அத்தியாயம் : 17
இரண்டு நாள் கழித்து அன்றைய இரவு, சுமார் பத்து மணியளவில், ராஜவர்மன் அறையில் இருக்கும் கோப்பைகளில், நாளைக்கு மிக முக்கியமாக தேவைப்படுகிற ஒரு கோப்பையை தனது அலுவலகபையில் எடுத்து வைத்துவிட்டு, தூங்கலாம் என எண்ணியவனாக ராஜவர்மன் அறைக்குள் நுழைந்தான் ராஜகுமாரன். அறைக்குள் தேவயானி எதையோ தேடி கொண்டிருப்பதை கண்டான்.
அவளை கண்டதும், தான் சந்தேகப்பட்டது போல, ‘இவள்தான் ஸ்வேதா. ஏதோ ஒரு நோக்கத்துடன் தான் இங்கிருக்கிறாள்!’ என்று எண்ணியவன், கோபமாக அவளது கையை பிடித்து இழுத்து, அவளது கன்னத்தில் ‘பளார் பளார்’ என்று இரண்டு அறைவிட்டான். “எவ்வளவு தைரியம் இருந்தா… என்கிட்ட நாடகமாடுவ? எதுக்குடி என் அண்ணன் ரூம்க்கு வந்த? உன் நோக்கம்தான் என்ன?” என்று கேட்டு அவளது கழுத்தை நெறித்தான்.
அவன் கழுத்தை இறுக்கிப் பிடிக்கும் வலி தாங்க முடியாமல் தவித்தவள், அவனது கைகளை விலக்கி கொள்ள முயற்சி செய்தும், அவனால் முடியவில்லை.
அறைக்குள் சத்தம் கேட்டு வேகமாக ஓடி வந்த பெருமாள், சட்டென்று ராஜகுமாரனை பிடித்து தனியாக இழுத்து, “எதுக்குப்பா அந்த பொண்ணு கழுத்தை நெருக்கிற? செத்து கித்து போயிட்டா என்ன பண்றது?” என்று பயத்துடன் கேட்டார்.
“இவளாம் சாக வேண்டியவள்தான் மாமா. இவள்தான் ஸ்வேதா. ஆனா, தேவயானினு சொல்லி நம்மளை ஏமாத்திட்டு இருக்கிறா” என்று கர்ஜித்தான் ராஜகுமாரன்.
அச்சமயம் அறைக்குள் வந்த குமார், “அண்ணா என்னாச்சு?” எனக் கேட்டான்.
அவன் கன்னத்தில் ஒரு அறை அறைந்துவிட்டு, “இவள் பெரிய உத்தமி, பத்தினினு சொன்ன. என் அண்ணனை ஏமாத்தின ஸ்வேதா இல்லைன்னு சொன்ன. இவளுக்கு இந்த நேரத்துல அண்ணன் ரூம்ல என்னடா வேலை? இவள் ஏதோ திட்டம் போட்டுட்டுத்தான் இங்க இருக்கிறா” என்றான் கோபமாக.
அவனது கேள்வியில் குமார் தேவயானியை பார்க்க, அவளோ பயத்தில் நடுங்கியவண்ணம் நின்றிருந்தாள். “சொல்லுங்க சிஸ்டர், நீங்க ஏன் இங்க வந்திங்கன்னு காரணத்தை அண்ணன்கிட்ட சொல்லுங்க? ஆனா, நான் உங்களை, நீங்க ஸ்வேதா இல்லைன்னு நம்புறேன்” என்று தன்மையான குரலில் கூறினான்.
அவனது இறுதி வார்த்தைகளைக் கேட்டு கோபம் தலைக்கு ஏற, “உனக்கும், அண்ணனுக்கு போல சொக்குபொடி எதுவும் இவள் போட்டுட்டாளாடா? இவளுக்கே சப்போர்ட் பண்ணி பேசிற?” என்று வார்த்தைகளை கடுமையாக பயன்படுத்தினான் ராஜகுமாரன்.
அவனது வார்த்தைகளைக் கேட்டு குமார் மட்டுமல்ல, மற்றவர்களும் அதிர்ந்துவிட்டனர். “அய்யோ… இல்லைண்ணா. இவங்களை என் சிஸ்டர் போல நினைக்கிறேன். வேற தப்பான எண்ணம் ஒண்ணும் இல்லைண்ணா. நான் ஸ்வேதாவை அண்ணன் கூடப் போகும்போது நேருல பார்த்திருக்கேன். அவள் இவங்களைவிட உயரம், வெயிட்,” என்று குமார் சொல்லி கொண்டிருக்க,
“இவள் எதுக்கு அண்ணன் ரூம்க்கு வந்தா?” என்று ராஜகுமாரன் கர்ஜிக்க, அனைவரும் அவளையே பார்த்தனர்.
“அம்மா, எதுக்குமா ராஜா ரூம்க்கு வந்த?” என்று தன்மையாக பெருமாள் கேட்கவும், தேவயானி பேச ஆரம்பித்தாள்.
“நீங்க சொன்னீங்கல்ல… ராஜா சார் தன்னையே துப்பாக்கியால சுட்டுக்கிட்டார்னு. இந்த விஷயத்தை கேட்டுட்டு என்னால நம்பவே முடியலை. இரண்டு நாளா மனசுக்குள்ள ஏதோ உறுத்திட்டே இருந்தது.
சின்ன வயசில இருந்தே எதையும் கஷ்டம்னு பார்க்காம, தன்னையும் தானே பார்த்துக்கிட்டு, தம்பியையும் வளர்த்து ஆளாக்கியவரு, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்ச தொழிலை இன்னைக்கு இந்த அளவுக்கு உயர்த்தி காட்டியவரு, போயும் போயும் ஸ்வேதா ஏமாத்திட்டானு நினைச்சு தற்கொலை முடிவை எடுத்திருப்பாரா?” அவளின் கேள்வி அனைவரின் மனதையும் தாக்கியது.
“இல்லவே இல்லை. ஸ்வேதா தவறானவள்னு தெரிஞ்சதும், அவள் ரிலேஷன்சிப்ல இருந்து எப்படி வெளி வரணும்னு யோசிச்சு, அதிலிருந்து வெளி வந்து, அவரோட தகுதிக்கும், திறமைக்கும், அந்தஸ்துக்கும் பொருத்தமான ஒரு பொண்ணை பார்த்து திருமணம் செய்யத்தான் முடிவெடுத்திருப்பாரு. ஏன்னா… ஸ்வேதாவோட அவர் பழகியது வெறும் மூணே மூணு மாசம்தான். எத்தனையோ கஷ்டம், சவால், இழப்பு இதெல்லாம் பார்த்த அவரோட முப்பத்தைஞ்சு வருஷ வாழ்க்கையில, ஸ்வேதாவோட பழகிய அந்த மூணே மூணு மாசம் அவர் கால் தூசிக்கு கூட சமமாகாது” அவளின் வார்த்தையில் இருந்த உண்மை ராஜகுமாரனை தாக்கியது.
“ஒருவேளை ஸ்வேதா கொடுத்த காயத்தால அவர் திருமணமே வேண்டானு கூட முடிவெடுத்திருந்தா, அவர் தம்பிக்கு திருமணம் பண்ணி அழகு பார்க்கணும்னுதான் ஆசைப்பட்டிருப்பாரு. ஏன்னா… அவருக்குன்னு ஒரு வாழ்க்கை அவர் வாழவே இல்லை! ஒரு அப்பா போல, அவர் தம்பியை குளிர்க்க வைத்து, ட்ரெஸ் போட்டு ஸ்கூலுக்கு அனுப்பி அழகு பார்த்தவரு, படிச்சுப் பட்டம் வாங்கினதும் தொழில் அமைச்சு கொடுத்து, வாழ்க்கைக்கு வழிகாட்டியவரு, நீங்க எல்லாரும் சொல்ற மாதிரி தம்பி மேல உயிரையே வச்சிருந்தவரு, தம்பியை விட்டுட்டு சாகணும்னு நினைப்பாரானு யோசிச்சுட்டே படுத்திருந்தேன்.” என்கவும் மூன்று பேரும் அவளது பேச்சில் மூழ்கியிருந்தனர்.
“அப்ப… கனவுல கட்டில் பக்கத்தில ராஜா சார் நிற்கிறாங்க. அவங்க முன்னாடி யாரோ ஒருத்தன் வந்து அவரோட சண்டயிடுறான். அவர் அவனோட கையை எடுத்துவிடப் பார்க்கிறாங்க. அடுத்து தூக்கத்திலிருந்து பட்டுன்னு எழுந்திட்டேன். நிச்சயமாக அவர் தற்கொலை பண்ணிக்கலை. அவரைத்தான் யாரோ கொலை பண்ணிருக்காங்க அப்படினு எனக்கு தோணுச்சு. அதுனாலதான் இந்த ரூம்க்கு வந்தேன். கட்டில் இந்த இடம் அப்படியே எனக்கு கனவுல பார்த்ததுபோல ஆச்சரியமா இருந்தது. இன்னைக்குத்தான் இந்த ரூம்க்கு வந்திருக்கேன். இதுக்கு முன்னாடி நான் வந்ததே இல்லை. கட்டில் பின்னாடி அந்த ஜன்னல்கூட நான் கனவுல பார்த்தேன்” அனைவருக்கும் அவளின் பேச்சு ஆச்சரியத்தை கொடுத்தது.
“ராஜா சாரை யாரோ கொலைதான் பண்ணிருக்கணும். கொலையாளி ஏதாவது தவறவிட்டிருப்பான் அல்லது நடந்தது கொலைதானு உங்ககிட்ட நிரூபிக்க ஏதாவது க்ளூ கிடைக்கும்னு நினைச்சு ரூம்க்குள்ள தேடிட்டு இருந்தேன். கட்டிலுக்கு அடியில் ஒரு பர்ஸ் இருக்கிறதை பார்த்தேன். அது யார் பர்ஸ்? என்னென்னு எடுத்துப் பார்க்க, நீளமா ஏதாவது குச்சி இல்லை. ஸ்டிக் தேடிட்டு இருந்தேன். அப்பத்தான் குமார் சார் வந்தாங்க” என்று கரகரத்த குரலில் கூறினாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடி கொண்டே இருந்தது.
“குமார் அந்த பர்ஸை எடுடா?” என்று ராஜகுமாரன் உத்தரவிடவும்,
கட்டிலுக்கு அடியில் இருந்து அந்த பர்ஸை எடுத்து கொடுத்தான் குமார்.
அந்த பையில் ஒருவனின் புகைப்படம் இருந்தது. “இவன் யாரு?” என்று ராஜகுமாரன் வாய்விட்டு புலம்பினான்.
“ராஜா சாரை கொலை பண்ணவனா இருக்கலாம்!” என்றாள் மெல்லிய குரலில் தேவயாணி.
“ஏதோ எல்லாத்தையும் கூடவே இருந்து பார்த்தவ போல சொல்றீயே?” என்று நக்கல் குரலில் அவன் கேட்கவும், தேவயாணி வாயை மூடிக்கொண்டாள்.
“எப்பா… தேவயானி சொல்றதுதான் சரின்னு எனக்குத் தோணுது. இவள் அக்கா ஏமாத்திட்டான்னு, நம்ம ராஜா தற்கொலை பண்ணிருக்க மாட்டான். யாரோ அவனை கொலை பண்ணிருக்காங்க. என் கனவுல வந்து நீ மெலிஞ்சு போயிட்டதா சொன்னான். அது உண்மையாதான் இருந்தது. இப்ப… தேவயானி கனவுல வந்து அவனோட மரணத்திற்கான உண்மையை நமக்கு புரிய வைக்கிறான் போல” என்று ஆணித்தரமாக கூறினார் பெருமாள். அவர் தேவயானி கூறியதை முழுவதுமாக நம்பினார்.
“அவன் என்ன… என் கனவுல வர மாட்டேன்கிறான்?” என்று கோபத்தில் கைகளை உதறிக்கொண்டவன், “அவன் சாவுக்கு ஒரு சின்ன துரும்பு அளவுக்கு யார் காரணமா இருந்தாலும், அவங்களை சும்மா விட மாட்டேன்” என்று தேவயானியை கோபமாக பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டான் ராஜகுமாரன்.
“சிஸ்டர், அண்ணன் ஏதோ கோபத்துல உங்ககிட்ட அப்படி பேசிட்டு போறாங்க. நீங்க வருத்தப்படாதிங்க. நானும் மாமாவும் உங்களை நம்புறோம். நீங்க சொன்னதுபோல அண்ணனை யாரோ கொலை பண்ணிருக்காங்க. நான்தான் அவசரப்பட்டு ஸ்வேதாவாலத்தான் அண்ணன் இறந்துட்டதா நினைச்சு குமார் அண்ணன்கிட்ட சொல்லிட்டேன். அதனால உங்களுக்கும் பிரச்னையாகிருச்சு” என்று வருத்தத்துடன் குமார் சொல்லவும்,
“அதுக்காக இவள் அக்கா ராஜாவை ஏமாத்தினதுக்கு, குமார் அவனை சும்மா விட்டுருவானா?” என்று கோபமாக பெருமாள் கேட்க,
“அவள் தண்டிக்கப்பட வேண்டியவள்தான் அங்கிள்” என்றாள் தனிந்த குரலில் தேவயானி.
“சிஸ்டர், உங்களுக்கு ராஜா அண்ணன் கொலை சம்பந்தப்பட்ட சந்தேகங்கள் ஏதாவது இருந்தா, எங்ககிட்ட கேளுங்க. நாங்க எங்களுக்கு தெரிஞ்சதை சொல்றோம். இல்லைன்னா குமார் அண்ணன்கிட்ட கேட்டு சொல்றோம். நீங்களா தனியா ஏதாவது பண்ணிடாதிங்க. பின்ன அண்ணன் டென்ஷனாகிடுவாரு” என்று அன்பும், எச்சரிக்கையும் கலந்த உணர்வுடன் குமார் கூற,
“ஆமாம்மா. எதுனாலும் எங்களை கூப்பிடு சரியா?” என்றவர், “இந்த புள்ளை கன்னம் இப்படிச் சிவந்திருச்சே” என்று வருத்தப்பட்டார் பெருமாள்.
“அண்ணா… இங்க இருந்த பர்ஸ்ல கொலையாளியோட கைரேகை இருக்கும். அப்புறம் ராஜா சார் சுட்டுக்கிட்டதா சொல்ற கன்ல அவர் கைரேகை தவிர்த்து, வேற யாரோட கைரேகை இருந்தா, குறிப்பா பர்சில் இருக்கிற கொலையாளி கைரேகை இருந்தா, அவன்தான் ராஜா சாரை கொலை பண்ணிருக்கணும்,” என்றவள், “ஆமா… இந்த ரூம்க்கு அவன் எப்படி வந்திருப்பான்?” என்று இதழில் கைவைத்து யோசித்தாள்.
அவளையே பார்த்து கொண்டிருந்த இருவரும், “நாங்க எல்லாரும் அன்னைக்கு வீட்டுலதான்ம்மா இருந்தோம். அதுவும் பட்டப்பகல்ல ஒருத்தன் வீட்டுக்குள்ள வர்றதை பார்க்காமலா இருந்திருப்போம்?” என்று கேள்வியாய் பெருமாள் தேவயாணியை பார்க்க,
“இந்த ரூம்க்கு இன்னொரு கதவு எதுவும் இருக்கா? அங்கிள்” எனக் கேட்டாள்.
“ஆமா இருக்கு” என்றான் குமார்.
மூவரும் அந்த கதவின் அருகில் சென்றார்கள். அந்தக் கதவில் இயல்பாக கைவைக்க சென்ற குமாரை தடுத்து, “கை வைக்காதிங்க அண்ணா. இந்த கதவு வழியாத்தான் கொலையாளி வந்திருக்கணும். அதனால கதவுல கொலையாளி கைரேகை இருக்கும்”
“ஆமாம் இருக்கலாம்….” என்று இருவரும் ஒத்து கொண்டார்கள்.
“ராஜா சார் ரூம்ல அங்கங்க கிடைக்கிற ரேகையை எல்லாம் ஒண்ணு திரட்டி, குமார்சார்கிட்ட சொல்லுங்க. அதில கண்டிப்பா கொலையாளி கைரேகை கிடைக்கும். அந்த கொலையாளி பர்சில இருக்கிற போட்டோவில் உள்ளவனா இல்லை வெளி ஆளானு அடுத்து கண்டுபிடிக்கணும். ஆமா… வீட்டில கேமரா மாட்டியிருப்பீங்கள்ல. கேமராவுல வீட்டுக்குள்ள யார் வந்தான்னு பார்த்திடலாமே?” என்றாள் அவசர குரலில்.
“ஆமா… கேமராவுல பார்க்கலாம்,” என்று பட்டென்று குமார் சொல்ல, தேவயானியும் பெருமாளும் அவளை யோசனையுடன் பார்த்தார்கள். முடிவில் ராஜகுமாரனிடம் தங்களுக்குள் பேசிக்கொண்டதை சொல்லி, அடுத்து என்ன செய்யலாம் என கேட்போம்? என்று பேசி முடிவெடுத்தார்கள்.
தேவயானி கூறியதை கேட்டு யோசித்தவாறு உறைந்து போய் மஞ்சத்தில் அமர்ந்திருந்தான் ராஜகுமாரன்.
முதலில்… அண்ணன் ஏன் தற்கொலை செய்துகொண்டான்? என்று விரக்தியில் எண்ணி கொண்டிருந்தான். பின்னர் ஸ்வேதாவாலத்தான் தற்கொலை செய்து கொண்டான் என்றதும், அவளை அந்த அளவிற்கு விரும்பிவிட்டானா? என்னை விட அவள் அவனுக்கு முக்கியமா? என்னைவிட்டு செல்ல அவனுக்கு எப்படி மனசு வந்தது? என்று மனதிற்குள் குமறி கொண்டிருந்தான்.
தற்போது நன்றாக இருந்த ராஜவர்மனை யாரோ, கொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தியை கேட்டு, ஏதோ மரணகண்டத்தில் இருந்து தப்பித்து உயிர்பிழைத்து வந்தவர், மீண்டும் மரணத்தின் விழிம்பிற்கே சென்றது போன்று உடலளவிலும் மனதளவிலும் தாங்க முடியாத நரக வேதனையை அனுபவிக்க ஆரம்பித்தான்.
‘யார் இதை செய்திருப்பார்கள்? தங்களுக்கு யார் எதிரி? என்ற கேள்வி மீண்டும் அவனை கண்களை கட்டி தனியாக காட்டில் தவிக்கவிட்டதை போன்று, தவிக்க ஆரம்பித்தவன், ஸ்வேதா காரணமில்லை என்றால் பிறகு யார் காரணமாக இருக்கும்?’ என்று யோசித்தான்.
அச்சமயம் குமார் வந்து தேவயானி கூறியதை சொல்லிவிட்டு, “அண்ணா அண்ணன்ரூம்ல பிங்கர் பிரிண்ட் எடுக்க ஏற்பாடு பண்ணவா?” எனக் கேட்டான்.
ஏற்கனவே தேவயானியின் வார்த்தைகள் ராஜகுமாரனின் மனதிற்குள் ஒரு புயலை கிளம்பியிருந்தன. அவள் மூலமாகவே, அந்த புயல் கரையை கடந்து செல்வதை போல உணர்ந்தவன், “ஏற்பாடு செய்” என்றான் பெருமூச்சுடன்…
ஹாய் ப்ரெண்ட்ஸ்!
அப்போது ராஜவர்மன் தற்கொலை செய்துக்கவில்லையா?உங்கள் பார்வையில் என்ன நினைக்கிறீங்க என்பதை லைக் அண்ட் கமெண்ட் மூலம் தெரியப்படுத்தவும்.
நன்றி
அன்புடன்
சாய்லஷ்மி.