அத்தியாயம் : 6
‘ஒருவரின் மரணம் அந்த குடும்பத்தில் மற்றவரின் வாழ்க்கையை எப்படி எல்லாம் புரட்டி போடுகிறது. அண்ணனின் அறிவுரையின்றி தன்னால் தன் வாழ்க்கையை வாழ முடியுமா? அது மட்டுமின்றி, பிரம்மாண்டமாக கட்டியெழுப்பிய தங்களது தொழில் சாம்ராஜ்யத்தில் அண்ணனது அளப்பரிய பங்களிப்பு இருந்தது. இனி தன் ஒருவனால், தங்களது தொழில் சாம்ராஜ்யத்தை கட்டி காப்பாற்ற முடியுமா?’ என்று, ராஜவர்மனின் சமாதி முன்பு நின்றவாறு மனதிற்குள் எண்ணினான் ராஜகுமாரன்.
அண்ணனை பிரிந்து இருப்பது, ஏதோ உடலிலிருந்து ஆன்மாவை பிரிந்து துன்பப்படுவது போல தவித்து கொண்டிருந்தவனின் தவிப்பு மற்றவர்களுக்கு புரியவில்லையோ என்னவோ, மறுநாள் செய்ய வேண்டிய சடங்குகள் என்று சில செயல்களை அவனை செய்யும்படி பணித்தார்கள்.
அவர்கள் சொல்படி செய்து முடித்ததும், கமலாவும் அவனது இரு மகன்களும் கிளம்ப எத்தணித்தார்கள். அவர்கள் கையில் பயணபையை கண்ட ராஜகுமாரன், “மாமா… நீங்களும் அவங்களோட கிளம்புங்க. எனக்குத்தான் இவங்க மூணு பேரும் கூட இருக்காங்களே! நான் பார்த்துகிறேன்” எனக் கூறிவிட்டு, ஒரு அறைக்குள் புகுந்து கொண்டான்.
துக்க வீட்டிற்கு வந்தால் சொல்லாமல் செல்ல வேண்டும் என்ற நியதியின்படி, தன் குடும்பத்துடன் வெங்கடேசன் சென்றுவிட, சிறிது நேரம் கழித்து அறையை விட்டு வெளியே வந்த ராஜகுமாரன், அவர் சென்றுவிட்டார் என்ற செய்தியை அறிந்ததும் மனதிற்குள் வருந்தினான்.
ஏனெனில், தங்களை சிறுவயதில் இருந்து நன்கு அறிந்தவர் அவர் ஒருவரே, அவரே கிளம்பியதும், எல்லாம் இழந்த உணர்வு அவனை வாட்ட ஆரம்பிக்க, தன்னை தானே சமன்படுத்தி கொள்ள முடியாது தவித்து கொண்டிருந்தவனிடம், ‘ராஜா டெக்ஸ்டைல்ஸ்’ நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளை சரிபார்க்க வேண்டியிருக்கிற கட்டாயத்தை பற்றி, அவனது தனிப்பட்ட செயலாளரான சிவா, தனிவான குரலில் எடுத்து கூறவும், அதிமுக்கியமான விஷயத்திற்கு மட்டும் செவி சாய்த்தான்.
“சார்… நாம நினைச்சபடி நேத்து முதல் நாள் சேல்ஸ் நல்லபடியா போச்சி. இன்பேக்ட்… போன வருஷத்தை விட, இந்த வருஷம் நூறு பர்சென்ட் நமக்கு லாபம் கிடைச்சிருக்கு. எல்லா கஸ்டமரும் நல்லா ஃபீட்பேக் கொடுத்தாங்க. அப்படியே… நம்ம சார் இறந்ததுக்கு ஏகப்பட்ட பேர் வருத்தமும்பட்டாங்க சார்” என்றான் இறுதியில் சோகமான குரலில்.
யாரோ முகம் தெரியாத வாடிக்கையாளரின் ஆறுதல் வார்த்தைகள், அவ்வேளையில் அவனுக்கு ஆறுதல் கொடுப்பதை உணர்ந்தவன், துயர சிந்தனையில் இருந்து சிறிது வெளி வந்தான்.
“நம்ம ஸ்டாப் எல்லாரும் பெரிய முதலாளி ஆத்மா சாந்தி அடையணும் வேண்டிக்கிட்டு, அண்ணனை இழந்து நிற்கிற நம்ம குமார் முதலாளிக்காக, நாம நல்லா உழைச்சி காட்டணும்னு அவங்களுக்குள்ள பேசி முடிவெடுத்துகிட்டு, எல்லாரும் நல்லா வேலை பார்த்தாங்க சார்” என்று ஆச்சரியமான குரலில் கூறினான்.
அண்ணனின் பிரிவால் ஏற்பட்ட அளவுகடந்த துயரத்தால் ஆட்கொள்ளபட்டிருந்தவன், தங்களுடைய
வாடிக்கையாளர்களின் ஆறுதல் பேச்சிலும், ஊழியர்களின் அன்பிலும், அச்சமயம் அவனுக்குள் ஒரு மாறுதல் பிறக்க உணர்ந்தான்.
வெற்று காகிதமாய், துணை நிற்க ஆளில்லாமல் ஆனாதையாக சென்னைக்கு வந்து, தங்களது தொழில் மூலம் பணம், பெயர், புகழ் மட்டுமின்றி, துயரமான சூழ்நிலையில் துணை நிற்க, நல்ல உள்ளங்களையும் சேர்த்து சம்பாதித்திருக்கிறோம் என்ற ஆறுதலையும், தானும் அண்ணனும் சேர்ந்து, கடுமையாக, நேர்மையாக உழைத்தத்திற்கு பல மடங்கு பலன் கிடைத்துவிட்டதாகவும், தாங்கள் வாழ்வில் சாதித்துவிட்டதாகவும் உணர்ந்தவன், இனி தன் வாழ்வில் அண்ணனுக்கு பிறகு, தான் வாழ ஒரு காரணம் உண்டு என்றால் அது தங்களது தொழிலும், தொழிலாளர்களும் மற்றும் வாடிக்கையாளர்களும்தான்.
தங்களது தொழில்தான் இனி தனக்கு உயிர்மூச்சு. ஏனெனில், அந்த உயிர்மூச்சை ஆரம்பித்ததே தன் உயிருக்கு உயிரான அண்ணன் அல்லவா? அண்ணனுக்காக தான் செய்ய வேண்டிய கடமை ஒன்று உண்டு எனில், அது தங்கள் தொழிலை நல்லபடியாக வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று தனக்குள் உறுதி பூண்டான்.
அண்ணன் துணை இல்லாமல் தொழிலை பார்ப்பது, மிகவும் கடினமான பயணமாகத்தான் இருக்கும். ஆனாலும், அண்ணனின் நினைவுகள் கண்டிப்பாக… எனக்குத் துணை நிற்கும். அவனது ஆத்மா சாந்தி அடைய, வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைத்து இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு கிடைக்க பெற்ற, இந்த சாதனையைத் தக்க வைத்துக் காட்டுவேன் என்ற நம்பிக்கையை தனக்குள், வளர்த்துக் கொண்டவன், “நம்ம ஸ்டாப்க்கு தேங்க் பண்ற மாதிரி ஒரு வீடியோ அனுப்புறேன். அதை நாளைக்கு ஸ்டாப்கிட்ட போட்டு காட்டுங்க” என்றான் சற்று இளைப்பாரிய குரலில்.
அவனது கண்களில் ஒரு புதிய லட்சியத்தின் ஒளி தெரிந்தது. அரைமனதாய் சிவாவுடன் பேச ஆரம்பித்தவன், தற்போது தொழில் பக்கம் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தான்.
ஒரு ராஜாவை அவர்களது பூர்வீக மண்ணிற்குள் புதைத்திருந்தாலும், இன்னொரு ராஜாவின் அசைக்க முடியாத லட்சிய பயணம் அங்கிருந்து முளைக்க ஆரம்பித்தது.
மறுநாள் தமிழகத்தில் உள்ள அனைத்து ‘ராஜா டெக்ஸ்டைல்ஸ்’ கடைகளில் உள்ள தொலைகாட்சியில், ஊழியர்கள் அனைவரும் பார்க்கும்படி, ராஜகுமாரன் பேசி அனுப்பிய காணொளியை ஒலிபரப்பினார்கள் மேலாளர்கள். “வணக்கம். என் அண்ணனோட பிரிவு எனக்கு மட்டுமில்ல. உங்களுக்கும் ஒரு பெரிய துக்கமா இருந்திருக்கும்னு நான் உணருறேன். எதிர்பாராம அண்ணனோட இழப்பு, நமக்கு மிக முக்கியமான நாளில், நம்மளை எல்லாம் அசைத்து பார்க்க நடந்திருச்சி. இப்படி நடந்திருக்கவே கூடாது. அண்ணன் திரும்ப வந்திடனும்னு, நொடிக்கு நொடி நான் மனசுக்குள்ள வேதனைப்பட்டு இருக்கிறேன். ஏன்னா… என்னால சிறப்பான விற்பனை நேரத்தில், அண்ணன் இல்லாமல் தனியா சமாளிக்க முடியம்னு, என்மேல எனக்கே நம்பிக்கை இல்லை. அதைவிட, என் அண்ணனே இல்லையே எனக்கு இனி எல்லாமே இல்லைங்கிற நினைப்பு என்னை அதிகமாக வாட்டுச்சி.
ஆனால், நீங்க எல்லோரும் ஒற்றுமையா, உண்மையா, நேர்மையா, கடுமையா உழைச்சிருக்கிங்கனு மேனேஜர்ஸ் சொன்னதும், அதுவும் உங்களுக்கு வழிகாட்ட நானோ… இல்லை அண்ணணோ துணை இல்லாமல், நீங்களே ஒரு அக்கறையோட ஒரு பொறுப்புணர்ச்சியோட உங்க வேலைகளை சிறப்பா செய்திருக்கிங்கனு கேள்விப்பட்டு, என்மேலையும் அண்ணன்மேலையும், மொத்தத்தில் நம்ம கடை மேல நீங்க வச்சிருக்கிற அன்பை நினைச்சி, என் உயிருக்கு உயிரான அண்ணன் எனக்கு கொடுக்கிற தைரியம் போல, நீங்க கொடுக்கிற அன்பை உணர்றேன்.
பெயர், புகழ், அந்தஸ்து, பணம் இதை காட்டிலும், உங்க அன்பும் ஆதரவும் உறுதுணையா எங்களுக்கு கிடைக்கிறதை நினைக்கும்போது, துயரமான சூழ்நிலையில் எனக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு. அண்ணனுக்கு பிறகு எனக்கு ஒரு வாழ்க்கை உண்டுன்னா, அது தொழில் மட்டுமில்ல, நீங்க எல்லாரும்தானு என்னை பீல் பண்ண வச்சிட்டிங்க.
அண்ணனுக்கான சடங்குகள் முடிந்து நான் கடைக்கு வரும்போது, நிச்சியமா என்னால என் வாழ்க்கையை அண்ணன் இல்லாமல், உங்க எல்லாருடைய துணையால வாழ முடியும்ன்ற ஒரு தைரியத்தையும், தன்னம்பிக்கையும், முக்கியமா ஒரு ஆறுதலையும் கொடுத்த உங்க எல்லாருக்கும் என் மனதார நன்றியை சொல்லிக்கிறேன்.
இன்னைக்கு போல என்னைக்கும் உங்க எல்லாருடைய அன்பும், ஆதரவும் என் இறுதி மூச்சு வரை எனக்கு வேணும். நானும், என் இறுதி மூச்சு இருக்கிற வரை, உங்க எல்லார்மேலையும் அன்பாய் இருப்பேன். ஒரு முதலாளி என்ற எண்ணத்தில் இல்லாமல், நம்ம கடையில் ஒரு தொழிலாளியா உங்களுக்கு… என் இறுதி மூச்சு வரை ஆதரவு தருவேனு சொல்லி, மீண்டும் உங்க எல்லார்க்கிட்டையும் மனதார நன்றி சொல்லிக்கிறேன்.
இன்னைக்கு ஆடி மாதம் ரெண்டாவது நாள், நேத்து போல எல்லாரும் உங்க வொர்க்கை, சிறப்பா செய்து முடிக்க, அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துகிறேன். நல்லா பண்ணுங்க. ஆல் த பெஸ்ட். நாளைக்கு சந்திப்போம்” என்று கையெடுத்து கும்பிட்டு, காணொளியை முடித்திருந்தான்.
ராஜகுமாரனின் முகத்திலும், குரலில் தென்பட்ட அப்பட்டமான வருத்தம் ஊழியர்கள் அனைவரின் மனதையும் கலங்க வைத்தது. “நாம எல்லாரும் நமக்காக நம்ம குடும்பத்தின் தேவைக்காக இந்த வேலைக்கு வந்திருக்கோம். ஆனால், நம்ம சார், குடும்பம்னு சொல்லிக்க இருந்த ஒரே ஒரு அண்ணனையும் இழந்து நிற்கும்போது, நாம காட்டின அன்பையும் ஆதரவையும் பார்த்து, இனி நம்ம ஸ்டாப் எல்லாரும்தான் என் குடும்பமா நினைக்க போறேன். ஏன்னா… சொந்தக்காரவங்க எல்லாரும் அண்ணனை அடக்கம் பண்ணதும் கிளம்பி போயிட்டாங்க. ஆனால், நம்ம ஸ்டாப்… நாங்க கஷ்டப்பட்டு உருவாகின சாம்ராஜ்யத்துக்கு, தூணா மாறி எங்களுக்கு துணை நிற்கிறாங்க. அதனால்தான் இந்த வெற்றி சாத்தியமாகிருக்கு.
என் அண்ணன் அடிக்கடி சொல்வான், இன்பத்தில் துணை நிற்கிறவங்களை காட்டிலும் துன்பத்தில் துணை நிற்கிறவங்களை என்னைக்கும் மறைக்க கூடாதுனு, இனி, என் மனசுல என் அண்ணணுக்கு அப்புறம் நம்ம ஸ்டாப்தான் இருப்பாங்கனு, நேத்து என்கிட்ட சார் உணர்ச்சிவசப்பட்டு பேசினாங்க. அவர் கண்ணெல்லாம் கலங்கிருச்சு.
நான் முதல்ல பார்க்கும்போது அவ்வளவு உடைஞ்சி போய் இருந்தாரு. நேத்து நீங்க எல்லாரும் நல்லா வேலை பார்த்திங்கனு விஷயத்தை கேள்விப்பட்டதும், எனக்காக என் ஸ்டாப் உழைக்கிறாங்க. என் ஸ்டாப்பாக நான் எதாவது பண்ணணும்னு, சோகமாக இருந்தவரு, உற்சாகமா வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டாரு.
அப்படியே, நீங்களாம் சந்தோஷப்படுற மாதிரி ஒரு சில முடிவை சார் எடுத்திருக்காங்க. அது என்ன சந்தோஷமான நல்ல விஷயம்னு சாரே வந்து உங்ககிட்டலாம் சொல்வாங்க. ஸோ… நேத்து மாதிரி நீங்க எல்லாரும் உங்களுடைய பணியை சிறப்பாக செய்யணும்னு கேட்டுகிறேன்” என்று ராஜகுமாரன் பேசிய காணொளியை அனைவரும் பார்த்து முடித்ததும், ஒவ்வொரு கடையிலும் உள்ள மேலாளர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டமிட்டு பேசிய விஷயத்தை, இவ்வாறாக ஊழியர்களிடம் கூறினார்கள்.
நிச்சியமாக ராஜகுமாரனுக்கு நாம் துணை நிற்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு ஊழியர்களின் மனதில் ஆணித்தரமாக தோன்றியது. அதனால், அனைவரும் தங்களது பணியை கடமை உணர்ச்சியுடன் செய்ய வேண்டும் என்று ஆக்கப்பூர்வமாக செயல்பட்டார்கள்.
அவர்களை எல்லாம், தினமும் தவறாமல் தனது கணிணி மூலம் பார்த்து, அண்ணனின் இழப்பில் இருந்து மீண்டு வர ஆரம்பித்தான் ராஜகுமாரன்.
எட்டு நாளும் இவ்வாறாக நாட்களை கடந்து, எட்டாவது நாள் காரியம் முடிந்து, தங்களது வீட்டிற்கு சென்றபோது, அவனது மனம் மீண்டும் மீள முடியாத சோகத்தில் மூழ்கியது.
தன்னியல்பாக ராஜவர்மனின் அறைக்குள் நுழைந்து, அவன் நின்ற இடம், உட்கார்ந்து இடம், துயில் கொண்ட இடம், அவன் பயன்படுத்திய உடை, பொருட்கள் என்று அனைத்தையும் எடுத்து பார்த்து, மீண்டும் கதறி அழுதான்.
“அண்ணே! உனக்கு என்னாச்சி? ஏன் என்னை விட்டு போன? என்னை விட்டுபோக உனக்கு எப்படித்தான் மனசு வந்தது? என்னை கொஞ்சமாச்சும் நினைச்சி பார்த்தியா? என்னை விட்டுட்டு போறவன், அப்பா அம்மா இறந்தப்பவே… விட்டுட்டு போயிருக்கலாமே? ஏன்டா என்மேல பாசத்தை கொட்டி வளர்த்த பின்னாடி விட்டு போன?” என்று அவனது புகைப்படத்தை கையில் எடுத்து அழுதான்.
ஹாய் ப்ரெண்ட்ஸ்
இந்த அத்தியாயம் பற்றி உங்களது கருத்துகளை மறக்காமல் தெரிவியுங்கள். இனி அடுத்தடுத்த அத்தியாயத்தில் ராஜவர்மன் எப்படி இறந்தான் என்ற மர்ம முடிச்சுகள் அவிழும். மறக்காமல் அந்த லைக் பட்டனை தட்டிவிட்டு செல்லவும். நன்றி…
அன்புடன்
சாய்லஷ்மி.