயத்தில் அமர்ந்திருந்தாள். 

ராஜகுமாரனின்  அண்ணனான ராஜவர்மனின் தீடீர் இறப்பு, அவன் இறப்பிற்கான கொடுமையான காரணம், இதலாம் சேர்ந்து, கோபத்தை தாண்டி, பழிவாங்கும் எண்ணம் ஒரு வெறியாக மாறி, ஒரு சாதாரண மனிதனிலிருந்து ஒரு அரக்கனாக ராஜகுமாரனை மாற்றியிருந்தது. 

இடையில் வாகனநெரிசலில்  வாகனம் நிற்கும்போதெல்லாம், யாரையாவது அழைத்து உதவி கேட்கலாமா? என்று அவள் பார்வை வெளியில் திரும்பினாள். “வாய்யை திறந்த உன்னை குத்தி கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போயிருவேன்” என்று அவளை மிரட்டினான் சங்கர். 

“நான் நீங்க நினைக்கிற ஆள் இல்லை. என்னை விட்டிருங்க” என்று யுவதி கூற, 

“என் அண்ணனை கொல்ல எப்படிடி உனக்கு மனசு வந்தது?” என்று ஆதங்கத்துடன் கேட்டான். 

“சங்கர்… வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” என்று கட்டளையிடும் குரலில் ராஜகுமாரன் கூறவும், அனைவரும் அவனது குரலுக்கு கட்டுப்பட்டு இருக்க, யுவதியோ… தப்பிக்க வழி கிடைக்காது பயத்துடன் அமர்ந்திருந்தாள். 

நேரம் சென்று கொண்டே இருந்தது. சுமார் மாலை நான்கு மணியளவில் சென்னையில் மெரினா கடற்கரையை ஒட்டியிருந்த பிரம்மாண்டமான அவனது பங்களாவை வாகனம் அடைந்ததும், வீட்டினுள் இருந்த விருந்தினர் அறைக்குள்  யுவதியை அழைத்து செல்லும்படி உத்தரவிட்டு, வேகமாக ராஜவர்மனின் அறைக்குள் நுழைந்தான் ராஜகுமாரன். 

‘அண்ணே! உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சவளை பிடிச்சிட்டு வந்திருக்கேன். எதுக்காக அவள் உன்னை சாகிற அளவுக்கு டார்ச்சர் பண்ணினாள்னு கேட்டுட்டு அடுத்த நொடியே, அவளுக்கு தண்டனை கொடுக்க போறேன். அப்பத்தான்… உனக்கு மட்டுமில்ல எனக்கும் மனசாந்தி கிடைக்கும்’  என்று அண்ணனின் புகைப்படத்தை பார்த்தவாறு மனதிற்குள் எண்ணியவன், விருந்தினர் அறையை நோக்கி திரும்பினான். 

அவளுக்கோ, ‘வாகனத்தினுள் இருந்தபோதே எவ்வளவு முயற்சி செய்தும், இவர்களிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை. தற்போது அறைக்குள் அடைத்துவிட்டார்களானால், என் நிலைமை என்னாவாக போகிறதோ? எப்படி இவர்களிடமிருந்து தப்பிப்பது?’ என்று அறையினுள் நுழைந்ததும், தன்னை சுற்றியிருந்த  ஆண்களை பார்த்து, பயத்தில் உடல் நடுங்க நின்றாள். 

சொல்லாமல் கொள்ளாமல் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிய ஆரம்பித்தது. மேலும், அறையினுள் நுழைந்து கதவை படாரென சாத்திய ராஜகுமாரனை கண்டதும்,  ‘இவர் என்ன செய்ய போகிறாரோ?’ என்று பயத்தில் நிற்க முடியாது கால்கள் நடுங்க, அவனையே பயத்துடன் பார்த்தாள். அவனது கண்களில் பழிவாங்கும் எண்ணம்தான் தெரிந்ததே தவிர, ஒரு துளி கூட இரக்கம் என்பதே அவளுக்கு தென்படவில்லை. 

அவனோ அவளை ஆராய்ச்சியாய் பார்க்க, அவளது கன்னத்தில் தான் அடித்த செந்நிறகாயத்துடன், அழுது அழுது சிவந்திருந்த கண்களுடன், இதழ் துடிக்க தன்னையே மிரட்சியாக பார்த்தவாறு நின்றிருந்தவளை, கோபமாக நோக்கியவாறு,  “உட்காரு!” என்று கர்ஜித்தான். 

அவனது கர்ஜனை குரல், அவளது காதிற்குள் இடி வந்து பாய்வது போலிருக்க,  பட்டென்று தரையிலேயே பயத்துடன் சுருண்டு அமர்ந்தாள். 

“உண்மையை சொல்லு ஸ்வேதா?” என்று பொறுமையாக கேட்டான். எடுத்த எடுப்பிலே கோபத்தை காட்டாமல், அமைதியாக முயற்சித்து எப்படியாவது அவளிடமிருந்து உண்மையை வர வழைப்போம் என்று கட்டுக்கடங்காத கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு நின்றிருந்தான். 

“நான் ஸ்வேதா இல்லை. என் பெயர் தேவயானி” என்று மெல்லிய குரலில்  முணுமுணுத்தாள் யுவதி.

ராஜகுமாரன் அவளது பதிலை கேட்டதும் பட்டென்று சத்தமாக சிரித்தான். அந்த சிரிப்பு சத்தம் பயத்தை ஏற்படுத்த, அவளுள் அவன்மீது பயம்தான் அதிகரித்து கொண்டே சென்றது. 

“நீ எத்தனை பேர்னாலும் வச்சிக்க. எனக்கு ஏன் என் அண்ணனை ஏமாத்தின, அவன் தற்கொலை பண்ற அளவுக்கு அப்படி என்ன பண்ண? எல்லாம் பணத்துக்காகவா? இல்லை வேற எதுவுமா? எனக்கு உண்மை தெரிஞ்சாகணும். அதை ஒழுங்கு மரியாதையா சொல்லிரு?”  என்று கர்ஜித்தான். 

அவனது ஒவ்வொரு வார்த்தையிலும் அவனது அண்ணனை இழந்த வலி வெளிப்பட்டது. அதனை அவள் உணர்ந்தாள். “நான் உங்க அண்ணனை பார்த்ததேயில்லை சார். என்னை நம்புங்க” என்று கரகரத்த குரலில் கூறிவிட்டு,  பயத்துடனும் கண்ணீருடனும் அவனையே கண் இமைக்காமல் பார்த்தாள்.

“உண்மையை நீயா சொல்றியா? இல்லை. உன்னை அடிச்சி துன்புறுத்தி மிரட்டித்தான் உன்கிட்ட வாங்கணுமா?” என்று நக்கலான குரலில் ஏதோ எச்சரிக்கை செய்பவன் போல கேட்டான். 

“நீங்க என் பெரியம்மா பொண்ணைதான் தேடுறிங்க. ஏன்னா… அவள் பெயர்தான் ஸ்வேதா. நீங்க நினைக்கிற மாதிரி நான் அவள் இல்லை. நாங்க பார்க்க ஒன்னுபோலத்தான் இருப்போம் சார். ஆனால் என் பெயர் தேவயானி. ப்ளீஸ் சார்… என்னை விட்டிருங்க எனக்கு இன்டர்வியூ இருக்கு” 

அவளது குரலில் இருந்த ஆதங்கம் ராஜகுமாரனின் செவியை எட்டவில்லை. உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆதங்கம் அவனை ஒரு அரக்கன் போல மாற்றியிருந்தது. அவளை மேற்கொண்டு பேசவிடாது, “என்னடி ஆள் மாறாட்டம்னு சொல்லி என்கிட்ட இருந்து தப்பிக்க பார்க்கறியா? உன்கிட்ட இருந்து எப்படி உண்மையை வர வைக்கணும்னு எனக்கு தெரியும். நல்லா அடுத்தவன் காசில் தின்னு தின்னு… கொலுக்கு மொலுக்குனு இருக்க. இந்த கொழுப்பை எப்படி குறைக்கிறேன் பாருடி” என்றவன், “இவளுக்கு சாப்பாடு தண்ணீ, தூக்கம்னு எதுவும் கிடையாது. இவள் உண்மையை சொல்லாமல் சாப்பாடு, தண்ணீ கேட்டாளோ இல்லை தூங்கினாளோ அடிங்கடா” என்று கூறிவிட்டு ஆவேசமாக அறையிலிருந்து வெளியேறினான். 

அடுத்த நொடி படாரென அறைக்கதவு  சாத்தப்பட்டதும், அவள் மனதிற்குள் நிலநடுக்கத்தை உணர்ந்தாள். 

“இங்க பாரு உண்மைய சொல்லிட்டா, அண்ணன் உன்னை சும்மா விட்டிருவாரு இல்லைன்னா… நீ நினைச்சு பார்க்க முடியாதளவுக்கு டார்ச்சரை அனுபவிக்க வேண்டியிருக்கும்” என்று கடுமையான முகத்துடன் சங்கர் கூற, 

“நீங்களாவது நான் சொல்றதை நம்புங்க. நீங்க என் அக்காவைத்தான் தேடுறிங்க. நான் அவள் இல்லை. எனக்கு உங்க அண்ணனை தெரியவே தெரியாது. ப்ளீஸ் அவர்கிட்ட சொல்லி என்னை விட்டிட சொல்லுங்க”  என்று பரிதாபகரமாக கையெடுத்து கும்பிட்டு கேட்டாள். 

“நீ எவ்வளவு நாள்நான் நாடகமாடுறனு நாங்களும் பார்க்கிறோம். ஏன்னா, நாடகமாடித்தானடி… எங்க அண்ணனை ஏமாத்தி சாகடிச்ச பாவி!  இனிமேல நீ யாரையும் நாடகமாடி ஏமாத்த முடியாது ஏன்னா, உன்னை இங்கிருந்து  உயிரோட போக விட்டால்தான! நீ நல்லா வசமா மாட்டிகிட்டடி. கூடிய சீக்கிரம் சாக போற” என்று கடுமையாக திட்டிவிட்டு அறையிலிருந்து வெளியேறினான். அவனுடன் மற்றவர்களும் செல்ல, 

அறையினுள் தனித்து விடப்பட்ட, தன்னை தேவயானி என்று அடையாளப்படுத்திய யுவதி,  கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஓட, ‘யார் அந்த  அண்ணன்? அவர் எப்படி இறந்தார்? ஸ்வேதா அப்படி என்னத்தான் செய்தாள்?’ என்று யோசித்தாள். 

‘எதாவது விபரம் தெரிந்தால் இவர்களிடம் நான் அவள் இல்லை என்று நிருபித்து இங்கிருந்து செல்லலாம்? ஒரு விபரமும் தெரியாது இவர்களிடம் நான் எப்படி பேசுவது?’ என்று தவித்தவள், பசி எடுக்க வயிற்றுவலியில் துடிக்க ஆரம்பித்தாள். 

அச்சமயம், அவளது அறைக்குள் வந்தான் குமார். அவனுள்  கோபமும், ஆனால் லேசான குழப்பமும் வந்தது. ராஜகுமாரனை போல அவனுக்குள் வெறி இல்லை என்றாலும், அவளிடம் பேசி பார்ப்போம் என்ற எண்ணத்துடன் அவளையே கண் இமைக்காமல் பார்த்தான். 

குமாரை பார்த்ததும், ஒரு சிறிய நம்பிக்கை அவளுக்குள் துளிர்விட, ‘இவரிடம் பேசி பார்ப்போம்’ என்ற நம்பிக்கையுடன், “அண்ணா! நான் ஸ்வேதா இல்லை. என் பெயர் தேவயானி. நான்  கன்னியாகுமரியில இருக்கிற இந்தியன் ஸ்கூலில் டீச்சரா வொர்க் பண்ணத்தான் கன்னியாகுமரி வந்தேன். உங்க அண்ணன் ஸ்வேதானு, என்னை தப்பா நினைச்சி கூட்டிட்டு வந்துட்டாங்க. ப்ளீஸ் என்னை நீங்களாவது நம்புங்க!” என்று கரகரத்த குரலில் அழுது கொண்டே கூறினாள். 

அவளது குரலில் இருந்த உண்மையான வலி குமாரின் மனதை தொட்டது. ஆனாலும், ராஜவர்மன் மேல் கொண்ட அன்பால் மறுநொடி அவள் மேல் வந்த இரக்கத்தை மனதிற்குள் இருந்து விரட்டிவிட்டு, “என்ன என்னை ஏதோ முன்ன பின்ன பார்க்காதவன் போலவே பேசற? எத்தனை தடவை அண்ணன் கூட வந்தப்ப…  என்னை நீ பார்த்திருக்க? இப்ப… ஏதோ தெரியாதவன் போலவே   என்கிட்டயே நடிக்கிறியா?” என்று  கோபமாக கூறினான். 

குமாரின் வார்த்தைகள் தேவயானிக்கு அதிர்ச்சியளித்தன. ‘இவனை நான் பார்த்ததே இல்லையே? இவனும்  என்னை ஸ்வேதானு நம்புறானே?’ ஏதோ, இறுதியாக இருந்த வாய்ப்பும் கை நழுவி சென்றது போல பதறியவள், ‘நான் எப்படி இங்கிருந்து தப்பிக்கிறது? அப்பாவும் அம்மாவும் என்னை தேடுவாங்களே?’ என்று,  அடுக்கடுக்கான விஷயங்களை எண்ணி பயத்துடனும் கவலையுடனும் தவித்தாள்.

“அண்ணா… நான் சொல்றது உண்மை. என் பெயர் தேவயானி. என் அக்கா பெயர்தான் ஸ்வேதா. அவள் என் பெரியம்மா மகள். அ…அவள்தான் நீங்க சொல்ற மாதிரி ஏமாத்து வேலையெல்லாம் பண்ணுவாள். அவளுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்ப… அவள் எங்க இருக்கான்னு கூட எனக்கு தெரியாது. அவள் ஒரு இடத்தில் தங்க மாட்டாள். தயவுசெஞ்சு என்னை விட்டிருங்க” 

“ம்ம்ம்… என்னம்மா நடிக்கிற? உன் நடிப்புல ஏமாந்து போய்த்தான் என் அண்ணன் உயிரையே விட்டாரு”

“நான் உங்க அண்ணனை ஏமாத்தலை. நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லை. என்னை நம்புங்க ப்ளீஸ்…” என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டாள். 

“ஹே ச்சீ நிறுத்து! உன் நாடகத்தை. நீ அக்கானு ஒருத்தியை பத்தி சொல்றியே? அவளை பத்தி நாங்க விசாரிச்சப்ப, அவளுக்குன்னு எந்த உறவும் இல்லைன்னுதான் சொன்னாங்க. நீ எப்படி அவளுக்கு தங்கச்சியா இருக்க முடியும்? உன் நாடகம் எங்ககிட்ட செல்லாதும்மா. நீதான் ஸ்வேதா. ஏன் எங்க அண்ணனை தற்கொலை பண்ணிக்க வச்ச சொல்லு? பணத்துக்காகவா?” என்று கத்தினான். 

அவளோ, அவனது பேச்சை கேட்டுவிட்டு, ‘என்னை யாரும் நம்ப மாட்டின்கிறாங்களே?’ என்று ஆற்றாமையுடன் தலையில் அடித்து கொண்டு அழுதாள். 

“உன் நடிப்பெல்லாம் இனி யாரும் நம்ப மாட்டோம். உனக்கு இந்த ஒரு நாள்தான் டைம். உண்மையை நீ சொல்லலை. நாளைக்கு அண்ணன் கையாலத்தான் உன்சாவு” என்று  மிரட்டுவது போல கூறிவிட்டு அறையைவிட்டு வெளியேறினான்.

தேவயானியின் அழுகை மேலும் தீவிரமடைந்தது. ‘என்ன ஒரு சோதனை இது! இனிமேல் என் வாழ்க்கை நல்லாயிருக்கும்னு ஒரு நம்பிக்கையில்தான்  கன்னியாகுமரிக்கு வேலைக்கு போனேன். ஆனால், இங்க போயும், இப்படி ஒரு பொய்யான குற்றச்சாட்டில் மாட்டிகிட்டேனே! இதுதான் என் தலையெழுத்தா?’ என்று தாங்கமுடியாத துயரத்தை நெஞ்சிற்குள் சுமக்க முடியாமல் தவித்தாள். அழுது அழுது அவளது உடல் பலமிழந்தது. அப்படியே தரையில் சாய்ந்து கண்களை மூடினாள். 

சில நிமிடத்தில் எதார்த்தமாய் அறைக்குள் வந்த சங்கர் அவள் கண்களை மூடி இருக்கவும், அவளை பிடித்து எழுப்பி, “என் அண்ணனை கொன்னுட்டு உனக்கு தூக்கம் வேண்டி கெடக்கா?” என்று அவளது கன்னத்தில் பட்டென்று அறைந்தான். 

அவளோ, வலி தாங்க முடியாது கண்ணீர் விட, “நீ உண்மையை சொல்ற வரைக்கும் உனக்கு எதுவும் கிடையாது” என்று திட்டிவிட்டு சென்றான். 

ராஜவர்மனின் அறைக்குள் வந்தமர்ந்த ராஜகுமாரன், ‘வாசலில் நின்று என் அண்ணன் இறப்பிற்கு நீதி கிடைக்கணும் எனக்கு ஒரு வழிகாட்டுனு வேண்டிகிட்ட மறுநொடியே அந்த ஸ்வேதாவையே கண்ணில் கட்டிவிட்டாளே! உண்மையில் பகவதி அம்மன் மகா சக்தி வாய்ந்தவள் போல’ என்று பிரம்மிப்பாக மனதிற்குள் எண்ணியவன், ஸ்வேதாவை கண்டுபிடித்தது அம்பாளின் அருள் அன்றி வேறில்லை. அண்ணனின் இழப்பால் கைவிட்ட கடவுள்  நம்பிக்கையை மீண்டும் கைப்பற்றி கொண்டான். 

‘இனி கன்னியாகுமரியில் கடை ஆரம்பித்ததும், கோவிலில் என்ன ஒரு விழா நடந்தாலும், நாம முன்னின்று எடுத்து நடத்தணும். அம்பாளின் அருளை வருடம் முழுவதும் பெற்றிடனும்’ என்று மனதிற்குள் சபதம் எடுத்து கொண்டான் ராஜகுமாரன்.

இந்த அத்தியாயம் பற்றிய உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.

நன்றி

அன்புடன் 

சாய்லஷ்மி.

❤️ Loading reactions...
1 Comment
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top