அத்தியாயம் : 5
மருத்துவரிடம் விடைபெற்று ராஜவர்மனின் உடலோடு வீட்டை அடைந்தபோது, வீட்டின் முன்னர் திரண்டிருந்த மக்கள் கூட்டம், ராஜகுமாரனுக்குள் தாங்க முடியாத சோகத்தின் அளவை போன்று திரளாக காட்சியளித்தார்கள்.
அவர்கள் தொழில் சம்பந்தப்பட்ட நண்பர்கள், சில வேலையாட்கள், கூட்டாளிகள், அவர்களது சிறு வயது நண்பர்கள், அண்டை வீட்டார்கள், வேலையாட்கள் குடும்பம் என்று அனைவரும் வந்துவிட்டார்கள்.
ஊரே ‘ராஜா டெக்ஸ்டைல்ஸ்’ அதிபரின் மரணத்தால் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தது. ஆமாம்!… திடீரென எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி, அதுவும் ஒரு இளம் வயதுடைய, கம்பீரமான ஆளுமை முடிந்து போனது என்பதை அவர்களால் நம்பவும் முடியவில்லை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.
“சின்ன வயசில இருந்தே அவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை வளர்த்து படிக்க வச்சான். இப்ப நல்ல நிலைமைக்கு வந்த பின்னாடி இப்படியா அவன் வாழ்க்கையில விதி விளையாடணும்?” என்று ஒருவர் புலம்ப,
“அவன் யாருக்கு என்ன தீங்கு செஞ்சிருக்கான்? அவன் உண்டு அவன் வேலையுண்டுனு இருப்பான். அவனா இப்படி பண்ணிட்டான் நம்பவே முடியலைடா… உன் தெய்வத்தை தொலைச்சிட்டு நிற்கிறியேடா?” என்று மற்றொருவர் கூற,
“நல்ல வாழ வேண்டிய பையன். இப்படியா அல்பாய்சில அவன் வாழ்க்கையை முடிச்சிக்கணும்?” என்று, ராஜவர்மனின் இறப்பு செய்தியை ஜீரணிக்க முடியாமல் ராஜகுமாரனிடம் வந்து சொந்தங்கள் புலம்பினாரகள்.
“சார்… நேத்து கூட என்கிட்ட நல்லாதான் பேசினாங்க அதுக்குள்ள இப்படி ஒரு துயரமான முடிவை நான் எதிர்ப்பார்க்கலைப்பா. எனிவே உங்களை நீங்க திடப்படுத்திக்கங்க” என்று தொழில் வட்டாரங்களில் சிலர் கூற, ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த விதத்தில் வந்து ஆறுதல் கூறி கொண்டிருந்தார்கள்.
“வண்டி ரெடியாகிருச்சி இப்பவே அண்ணனை வண்டியில ஏத்திட்டு கிளம்புவோம். இல்லன்னா காஞ்சிபுரம் போக நேரமாகிரும்” என்று சிவா வந்து கூற,
‘அவ்வளவுதான் இனி இந்த வீட்டிற்கும் அண்ணனுக்குமான உறவு முடிந்துவிட்டதா? இனி, எப்பவும் அண்ணன் திரும்ப வீட்டிற்கு வர மாட்டானா? இதற்குத்தான் பார்த்து பார்த்து வீட்டை கட்டினானா?’ என்று தாங்க முடியாத உண்மையை எண்ணி மனதிற்குள் புலுங்கினான் ராஜகுமாரன்.
காஞ்சிபுரம்தான் அவர்களது பூர்வீகம். வேலைக்காக ராஜவர்மன் சென்னைக்கு வந்து பின்னர், இருவரும் தங்களது குல தொழிலான பட்டுச்சேலை வியாபாரத்தை தொடங்கவும், இங்கையே வீடும் கட்டி வசித்து வந்திருந்தார்கள்.
சென்னையில் நன்றாக தொழில் நடக்கிறது என்ற காரணத்தால்தான் இங்கையே தங்க முடிவெடுத்தார்களே தவிர, அவர்களது தாத்தா, அப்பா என்று தலைமுறை தலைமுறையாக அங்குத்தான் பட்டு உற்பத்தி செய்தார்கள் என்பதால், தங்களது தொழிலுக்கான பட்டுச்சேலையை உற்பத்தியை காஞ்சிபுரத்திலே செய்தார்கள். அதனால், அவர்களது சொந்த மண்ணான காஞ்சிபுரத்தில், அவர்களது பூர்வீக வீட்டின் பின்புறத்தில், அவர்களது தாத்தா மற்றும் பெற்றோரின் அருகில் ராஜவர்மனை நல்லடக்கம் செய்ய ராஜகுமாரன் முடிவெடுத்தான்.
ராஜவர்மனின் உடல், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் காஞ்சிபுரத்தை நோக்கி புறப்பட்டது. ராஜகுமாரன், கமலா மற்றும் வெங்கடேசன், சங்கர், சிவா மற்றும் சில நெருங்கிய உறவினர்கள் வாகனத்தில் உடன் சென்றனர். மற்றவர்கள் தங்களது வாகனத்தில் அவர்களை பின் தொடர்ந்தார்கள்.
ஊரறிய திருமண கோலத்தில் அண்ணனை அழைத்து செல்ல வேண்டும் என்று ஆசை கொண்ட ராஜவர்மன், உயிரற்ற சடலமாக ராஜவர்மனை அழைத்து செல்வதை கண்டு, தாங்கமுடியாமல் நெஞ்சிற்குள் வலியை உணர்ந்தவன், இது ஒரு கனவாக இருக்கக்கூடாதா என்று மீண்டும் மீண்டும் மனதிற்குள் ஏங்கி தவித்தான்.
செல்லும் வழியில் தானும் அண்ணனும் சென்ற இடங்களை எதார்த்தமாய் சந்திக்கும்போது, அண்ணனுடன் இனி, இது போன்று நேரம் செலவழிக்க முடியாதே! என்று எண்ணி வேதனை அடைந்தான்.
சென்னையில் இருந்து காஞ்சிபுரத்தை அடைந்தபோது, அங்கே ஏற்கெனவே பெரும் கூட்டம் திரண்டிருந்தது. அவர்களது நெருங்கிய சொந்தங்கள் அங்குதான் ராஜவர்மனை அடக்கம் செய்ய போகிறார்கள் என்று நேராக அங்கு வந்துவிட்டனர். அக்கம் பக்கத்தினர் தெரிந்தவர்கள் என்று அத்தனை பேரும் ராஜவர்மனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கூடியிருந்தனர்.
ராஜவர்மன், காஞ்சிபுரத்தில் உள்ள நெசவாளர் தெருவிற்கு ஒரு அடையாளம் கொடுத்தவன், அவனது வளர்ச்சி, தெரு மக்களுக்கு பெருமையாக இருந்தது. இன்று அவன் உயிரற்ற சடலமாக வந்திருப்பது, அவர்களை துயரத்தில் ஆழ்த்தியது. உறவினர்களும், நண்பர்களும், ‘ராஜா டெக்ஸ்டைல்ஸ்’ சம்பந்தப்பட்ட சில ஊழியர்களும் சோகமே உருவெடுத்தது போல நின்றிருந்தனர்.
அவர்களது பூர்வீக வீடெங்கும் வியாபித்திருந்த மரண அமைதி, ராஜகுமாரனின் மனதையும், அங்கிருந்த அனைவரது இதயங்களையும் பெரும் கனமாக்கியது.
ராஜவர்மனின் உடல், அவர்களது மூதாதையர்கள் வாழ்ந்த பழைய வீட்டு முற்றத்தில் இறுதி அஞ்சலிக்காக இறக்கி வைக்கப்பட்டது.
அந்த வீடு, ராஜகுமாரனுக்கும் ராஜவர்மனுக்கும் எண்ணற்ற நினைவுகளை கொண்டிருந்தது. அங்குதான் ராஜவர்மன் அவனை தூக்கி வளர்த்தான். படிக்க வைத்தான். தங்களது வியாபார கனவுகளை பற்றி மகிழ்ச்சியுடன் கதைத்தான். இப்போது அந்த வீட்டில் அசையாமல் படுத்திருப்பதை கண்டு, ராஜகுமாரன் முற்றிலுமாக நிலை குலைந்தான்.
ஒருவர் பின் ஒருவராக வந்து ராஜவர்மனுக்கு அஞ்சலி செலுத்தினர். சிலர் மௌனமாக மலர்களைத் தூவிச் சென்றனர். சிலர் கண்ணீர் மல்க ராஜகுமாரனுக்கு ஆறுதல் கூறினர்.
ராஜகுமாரன், ஒவ்வொருவரையும் ஒருவித வெற்றிடத்துடன் நோக்கினான். அவனுக்குள் இருந்த அழுகை, வரண்டு போயிருந்தது. ஒருவித மரத்து போன உணர்வுடன் நின்றிருந்தான்.
அவனை அவ்வப்போது தாங்கி நின்ற வெங்கடேசன், சுமார் மாலை ஐந்து மணியளவில், இறுதி சடங்குகளை செய்ய வேண்டிய முறைகளை பற்றி விளக்கினார்.
சடங்குகளுக்காகவும் கடமைகளுக்காகவும் தனது மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு, உடைகளை மாற்றிவிட்டு வந்தவன், ராஜவர்மனின் உடலை சுற்றி வந்தான். அவனின் கண்கள் அண்ணனின் முகத்தை விட்டு விலக மறுத்தன. ‘என்னால தாங்க முடியலண்ணா… ஏன் என்னைவிட்டு போன?’ என்று ராஜவர்மனிடம் கேள்வி கேட்பது போல, நெஞ்சிற்குள் குமறியவண்ணம் அசையாமல் அண்ணனை பார்த்தவாறு நின்றிருந்தான்.
“நேரமாகுதுடா குமரா” என்ற வெங்கடேசன் வார்த்தைக்கிணங்க, சட்டென்று அந்த நினைவில் இருந்து வெளியே வந்து கடமைகளை செய்ய தொடங்கினான். பட்டாலான புதிய உடையை ராஜவர்மனுக்கு போற்றி, சந்தன மாலை அணிவித்து, தலையில் ஒரு கிரிடம் வைத்து அழகுப்படுத்தி முடித்தான்.
சூரியன் அஸ்தமித்து, நட்சத்திரங்கள் மெல்ல கண் சிமிட்ட தொடங்கியிருந்த இருண்ட மாலை பொழுதில், குடும்பத்தாரின் பாரம்பரிய நல்லடக்க இடத்திற்கு அவனது உடல் எடுத்து செல்லப்பட்டது.
அவர்களது தாத்தா ராஜபாண்டியன், தந்தை ராஜசேகரன் ஆகியோருக்கு அடுத்து உருவாக்கியிருந்த புதிய குழியில், ராஜவர்மனின் உடலை அடக்கம் செய்ய, ஒரு சந்தனபேழையில் ராஜவர்மனை வைத்துவிட்டு, “கடைசியா ஒருதரம் முகத்தை பார்க்க நினைக்கிறவங்க வந்து பார்த்துக்கங்க” என்றார்கள்.
தன்னியல்பாக ராஜவர்மனின் அருகில் சென்றான் ராஜகுமாரன்.
ஊர் உலகத்திற்காக, சம்பிரதாயத்திற்காக, கடமைக்காக என்று அண்ணனை பிரிந்த துயரத்தை தாங்கி கொண்டு, தன்னை தனியாக தவிக்க விட்டு சென்ற கோபத்தை அடக்கி கொண்டு இருந்தவனுக்கு, தற்போது அவனை பிரிய போகிறோம் என்ற நிர்பந்தம் வரவும், அத்தனை கட்டுப்பாடு போட்டு வைத்திருந்த இதயம் வலி தாங்க முடியாது துடிக்க ஆரம்பிக்கவும், அந்த கட்டுகள் உடைந்து, இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அழுகையும், மனகுமறலும் வெளிவந்து, “அண்ணா” என்று கத்திவிட்டான்.
அவனின் கர்ஜனையில் சுற்றியிருந்தவர்கள் ஒரு நொடி மனதிற்குள் நடுக்கத்தை உணர்ந்தார்கள்.
“நீ இனிமேல என்கிட்ட பேச மாட்டியா? என்கூட சாப்பிட மாட்டியா? சொல்லுண்ணா சொல்லு? நான் மட்டும் எப்படிடா தனியா இருப்பேன்” என்று கத்தினான் கதறினான்.
கோபத்தில் அவனது கன்னத்தை பிடித்து உலுக்கினான். நான்கு அடிகள் அடித்தான். அவன் மேல் அணிவித்திருந்த மாலையை எடுத்து தூக்கி எறித்தான். தடுக்க வந்த அனைவரையும் எட்டி தள்ளிவிட்டு, ராஜவர்மனின் மார்பில் தலை வைத்து, அவனை கட்டி கொண்டு சின்ன குழந்தையை போல அழுக ஆரம்பித்தான்.
‘தந்தை போல தன்னை மார்பில் சாய்த்து தூங்க வைத்தவன் இன்று நிரந்தரமாக தூங்கிவிட்டானே! இனிமேல் அண்ணனை தன்னால் எழுப்பவே முடியாதா?’ என நினைத்து உடைந்து அழுதான்.
அவனது பிஞ்சு உள்ளம், பேசாமல் கிடைக்கும் அண்ணனுடன் பேச தவித்தது. ஆசையாமல் கிடைக்கும் அவனுடன் எழுந்து நடக்க துடித்தது. ஏதோ சொல்ல தெரியாத உணர்வில் அண்ணனை பிரிய கூடாது என்ற பயமும் சேர்ந்து, ஒரு வேகம் கொடுக்க, ராஜவர்மனை விட்டு விலக மனமில்லாமல், விட்டு வலகிவிட்டால் இனி எப்பவுமே அண்ணனை பார்க்க முடியாது. தொட முடியாது என்ற எண்ணத்துடன், மேலும் அவனை இறுக கட்டி கொண்டு அழுதான்.
“ராஜா என்னப்பா இப்படி பண்ணலாமா? நேரம் போயிட்டு இருக்குப்பா” என்று உறவுக்காரர் ஒருவர் அன்பாய் வந்து கூற,
“மாட்டேன் அண்ணனை விட மாட்டேன். இப்ப… நான் அவனை விட்டா இனி எப்பவுமே அவனை பார்க்க முடியாது. நான் அவனை விட மாட்டேன்” என்று கோபத்தில் கத்தினான்.
ராஜவர்மனை இழந்த துயரமும், ராஜகுமாரனின் செயலையும் பார்த்து தாங்க முடியாது அமைதியாக கண்கலங்கிய வெங்கடேசனிடம், “நீங்க கொஞ்சம் அவன்கிட்ட பேசுங்க” என்றனர் உறவினர்கள்.
சின்ன வயதில் இருந்து பெற்ற தந்தை போல அன்பு காட்டி, தேவையான இடத்தில் தட்டி கொடுத்து வளர்த்த அவராலேயே அவனை பிரிய கூடிய தருணத்தை தாங்க முடியவில்லை என்றால், இருபத்தி ஐந்து வருடங்களாக தந்தைக்கு தந்தையாய், தாய்க்கு தாய்யாய் என, ஒன்றாக உடன் இருந்தவனுக்கு எப்படி தாங்கி கொள்ள முடியும் என்ற எண்ணத்தில், “என்னால அவனை தேத்த முடியாது” என்று அழுதவாறு கூறினார் அவர்.
“மாலையெல்லாம் தூக்கி போட்டு… நீயே உன் அண்ணனை இப்படி அவமானப்படுத்தலாமா? இதலாம் தப்புப்பா” என்று ஒருவர் வந்து கூற,
அவர் வார்த்தைக்கு தலைவணங்குகிற நிலைமையில் அவன் இல்லை என்றதும், ராஜவர்மனை கட்டி கொண்டு அழுதவாறு இருந்தவனை, நாலைந்து பேர் சேர்ந்து வம்படியாக பிரித்து, நிறுத்தி, மீண்டும் ராஜவர்மனை கட்டிப்பிடித்து கொள்ளாதவாறு ராஜகுமாரனை பிடித்து கொண்டார்கள்.
“அண்ணா…” என்ற கத்தலோடு ராஜகுமாரன் கதறி துடிக்க,
வேறு ஒரு மாலை அணிவித்து, அவன் கையால் மண்ணை அள்ளி போட வைத்து, மற்ற சடங்குகள் எல்லாம் செய்த பின்னர், ஒரு பெரும் தொழில் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிய ராஜவர்மனின் உடல் அடங்கிய சந்தனபேழையை, மண்ணுக்குள் நல்லடக்கம் செய்தார்கள்.
விஷயம் முடிந்ததும், தாங்கி பிடித்திருந்த ராஜகுமாரனை விடுவித்துவிட்டு மற்றவர்கள் நகர, அண்ணனின் சமாதி முன்பு மண்டியிட்டு கதறி அழுதான்.
அவனுக்கு ஆறுதல் கூற, யாரும் முன் வரவில்லை. ஆனால், அடுத்த ஒரு பத்து நிமிடங்களில் தூரத்து சொந்தங்கள், ஊழியர்களின் குடும்பங்கள், தெரிந்தவர்கள், உற்றார் உறவினர்கள், வேலையாட்கள் என்று அனைவரும் அவ்விடத்தைவிட்டு மறைந்துவிட, கதறி அழுது கொண்டே இருந்தவனை பார்த்து மனம் தாங்காமல், “வாப்பா…” என்று அழைத்தார் வெங்கடேசன்.
“மாமா… நான் எப்படி அவன் இல்லாமல்” என்று அடுத்து பேசுவதற்கு வார்த்தை வராது தவித்தவனை பார்க்க, அவருக்கே பெரும் தர்மசங்கடமாக இருந்தது. ஏனெனில், இவ்வளவு நேரம் பக்க பலமாய் சுற்றி நின்றிருந்தவர்கள் போல நின்றிருந்தவர்கள் கலைந்து சென்றுவிட, அவருக்கே தனிமையாக்கப்பட்ட உணர்வு, ரணமாய் இருந்த காயத்திற்கு மேலும் காயத்தை கொடுப்பது போலிருந்தது.
“இன்னும் அவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இருக்குப்பா. எந்திரிப்பா” என்றவர், ஆட்களை வைத்து அவனை தூக்கி பிடித்து நிறுத்தி தாங்கி பிடித்து அவனை வீட்டிற்குள் அழைத்து வந்து, குளிர்க்க வைத்து உடைமாற்றி, நடுகூடத்தில் ராஜவர்மனுக்காக வைத்திருந்த விளக்கில், தீபம் ஏற்ற வைத்தார்.
அக்கணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாப்பாடு வரவும், சாப்பிட்ட மாட்டேன் என்று அடம்பிடித்தவனிடம், “இன்னையிலிருந்து ஒரு மாதத்திற்கு உனக்காக நீ எதுவும் செய்ய வேண்டாம். ஆனா, உன் அண்ணனுக்காக செய்ய வேண்டிய கடமையை செய். இப்ப… நீ சாப்பிட்ட பின்னாடித்தான் மத்தவங்க சாப்பிடணும் அதனால சாப்பிடு” என்று சொல்லி சமாதானப்படுத்தி அவனை சாப்பிட வைத்தார்.
அதன் பின்னர் சாப்பிட்ட நெங்கிய உறவினர்கள் மற்றும் விசுவாசமான வேலையாட்கள் அடுத்தடுத்த காரியங்கள் பற்றி, அவர்களுக்குள் பேசிவிட்டு அவனிடம் அபிப்பிராயம் கேட்டார்கள். அதற்கு ராஜகுமாரன் சம்மதம் தெரிவிக்கவும், அடுத்த எட்டு நாட்கள், எங்கும் செல்லாது இந்த வீட்டிலே அவனை தங்கும்படி கூறிவிட்டு, எட்டாவது நாள் வருவதாக சொல்லிவிட்டு சென்றார்கள். வெங்கடேசன் குடும்பமும், சிவா, குமார், சங்கர் மட்டும் அவனுக்கு துணையாக அவனுடன் வீட்டில் தங்கினார்கள்.
சுமார் இரவு பத்து மணியளவில், அந்த வீட்டில் இருந்த இரண்டு அறையை வெங்கடேசன் குடும்பம் பயன்படுத்தி கொள்ள, நடுகூடத்தில் யாருமற்ற ஆனாதையாக படுத்திருந்த ராஜகுமாரனுக்கு, சங்கரும் சிவாவும் துணையாக படுத்து கொண்டார்கள்.
ராஜகுமாரனுக்கு தூக்கம் வராது, சிறுவயதில் அண்ணன் அவனை கவனித்து கொண்ட விதம், வளர்ந்த பின்னர் இருவரும் வியாபாரத்தில் சேர்ந்து எடுத்த முடிவுகள், எதிர்காலத்தை பற்றிய கனவுகள் என்று அனைத்தையும் நினைத்து மெளனமாக கண்ணீர் வடித்தான்.
ராஜவர்மனின் நல்லடக்கம் முடிந்த பின்னரும், ராஜகுமாரனின் மனம் அண்ணனின் பிரிவை தாங்க முடியாது தவித்து கொண்டிருந்தது. பூமிதாய் ராஜவர்மனின் உடலை தாங்கி கொண்டாலும், ராஜகுமாரனின் மனம் என்னவோ அண்ணனின் இழப்பை தாங்கமுடியாது, ஏதோ பாரத்தை சுமப்பது போன்று கனமாகவே அவனது இதயம் கனமாகவே இருந்தது.
ஹாய் ப்ரெண்ட்ஸ்.
என்ன உங்க எல்லாரையும் அழ வச்சிட்டேனா? பீல் பண்ணாதிங்க 😁😁😁
இந்த அத்தியாயம் பற்றிய கருத்துகளை கமெண்ட்ஸில் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். படிச்சி முடிச்சிட்டு அந்த லைக் பட்டை அப்படியே தட்டி விட்டு செல்லுங்க.
நன்றி
அன்புடன்
சாய்லஷ்மி.