அத்தியாயம் : 27
ராஜகுமாரனை திருமணம் செய்ய போவதை பற்றி ஹாலில் இருந்த டைனிங் சேரில் அமர்ந்து, வெட்கத்துடன் ஏதேதோ சந்தோஷமாக கற்பனை செய்து கொண்டிருந்தவள், சட்டென்று
வீட்டிற்குள் வந்த ராஜகுமாரனை கண்டதும் அவளுக்குள் ஒரு மின்சாரம் பாய்ந்தது போலிருக்க,
சட்டென்று நாற்காலியிலிருந்து பட்டென்று எழுந்தவள், விழிகளில் படபடப்பும் கன்னங்களில் வெட்கச் சிவப்பும் ததும்ப, தலைகுனிந்து கொண்டாள்.
அவளிடம் புதிதாய் முளைத்திருந்த அந்த நாணத்தையும் வெட்கத்தையும் ரசித்து கொண்டே அவளருகில் வந்தான் ராஜகுமாரன்.
அவன் தன்னை நோக்கி வருவதை உணர்ந்தவள், அங்கிருந்து தப்பியோட வேண்டும் போல ஒரு எண்ணம் ஏழ, சட்டென்று சமையலறைக்குள் நுழைய முயன்றாள்.
அவளது அந்தத் தவிப்பை லேசான சிரிப்புடன் பார்த்து ரசித்தவன், “ஹே தேவயானி… ரொம்ப டயர்டா வந்திருக்கேன், ஒரு கப் டீ வேணுமானு கேட்க மாட்டீயா?” என்று இதுவரை தன் குரலில் காட்டாத ஒரு புதிய வசீகரத்துடன் கேட்டான்.
அவனது அந்த வார்த்தையை கேட்டதும், அவளது கால்களைச் சங்கிலியால் பிணைத்தது போல அப்படியே நின்றுவிட்டாள். “இதோ… இப்ப.. கொண்டு வர்றேன் சார்” என்று அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க கூட, பார்க்க தைரியம் இல்லாமல், வெட்கச் சிரிப்புடன் விரைந்து சமையலறைக்குள் நுழைந்தாள்.
‘அவருக்கு இன்னைக்கு ஸ்பெஷலா டீ போட்டு தரணும்’ என்று நினைத்தவள், அடுப்பில் பாலை தனியாக கொதிக்க விட்டாள். இன்னொரு அடுப்பில் தேயிலையை தனியாக கொதிக்க வைத்து, இரண்டையும் சரியான அளவில் கலந்து, அதில் இஞ்சியையும் ஏலக்காயையும் இடித்து போட்டு, இறுதியாக சர்க்கரை சேர்த்து இறக்கினாள்.
அதை வெண்மையான நிறத்தில் இருந்த ஒரு பிங்கான் கோப்பையில் அழகாக பரிமாறிவிட்டு, படபடக்கும் இதயத்துடன் அடிமேல் அடி வைத்து மெதுவாக நடந்து அவனை நோக்கி சென்றாள்.
அவனோ… அவளைத்தான் கண்கள் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான். அவள் அருகில் வரவும், அவள்புறம் கை நீட்டினான்.
அவள் தேனீர் கோப்பையை கொடுக்கும்போது, அவள் கையில் இருந்த கோப்பை லேசாக ஆடியது.
அவளது மெல்லிய நடுக்கத்தை கண்டு இதழோரமாய் சிரித்தவன், அவளை பார்த்தவாறு கோப்பையை வாங்கி கொண்டான். அந்தத் தருணத்தில் அவனது அலைபேசி காதுகளைக் கிழிக்கும் ஒலியுடன் அலறவும், எடுத்துப் பார்த்தான்; திரையில் ‘வெங்கடேசன் மாமா’ என்று பெயர் ஒளிர்ந்தது.
“சொல்லுங்க மாமா போன காரியம் சக்சஸ்தான?” என்றவன் தேனீரை ஒரு மிடறு குடித்தான் ராஜகுமாரன்.
“ஆமாப்பா… அவங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க. உனக்கு போன் எதுவும் பண்ணி பேசினாங்களா?” என்று ஆச்சரியத்துடன் அவர் கேட்க.
“நீங்க சொல்லாமலே… நீங்க போன காரியம் சக்சஸ்தானு பைல் எடுக்க வீட்டுக்கு வந்தப்ப… என்னை பார்த்தும் தேவயானி வெட்கத்துல சமையலறைக்குள்ள ஓடினா அதிலே நான் தெரிஞ்சுகிட்டேன்” என்று அவளை பார்த்து கொண்டே போனில் கூறினான்.
அவளோ… தலைகுனிந்தவாறு நடுங்கும் கைகால்களை அவனிடம் மறைக்க போராடி கொண்டே நின்றிருந்தாள்.
“இனி தேவயானி அங்க இருக்க வேணாம்ப்பா. கல்யாணம் முடிவாகிவிட்டா… பொண்ணும் பையனும் ஒரே இடத்துல இருக்க கூடாது. இனிமேல அவள் உன் வீட்டுக்கு சமையல்காரி இல்லை, உன் வீட்டுக்காரி. அதனால சமையலுக்கு ஒரு நல்ல ஆளை வேலைக்கு போடு. உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சதும் தேவயானிக்கு உன் தொழிலை கத்துக்கொடு.
தேவயானி நல்லா படிச்சிருக்க போல, அவள் வீட்டுல நிறைய கோப்பையும் மெடலும் அவள் வாங்கிருந்ததை பார்த்தோம். அதுமட்டுமல்ல டென்த்துலையும் டுவல்த்துலையும் அவள்தான் ஸ்கூல் பர்ஸ்ட். கோல்டு மெடல் வாங்கியிருக்கா. அதுதான் அந்த பொண்ணு வீட்டுல இருந்து அவள்… உனக்கு கொண்டு வர்ற மிகப்பெரிய சீர்வரிசை” என்று தேவயானியை பற்றி புகழ்ந்தார் வெங்கடேசன்.
அவளை பற்றி தெரிந்ததும் அவளை மனைவியாய் அடைய தான் கொடுத்துத்தான் வைத்திருக்க வேண்டும் என்று பெருமையாக மனதிற்குள் நினைத்து கொண்டான்.
“சரிப்பா… அவளை பத்திரமா அவங்க வீட்டுக்கு அனுப்பி வை.. நாங்க வீட்டுக்கு வந்துட்டு இருக்கோம். ஈவினிங்.. நீ ப்ரியா இருந்தா வா. உங்க இரண்டுபேர் ஜாதகத்தை ஜோசியர்கிட்ட பார்த்துட்டு, கல்யாணத்தை எப்ப வச்சிக்கலாம்னு நாள் குறிச்சிட்டு வந்திருவோம்” என்றார்.
“சரிங்க மாமா” என்றவன் அழைப்பை துண்டித்து போனை டைனிங்டேபிள் மேல் வைத்துவிட்டு, “குமார்” என்று உரைக்க அழைத்தான்.
“என்னண்ணா?” என்று கேட்டபடி வீட்டுக்குள் ஓடி வந்தான்.
“தேவயானியை அவங்க வீட்டுல கொண்டு போய் விட்டிட்டு வா” என்றவன் கடைசி சொட்டு இருந்த தேனீரை பருகிவிட்டு அதையும் டைனிங் டேபிள் மேல் வைத்தான்.
‘எதற்கு வீட்டில் கொண்டு போய் விட சொல்றாரு’ என்று குனிந்த தலையோடு நின்று கொண்டிருக்கும் தேவயானியை பார்த்துவிட்டு, ‘ஒருவேளை தேவயானி எதுவும் தவறு பண்ணிருச்சா?’ என்ற பதட்டத்துடன், “அண்ணா எதுக்கு இப்ப சிஸ்டரை வீட்டுக்கு அனுப்புறிங்கனு தெரிஞ்சுக்கலாமா?” என்று சற்று தயங்கி தயங்கி கேட்டான்.
“கல்யாணமாக போற, நாங்க இரண்டு பேரும், ஒரே வீட்டுல இருக்க கூடாதாம். சாமி குத்தமாகிருமாம். அதான்… உன் சிஸ்டர், அவள் வீட்டுல விட்டிட்டு வர சொல்றேன்” என்று சற்று சிரித்தமுகமாக ராஜகுமாரன் கூறவும்,
விஷயம் அறிந்ததும் மிகவும் சந்தோஷப்பட்டான் குமார். “சரிங்கண்ணா… சிஸ்டர் போகலாமா?” எனக் கேட்டான்.
“இருங்கண்ணா. என் ட்ரெஸ்ஸை எடுத்துட்டு வர்றேன்” எனக் கூறிவிட்டு மாடிப்படி ஏறினாள் தேவயானி.
“அண்ணா எப்ப கல்யாணம்?” என்று குமார் கேட்க,
“இனிதான் தேதி குறிக்கணும். இப்பத்தான் அவங்க வீட்டுல மாமா போய் பேசிட்டு அவளோட ஜாதகத்தை வாங்கிட்டு வந்திட்டு இருக்காங்க” என்றவன், “அப்புறம்… சமையலுக்கு ஒரு நல்ல ஆளா வேலைக்கு போடு. அதுவும் ஒரு லேடியா பார்த்து போடு. அவளுக்கு உதவியா இருக்கும்”
“சரிங்கண்ணா” என்று தலையாட்டினான் குமார்
அவள் மாடியிலிருந்து தன்னுடைய உடைமைகளை எடுத்துட்டு வந்து, அவனருகில் தயங்கி நின்றவாறு, “நான் போயிட்டு வர்றேன்ங்க” என்றான்.
“ஓக்கே…”
“சிஸ்டர் பேக்கை கொடுங்க” என்று கேட்டு வாங்கியவன், “நீங்க அண்ணன்கிட்ட பேசிட்டு வாங்க நான் கார்ல வெயிட் பண்றேன்” எனக் கூறிவிட்டு அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு அகன்றான் குமார்.
“வேலை டென்ஷனுல நான் போன் பண்ண மறந்தாலும், நீ எனக்கு போன் பண்ணு. இல்லை, நான் போன் எடுக்கலைன்னா வாட்ச்ஆப் சார்ட் பண்ணு” என்றான் அவளது முகத்தை ஆசைதீர பார்த்தவாறே ராஜகுமாரன்…
“ம்ம்ம்” என்றவள், “நீங்க வேலா வேலைக்கு சாப்பிடுங்க” என்றாள் அவள்.
தன்னை அக்கறையாக கவனித்து கொள்ள அண்ணனுக்கு பிறகு தேவயானி கிடைத்திருக்கிறாள் என மனதிற்குள் நினைத்தவன், “சரி… போயிட்டு வா” என்று உத்தரவிட்டான்.
அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்து, மெல்ல ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு, மெல்ல நடந்தவாறு வீட்டின் வாசலை தாண்டி, குமார் அமர்ந்திருக்கும் காரினுள் அமர்ந்தாள். இந்த சின்ன தற்காலிக பிரிவு அவர்களுக்குள் புதிதாய் காதலை ஏற்படுத்தியது.
குமார் காரை இயக்க, தேவயானி அமைதியாகத் தன் ஊரை நோக்கி பயணமானாள்.
“சிஸ்டர் உங்களை மாதிரி ஒரு குணமான பொண்ணு அண்ணனுக்கு கிடைக்க மாட்டாங்க. அண்ணன் மாதிரி ஒரு பாசமான ஆளு உங்களுக்கும் கிடைக்க மாட்டாங்க. நீங்க இரண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர்ஸ்” என்றான் குமார்.
அவன் கூறிய கடைசி வார்த்தையை கேட்டதும் சந்தோஷமடைந்தவள், “தேங்க்ஸ்ண்ணா” என்றாள் தேவயானி.
அதன் பிறகு குமார் அமைதியாக வர, அவள் நினைவுகளில் ராஜகுமாரன் முகமும், அவன் பேசிய வார்த்தைகளும் வலம் வந்தன.
வீடு வந்ததும், “வீட்டுக்கு வந்து ஒரு காப்பி குடிச்சிட்டு போங்க” என்று குமாரை அழைத்தாள் தேவயானி.
“கல்யாணம் நடக்க போகுது. இனி எதாவது கல்யாண வேலை விஷயமா அண்ணன் அனுப்பிவிடுவாரு.. இனி அடிக்கடி வரத்தான் போறேன் அப்ப சாப்பிடறேன்.”
“சரிங்கண்ணா பத்திரமா போய்ட்டு வாங்க” எனக் கூறியவள் தன் உடைமையை எடுத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.
அவள் வீட்டிற்குச் சென்றதும், அவளை கட்டி அனைத்து கொண்ட கற்பகம், “அம்மாடியோவ்!… என் பொண்ணு எவ்வளவு பெரிய இடத்துல வாக்க பட போறா?” என்று கூறி மகிழ்ந்தாள்.
வெட்கம் கலந்த புன்னகையுடன் பெற்றோர் இருவரும் ஏறிட்டாள் தேவயானி.
அவள் முகத்தில் பல நாளுக்கு அப்புறம் தெரிந்த மகிழ்ச்சியில், அவள் ஏதோ மிக அழகாக தெரிவது போல இருவரும் உணர்ந்தனர். “உன் முகத்துல சந்தோஷத்தை பார்த்து என் கண்ணே பட்டிரும்போல இருக்கு. உனக்கு ராத்திரி சுத்தி போடணும்மா” என்று சந்தோஷமாக மூவரும் பேசி கொண்டார்கள்.
இதற்கிடையில் பங்களாவிற்குத் திரும்பிய வெங்கடேசனும் மாலாவும் சாப்பிட்டுவிட்டு, மாலையில் ஜோசியரை வீட்டிற்கு வரும்படி அழைத்தனர்.
மாலை நான்கு மணிக்கு ஜோசியர் வந்ததும், இருவரின் ஜாதகத்தையும் கொடுத்து பொருத்தம் பார்க்கும்படி கூறினார் வெங்கடேசன். ராஜகுமாரனும் அவர்களுடன் அமர்ந்திருந்தான்.
“இருவரும் கடைசி வரை சேர்ந்து வாழ்வாங்களா? வம்சம் விருத்தி எப்படி இருக்கு? இந்த பொண்ணை கட்டிக்கிட்டா குமார் தொழில் விருத்தி எப்படி இருக்கும். அவன் ஆயுள் எப்படியிருக்கும்” எனக் கேட்டார்.
“எல்லாமே நல்லாயிருக்குதுங்கைய்யா. இந்த பொண்ணு ரொம்ப ராசியான பொண்ணு. அதிர்ஷடமான பொண்ணு. இதுநாள் வரை சனி பெயர்ச்சியால ரொம்ப கஷ்டத்தையும் மானம் போற பிரச்சனையையும் சந்திச்சிருக்கும். ஆனா… இனிமேல ஊரே வியந்து பார்த்து மரியாதை கொடுக்கிற மாதிரிதான் இந்த பொண்ணு வாழும். இவருக்கு இந்த பொண்ணால இனி ஒவ்வொரு நல்லாதா நடக்கும். தொழில் சிறக்கும். வம்சம் விருத்தியாகும். இவருக்கு இவர் அண்ணனே குழந்தையா வந்து பொறப்பாரு”
இந்த தகவலை கேட்டதும் மூவரும் மிகவும் மகிழ்ந்தனர். “சரிங்க ஜோசியரை ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம்?”
“ஆவனி 13 ஆகஸ்ட் 30ம் தேதி இரண்டு பேரும் அவங்க வாழ்க்கையை ஆரம்பிச்சாங்கன்னா ரொம்ப நல்லா வருவாங்க. அன்னைக்கு கல்யாணத்தை வச்சிட்டு, மாலை ஆறு மணியிலிருந்து ஆறு முப்பத்துக்குள்ள சாந்தி முகூர்த்ததுக்கு நல்ல நேரம் இருக்கு. அதுக்குள்ள பொண்ணு மாப்பிள்ளையும் அறைக்குள் விட்டிருங்க”
“சரிங்க ஜோசியரே”
“முகூர்த்த கால் எப்ப நடலாம். தாலி எப்ப வாங்கலாம். அடுத்து பொண்ணுக்கு தாலி பிரிச்சி எப்ப போடலாம்னு அதற்கும் நேரம் குறிச்சி கொடுத்திருங்க ஜோசியரை… திரும்ப ஒவ்வொன்னாக உங்களை அழைச்சிட்டு இருக்க முடியாதுல்லையா?” என்று நினைவு வந்தவளாக மாலா கேட்கவும், பத்திரிக்கை அடிப்பதில் இருந்து பெண்ணிற்கு தாலி பிரித்து போடுவது வரை, அனைத்திற்கும் நல்ல நேரம் பார்த்து, ஒரு தாளில் எழுதி கொடுத்தார்.
“முதல்ல உங்க குலதெய்வம் கோவில்ல பத்திரிக்கை அடிச்சு வந்ததும், ஒரு பொங்கல் வச்சி சாமி கும்பிட்டு வந்தீங்கன்னா… இன்னும் உங்கள் வாழ்க்கையில ரொம்ப விஷேஷமா இருக்கும்” என்று ராஜகுமாரனை பார்த்து கூறினார். அவனோ புன்னகையுடன் ‘சரி’ என்பதாய் தலை ஆட்டினான்.
“அப்படியே கல்யாணம் முடிஞ்சதும் சீக்கிரம் உங்களுக்கு வாரிசு வரணும்னா, ஒரு நூறு பேருக்கு அன்னதானம் பண்ணுங்க” அதற்கும் ‘சரி’ என்பதாய் தலை ஆட்டினான் ராஜகுமாரன்.
“அப்ப நான் உத்தரவு வாங்கிட்டுங்களா” என்று ஜோசியர் கூறியதும், அவருக்கு குடிக்க தேனீர் கொண்டு வந்து கொடுத்தான் குமார்.
மாலாவோ, ஒரு தட்டில் பூ பழம் வெற்றிலை பாக்கு வைத்து, ராஜகுமாரனிடம் கொண்டு வந்து கொடுத்தாள். அவனோ தன் சட்டை பையில் இருந்து ஒரு பத்தாயிரம் பணத்தை எண்ணி பார்க்காமல் அந்த தட்டில் வைத்து அவரிடம் கொடுத்தான்.
“நன்றிங்க தம்பி. நல்லபடியாக கல்யாணம் நடக்கும். இரண்டு பேரும் நல்லா அன்னுனியமான தம்பதியா கடைசி வரை சந்தோஷமா வாழ்விங்க” என்று வாழ்த்துவிட்டு நகர்ந்தார்.
இந்த அத்தியாயம் பற்றிய உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.
நன்றி
அன்புடன்
சாய்லஷ்மி.