26 – விதி விளையாடிய விநாடி!

அத்தியாயம் : 26

ராஜவர்மனின் முதலாம் ஆண்டு திதி மிக சிறப்பாக நிறைவடைந்ததும், அனைவரும் வீட்டை பார்த்து சென்றுவிட, வெங்கடேசனும், அவரது மனைவி மாலாவும் மட்டுமிருந்தனர். அவர்களுக்கு  தேவயானியை பார்த்தவுடன் பிடித்துவிட, ராஜகுமாரன், தேவயானி திருமணத்தை ஆரம்பிக்கும் வேலையில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக தேவயானியிடம் பேசலாம் என்று நினைத்தனர். 

சமையல் வேலையை முடித்துவிட்டு, சமையல் மேடையை துடைத்து கொண்டிருந்த தேவயானியை கனிவுடன் அழைத்தாள் மாலா.

உடனே கைகளை துடைத்துவிட்டு அவர்கள் முன்பு போய் பணிவுடன் நின்றவள், “சொல்லுங்க மேடம்… டீ காஃபி எதுவும் போட்டு தரவா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் தேவயானி.

“என்னம்மா படிச்சிருக்க நீ?” என்று புன்னகை முகமாக கேள்வி  கேட்டார் வெங்கடேசன்.

“பி.எஸ்சி. மேக்ஸ் முடிச்சிருக்கேன் சார்” 

இருவரும் அவள் படிப்பை கேட்டதும் ஆச்சரியமடைந்தனர். 

“சரிமா…. உங்க சொந்த ஊரு எங்க இருக்கு? குடும்பம் பத்தி சொல்லு” என்று மேலும் சில விவரங்களை கேட்டார் வெங்கடேசன்.

அவர்கள் தன்னை அழைத்து எதற்காக இப்படிப்பட்ட கேள்விகளெல்லாம் கேட்கிறார்கள் என்பது தேவயானிக்குப் புரியவே இல்லை. ‘ஒருவேளை நாம் வேலை செய்யும் இடத்தில் நேர்மையானவள்தானா என்று சோதிக்கிறார்களோ?’ என்று தெரிந்து கொள்ள கேள்வி கேட்கிறார்களோ?’ என்று மனதிற்குள் நினைத்து கொண்டவள், “செங்கல்பட்டு பக்கம்தான் சார் என் சொந்த ஊரு… எங்க வீட்டுல அப்பா, அம்மா நானு மூணு பேரு மட்டும்தான்” என்று சுருக்கமாக பதிலளித்தாள்.

“சரிம்மா…  எங்க இரண்டு பேருக்கும் டீ போட்டு கொண்டு வா” என்று உத்தரவிட்டார்.

​“சரிங்க சார்” என்றவள், அடுத்த நொடியே மின்னல் வேகத்தில் சமையலறைக்குள் சென்று, மணக்க மணக்க இஞ்சியையும் ஏலக்காயையும் நசுக்கிப் போட்டு, அருமையான தேநீரைத் தயாரித்து ஒரு தட்டில் வைத்துப் பணிவுடன் அவர்களிடம் நீட்டினாள்.

அவளிடம் தெரிந்த சுறுசுறுப்பும், பனிவும், பிடித்து போய் தேவயானி நகர்ந்ததும், ராஜகுமாரனை அழைத்த வெங்கடேசன், “நல்ல பொண்ணைத்தான் உன் மனைவியா செலக்ட் பண்ணிருக்கப்பா. எங்களுக்கு பொண்ணை பிடிச்சிருக்கு. அப்ப… நாளைக்கு போய், அவங்க வீட்டுல நாங்க பேசட்டுமா?” என்று மகிழ்ச்சியுடன் கேட்டார்.

“சரிங்க மாமா… ஆனா… கல்யாணத்துக்காக அவங்க கடன்கிடன் எதுவும் வாங்கி செய்ய வேண்டாம்னு சொல்லிடுங்க. அவங்க பொண்ணை மட்டும் கொடுத்தா போதும்னு சொல்லிருங்க” என்றான் கரரான குரலில்…

“சரிப்பா…” என்ற வெங்கடேசன், மாலாவிடம் நாளைக்கு தேவயானி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறினார்.

மறுநாள்… ராஜகுமாரன் வீட்டில் நின்றிருந்த ஆடம்பரமான வாகனத்தில் ஒன்றில் ஏறி கொண்டவர்கள், இடையில் பூ, பழம் வாங்கி கொண்டு   ராஜகுமாரனின் சார்பாக தேவயானியை பெண் கேட்டு, செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள தேவயானியின் சொந்த ஊரை அடைந்தனர்.

நகரின் இரைச்சலிலிருந்து விலகி, அமைதியான கிராம சூழலில் இருந்த தேவயானியின் எளிய சிறிய வீட்டை கண்டுபிடித்தனர்.

வீட்டின் முன் அறையில் பாஸ்கரும், கற்பகமும் அமர்ந்து தொலைகாட்சியை பார்த்து கொண்டிருந்தனர்.

திடீரென்று பெரிய வாகனத்தில் இருந்து, வெங்கடேசனும் மாலாவும் தங்கள் வீட்டிற்குள் வந்ததை பார்த்ததும், அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 

“வாங்க ஐயா… வாங்கம்மா… உள்ள வாங்க. உட்காருங்க” என்று சற்று பயத்துடனும் குழப்பத்துடனும் வரவேற்றனர்.

“நீங்களும் உட்காருங்க… உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான், உங்க பொண்ணு வேலை பார்க்கிற வீட்டிலிருந்து நாங்க வந்திருக்கோம்” என்றார் வெங்கடேசன் கனிவான புன்னகையுடன்.

தேவயானி வேலை செய்யும் இடத்தில் இருந்து என்ற வார்த்தையை கேட்டவுடன், மகிழ்ந்தவர்கள், “இருங்க காஃப்பி போட்டு கொண்டு வர்றேன்” என்று பதறி அடித்து கொண்டு கற்பகம் நகர முயல…

“இருக்கட்டும்மா முதல்ல நீங்க உட்காருங்க. நாங்க உங்ககிட்டத்தான் பேச வந்திருக்கோம். அப்புறம் கூட காஃப்பி குடிச்சிக்கலாம்” என்றார் வெங்கடேசன்.

என்ன விஷயமாக இருக்கும்?  என்று இருவரின் முகத்திலும் சந்தேகமும் குழப்பமும் நிழலாட, “என்னங்க ஐயா… எங்ககிட்ட பேசணும்னு சொல்றீங்க? என்ன விஷயம்?” என்றார் சற்று நடுங்கிய குரலில்.

“பயப்பட ஒன்னுமில்லை. எல்லாம் ரொம்ப நல்ல விஷயம் பேசத்தான் வந்திருக்கோம்” என்று வெங்கடேசன் சிரித்துக்கொண்டே சொன்னார்.

அதில் கற்பகத்திற்கும், பாஸ்கருக்கும் சற்று மனதிற்குள் நிம்மதி ஏற்பட்டது.

நேராக விஷயத்திற்கு வந்த வெங்கடேசன், “உங்க பொண்ணு தேவயானியை, எங்க பையன் ராஜகுமாரனுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அவளோட நல்ல குணமும், பணிவும், அவளோட சமையலும் எங்க எல்லாருக்கும் அவளை பிடிக்க காரணமா இருக்கு. அதான் உங்க சம்மதத்தை கேட்க, நாங்க வந்திருக்கோம்” என்றார் சற்று சிரித்தமுகமாக…

இருவரும் நம்ப முடியாத அதிசய பார்வையுடன் அவர்களை பார்த்தனர். 

“நாங்க மாப்பிள்ளைக்கு அப்பா அம்மா மாதிரி, அவன் அண்ணன் உயிரோட இருந்த வரைக்கும் எல்லாத்தையும் எங்ககிட்ட கேட்டுத்தான் செய்வான். அதே போல ராஜகுமாரனும், நான் தேவயானியை ஸ்வேதானு நினைச்சி ரொம்ப சித்திரவதை பண்ணிட்டேன். அவள் ரொம்ப நல்ல பொண்ணுனு தெரிஞ்ச பின்னாடி, அவளுக்கு நானே ஒரு நல்ல வரன் பார்த்து கட்டி வைக்கலாம்னு முயற்சி பண்ணேன். ஆனா… ஸ்வேதாவும் தேவயானியும் ஒன்னு போல இருக்கிற விஷயத்தையும், ஸ்வேதாவை பத்தி தெரிஞ்ச உடனேயும் தேவயானியை கட்டிக்க யாரும் முன்வரலை”

இந்த விஷயத்தை கேட்டதும் பெற்றோர் இருவரும் மனதிற்குள் வருந்தினர்.

“தேவயானி நல்ல பொண்ணு, எதுக்கு யாருக்கோ… அவளை கட்டி கொடுக்கணும். நாமளும் எப்படியும் கல்யாணம் பண்ணிக்கத்தான் போறோம், ஏன்… தேவயானியையே கல்யாணம் பண்ணிக்க கூடாது. அவளை பற்றி எல்லாம் எனக்குத் தெரியும். நான் வளர்ந்தது தொழில் ஆரம்பிச்சது, இப்ப… அண்ணனை இழந்து நிற்கிறது வரைக்கும்,  எல்லாம் அவளுக்குத் தெரியும். அப்ப… நாங்க இருவரும் இணைந்தால், எங்க வாழ்க்கை நல்லாயிருக்கும். என் மனைவியாய் பொதுவெளியில அவள் நடந்தால், அவளது நிழலை கூட, தீண்ட எவனும் பயப்படுவான். 

நான் அவளை திருமணம் செய்து கொண்டால்தான் அவளும் நல்லாயிருப்பாள். அவளுக்கு செய்த கொடுமைக்கு அவளை நல்லா படியா நான் பார்த்துகிட்டத்தான் என் மன உறுத்தல்ல இருந்து நானும் வெளிய வர முடியும். 

நீங்க அவள் வீட்டுக்கு போய் பொண்ணு கேளுங்க மாமானு போன்ல கூப்பிட்டு சொன்னான். அதான் நாங்க… அவன் அண்ணன் ஒரு வருட திதியை முடிச்சிட்டு, கல்யாண வேலையை ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணோம். உங்களுக்கு எங்க பையனுக்கு, உங்க பொண்ணை கட்டி கொடுக்க சம்மதமா?” எனக் கேட்டார் வெங்கடேசன்.

இருவரும் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

“கல்யாணத்துக்காக கடன் வாங்கி எதுவும் செய்ய கூடாதுனு பையன் தெளிவா சொல்லிட்டான். தேவயானியை மட்டும் கொடுத்தா போதும், எல்லாத்தையும் ராஜகுமாரனே பார்த்துப்பான்” என்று ராஜகுமாரன் சொன்ன வார்த்தைகளை நினைவுவந்தவராக கூறினார்.

வார்த்தைகளால் சொல்ல முடியாத சந்தோஷத்துடன், “எங்களுக்கு சம்மதம்தான்ங்க ஆனா, பொண்ணை ஒரு வார்த்தை கேட்டுகிறேன்” என்றார் பாஸ்கர் சற்று தயக்கத்துடன்…

“அதுவும் சரிதான்… தேவயானிக்கு கால் பண்ணி கேளுங்க” என்று மாலா கூறவும்,

“கற்பகம் வந்தவங்களுக்கு காஃபி போடு. நான் பாப்பாகிட்ட போன் பேசிட்டு வர்றேன்” எனக் கூறிவிட்டு பாஸ்கர் எழுந்து கொள்ளைபுறம் செல்ல,

கற்பகமோ அடுப்பங்கரைக்குள் சென்று காஃபி தயாரிக்க ஆரம்பித்தாள்.

வெங்கடேசனும், மாலாவும் தொலைக்காட்சி பெட்டிக்கு மேல் இருந்த அலமாரியில், தேவயானி படிக்கும்போது வாங்கியிருந்த கோப்பைகளை பார்த்தார்கள். ‘நல்ல படிப்பா போல’ என்று மாலா கூற, வெங்கடேசன் லேசாக தலை அசைத்தார்.

தொலைபேசி அழைப்பு சில ரிங்களுக்கு பிறகு ஏற்கப்பட, தேவயானி மறுமுனையில் “ஹலோப்பா…” என்றாள். 

தேவயானியிடம் வெங்கடேசன் வந்த விஷயத்தையும், அவர்கள் ராஜகுமாரனுகாக பென் கேட்டு வந்திருக்கிற விபரத்தை பாஸ்கர் கூறிவிட்டு, “நீ என்னம்மா சொல்ற? உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா? அவரு நல்லவரா? உன்னை காலம்புறா நல்லா வச்சி பார்த்துப்பாரா?” எனக் கேட்டார்.

ஒருகணம் விஷயத்தை நம்பமுடியாத தேவயானி, ‘ஓ… அதான் ந்யூயார்க் போயிருந்தப்ப இரண்டு நாளைக்கு ஒருதரம் போன் பண்ணி என்னை விசாரிச்சாரா? வாட்செல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்தாரா?’ என்று மனதிற்குள் யோசித்தவளின் கன்னங்கள் வெட்கத்தால் சிவந்தன. 

அவள் அமைதியாக இருக்கவும், “என்னம்மா… என்ன ஒரு பதிலும் சொல்ல மாட்டின்கிற?” என்று சற்று பதட்டத்துடன் பாஸ்கர் கேட்டார்.

தன் வெட்கத்தை மெல்ல விழுங்கிக்கொண்டு, நலிந்த குரலில், “நீங்க… நீங்க சம்மதம்னு சொல்லிருங்கப்பா” என்றாள்.

மகளின் சம்மதத்தைக் கேட்டதும் பாஸ்கரின் முகத்தில் பெருமகிழ்ச்சி மலர்ந்தது. “சரிம்மா… சரி” என்றவர் புன்னகைமுகமாக தேவயானி சம்மதம் தெரிவித்ததை வேகமாக வந்து, வெங்கடேசனிடம் கூறினார்.

உடனே அவரோ, “ரொம்ப சந்தோஷம். அப்ப… கல்யாணத்தை நாம உறுதி பண்ணிக்கலாம். நல்ல நேரம் போயிட்டு இருக்கு. இந்தாங்க தட்டை வாங்கிக்கங்க” என்று, பூ பழங்கள் வாங்கிட்டு வந்ததை ஒரு தாம்பூல தட்டில் வைத்து எழுந்து, அவரிடம் இருவரும் நீட்டினார்கள்.

பாஸ்கரனோ, “கற்பகம் ஒரு நிமிஷம் வந்துட்டு போ” என்று குரல் கொடுத்தார்.

அடுப்பை குறைத்து வைத்துவிட்டு வேகமாக வந்த கற்பகம், வெங்கடேசனும் மாலாவும் சேர்ந்து நீட்டிய தட்டை தம்பதி சரிதமாக பாஸ்கருடன் சேர்ந்து நின்று தட்டை பிடித்தார்கள். “எங்க பையனுக்கு உங்க பொண்ணை கட்டிக்க கொடுக்க சம்மதமா?” எனக் கேட்டார் வெங்கடேசன்.

“பரிபூரண சம்மதம்ங்க” என்று இருவரும் பதிலளித்தனர். தட்டை அவர்களிடம் கொடுத்துவிட்டனர் வெங்கடேசன் தம்பதியினர்.

“உங்க போன் நம்பர் கொடுங்க. கல்யாண விஷயமா பேசணும்ன்னா உங்களை கூப்பிட வசதியா இருக்கும். என் பெயரு வெங்கடேசன்” என்றவர் அவருடைய அலைபேசி எண்களை வாங்கிவிட்டு தன்னுடைய எண்களை அவருக்கு கொடுத்தார்.

கற்பகம் காஃப்பி கொண்டு வந்து கொடுக்கும்போது, “தேவயானி நல்லா சமைக்கிறாளே அதுவும் அந்த வீட்டுல உள்ள பத்து பேருக்கும் சரியா உப்பு, காரம் போட்டு சமைக்கிறதுன்னா, ரொம்ப பெரிய விஷயம்” என்று மாலா கூறவும்,

“நான் முன்னாடி சத்துணவு கூடத்துல சமையல் பொங்கி போடுற வேலை பார்த்தேன்ங்க. நான் சமைக்கும்போது கூட இருந்து பார்த்தா. பெரிய பெண்ணானதும், நான் வேலைக்கு போக முடியாத நேரத்துல, அவளுக்கு ஸ்கூலு லீவுனுனா, அவளே எனக்கு பதிலா சமைச்சிருவா. அப்படித்தான் அவள் சமைக்க பழகினா” 

“என்ன வாங்க போங்கனு கூப்பிட்டு இருக்கிங்க இப்பத்தான் நாம ஒன்னுக்குள்ள ஒன்னாகிட்டோம். அண்ணினு கூப்பிடுங்க” என்றாள் உரிமையாய் மாலா.

“எங்க பொண்ணுக்கு இப்படியொரு நல்ல சம்பந்தம் அமையும்னு நான் கனவுல கூட நினைக்கலைங்கண்ணி. இன்னும் நீங்க சொன்ன விஷயத்தை… நம்ப முடியாமத்தான் உட்கார்ந்திருக்கேன்” என்று கற்பகம் கூற,

“நம்புங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும். உங்க பொண்ணை ராஜகுமாரன் நல்லா பார்த்துப்பான். சின்ன வயசில இருந்தே பாசத்துக்காக ஏங்கின பையன். அப்பா அம்மா இல்லாமல அவனோட அண்ணன்தான் அவனை வளர்த்து படிக்க வச்சி ஆளாக்கினான்” என்ற மாலா ராஜகுமாரனை பற்றிய கூறவும், இருவரும் கவனமாக கேட்டு கொண்டனர்.

சில நொடி நேரம் பேசிவிட்டு, “அப்ப நாங்க கிளம்புறோம். பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் நேரம் எப்படி இருக்குனு ஒருதரம் ஜோசியர்கிட்ட பார்த்துட்டு கல்யாண தேதியை குறிச்சிட்டு சொல்றோம். நீங்க ஒருதரம் ராஜகுமாரனை வந்து பார்த்திட்டு போங்க. உங்க பொண்ணு வாழ போற வீட்டையும் வந்து பாருங்க” என்று அன்போடு அழைத்துவிட்டு கிளம்பினார்கள்.

அவர்களை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்துவிட்டு பாஸ்கரும் கற்பகமும் நடந்த நிகழ்வை நினைத்து நினைத்து… பெரிதும் மகிழுந்தனர்.

இந்த அத்தியாயம் பற்றிய உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.

நன்றி

அன்புடன் 

சாய்லஷ்மி.

❤️ Loading reactions...
1 Comment
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top