அத்தியாயம் : 19
ஸ்வேதா பதுங்கியிருக்கும் இடத்தை ஒரு வழியாக கண்டுபிடித்து, அவளையும் அவளது அன்னையையும் வளைத்து பிடித்து, ராஜகுமாரனின் பங்களாவிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தான் குமார்.
வரும் வழியெல்லாம், தன்னை என்ன செய்வார்களா? என நினைத்து ஸ்வேதாவின் உடல் நடுங்க ஆரம்பித்தது. “ஐயோ… என்னை எதுக்குடா கூட்டிட்டு போறிங்க? அந்த ராஜவர்மன் செத்ததுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!” என்று அவள் பயந்து நடுங்கியபடியே அழுதுகொண்டே, அவர்களிடம் கெஞ்சினாள்.
ஆனால், அவளது பேச்சை கேட்கும் நிலையில், அந்த ஆட்கள் இல்லை. அவர்கள் அவளை ராஜகுமாரனிடம் ஒப்படைக்கும் வேலையில் மட்டுமே கவனமாய் இருந்தனர்.
யாரும் அவள் புலம்புவதையோ, அழுவதையோ கண்டு கொள்ளவில்லை. அவர்களை பொறுத்தவரை வேலையை முடித்துவிட்டு பணத்தை வாங்கி கொண்டு கிளம்புவதிலே குறியாக இருந்தனர்.
மறுபுறம், பங்களாவில் தேவயானி சமையலறையில் வேலைகளை கவனித்து கொண்டிருந்தாள்.
பெருமாளும் சங்கரும் ஹாலில் அமர்ந்து, “இன்னைக்கு எப்படியும் அந்த ஸ்வேதா வந்திருவா. அவளுக்கு குமார் என்ன தண்டனை கொடுக்க போறானோ?” என்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது காரின் ஹார்ன் சத்தம் பங்களா வாசலில் கேட்டது. “வந்துட்டாங்கண்ணா!” என்று சங்கர் கூறவும், ராஜகுமாரன் தனது கண்களில் அக்னிப் பிழம்புடன் வராண்டாவிற்கு விரைந்தான்.
அவனுக்கு பின்னால் பெருமாளும், சங்கரும் வந்தனர்.
சமையலறையிலிருந்து வெளியே தலைநீட்டி பார்த்த தேவயானியின் நெஞ்சம், ஸ்வேதா வந்ததை அறிந்து, சொல்ல முடியாத சந்தோஷத்தில், அவளது இதயம் துடிக்க ஆரம்பித்தது.
டெம்போ வாகனத்தின் கதவு திறக்கப்பட்டு, அவர்களால் ஸ்வேதா வெளியே தள்ளப்பட்டாள்.
அவளது முகம் முழுவதும் பயமும் கலக்கமும் நிறைந்திருந்தது. ராஜகுமாரனை நிமிர்ந்து பார்க்க தயங்கி கொண்டே நின்றிருந்தாள்.
தன்னை பார்க்க பயப்படுவளை பார்த்ததுமே, இவளிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று புரிந்து கொண்டான். ‘ஆனால் தேவையானி தன்னை நேருக்கு நேர் கண்களை பார்த்து பேசினாள். உண்மையிலே அவள் நல்ல பெண்! அவள் சொன்னது போல இருவரும் பார்க்க ஒன்று போல தெரிவதால்தான் பாவம் அவளை சித்திரவதை செய்ய வேண்டியதாக போய்விட்டது’ என்று மனதிற்குள் எண்ணியவன், தன் கோபத்தை அடக்க முடியாமல் அவளை நோக்கி வேகமாக பாய்ந்தான்.
“ஏன்டி பிராடு! என் அண்ணனை காதலிக்கிற மாதிரி நாடகமாடி ஏமாத்திட்டு, ஓடி ஒளிஞ்சிகிட்டீயா?” என்று ஆவேசமாக கத்தியபடியே அவளது தலைமுடியை பற்றி இழுத்தான்.
“அய்யோ… விடுங்க சார்! நான் அவரை காதலிக்கிற மாதிரி நடிச்சு ஏமாத்தல” என்று அலறினாள் ஸ்வேதா.
“நீ காரணமில்லையா? பணம் காரு, நகைனு கேட்டு அவனை நீ டார்ச்சர் பண்ணது உண்மைதானடி! எவ்வளவு தைரியமிருந்தா… என் அண்ணனையே ஏமாத்திருப்ப” என்று, அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்தான். அந்த அடியில் ஸ்வேதா நிலைகுலைந்து கீழே விழுந்தாள்.
அவளது அலறல் சத்தம் கேட்டு நடுங்கி போன தேவயானி, கீழே விழுந்து கிடந்த ஸ்வேதாவை பார்த்தாள். ‘நல்லாவேணும் இவளுக்கு. இவளால நான் எத்தனை தடவை அடி வாங்கினேன்’ என்று ஆனந்தமாக மனதிற்குள் நினைத்து கொண்டாள்.
அவளது இதழோரத்தில் வடியும் இரத்தத்தையும், அடிபட்டுக் கிடக்கும், அவளது கோலத்தையும் பார்த்த தேவயானிக்கு ஒருபுறம் கோபமும், மறுபுறம் நிம்மதியும் ஒன்றாக பொங்கி கொண்டு வந்தது.
ஆனால் மறுகணம் இத்தனை ஆண்கள் முன்னிலையில், அடிபட்டுத் துடிக்கும் ஸ்வேதாவை பார்த்து ஒருநொடி மனதிற்குள் பரிதாபப்பட்டாலும், அவள் செய்த பாவத்திற்கு இதலாம் குறைவுதான் என்று, அவளுக்காக பரிதாபப்படும் மனதை சமாதானப்படுத்தி கொண்டாள்.
அதேநேரம், கீழே விழுந்து கிடந்த ஸ்வேதாவை தூக்கி நிறுத்திய ராஜகுமாரன், அவளது கையை பற்றி மேலும் ஆவேசமாக, “சொல்லுடி! என் அண்ணனை எதுக்குடி ஏமாத்தின? உன்னாலதான்டி, என் குடும்பம் இன்னைக்கு நிம்மதி இழந்து தனிமரமா நிக்குது!” என்று வெறியுடன் கத்தினான்.
மூச்சுத் திணறி அழுக ஆரம்பித்த ஸ்வேதா, “சார்… நான் உங்க அண்ணன்கிட்ட காசு கேட்டது உண்மைதான். ஆனா, நான் அவரை காதலிக்கிறேனு, எப்பவும் அவர்கிட்ட சொன்னதில்லை. அவராத்தான் நான் அவரை காதலிக்கிறதா நினைச்சிகிட்டாரு!” என்று கதறினாள்.
“அப்படி அவனை மயக்கிது நீ. சொல்லுடி எதுக்காக இப்படியெல்லாம் பண்ண? உண்மையை சொல்ல போறீயா இல்லையா?!” என்று ராஜகுமாரன் மீண்டும் அவளை அடிக்க கை ஓங்கினான்.
அப்போது குமார் காரில் அங்கு வந்தடைந்தான். கார் கதவைத் திறந்து, சரளா அழைத்து வரப்பட்டாள்.
தன் அம்மா வருவதைக் கண்ட ஸ்வேதா, “அம்மா!” என்று கத்தியபடியே, அவளை நோக்கி ஓட முயன்றாள். ஆனால் ராஜகுமாரனின் ஆட்கள், அவளை பிடித்து நிறுத்தினர்.
“அம்மாடி ஸ்வேதா… அய்யோ என்னம்மா உன் உதட்டுல இருந்து ரத்தம் வருது. பாவிங்களா என் பொண்ணை ஏன்டா இப்படி சித்தரவதை பண்றிங்க” என்று கத்தி அழுக ஆரம்பித்தாள் சரளா.
“ஏய் ச்சீ வாயை மூடு. உன் பொண்ணு பண்ண காரியத்துக்கு அடிச்சா… உதட்டுல இருந்து ரத்தம் வராம… பின்ன தங்கமும் வெள்ளியுமா வரும்” என்றான் பற்களை கடித்தபடி குமார்.
அனைவரின் பார்வையும் இப்போது நடுங்கிப் போய் நின்றிருந்த ஸ்வேதாவின் மீது திரும்பியது.
அவளோ ராஜகுமாரனின் காலில் வந்து விழுந்து, “சார்… நான் ராஜாகிட்ட பணம் கேட்டது தப்புதான் சார்… ஆனா, அவர் என்னை விட்டு விலக பார்த்தப்ப, நான் உண்மையாவே அவர்கிட்ட இருந்து விலகத்தான் நினைச்சேன். அதுக்கு அப்புறம் அவரை நான் பார்க்கலை. ஆனா, அவர் சூசைட் பண்ணிக்குவார்னு, நான் கனவுல கூட நினைக்கலை. ப்ளீஸ் என்னை நம்புங்க. நான் சொல்றதெல்லாம் உண்மை”
“ஆமா… இவள் பெரிய பத்தினி. இவள் சொல்றதை நம்புறதுக்கு” என்ற பெருமாள், “குமாரு… ஒரு பாவம் பண்ணாத தேவையானிக்கு சாப்பாடு, தண்ணீ, தூங்க கூடாதுனு தண்டனை கொடுத்தா. அதே போல இவளுக்கு கடுமையான தண்டனை கொடு. அப்பத்தான் இவள் உண்மையை சொல்வா”
“இங்க பாரு… நீ ஏன் அண்ணன் கூட பழகினனு உண்மையை சொல்லிட்டா… உன்னை விட்டிருவேன். இல்லைன்னா சாப்பாடு, தண்ணீ, துக்கம் இல்லாமல நீ சாகிற வரை உனக்கு தண்டனை கொடுத்திருவேன்” என்று ராஜகுமாரன் கூற,
“நான் பணத்துக்காகத்தான், உங்க அண்ணன்கூட பழகினேன்” என்று கரகரத்த குரலில் கூறினாள் ஸ்வதா.
அனைவரும் அவளை கேவலமாக பார்க்க, “அவளை மாடி ரூம்ல அடைச்சி வைங்கடா.. ஆனா இவளுக்கு சாப்பாடு தண்ணீ தூக்கம் கூடாது. எது கேட்டாலும் அடிங்கடா” என்று கூறிவிட்டு, தன் ஆடி காரில் ஏறி, தனது ‘ராஜா டெக்ஸ்டைல்’ நிறுவனத்திற்கு கிளம்பினான்.
‘ராஜா டெக்ஸ்டைல்ஸ்’ நிறுவனத்தின் பிரம்மாண்டமான அலுவலக அறைக்குள் நுழைந்த ராஜகுமாரன், தன் இருக்கையில் அமர்ந்தான். அவனது மனம் ஒரு கணமும் அமைதி கொள்ளவில்லை.
இத்தனை நாட்களாக அண்ணனை ஏமாற்றிய ஸ்வேதாவை கண்டுபிடிக்க வேண்டும் என்ற வெறி மட்டுமே அவனுக்குள் எரிந்து கொண்டிருந்தது. இப்போது அவளையும், அவளது தாயையும் பிடித்தாகிவிட்டது. ஸ்வேதாவும் தான் பணத்துக்காகத்தான் பழகியதாக ஒப்பு கொண்டுவிட்டாள்.
ஆனால், இத்தனையும் நடந்த பின்னும் அவனது நெஞ்சில் பாரம் குறையவில்லை. மாறாக, ஏதோ ஒரு பெரிய உண்மை இன்னும் தன் கண்களுக்குப் புலப்படாமல் மறைக்கப்பட்டிருப்பது போன்ற ஒரு அசெளகரியமான உணர்வு அவனுக்குள் உறுத்தி கொண்டே இருந்தது. ‘ஒருவேளை, அந்த பர்ஸில் இருந்த புகைப்படத்தில் உள்ள மர்ம நபரை கண்டுபிடித்தால்தான் அண்ணனின் இறப்பிற்கான உண்மையான நீதி கிடைக்குமா?’ என்று அவன் பலவாறாக யோசித்து திகைத்தான்.
மனம் எதிலும் நிலை கொள்ளாமல் தவித்தவன், இறுதியாக தன் அலுவலக அறையின் சுவரில் மாட்டியிருந்த ராஜவர்மனின் பெரிய புகைப்படத்தின் முன்பு சென்று நின்றான். அந்தப் படத்தின் மீது நீண்ட நேரம் தன் பார்வையை பதித்தவன், மெல்லிய குரலில், “அண்ணா… நீயே சொல்லு. இத்தனை நாள் உன்னை ஏமாத்தின ஸ்வேதாவுக்கு நான் என்ன தண்டனை கொடுக்கணும்? நீயே எனக்கு ஒரு வழியை காட்டு…” என்று, தன் மனக் குமுறலை ராஜவர்மனின் புகைப்படத்திடம் வெளிப்படுத்தினான்.
சிறிது நேரம் அமைதியாக நின்றவன், அங்கிருந்த மேஜை மீதிருந்த ஒரு வெற்று தாளை எடுத்து கைகளாலேயே சிறிய துண்டு துண்டாக கிழித்தான்.
ஒவ்வொரு துண்டிலும் ஸ்வேதாவுக்கு அவன் கொடுக்க நினைத்த பல்வேறு வகையான தண்டனைகளை எழுதி, அவற்றை மடக்கி ராஜவர்மனின் படத்தின் முன்னால் இருந்த மேஜையில் குவித்தான்.
கண்களை மூடிக்கொண்டு ஒரு நிமிடம் மௌனமாக நின்றவன், “அண்ணா… இதிலிருந்து நான் ஒரு சீட்டை எடுக்க போறேன். அதில் என்ன எழுதியிருக்கிறதோ, அதுதான் நீ அவளுக்கு தேர்ந்தெடுக்கிற தண்டனை! அதை அப்படியே நான் நிறைவேற்றுறேன்” என்று தனக்குள்ளே எண்ணி கொண்டான்.
பின்னர் நடுங்கும் விரல்களால் அந்த சீட்டு குவியலில் இருந்து ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்துத் பிரித்து பார்த்தான். அந்த துண்டு சீட்டில், ‘சாகும் வரை மறக்க முடியாத தண்டனை’ என்று எழுதப்பட்டிருந்தது.
அதை வாசித்த அடுத்த நொடி, ராஜகுமாரனின் உதடுகளில் ஒரு கொடூரமான மர்ம புன்னகை தவழ்ந்தது. அவனது கண்கள் கோபத்தில், ஒருவித வன்மமான பிரகாசத்துடன் மின்னின.
‘சாகும் வரை மறக்க முடியாத தண்டனையா? அப்படித்தான் உனக்கு கொடுக்கணும் ஸ்வேதா… என் அண்ணன் பட்ட வேதனைக்கு நீயும் உன்னை பெற்ற தாயும் வாழ்நாள் முழுவதும் ரத்த கண்ணீர் வடிக்கிற மாதிரி ஒரு நரகத்தை உங்களுக்கு காட்டுறேன்!’ என்று விஷமமாக மனதிற்குள் எண்ணி கொண்டவன், அந்த துண்டு தாளையும் மற்ற ராஜவர்மன் முன்னால் இருந்த தாளையும், மொத்தமாக கிழித்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, தன் இருக்கையில் வந்தமர்ந்தான்.
அச்சமயம் ராஜகுமாரனின் கைபேசி ஒலித்தது.
அந்த விநாடி சற்று மனதின் இறுக்கம் தளர்ந்து மேஜையின் மீதிருந்த அலைபேசியை கையில் தாங்கினான் திரையில் ‘இன்வெஸ்டிகேஷன் ஆனந்த்” என்றிருந்தது.
உடனே ஆர்வமாக அழைப்பை ஏற்றான்.
“குட் மார்னிங் சார்… அந்த பர்ஸில் இருந்த நபரை ஒரு வழியா கண்டுபிடிச்சாச்சு. அவரை உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வரவா?” என்று அனுமதி கேட்டான்.
“உடனே அழைச்சிட்டு வாங்க. இனி ஸ்வேதாவை தேட வேணாம். என் ஆட்கள் அவளை பிடிச்சிட்டு வந்துட்டாங்க” என்று சற்று குரலை உயர்த்தி கூறிவிட்டு, பட்டென்று அழைப்பை துண்டித்துவிட்டு, வாகனத்தில் வீட்டை நோக்கி விரைந்தான்.
‘இன்னைக்கு அண்ணனோட இறப்பிற்கு காரணமான இறுதியான உண்மை தெரிய வரும்’ என்று மகிழ்ச்சியாக எண்ணியவாறு, வேகமாக வீட்டை நோக்கி வாகனத்தை செலுத்தினான்.
அவன் நினைவு முழுவதும், ராஜவர்மன் தன்னுடைன் பழகிய அழகிய தருணங்கள் நினைவிற்கு வந்து மீண்டது. ‘இனி இந்த இனிமையான நாட்கள் திரும்ப வருமா?’ என்று எண்ணி அவனது கண்கள் கலங்கின.
‘அண்ணா உன்னை என்கிட்ட இருந்து பிரிச்ச அவனை கொல்லாம விட மாட்டேன்’ என்று மனதிற்குள் ஆக்ரோஷமாய் எண்ணி கொண்டே, இன்னும் வேகமாக வாகனத்தில் விரைந்தான் ராஜகுமாரன்.
ஹாய் ப்ரெண்ட்ஸ்!
இந்த அத்தியாயம் பற்றிய உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.
நன்றி
அன்புடன்
சாய்லஷ்மி.