அத்தியாயம் : 18
மறுநாள், ஸ்வேதாவை கண்டுபிடிக்க அனுகிய தனியார் துப்பறிவு நிறுவனத்தில் இருந்து வந்தார்கள். முதலி்ல் வீட்டில் உள்ள அனைவரின் கைரேகையையும் எடுத்தார்கள். அதன்பிறகு ராஜவர்மன் அறைக்குள் பரவலாக கைரேகைகளை எடுத்தார்கள்.
அண்ணன் மரணத்திற்கான மர்ம முடிச்சை அவிழ்க்கும் சாவி கிடைக்க போவது போன்றதொரு அறிகுறி, அவர்களது நடவடிக்கையை பார்த்து கொண்டிருந்தவனுக்கு மனதிற்குள் தோன்றியது. ஏனெனில், ‘தடயங்கள் பொய் சொல்லாது. கொலையாளி தனக்கு தெரியாமல், எதாவது ஒரு தடயத்தை விட்டு சென்றிருக்கலாம். அதனால் கொலையாளியை சீக்கிரம் கண்டிபிடித்துவிடலாம்’ என்று நம்பிக்கையோடு காத்திருந்தான் ராஜகுமாரன்.
கடன் காரணமாகதான் தன்னை தானே ராஜவர்மன் சுட்டு கொண்டான் என்று வழக்கை முடித்து காவல்நிலையத்தில் இருந்து துப்பாக்கியை வாங்கி வைத்திருந்தான். அதனையும் சோதனைக்கு உட்படுத்தும்படி கூறினான்.
ராஜவர்மனின் அறையில் இருந்து சேகரிக்கப்பட்ட ஒவ்வொரு கைரேகையும், தனித்தனியே பிரிக்கப்பட்டு, நுண்ணிய பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பின்பக்க கதவு, கட்டில், பணப்பையில் இருந்த கைரேகை, மற்றும் ராஜவர்மன் பயன்படுத்திய துப்பாக்கி என்று அப்படியே ஒன்றுக்கொன்று ஏதோ தொடர்சங்கிலி போல ஒரு கைரேகை ஒத்துப்போக, அந்த ஒரே ஒரு கைரேகை மட்டும் தனியாக, அந்த வீட்டினரின் கைரேகையோடு வேறுபட்டிருந்தது.
“இந்த கைரேகைதான் சந்தேகத்திற்கு உரியது சார்” என்று துப்பறியும் நிறுவனத்தில் இருந்து முடிவு கூறினார்கள்.
‘அப்ப… வெளியில் இருந்து வந்த யாரோ ஒருவன்தான், இல்லை அந்த பர்சில் உள்ள போட்டோவில் உள்ளவன்தான். அவன்தான் கொலையாளி. அவன் கைரேகை அண்ணனோட துப்பாக்கியிலும் இருக்கு. அவன்தான் அண்ணனை சுட்டு கொன்றிருக்கணும். அவன் எதற்காக அண்ணனை சுட்டு கொன்னான்? அவன் மட்டும் கையில் கிடைக்கட்டும், அவனை சல்லடை சல்லடையாக நான் துப்பாக்கியால துளைக்கிறேன்’ என்று ஏதோ வெறி பிடித்த மிருகம் போல ராஜகுமாரன் மனதிற்குள் எண்ணினான்.
ராஜவர்மன் தற்கொலை செய்து கொள்ளவில்லை. புகைப்படத்தில் உள்ளவன்தான் அவனை கொலை செய்துவிட்டு, அதை தற்கொலை போல் காட்ட முயன்றிருக்கிறான் என்பது தெளிவாகியதும், ராஜகுமாரனின் முகம் சில நொடியில் கோபத்தில் கொந்தளிப்பை வெளிப்படுத்த ஆரம்பித்தது. அவனது கண்கள் இரத்த நிறத்தில் சிவந்தது. அவனது பார்வை ஒரு கூர்மையான வாள் போல, நேர்கொண்ட பார்வையுடன் எதையோ நினைத்தவாறு அசையாமல் அமர்ந்திருந்தான்.
அனைவருக்கும் நடுவில் ஓரமாக நின்று அவனை கவனித்து கொண்டிருந்த தேவயானிக்கு, அவனின் ரெளத்திரமான முகத்தை பார்க்க சற்று மனதிற்குள் பயமாக இருந்தது.
“குமார்… அந்த நாய் எப்படிடா வீட்டுக்குள்ள வந்தான்?” என்று கட்டுக்கடங்காத கோபத்தை சிரமப்பட்டு கட்டுப்படுத்தி கொள்பவன் போல, கைகளை மடக்கி இறுக்கி முடி கொண்டவாறு, நாற்காலியின் இருக்கையை தட்டினான்.
“சிசிடிவியில பார்த்திட்டு இருக்கோம்ண்ணா இன்னும் கண்டு பிடிக்கலை” என்று தயக்கத்துடன் குமார் பதலளிக்கவும்.
“சார் சிசிடிவி புட்டேஜை கொடுங்க. நாங்க அந்த கொலையாளியை கண்டுபிடிக்கிறோம்” என்று துப்பறியும் நிறுவனத்தில் இருந்து ஒருவர் கேட்கவும்,
அவர்களை பார்வையால் எரித்து விடுவது போன்று கோபமாக பார்த்தவன், “ஸ்வேதாவை எப்ப கண்டுபிடிப்பிங்க?” எனக் கேட்டான்.
“எங்க தகவல்படி அவள் இப்ப… மதுரையில இருக்கிறதா தெரிய வந்திருக்கு சார். எங்களோட ஆட்கள் அவளை மதுரையில் சல்லடை போட்டு தேடிட்டு இருக்காங்க. எப்படியும் இந்த மாசத்துக்குள்ள அவளை கண்டுபிடிச்சிருவாங்க” என்று அவனது பார்வைக்கு அஞ்சி நடுங்குபவன் போல திக்கி தினறி பதில் கூறினான்.
அவர்களை கவனித்து கொண்டிருந்த தேவயானி, ‘ஒரு ஆம்பளையே இவர் முன்னாடி இப்படி நடுங்கிறான்’ என்று மனதிற்குள் எண்ணி கொண்டாள்.
“குமார் சிசிடிவி புட்டேஜை கொடுத்தனுப்பு” என்று கணீரென்ற குரலில் உத்தரவிட்டு, வாகனத்தில் கிளம்பினான் ராஜகுமாரன்.
“யோவ்! சீக்கிரம் இவனையாவது கண்டுபிடிங்க. இல்லைன்னா அண்ணன் இருக்கிற டென்ஷனுக்கு உங்கள்ல யாரையாவது ஒருத்தரைதான் போட்டு தள்ள போறாரு” என்று குமார் கூறவும்,
“சீக்கிரம் கொலையாளியோட வர்றோம்” என்று கூறிவிட்டு காணொளியை வாங்கி கொண்டு துப்பறியும் நிறுவன ஆட்கள் கிளம்பினார்கள்.
“இவன்களை அண்ணன் நம்ப மாட்டாரு பாருங்க. நாளைக்கே மதுரைக்கு பத்து ஆட்களை அனுப்பி ஸ்வேதாவையையும், இன்னொரு பத்து ஆட்களை இந்த போட்டோவில் உள்ளவனை கண்டுபிடிக்க அனுப்புவாரு” என்று குமார் சொல்லவும்,
“உங்க அண்ணன் அவன் அண்ணனோட சாவுக்கான நீதியை நிலைநாட்டாம விட மாட்டான்” என்றார் சோகமான குரலில் பெருமாள்.
தேவயானியோ இருவரும் சீக்கிரம் கிடைக்க வேண்டும், தன் வாழ்க்கைக்கு ஒரு விடிவுகாலம் வர வேண்டும் என்று மனதிற்குள் எண்ணி கொண்டாள்.
துப்பறியும் நிறுவனத்தில், பெரிய திரையில் காட்சிகளை ஒவ்வொன்றாக ஓடவிட்டனர். ராஜகுமாரனின் பங்களாவின் பிரதான நுழைவாயில், பின்பக்கக் கதவு, ஜன்னல்கள் என அனைத்தையும் உற்று நோக்கினார்கள். எந்தவொரு சந்தேகத்திற்குரிய நபரின் நடமாட்டமும் ராஜவர்மன் இறந்த அன்று தென்படவில்லை.
அப்போது அந்த மர்ம நபர் எப்படி வீட்டிற்குள் நுழைந்திருக்க முடியும்? என்று யோசித்தவர்கள், மீண்டும் ஒருமுறை எல்லா பதிவுகளையும் பொறுமையாக பார்ப்போம் என்று முதலில் இருந்து பார்த்தார்கள். குறிப்பாக, ராஜவர்மனின் பின்பக்க கதவு வழியாக சம்பந்தபட்ட இடங்களில் கவனத்தை செலுத்தினார்கள்.
சுமார், காலை ஆறு ஆறுக்கு, ராஜவர்மன் அறையின் பின்பக்க கதவின் அருகில் இருந்த ஒரு சிறிய பாதை வழியாக, பதுங்கி நடந்து வரும் ஒரு மனிதன் நிழல் தெரிகிறது. “இவன்தான் கொலையாளியா இருக்கும்” என்று அவர்களுக்குள் பேசி கொண்டனர்.
அடுத்த நொடி, ஈரம் உலர்த்துவதற்காக கொடியில் தொங்க போடப்பட்டிருந்த துணி காற்றில் பறந்து, கண்காணிப்பு கேமராவை மூடி கொண்டது. “ச்சே!!!.. இந்த சமயம் பார்த்து கேமரா மேல துணி விழுந்திருச்சி!” என்று தங்களுக்குள் ஆதங்கப்பட்டு கொண்டனர்.
தானாய் கேமரா மேல் இருந்து துணி கீழே விழும்போது, ராஜவர்மன் இறப்பு செய்தி தெரியவந்து, ஒவ்வொரு ஆட்களாக வீட்டிற்கு வருவது பதிவாகியிருந்தது.
“அந்த துணி விழுந்த கேப்பில்தான் அவன் உள்ள வந்து ராஜா சாரை சூட் பண்ணிட்டு அவன் போயிருக்கணும். கன்பார்ம்மா அவன் பின்பக்க கதவு வழியாகத்தான் வந்திருக்கிறான்” என்று அவர்களுக்குள் ஊகித்து கொண்டார்கள்.
இந்த காணொளியை ராஜகுமாரனிடம் போட்டு காட்டிவிட்டு, “சார்… அவன் போட்டோவை வச்சி நாங்க தேடுறோம் கிடைச்சதும் உங்ககிட்ட அழைச்சிட்டு வர்றோம்” என்று கூறிவிட்டு சென்றார்கள்.
“குமார்… நம்ம ஆட்கள்கிட்ட ஸ்வேதா போட்டோவை கொடுத்து மதுரையில தேட சொல்லு. அதே மாதிரி, இந்த பர்ஸ்ல இருக்கிற போட்டோவுல உள்ளவனையும் தேடணும். எவனா இருந்தாலும், உயிரோட விட கூடாது” என்று ராஜகுமாரன் தனது கோபத்தை அடக்க முயன்றபடி, குரலில் கடுமையை கூட்டி கட்டளையிட்டான்.
“கண்டிப்பாண்ணா. ரெண்டு பேரையும் சீக்கிரமே தூக்கிட்டு வந்து, உங்க முன்னாடி நிக்க வைக்கிறேன்” என்று வாக்கு கொடுத்தான் குமார்.
ஸ்வேதாவை கண்டுபிடிக்க மதுரையில் ஆட்கள் இறங்குவதை அறிந்த தேவயானி, தன் நெஞ்சில் குடியேற்றியிருந்த, பாரம் சிறிது இறங்கியது போல மனதிற்குள் உணர்ந்தாள். உண்மையான ஸ்வேதா சிக்கினால் மட்டுமே, தன் மீதான களங்கம் முழுமையாக துடைக்கப்படும் என்பதால், அவளும் அந்த தேடுதலின் முடிவிற்காக ஆவலோடு காத்திருந்தாள்.
ஒரு இருபது ஆட்களுடன் மதுரைக்கு கிளம்பிய குமார், நாலு திசையாக மதுரையை பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும், ஐந்து பேரை பிரித்து அனுப்பி, வீதிவீதியாக அவளது புகைப்படத்தை வைத்து கொண்டு தேடும்படி கட்டளையிட்டான்.
சுமார் இரண்டு நாட்களாக அவளை சல்லடை போட்டு தேடினார்கள். முக்கியமாக ஒவ்வொரு பெண்கள் விடுதி, பிரபலமான ஹோட்டல், மினரல்வாட்டர் சப்ளை செய்யும் கம்பெனி ஆட்களிடமும், கேஸ் கம்பெனியில் கேஸ் சப்ளை செய்யும் ஆட்களிடமும் அவளது புகைப்படத்தை வைத்து கேட்டார்கள்.
“இந்த பொண்ணா? இந்த பொண்ணை எனக்கு நல்லா தெரியுமே! நேத்து கூட இந்த பொண்ணு வீட்டுக்கு போய்… தண்ணீ கேன் சப்ளை பண்ணிட்டு வந்தேன்” என்று ஸ்வேதாவின் புகைப்படத்தை பார்த்துவிட்டு ஒருவர் கூற,
“இந்த பொண்ணு வீடு எங்க இருக்கு?” என்றவன் தாங்க முடியாத சந்தோஷத்தை தனக்குள்ளே அடக்கி கொண்டு கேட்டான் குமார்.
அந்த நபர் முகவரியை கூற யோசித்து கொண்டிருந்தார், “அண்ணா! நீ என்னை நம்பலைன்னா, நீயும் என்கூட வா.. நான் ஒன்னும் இந்த பொண்ணை செய்ய மாட்டேன். எங்களுக்கு இந்த பொண்ணு ரொம்ப முக்கியம். ஆனா… நான் மதுரைவிட்டு போகும்போது நல்லாபடியா உன்னை கவனிக்கிறேன்”
“எதுக்காக இந்த பொண்ணை நீ தேடு? என்ன விஷயம்?” எனக் கேட்டவர், குமாரை ஆழமாக ஒரு பார்வை பார்த்தவாறு,
அவர் தன்னை சந்தேகப்படுகிறார் என்பதை புரிந்து கொண்டான் குமார். ‘இதை வேற மாதிரிதான் டீல் பண்ணணும்’ என்று மனதிற்குள் எண்ணிவிட்டு, “இந்த பொண்ணு வேற யாருமில்லை என் தங்கச்சித்தான். என் அப்பாவோட இரண்டாவது வொய்ஃப்க்கு பிறந்த பொண்ணு. இந்த பொண்ணோட ஒரு அம்மா இருந்திருக்குமே”
“ஆமாம்ப்பா”
“ஹாங்… அவங்க வந்து ஒரு கையெழுத்து போட்டாத்தான், என் அப்பன் சொத்து எனக்கும் கிடைக்கும். இந்த பொண்ணுக்கும் கிடைக்கும். இந்த பொண்ணு இருக்கிறது எங்களுக்கு இவ்வளவு நாளா தெரியாது. எங்க அப்பன் சாகிற கொஞ்ச நாளைக்கு முன்னாடித்தான் தனக்கு இப்படியொரு குடும்பம் இருக்கிறதையும், அந்த பொண்ணு பெயர்ல சொத்து எழுதி வச்சதையும் சொன்னாரு. ஆனா… நாங்க ஒத்துமையா இந்த சொத்தை பிரிச்சிக்கணும்னு எழுதிக்காரு. அதுக்குத்தான் இந்த பொண்ணை தேடுறேன்”
“ஓ…அப்படியாப்பா?” என்றவர் குமார் சொன்ன பொய்யை உண்மை என்று நம்பி, ஸ்வேதா இருக்கும் இடத்தை காட்டுவதாக ஒப்பு கொண்டார்.
அவர் தன் வாகனத்தில் முன்னால் செல்ல, காரில் அவரை பின் தொடர்ந்தான் குமார்.
அவள் வசித்து கொண்டிருக்கும் வீட்டை அடைந்ததும், “சரிங்கண்ணா, நான் அந்த பொண்ணை பார்த்து பேசிகிறேன். எனக்கு வாழ்க்கையிலே மறக்க முடியாத அளவுக்கு மிக பெரிய உதவி பண்ணிருக்கிங்க. இந்தாங்க இந்த பணத்தை வச்சிக்கங்க” என்று, ஒரு இரண்டாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து அவரிடம் நீட்டினான்.
“சரிங்க தம்பி. ஒன்னா ஒத்துமையா வாழுங்க”
“அதெல்லாம்” என்றவன், “அதுக்காகத்தானே இவளை தேடி வந்திருக்கேன்” என்றான் குமார்.
அந்த நபர் கிளம்பி செல்லவும், தன் ஆட்களை ஸ்வேதா இருக்கும் வீட்டிற்கு வரவழைத்து விட்டு, அந்த வீட்டின் கதவை போய் தட்டினான்.
“யாரு?” என்று உள்ளிருந்து ஒரு பெண்மணியின் குரல் கேட்டது.
“அம்மா மக்கள் தொகை கணக்கெடுக்க வந்திருக்கோம்.. கொஞ்சம் கதவை திறங்கம்மா” என்று சாமர்த்தியமாக குரலைக் மாற்றிப் பேசினான் குமார்.
மறுபுறம் எந்தவிதச் சந்தேகமும் கொள்ளாமல் கதவு திறக்கப்பட்டது.
கதவு திறந்த அடுத்த நொடியே, மின்னல் வேகத்தில் தன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்து ஸ்வேதாவின் அன்னை சரளாவின் தலையில் வைத்தான் குமார். கண்களில் கோபம் கொப்பளிக்க, “உன் பொண்ணு எங்கடி?” என்று கர்ஜித்தான்.
எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்து போன சரளா, பதில் சொல்லத் தெரியாமல் விழிபிதுங்கி நின்றாள்.
வீட்டிற்குள் இரண்டு அறைகள் இருப்பதை கவனித்த குமார், “டேய்… அவள் உள்ள இருக்கானானு, வீட்டை சல்லடை போட்டு தேடுங்கடா!” என்று தன் ஆட்களை அதட்டினான்.
அச்சமயம் அவர்களின் உரத்த பேச்சு குரல் சத்தம் கேட்டு லேசாக திறந்திருந்த அறைதவை தாண்டி, அவர்கள் சத்தம் காதில் விழ, எதார்த்தமாக அறையின் கதவை திறந்து வெளியே வந்தாள் ஸ்வேதா.
தன் தாயின் தலையில் துப்பாக்கியை வைத்திருக்கும் குமாரையும், கும்பலான அவனது ஆட்களையும் பார்த்ததும் பதட்டமானவள், “டேய்… என்னடா பண்றீங்க? என் அம்மாவ?” என்று கத்தியபடியே குமாரை நோக்கி அடிக்க பாய்ந்து வந்தாள்.
“ஏய்.. ஒழுங்கு மரியாதையா, நீயா போய் வண்டியில ஏறு. இல்லை உன் அம்மா தலை செதறிடும்” என்று மிருகத்தனமாகக் கத்தினான் குமார்.
மகள் ஆபத்தில் சிக்கிவிடுவாளோ என்று பயந்த சரளா, அழுகைக் குரலில், “ஸ்வேதா நீ போகாதம்மா எனக்கு பயமா இருக்கு” என்று கதறினாள்.
“நீ முதல்ல போய் வண்டியில ஏறு. நான் உன் அம்மாவை கூட்டிட்டு வர்றேன். இரண்டு பேரும் சத்தம்கித்தம் போட்டு தப்பிக்க நினைச்சிங்க. அந்த இடத்துலையே உங்களை போட்டு தள்ளிட்டு நான் போயிட்டே இருப்பேன். சாட்சியே இல்லாம குமார் அண்ணன் தயவுல நான் ஈசியா வெளிய வந்திருவேன். ஏன்னா… உங்களை கொன்னா ஏன்னு கேட்க ஒரு நாதியும் உங்களுக்கு கிடையாது” என்று ஒரு நரகாசுரன் போல அவ்விருவரையும் மிரட்டினான்.
அவனின் மிரட்டலில் பயந்துவிட்ட ஸ்வேதா, அவனிடமிருந்து எப்படி தப்பிக்க என்று யோசித்து கொண்டே இருக்க, “என்ன?… எப்படி எங்ககிட்ட இருந்து தப்பிக்கலாம்னு யோசிக்கிறீயா? இனி உன் பருப்பு எங்ககிட்ட வேகாதுடி. போ… போய் வண்டியில ஏறு” என்றவன், “ம்ம்ம்… அவளை கூட்டிட்டு நீங்க டெம்போல போங்கடா. நான் காரில் இந்த பொம்பளையோட வாறேன்” என்று தன்னுடைய ஆட்களுக்கு உத்தரவிட்டான்.
ஸ்வேதா பலத்த யோசனையுடன் மெதுவாக நடந்தவாறு படியிறங்கினாள். “ஹே வேகமா நடடி” என்று அதட்டியவாறு அவளுக்கும் முன்பும் பின்பும் குமாருடன் வந்த ஆட்கள் நடந்தனர். அவளை எந்த பக்கமும் நகரவிடாது ஏதோ பாதுக்காப்பு படை வீரர்கள் போல அவளை சூழ்ந்திருந்தனர்.
கீழே நின்றிருந்த டெம்போ வேனில் அவளை ஏறிட்டுவிட்டு, குமாரை அழைக்க, “ஆன் த வே. யு கோ…” எனக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
அவர்கள் இருந்த வீட்டை சரளா பூட்டியதும் சாவியை வாங்கி கொண்டவன், “ம்ம்ம் நட” என்று சரளாவிற்கு உத்தரவிட்டான்.
இருவரும் கீழே வந்ததும், சரளாவை காரில் ஏற்றும்படி கூறியவன், “நீ தப்பிக்கணும்னு நினைச்ச… உன் பொண்ணை உயிரோட பார்க்க முடியாது” என்று எச்சரிக்கை செய்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்தான்.
ஹாய் ப்ரெண்ட்ஸ்! ஒரு வழியாக ஸ்வேதாவை கண்டுபிடித்தாகிவிட்டது. ராஜகுமாரன் இவளுக்கு என்ன தண்டனை கொடுப்பான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். என்று ஒரு லைக் அண்ட் கமெண்ட்ஸ் தெரியப்படுத்தும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி